Published:Updated:

நம்பினோர் கெடுவதில்லை !

அனுபவம் என்பது...கீதா பென்னெட்

நம்பினோர் கெடுவதில்லை !

அனுபவம் என்பது...கீதா பென்னெட்

Published:Updated:

னக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய், தினம் ஒரு முறை சென்னையில் எங்கள் பெரிய தெரு பிள்ளையாரைப் பார்த்து, 'ஹலோ’ சொல்லிவிட்டு வராவிட்டால், அன்றைய பொழுது விடியாது. அதுவும் பரீட்சை வந்துவிட்டால், அவருடைய விஸிட்டர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். 

பிள்ளையார் எதிரில் நின்று, முத்துஸ்வாமி தீட்சிதரின் 'ஈசமனோஹரி கிருதியான 'ஸ்ரீ  கண நாதம் பஜரே’; வள்ளி தெய்வானை சகிதம் நிற்கும் வேல் முருகன் சந்நிதி முன், மோஹனத்தில் அருணகிரியின் திருப்புகழான 'ஏறு மயில் ஏறி விளையாடு முகமொன்றே’; கடைசியாக, நவகிரக சந்நிதியில் 'வேயுறு தோளி பங்கன்’ பதிகத்தை மனதுக்குள் முனகிவிட்டு, பின்பு வீடு திரும்புவது வழக்கம். அது, இன்றைக்கும் வருடா வருடம் லாஸ்ஏஞ்சலீஸில் இருந்து சென்னை வரும்போதும் தொடர்கிறது. 

வழக்கமாக, ஆசார பிராமண குடும்பங்களில் உள்ளது போன்று இரண்டே அறைகள் கொண்ட திருவல்லிக்கேணி ஒண்டுக் குடித்தனத்தில், ஒரு சுவரில் நிறைய ஸ்வாமி படங்கள். அதன் முன் தினந்தோறும் அரிசி மாவுக் கோலம். எப்போதும் முத்து மாதிரி எரிந்துகொண்டிருக்கும் வெண்கலக் குத்துவிளக்கு. சாப்பிடுமுன் அன்னத்தை அந்தப் படங்கள் முன் வைத்து நைவேத்தியம். இதைத் தவிர அம்மா, அப்பா இருவரும் பூஜை புனஸ்காரம் என்று விஸ்தாரமாகச் செய்து பார்த்ததில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்பினோர் கெடுவதில்லை !

ஒரு கிறிஸ்துவ அமெரிக்கரை மணந்துகொண்ட என்னிடம் இந்த வழக்கம் இன்றளவும் தொடர்கிறது என்பதில் எனக்கே கொஞ்சம் ஆச்சரியம்தான்! டைனிங் டேபிளில், தட்டில் எல்லாம் பரிமாறிய பிறகு, பென்னெட் என் கையைப் பிடித்துக் கொள்வார். நான் எங்கள் மகன் ஆனந்த் ராமசந்திரனின் கையைப் பிடித்துக் கொள்வேன். கண்களை மூடிக்கொள்வோம். பிறகு, மிருதுவான குரலில், 'கடவுளே! இந்த உணவை ஒரு குடும்பமாக, ஒன்றாக அமர்ந்து சாப்பிடச் சந்தர்ப்பம் கொடுத்த உமக்கு மிக்க நன்றி!’ என்று அமெரிக்கனில் சொல்வார் பென்னெட். நாங்கள் 'ஆமென்’ என்போம். அதன்பின்புதான் சாப்பிட ஆரம்பிப்போம். இது, என் அம்மா செய்யும் நைவேத்திய வழக்கத்தை அப்படியே எனக்கு நினைவூட்டுகிறது.

என் அம்மா கௌரி ராமனாதன் மிகச் சின்ன வயதில், விழுப்புரம் அருகில் இருக்கும் வளவனூர் என்கிற கிராமத்தில் வளர்ந்தவர்.

அப்போது அவருக்கு ஏழெட்டு வயது இருக்கும். 'காமிரா அறை’யில் விளையாடிக்கொண்டிருந்தபோது மர பீரோ ஒன்று அவர் மீது விழ இருந்ததாம். அந்த நேரத்தில் அங்கிருந்த இஸ்லாமிய முதியவர் ஒருவர் சட்டென்று பீரோவைத் தாங்கி, அம்மாவைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினாராம். சத்தியமாக அது ஷீர்டி பாபாதான் என்று அம்மாவுக்கு அப்போதே, அந்த வயதிலேயே புரிந்துவிட்டதாம். அம்மாவே என்னிடம் பகிர்ந்துகொண்ட தகவல் இது.

இன்றும் வம்சாவளியாக எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும், கால் மேல் கால் போட்டு கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் ஷீர்டி சாயிபாபா ஒரு முக்கியமான கடவுளாகிவிட்டார். பெரியம்மா மீனாட்சி சுந்தரமும் அதீத சாயி பக்தர். ஏதாவது நற்காரியம் நடக்க வேண்டியிருந்தால் அல்லது ஏதாவது

நம்பினோர் கெடுவதில்லை !

காணாமல் போய்விட்டால் சாயிபாபாவை நினைத்துக்கொண்டு, ஊதுவத்தி ஏற்றிவைத்து விடுவார். அவர் நினைத்தது அல்லது வேண்டியது நடக்காமல் போனதே இல்லை என்பதே உண்மை.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, திருப்பதி வேங்கடேச பெருமாளும் என் வாழ்க்கையில் பெரும் விளையாட்டு ஒன்றை நடத்தியிருக்கிறார். சந்திக்கிற சிநேகிதர்கள் பலரும்  'பாலாஜி’யைப் பார்த்துவிட்டு வந்ததைப் பற்றிப் பேசுவார்கள். 'எத்தனை மணி நேரம் வரிசையில் நின்றிருந்தார்கள், எத்தனை முறை திருமலைக்குப் பயணப்பட்டிருக்கிறார்கள், கீழ் திருப்பதியிலிருந்து எவ்வளவு தடவை நடந்திருக்கிறார்கள், எவ்வளவு அற்புதமான தரிசனம் கிடைத்தது’ என்பது குறித்தெல்லாம் அவர்கள் சிலிர்ப்பும் வியப்புமாய்ப் பேசும் போது, எனக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல் இருக்கும். ஏன் என்றால், அப்போது திருப்பதி பற்றி எனக்கு எந்த ஒரு ஐடியாவும் இருந்ததில்லை.

நானும் பல முறை அங்கே போவதற்கு ஏற்பாடுகள் பண்ணியும், ஏனோ அது நிறைவேறவே இல்லை. என் சகோதரி லதா ராதாகிருஷ்ணன், வருடா வருடம் திருப்பதி போய் வருவாள். வீட்டில் ஏதாவது விசேஷம் வரப் போகிறது என்றால், முதலில் பெருமாளைத் தரிசித்துவிட்டுதான் மறு காரியம். அவள் ஒருமுறை என்னிடத்தில், 'இதோ பார் கீதா, நீ எவ்வளவுதான் தலைகீழாக நின்றாலும், பெருமாள் உன்னை எப்போது பார்க்க விருப்பப்படுகிறாரோ, அப்போதுதான் நீ மலைக்குப் போக முடியும்’ என்றாள். அதை நம்புவதா வேண்டாமா என குழம்பிக்கொண்டு இருந்தேன்.

ஐந்து வருடங்களுக்கு முன், எனக்கு உடல் நிலை சரியில்லாமல் மிகவும் அனீமிக் ஆகி, அதனால் சிறிது தூரம் நடப்பதற்குள்ளாகவே மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கும்படியானது. சென்னை அசோக் நகரில் இருக்கும் ஃப்ளாட்டிலிருந்து தி.நகர் வெங்கட்நாராயணா தெருவில் இருக்கிற திருமலை தேவஸ்தானத்துக்குக்கூட நடக்க முடியாதபடி ஆரோக்கியக் குறைவு! அந்த நேரம் திருப்பதியிலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது,

'உங்களால் இன்னும் இரண்டு நாட்களில் திருப்பதி தொலைக்காட்சிக்கு வந்து, வீணைக் கச்சேரி செய்ய முடியுமா?’

