Published:Updated:

வான் புகழ் வள்ளுவரை ஆதரிப்பார் இல்லையா?! திருக்கோயிலின் கவலைக்கிட நிலைமை

வான் புகழ் வள்ளுவரை ஆதரிப்பார் இல்லையா?! திருக்கோயிலின் கவலைக்கிட நிலைமை

வான் புகழ் வள்ளுவரை ஆதரிப்பார் இல்லையா?! திருக்கோயிலின் கவலைக்கிட நிலைமை

வான் புகழ் வள்ளுவரை ஆதரிப்பார் இல்லையா?! திருக்கோயிலின் கவலைக்கிட நிலைமை

வான் புகழ் வள்ளுவரை ஆதரிப்பார் இல்லையா?! திருக்கோயிலின் கவலைக்கிட நிலைமை

Published:Updated:
வான் புகழ் வள்ளுவரை ஆதரிப்பார் இல்லையா?! திருக்கோயிலின் கவலைக்கிட நிலைமை

முதற்பாவலர், தெய்வப்புலவர், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யாப் புலவர், திருமறை நாயனார்... என்றெல்லாம் போற்றப்படும் திருவள்ளுவர், இரண்டடியால் ஞாலம் அளந்த, காலம் கடந்து நிற்கும் திருமறை தந்தவர். உலகமே போற்றும் உலகப்பொதுமறையைத் தந்த அய்யன் திருவள்ளுவர் திருக்கோயில் அவர் பிறந்ததாகச் சொல்லப்படும் சென்னை, திருமயிலையில் முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தின் அருகிலேயே அமைந்துள்ளது என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அந்தத் திருவள்ளுவப் பெருந்தகையின் ஆலயம் இப்போது கவனிப்பாரின்றி, சிதலமடைந்த நிலையில் இருக்கிறது என்று தகவல் கிடைத்தது.

அது உண்மைதானா என்பதை அறிய, நாம் அந்தக் கோயிலுக்குச் சென்றோம். நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால், கட்டடப் பணிகளுக்கான வேலை தொடங்கப்பட்டதுபோல் தெரிகிறது. ஆனாலும் வேலை எதுவும் நடக்கவில்லை. ஆங்காங்கே கொட்டிக்கிடக்கும் குப்பைகளும், சிதிலமான தரையும் அந்தக் கோயில் அவலநிலையில் இருப்பதையே நமக்குச் சொல்லாமல் சொன்னது. திருக்கோயில் அலுவலகம், நூலகம் தாண்டி உள்ளே சென்றால் இடதுபுறம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் சந்நிதி. அதன் அருகே கணபதி, முருகர், காலபைரவர் உள்ளிட்ட பல கடவுளர்களின் சிறு சந்நிதிகள் அமைந்துள்ளன. அதன் பின்புறம் சப்த கன்னியரோடு வீற்றிருக்கும் கருமாரி அம்மன் கோயில் இருக்கிறது. வள்ளுவருக்கு எனத் தனிச் சந்நிதியும், வாசுகி அம்மனுக்கு எனத் தனிச் சந்நிதியும் இங்கு உள்ளன. வாசுகி சந்நிதிக்கு எதிரே நவகிரக சந்நிதி அமைந்திருக்கிறது. திருவள்ளுவர் சந்நிதிக்கு எதிரே அவர் பிறந்த இடமாகக் கருதப்படும் இலுப்பை மரத்தின் தண்டுப் பகுதி செப்புத் தகடு வேய்ந்து பாதுகாக்கப்படுகிறது. அதன் அருகே ஆதி - பகவன் சுதைச் சிற்பம் அமைந்துள்ளது. மொத்தத்தில் சைவ சமயத்தின் அத்தனை தெய்வங்களும் புடைசூழ திருவள்ளுவர் திருக்கோயில் அமைந்துள்ளது.

அமைதியே உருவாக சின்முத்திரை காட்டி பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் திருவள்ளுவர் பெருமான். அவருக்கு முன்புறம் வள்ளுவர், வாசுகி உற்சவ சிலைகள் உள்ளன. சந்நிதி வாயிலில் அமர்ந்திருந்த கோயிலின் அர்ச்சகர் வள்ளுவர் ஆறுமுகத்திடம் கோயிலின் நிலையைப் பற்றி மெள்ளப் பேச்சுக் கொடுத்தோம்...

“கோயிலில் திருப்பணி நடந்துகொண்டிருக்கிறது. அதனால் ஆங்காங்கே கட்டடக் குப்பைகள் கிடக்கின்றன. மற்றபடி இங்கே எல்லா விழாக்களும், பூஜைகளும் சிறப்பாகவே நடைபெறுகின்றன. நன்கொடையாளர்கள் கிடைப்பது சிரமமாக இருப்பதால், கோயில் திருப்பணி தாமதமாகிறது. மற்றபடி சிறப்பாகவே கோயில் பராமரிக்கப்படுகிறது. மயிலை முண்டகக்கண்ணி அம்மன் ஆலய நிர்வாகத்தின் கீழ் வரும் இந்த ஆலயம் 16-ம் நூற்றாண்டில் காசி ராஜனால் கட்டப்பட்டது. தலைமுறை, தலைமுறையாக எங்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தான் இந்தக் கோயிலின் அர்ச்சகராக இருந்துவருகிறோம். முன்பு உள்ளூர் சமூக விரோதிகள் சிலர் இந்தக் கோயிலை அசுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களை எல்லாம் தடுத்து நிறுத்தி, இங்கே வராமல் செய்துவிட்டோம். நன்கொடையாளர்கள் கிடைத்து, இப்போது பெய்துவரும் அடை மழையும் நின்றுவிட்டால், கோயில் திருப்பணி வேலைகள் வேகம் பெற்றுவிடும். திருப்பணிகள் முடிந்துவிட்டால், கோயில் முழுமை பெற்று அழகே வடிவாக ஆகிவிடும்'' என்கிறார் வள்ளுவர் ஆறுமுகம். 

கோயிலில் நடைபெறும் பூஜைகள் எல்லாம் எப்படி?

''திருவள்ளுவரை இங்கிருப்பவர்கள்தான் கண்டுகொள்வதில்லை, ஆனால், சிங்கப்பூர், மலேஷியா, துபாய் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் தமிழர்கள் இங்கு வந்து வழிபட்டு, தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவிட்டுப் போகிறார்கள். பண வசதி இல்லாததால், அதற்குத் தேவையான நன்கொடைகள் கிடைக்காததால் கோயில் திருப்பணி ஆண்டுக்கணக்கில் இழுத்துக்கொண்டிருக்கிறது. தமிழறிஞர்களுக்கு நினைவிடம், மணிமண்டபமெல்லாம் கட்டும் அரசு, தமிழர்களின் பெருமைமிகு அடையாளமான வள்ளுவரின் கோயிலையும் கவனிக்கலாமே. திருவள்ளுவர் திருக்கோயில் பாழ்பட்டுக் கிடந்தாலும், சமீபத்தில்கூட நவராத்திரி, கந்தசஷ்டி சூரசம்ஹாரம் போன்ற திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தினோம். திருவள்ளுவர் தினத்துக்கு வந்தால், இங்கு நடக்கும் விசேஷ பூஜையைக் காணலாம்'' என்றார்.

''உலகப் பொதுமறையைத் தந்த திருவள்ளுவர் சமய அடையாளமின்றிதானே இருந்தார். பிறகு ஏன் இத்தனை தெய்வ சந்நிதிகள் இங்கு?'' என்ற கேள்விக்கு,

"இந்தச் சந்நிதிகள் யாவும் உள்ளூர் மக்களின் விருப்பத்துக்காக ஒவ்வொன்றாக உருவானது. கோயிலுக்குக் கூட்டம் வரும் என்ற காரணத்தால் நாங்களும் ஒப்புக்கொண்டோம்'' என்றார் ஆறுமுகம்.

நடைபெற்றுவரும் கோயிலின் திருப்பணிகள் குறித்து அறிவதற்காக, முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தின் நிர்வாக அலுவலரைத் தொடர்பு கொண்டோம், "கோயில் திருப்பணியில் எந்தச் சுணக்கமும் இல்லை. மழை காரணமாகப் பணிகள் தாமதமாகின்றன. ஐம்பது சதவிகிதப் பணிகளை முடித்துவிட்டோம். கோயிலில் இருக்கும் நிதியைக் கொண்டுதான் பணிகள் நடைபெறுகின்றன. வண்ணம் பூசுவது, தரையில் கற்களைப் பதிப்பது போன்ற பணிகள் மட்டும்தான் இன்னும் நிறைவடையாமல் இருக்கின்றன. மழைக்காலம் முடிந்ததும், மூன்று நான்கு மாதங்களுக்குள் கோயில் திருப்பணி விரைவில் முடிந்து, கும்பாபிஷேகமும் நடைபெறும்'' என்றார். ``கோயில் திருப்'பணிகள் நீண்டகாலமாக நடந்துவருவதாகச் சொல்கிறார்களே?...” என்று கேட்டால், ``அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’’ என்று மறுக்கிறார் நிர்வாக அலுவலர்.

ஆளரவமற்ற திருவள்ளுவர் கோயிலின் அவலநிலை நம்மை வருத்தத்தில்தான் ஆழ்த்துகிறது. மறைந்த தலைவர்களின் புகழைப் பரப்ப மெனக்கெடும் அரசு, கொஞ்சம் வள்ளுவரையும் கவனிக்கலாம்!