Published:Updated:

அருணை ரமணரும் ஆறுமுகப் பெருமானும் !

ரமண தரிசனம்!முகவைக் கண்ண முருகனடிமை

அருணை ரமணரும் ஆறுமுகப் பெருமானும் !

ரமண தரிசனம்!முகவைக் கண்ண முருகனடிமை

Published:Updated:

ருணை மாமுனிவர் பகவான் ஸ்ரீ ரமணரை சாட்சாத் முருகக் கடவுளாகவே எண்ணி வழிபடும் பக்தர்கள் ஏராளம். 

முருகன் தமிழ்க் கடவுள்; தமிழகத்துக்கே உரிய தனிப்பெரும் தெய்வம். அவர் வேதங்களின் சாரமாக விளங்குகிறார்; ஞான பண்டிதன் என்று போற்றப்படுகிறார். முருகப் பெருமானின் அருள் பெற்றவர்கள் ஞானத்தின் சிகரமாக விளங்குகிறார்கள். 'ஆளுடைப்பிள்ளை’ என்று போற்றப்படும் திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகிய முத்துஸ்வாமி தீக்ஷிதர், குமரகுருபர ஸ்வாமிகள், பாம்பன் குமரகுருதாஸ ஸ்வாமிகள் ஆகியோர் தாம் அருளிய பாடல்களில் பக்தி ரஸம் பொங்க, ஞானத்தையே பெரிதும் வழங்கினர்.

இந்த அடியார்களின் வரிசையில் பகவான் ரமணர் திருஞானசம்பந்த மூர்த்தியின் மறு வடிவமாக, ஞானகுருவாக, அருணாசலேஸ்வரரின் மைந்தனாக, முருகக் கடவுளாகப் பெரிதும் போற்றப்படுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அருணை ரமணரும் ஆறுமுகப் பெருமானும் !

மதுரை அலமேலு அம்மாளின் அனுபவம்

தந்தையுடன் திருவண்ணாமலை வந்த அலமேலு அம்மாள், ஸ்ரீ ரமணாசிரமத்துக்கு வர மறுத்துவிட்டார். காரணம், எந்த வேளையும் கந்தவேளைத் தவிர, வேறு தெய்வத்தையோ மகானையோ மனதாலும் நினைக்காதவர் அவர். அன்றிரவு அவர் கனவில் ஸ்ரீ ரமணர், பழநியாண்டி யாகத் தோன்றினார். ஆச்சரியம் அடைந்த அலமேலு, மறுநாள் தந்தையுடன் ஸ்ரீ ரமணாசிரமம் சென்றபோது, அங்கேயும் பகவான் அவருக்குப் பழநியாண்டியாகவே காட்சியளித்தார்.

தான் அன்றாடம் வழிபடும் பழநி யாண்டியே மகான் ஸ்ரீ ரமணர் என உணர்ந்த அலமேலு, அன்றிலிருந்து தீவிர ரமண பக்தையானார். பகவான் அருளிய அக்ஷர மணமாலையைப் பாராயணம் செய்யும் போது, 'திரும்பிய கந்தனை’ (பாடல் 44) எனும் கண்ணியை, 'திரும்பிய கந்தனை தினம் அகக் கண் காண் தெரியுமென்றனை அருணாசலா’ என்றே பாராயணம் செய்வார். இவ்வாறு அலுமேலு அம்மாளை பகவான் தடுத்தாட்கொண்டதை முகவைக் கண்ண முருகனார் தாம் அருளிய கீர்த்தித் திருவகவலில்,

ஆலவாய் அலர்மேல் அம்மைக்கு அருளால்

ஏலவே காட்சி ஈந்து இனிதுற... (வரி 259260)

என்று பாடியுள்ளார்.

வள்ளிமலை ஸ்வாமிகள்

அருணாசலத்தில் அருணகிரிநாதருக்கு கோபுரத்து இளையனாராக, அருணை திருக்கோயிலில் 'முத்தைத் தரு’ என்று வரி எடுத்துக் கொடுத்து, முருக வழிபாட்டுக்கு ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கினார் ஸ்ரீ சுப்ர மணிய ஸ்வாமி. அதுபோலவே, வள்ளிமலை ஸ்வாமிகளை உருவாக்கி, முருக வழிபாட்டுக்கு மீண்டும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார் இந்த அருணை ஈசனின் ஸ்ரீ  ரமணஸ்கந்தன்.