வீணை இசைக்க எந்தச் சந்தர்ப்பம் கிடைத்தாலும், அதை நான் மிஸ் பண்ணவே மாட்டேன். அதுவும் திருப்பதியிலிருந்து வருகிற அழைப்பாயிற்றே! அதனால் உடனே ஒப்புக்கொண்டு, திருப்பதிக்கு ஒரு வாடகை கார் அமர்த்திக்கொண்டு சென்று விட்டேன்.

கச்சேரி முடிந்த கையோடு, எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. வரிசையில் நிற்கத் தேவையில்லாமல், வி.ஐ.பி போன்று என்னை மேடையிலிருந்து நேராக பெருமாளைத் தரிசிக்க அழைத்துச் சென்றார்கள். 'ஜரகண்டி’ என்ற பிரபலமான வார்த்தையைக் கேட்கச் சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. ஏனென்றால் அந்த அளவுக்குக் கண் குளிர, மனம் குளிர, பெருமாள் சந்நிதியில் நின்று, பாலாஜியை நேருக்கு நேர் நான் விரும்பிய நேரம் தரிசிக்க முடிந்தது!

என் கணவரை வளர்த்த அப்பா வழிப் பாட்டி வேலரி (valerie) பென்னெட். அவர் தன் வாழ்நாள் முழுதும் முழு கிறிஸ்துவராக வாழ்ந்தவர். திருமணம் ஆன பின்பு, நார்த் கரோலினாவில், மார்க்கம் அவென்யூ வீட்டருகே இருந்த சர்ச்சுக்கு வாரம் தவறாமல் சென்று வந்தவர். அவருடைய வாழ்க்கை யின் பெரும் பகுதியை அதற்கு அர்ப்பணித்தவர்.

அவருக்கு 80 வயதாக இருந்தபோது, மருத்துவர்கள் அவருடைய வயிற்றில் ஒரு விளாம்பழ அளவு கொண்ட கான்ஸர் கட்டியைக் கண்டுபிடித்தார்கள். 'ரொம்ப நாள் தாங்காது!’ என்றும் சொல்லிவிட்டார்கள். வேலரியின் சர்ச் சினேகிதர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, அவருடைய ஆரோக்கியத்துக்காகக் கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள்.  

ஆறு மாதங்கள் கழித்து, வேலரி மறுபடி வைத்தியரிடம் சென்றபோது, வயிற்றுக் கட்டி மாயமாக மறைந்தி ருந்தது. அதை 'மெடிக்கல் மிராக்கிள்’ என்று டாக்டர்கள் சொல்லிவிட்டாலும், உண்மை அந்தக் கூட்டுப் பிரார்த்தனை யின் பலன்தான். பாட்டி இறந்தபோது, அவருக்கு வயது 94.

வாழ்க்கையில் சில நேரங்களில், எதிர்பாராத தருணங்களில், நம்ப முடியாத, ஆச்சரியப்படத்தக்க விஷயங்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். அப்போது கண்களை மூடிக்

கொண்டு, 'என் பின்னால் எனக்குத் துணையாக வருபவன், என்னை எப்போதும் காப்பவனின் கால் தடம் இல்லாவிட்டால் என்ன? அவன் இப்போது என்னைத் தன்னுடைய தோள்களில் தூக்கிக் கொண்டு நடக்கிறான்’ என்று முழு மனதாக நம்பினீர்களானால், உங்கள் தோள்களிலிருந்து பாரம் முழுவதுமாக இறங்கிவிடும். உங்களால் சுதந்திரமாக, நீண்ட ஒரு பெருமூச்சு விட முடியும்.  

நம்புங்கள். இது நடக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism