சிறப்பு கட்டுரை
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 4

சத்தியப்பிரியன், ஓவியம்: ஸ்யாம்

5. பிணமெழுப்பி விட்டேனோ  

தொண்டைமானைப் போலே?

ராமானுஜர் பாரதத்தில் உள்ள அனைத்து திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளை சேவித்தவர். விசிஷ்டாத்வைதத்தை ஸ்தாபித்தவர். வைணவர்கள் வாழ்வியல் முறையில் சில நியமங்களை ஏற்படுத்தி, அந்த நெறியை உயர்த்திப் பிடித்தவர்.

தொண்டைமண்டல மன்னனுக்கு ராமானுஜரிடம் தனி ப்ரியம் உண்டு. அந்தக் காலத்தில் திருவேங்கடம் எனப்படும் திருமலை, இந்தத் தொண்டை மன்னன் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட கோயிலாக இருந்தது.

ஒருமுறை, பெருமாள் தனது அடையாளங்களான சங்கு மற்றும் சக்கரத்தை இந்தத் தொண்டைமானிடம் கொடுத்து வைக்கிறார். சங்கு சக்கர அடையாளம் எதுவுமின்றி இருந்த அர்ச்சாவதார மூர்த்தியைப் பார்த்த திருமலையில் இருந்த சைவர்கள் அந்தச் சிலைத் திருமேனி சிவபெருமானுடையது என்று சாதித்தனர்.

இதற்கு ஒரு முடிவு ஏற்பட வேண்டும் என்று, திருவரங்கத்திலிருந்து ராமானுஜரை வரவழைக்கிறான் தொண்டைமான்.

ராமானுஜர் எம்பெருமான் சந்நிதிக்குள் நுழைந்து, சிலைத் திருமேனி முன்பு ஒரு தட்டில் சங்கு, சக்கர முத்திரைகளையும், மற்றொரு தட்டில் திருநீற்றையும் வைத்துக் கதவைச் சாத்திவிட்டு வந்தார். மறுநாள் காலையில் சந்நிதி திறக்கப்பட்டபோது, பெருமாள் தனது தோள்களில் சங்கு சக்கர முத்திரைகளுடன் காணப்பட்டதால், அவர் மகாவிஷ்ணுவின் சிலைத் திருமேனி என்பது உறுதியானது. 'அப்பனுக்குச் சங்காழி அளித்தவன்’ என்று ராமானுஜருக்கு சிறப்புப் பெயர் ஒன்று உண்டு.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 4

அப்படிப்பட்ட தொண்டைமான் சரித்திரத் தில், பிணத்தை உயிர்ப்பித்த அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. தொண்டைமான் ராஜ்ஜியத்தில், கூர்மர் என்றொரு அந்தணர் வசித்து வந்தார். காசி யாத்திரை சென்று மூத்தோர் கடன் தீர்க்க வேண்டும் என்று நெடுநாட்களாக அவருக்கு ஓர் அவா! அதற்கான வசதியும் வாய்ப்பும் இல்லாது போகவே, அந்த ஆசை நிறைவேறாமலே அவர் இறந்துவிடுகிறார். அவருக்குக் கிருஷ்ண சர்மா என்றொரு மகன்.

இந்தக் காலத்துப் பிள்ளைகள்போல், தகப்பன் இறந்ததும் அவர் விட்டுச் சென்ற சொத்துப் பட்டியல் எடுக்காமல், அவரால் நிறைவேற்ற முடியாமல் போன ஆசைகளின் பட்டியலை எடுக்கிறான். எந்நோற்றான் கொல் எனும்படி யான பிள்ளைகள் வாழ்ந்த காலம் அது.

பிள்ளை எடுத்த பட்டியலில் முதலில் காசி யாத்திரை நிற்கிறது. அப்பாவின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றும்பொருட்டு கிருஷ்ண சர்மா காசிக்குச் செல்வது எனத் தீர்மானித்தான்.

இப்போது இருப்பதைப்போல வாகன வசதிகள் அப்போது கிடையாது. கால்நடையாகத்தான் செல்லவேண்டும். எனவே, பெண்டு பிள்ளை களுடன் செல்வது உசிதமான காரியமில்லை.

கிருஷ்ண சர்மா யோசிக்கிறான். நேரே மன்னர் தொண்டைமானிடம் செல்கிறான். தான் காசி யாத்திரையை முடித்துக்கொண்டு ஊர் திரும்பும் வரையில் தனது மனைவியையும் மகனையும் பார்த்துக்கொள்ளச் சொல்லி, அவரிடம் அடைக்கலமாக ஒப்படைத்துவிட்டுச் செல்கிறான்.

மன்னருக்கு ஆயிரத்தெட்டு வேலைகள்! ராஜ்ஜிய பரிபாலனம் செய்வது அத்தனை சுலபமா?! எல்லோருக்கும் ராஜாவாக ஆசை இருக்கும். ஆனால், அந்த ராஜா படும் அவஸ்தைகளைப் படுவதற்கு யாருக்கும் துளியும் விருப்பம் இருக்காது.

பல அலுவல்கள் இருப்பினும், அடைக்கலமாக வந்தவர்களைக் காக்க வேண்டியது மன்னரின் கடமை. ஆனால், இந்தத் தொண்டைமான் இந்தக் கடமையில் இருந்து தவறிவிடுகிறார். அந்தணனின் மனைவிக்கும் மகனுக்கும் வேளாவேளைக்கு உணவு அளிக்கப்படுகிறதா என்பதைக்கூட அறியாமல் இருந்துவிடுகிறார். போதிய உணவு கிடைக்காமையால், கிருஷ்ணசர்மாவின் மனைவியும் மகனும் இறந்துவிடுகின்றனர்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 4

காசியாத்திரை போன கிருஷ்ண சர்மா திரும்பி வருகிறான். மன்னரைச் சந்தித்து, அவரிடம் தான் அடைக்கலமாக விட்டுச் சென்ற மனைவியையும் மகனையும் அழைத்துச் செல்ல வந்திருப்பதாகக் கூறுகிறான்.

மன்னர் போய்ப் பார்த்தபோது, இருவரும் அங்கு உயிருடன் இல்லை. அவர்களுடைய பிணம்தான் இருக்கிறது. ராஜாவுக்கு வியர்வை ஆறாகப் பெருகுகிறது. தனது பாதுகாப்பில் பத்திரமாக இருக்கவேண்டிய இருவரும் இப்படி அன்ன ஆகாரமின்றி இறந்து விட்டார்களே என்று பதறிப் போகிறார்.

அவருக்குள் வருத்தம் மேலிடுகிறது. இருந்தாலும், அவர்களைக் காப்பாற்றத் தவறிய பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டுமே என்பதால், பொய் சொல்லத் துணிகிறார். கிருஷ்ண சர்மாவிடம் வந்து, ''உன் மனைவியும் மகனும் திருமலைக்கு வேங்கடநாதனை தரிசனம் செய்யச் சென்றிருக்கிறார்கள்'' என்று சொல்லிவிடுகிறார். இதை நம்பி, கிருஷ்ண சர்மாவும் திருமலை நோக்கிச் செல்கிறான்.

தொண்டைமானுக்கு பகீர் என்கிறது. நேராகப் பெருமாள் முன்பு நிற்கிறார். ''நீ என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது. உன் பக்தனாகிய நான், பிணமானவர்களை உயிருடன் இருப்பதாகச் சொல்லிவிட்டேன். அவர்களை உயிருடன் கொண்டு வரவேண்டியது உன் பொறுப்பு!' என்று மன்றாடிப் பிரார்த்திக்கிறார்.

சரணாகதி அடைந்த பக்தனைக் கை விட்டால் பிறகு அந்தச் சரணாகதித் தத்துவத்துக்கே பொருளில்லாமல் போய்விடுமே? எனவே, இறந்துவிட்ட அவர்கள் இருவரையும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொடுக்கிறார் பெருமாள்.

இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டே, திருக்கோளூரிலிருந்து வெளியில் வரும் அந்தப் பெண்பிள்ளை, 'பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே?’ என்று கேட்கிறாள்.

6. பிண விருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே?

கண்டாகர்ணன் யார் என்று பார்க்கலாம். கேரளத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்று திருவல்லா என்ற திருப்பதி. அங்கே பிணங்களைத் தின்று வாழக்கூடிய ஒருவன் இருந்தான்.

அவன் சிறந்த சிவ பக்தன். சதா சர்வ நேரமும் சிவ நாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பவன். அது மட்டுமின்றி, தனது செவிகளில் வேறு ஒரு தெய்வத்தின் நாமம்கூட விழுவதைச் சகியாதவன். எனவே, தனது இரண்டு காதுகளிலும் இரண்டு வெண்கல மணிகளைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டிருந்தான்.

இந்தக் கண்டாகர்ணன் ஒரு நாள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தபோது, தனக்கு மோட்சம் கிடைக்கவேண்டும் என்று அவனுக்குள் ஓர் ஆசை உண்டானது. சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் இயற்றினான்.

பிரத்தியட்சமான சிவபிரான், ''என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார். கண்டாகர்ணன் தனக்கு முக்தி வேண்டும் என்று கேட்டான்.

அதற்குச் சிவபெருமான், ''அப்பனே! அந்த வேலை என்னுடையது இல்லை. உனக்கு முக்தி அளிக்கக்கூடியவர் நாராயணன். அவரிடம் சென்று கேள்' என்று சொல்லிவிட்டார்.

கண்டாகர்ணனும் நாராயணனைப் பார்க்கக் கிளம்பினான். சாதாரணமாகவே ஒருவரின் இல்லத்துக்குச் செல்வதென்றால், கொஞ்சம் இனிப்போ, பழங்களோ வாங்கிச் செல்வது வழக்கம். இவனோ எம்பெருமானைப் பார்க்கச் செல்கிறான். வெறுங்கையுடன் போகலாமா? எதைக் கொண்டு போவது? அவனோ அகோரி. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் பிணங்கள் மட்டும்தான்.

சபரிக்கு என்ன தெரியும், காட்டில் உள்ள பழங்களைத் தவிர? ராமன் வரப் போகிறான் என்று தெரிந்தவுடன், அவனுக்கு உணவாக காட்டில் உள்ள பழங்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தாள்.

கொண்டு வந்தவற்றை அப்படியே அவனுக்குக் கொடுத்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. ஒவ்வொரு பழமாகச் சுவைத்துப் பார்த்து, இனிக்கும் பழங்களை ராமனுக்கு எடுத்து வைக்கிறாள். அந்த எச்சிற் கனிகளைக்கூட மறுப்பின்றி பெற்றுக் கொண்ட ராமன், அவளுக்கு கதிமோட்சம் அளிக்கவில்லையா?

அதுபோல், இந்தக் கண்டாகர்ணனுக்குத் தெரிந்தது எல்லாம் பிணங்கள் மட்டும்தான். எனவே, 'போவதுதான் போகிறோம்; ஒரு நல்ல அந்தணரின் பிணமாக எடுத்துக்கொண்டு போவோம்’ என்று ஓர் அந்தணரின் பிணத்தைத் துண்டங்களாக்கி, எடுத்துச் செல்கிறான்.

எம்பெருமான் அங்கே கண்டாகர்ணன் கொண்டு வந்த பொருளைப் பார்க்கவில்லை; அவனுடைய பக்தியைத்தான் பார்த்தார். அவர் அந்தப் பிணத்தை வாங்கிக்கொண்டு அவனுக்கு மோட்சத்தை அளித்துவிட்டார் என்பது கதை.

எம்பெருமானுக்கு, அமுது அளிப்பவன், பிண விருந்து அளிப்பவன் என்ற பாரபட்சம் எல்லாம் கிடையாது. அவனுக்குத் தெரிந்தது, பக்தனின் தூய மனம் மட்டுமே!

இதை நடைமுறையில் செய்து காட்டியவன் கண்டாகர்ணன். அந்த ஞானம்கூடத் தனக்கு இல்லையே என்கிற தன்னிரக்கத்தின் காரணமாகத்தான், 'பிண விருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே?’ என்று கேட்கிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை

ரகசியம் வெளிப்படும்