வள்ளிமலை ஸ்வாமிகளுக்குப் பெற்றோர் இட்ட பெயர், அருணை ஈசனின் திருநாமங் களில் ஒன்றாகிய 'அர்த்தநாரி’ என்பதாகும். கொடிய வயிற்றுவலியால் அவருக்கு ஏற்பட்ட துன்பம், பழநியாண்டவர் அபிஷேகப் பாலை அருந்தவும் நீங்கியது. இதனால், பழநியாண்டவருக்கு மீளா அடிமையானார் அவர். பின்பு, ஸ்ரீ ரமண மகரிஷிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, மார்கழி மாதம் திருவாதிரை நன்னாளில் (2.12.1912) ஸ்ரீ பகவானை தரிசனம் செய்தார். அந்த அனுபவத்தை அவர் மொழியிலேயே கேட்போம்:

அருணை ரமணரும் ஆறுமுகப் பெருமானும் !

'மகரிஷிகளைத் தரிசிக்க விருபாக்ஷி குகையில் காத்துக்கொண்டிருந்த சிறு கூட்டத்தோடு நானும் சேர்ந்து கொண்டேன். மகரிஷி கோவணாண்டியாய், ஒரு தடியை ஊன்றிக்கொண்டு வெளியே வந்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று பழநியாண்டியாய்க் காட்சியளித் தார். அந்த ஆனந்த வெள்ளத்தைத் தாங்க முடியாமல், கண்களில் நீர் பெருகத் தரையில் உட்கார்ந்துகொண்டேன்.'

பின்பு, வள்ளிமலை ஸ்வாமிகள் பகவானுடன் தங்கினார். திருப்புகழ் சொற்களைச் சேர்க்க பிரிக்கவேண்டிய முறைகள், பாடல்களின் பொருள், இலக்கண விதிமுறைகள் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். ஸ்ரீ பகவான் அப்போது அவரைத் 'திருப்புகழ் முருகன்’ என்று பிரியமுடன் அழைப்பது வழக்கம். பிற்காலத்தில், வள்ளி மலையில் ஆசிரமம் அமைத்து, பாரத தேசம் முழுவதும் 'திருப்புகழ் சபை’களை உருவாக்கினார். பகவான் அருளால் நாளடைவில் பெரும் புகழும், சிறப்பும் அவரை வந்தடைந்தன. பகவானின் தாயார் கங்கா ஸ்நானம் செய்ய விரும்பியதை நினைவுகூர்ந்து, 1948ம் ஆண்டு, தாயாரின் சமாதிக்குக் கங்கை நீரால் அபிஷேகம் செய்தார்.

ஸ்ரீ பகவான் மகா சமாதியன்று (14.4.1950) இரவு 8.45 மணிக்கு அருணாசலத்தை அடைந்தவர், சட்டென்று ஓரிடத்தில் செயலற்று நின்றுவிட்டார். சரியாக அதே நேரத்தில்தான், பகவான் மானிட உடலை விடுத்து, ஜோதி வடிவில் மேலே சென்று, அருணை சிகரத்தில் ஒன்றுகலந்தார். அல்லும் பகலும் பகவானை முருகக் கடவுளாகவே தியானித்து வாழ்ந்தவர் வள்ளிமலை ஸ்வாமிகள்.

காவ்ய கண்ட கணபதி முனிவர்

பகவானின் தலையாய அடியவர்களில் ஒருவர் கணபதிமுனி. பகவானின் நெற்றியிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக ஆறு முறை தீப்பொறிகள் தோன்றியதால், அவரை முருகக்கடவுள் என்றே திடமாக நம்பி, வழிபட்டவர் அவர். இதை, தாம் இயற்றிய ரமண கீதையில் பல இடங்களில் கூறியுள்ளார். அவற்றில் ஒன்று... 'தேவரீர்! ப்ரம்மண்யத்தில் நிலைத்து வாழ்பவர் களில் ஸுப்ரமண்யமாகத் திகழ்பவரே! பிரம்ம ஞான தெய்விகக் காட்சியால் நான் தங்களை மீண்டும் மீண்டும் முருகக் கடவுளின் மனித வடிவமாகத் தரிசனம் செய்கிறேன். தண்டம் இன்றிக் காட்சியளித்தாலும், நீர் தண்டபாணி தெய்வமே ஆவீர்!'

குருதேவி தஞ்சாவூர் ஜானகி மாதா

இவரும் முருகக்கடவுளால் தூண்டப் பட்டு, பகவானை சற்குருவாக அடைந்தவர். தாம் இயற்றிய 'அருணகிரி ரமணா’ என்னும் நூலில் பல இடங்களில், பகவான் முருகக் கடவுளே என்று போற்றியுள்ளார்.

முகவைக் கண்ண முருகனார்

பகவானின் முதன்மைச் சீடராக விளங்கிய இந்தப் பெருமகனார் பகவானைப் போற்றி 30,000 பாடல்கள் பாடியுள்ளார். இவருடைய உயர்ந்த சங்கத் தமிழ் நடையைக் கண்டு பிரமித்த தமிழ்த் தாத்தா உ.வே.சா, இவரை 'தற்காலத்திய சங்கப் புலவர்’ என்று பாராட்டியுள்ளார். முருகனார் பகவானைப் பற்பல இடங்களில், முருகக் கடவுள் என்று போற்றியுள்ளார். அவர் இயற்றிய 'ரமண சந்நிதி முறை’ நூலில் 'மாறறியாப் பத்து’ என்னும் தலைப்பிட்டு, ஒரு முழு பதிகத்தையே இதற்காக அருளியுள்ளார்.

பெருமாள்சாமி

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், ஸ்ரீ பகவானே தம்மை முருகக்கடவுளாக வெளிப்படுத்திக் கொண்ட நிகழ்ச்சியும் உண்டு.

அடியவர் பெருமாள்சாமி என்பவர், பகவானின் மீது கவிதை புனைய ஆவல் கொண்டார். எவ்வளவு முயன்றும் முடியவில்லை. கவிதையில் தாம் வடிக்க நினைத்த கருத்துக்களை பகவானிடம் கூறி, அவரையே ஒரு பாடல் புனைந்து அருளும்படி வேண்டினார். அந்தக் கருத்துக்கள் 'பகவானே முருகக் கடவுள்’ என்பதைப் பல விதங்களில் விளக்கி நின்றன. பெருமாள்சாமியின் அன்புக்குக் கட்டுப் பட்டும், 'தாம் கந்தப் பெருமானே’ என்னும் சத்தியத்தை மீற முடியாமலும், பகவான் தம்மை முருகக் கடவுளாக இயற்ற நேர்ந்த அந்தத் தனிப் பாடல் இதோ:

அஞ்சலென அடியர் குறை அகற்றத் திருச்சுழியில்

அழக(ன்)னை சுந்தரன் அருள அவனிதனில் வந்தே

தஞ்சமெனத் தாழுமவர் தன்வினைசூர் தடிந்து

தன்பதத்தை தந்தருளப் பன்னிருகை தாங்கி

விஞ்சுமனக் கஞ்சமயில் மீதமர்ந்து ஞான

விழியாகும் வேலோச்சி விளையாடல் புரிவோன்

அஞ்சடக்கி ஆறுமுகம் ஆன பெருமானாம்

அருணமலை ரமணனென அமரும் பெருமாளே!

பதவுரை: அழக(ன்)னை அழகம்மை, சுந்தரன் சுந்தரம் ஐயர் (பகவானின் பெற்றோர்), வினைசூர் வினைகளாகிய சூரபத்மன், தடிந்து அகற்றி, கஞ்சம் தாமரை.

ஓம் ஸ்ரீ ரமணார்ப்பணமஸ்து!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism