தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீசாயி பிரசாதம் - 16

சரணம்.. சாயி சரணம்...எஸ்.கண்ணன்கோபாலன், ஓவியங்கள்: ஜெ.பி.

ன்னுடைய விடுதிக்கு வந்து சாப்பிடவேண்டும் என்று பல நாள்களாக அழைத்தும் வராத பாபா, ஒருநாள் வருவதாகச் சொன்னதும் சந்தோஷமாகத் திரும்பிச் சென்ற அந்தப் பெண்மணி, பாபாவின் வருகையை எதிர்பார்த்தபடி விதவிதமான இனிப்புகளையும் உணவு வகைகளையும் சிரத்தையுடன் தயாரித்துக் கொண்டிருந்தாள். அப்போது பார்த்து ஒரு நாய் அவள் சமைத்துக் கொண்டிருக்கும் இடத்துக்கு வந்தது. தான் பாபாவுக்கு ஆசாரமாகத் தயாரித்துக்கொண்டிருக்கும் உணவுகளில் நாய் வாய் வைத்து, அவற்றின் தூய்மை கெட்டுவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில், நாயை விரட்ட யத்தனித்தாள் அவள். சிறு கல், குச்சி போன்று அருகில் எதுவும் அவள் கைக்குக் கிடைக்காததால், அடுப்பில் எரிந்துகொண்டிருந்த ஒரு கொள்ளிக் கட்டையை எடுத்து, அந்த நாயின் மேல் எறிந்தாள். அந்த நாய் குரைத்தபடி அங்கிருந்து ஓடிவிட்டது. 

அவள் இத்தனை சிரத்தையாக உணவு தயாரித்தும்கூட, தாம் சொன்னபடி பாபா அன்று அவளுடைய விடுதிக்கு வரவேயில்லை. பாபா தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே என்ற ஆதங்கத்துடன், தான் பக்தியுடன் சமைத்திருந்த உணவுகளை எடுத்துக்கொண்டு, பாபாவுக்கு நைவேத்தியம் செய்வதற்காக துவாரகாமாயிக்கு நேரில் கிளம்பிச் சென்றாள் அந்தப் பெண்மணி.

ஸ்ரீசாயி பிரசாதம் - 16

அவளைக் கண்டதுமே பாபா, ''எல்லோரும் நான் அவர்களுடைய வீட்டுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அப்படித்தான் என்னைப் பல நாள்களாகத் தன் வீட்டுக்கு வரும்படி ஒரு பெண்மணி வற்புறுத்திக்கொண்டிருந்தாள். நானும் அவளுக்கு வாக்களித்தபடி, இன்று அவளுடைய வீட்டுக்குச் செல்லவே செய்தேன். ஆனால், அந்தப் பெண்மணியோ எரியும் கொள்ளிக் கட்டையை எடுத்து என் மேல் வீசினாள்'' என்றார். பாபா இப்படி மறைமுகமாகச் சொன்னதன் பொருள் அங்கிருந்தவர்களுக்குப் புரியவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட அந்தப் பெண்மணிக்குப் புரிந்தது. அனைத்து உயிர்களிடமும் தாமே இருப்பதாகப் பலமுறை பாபா சொல்லியிருந்தும், அதைத் தன்னால் புரிந்துகொள்ளமுடியாமல் போய்விட்டதே என்று வருந்தியவளாக, மானசிகமாக பாபாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள். பாபாவும் அவளை ஆசிர்வதித்து, அவள் கொண்டு வந்திருந்த நைவேத்தியங்களை அன்புடன் ஏற்றுக்கொண்டு அருள் புரிந்தார்.

ஒரு குருவைத் தேடிச் சென்று நாம் சரண் அடைந்துவிட்டால், அவரிடம் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கவேண்டும். எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும், மனம் தளராமல் அந்த குருவே எல்லாமும் என்று பொறுமை யுடன் காத்திருக்கவேண்டும். குருதான் என்றில்லை; தெய்வமும்கூட அப்படித்தான்.

ஸ்ரீசாயி பிரசாதம் - 16

ஒரு தெய்வத்தை நம்முடைய இஷ்ட தெய்வமாக நம்பிக்கையுடன் பற்றிக் கொண்டால், இறுதிவரை அந்தத் தெய்வத்திடம் பூரண நம்பிக்கையுடன் பக்தி செலுத்தவேண்டும். இடையில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. அப்படி நம்பிக்கை இழந்து நாம் ஒவ்வொரு குருவாக, ஒவ்வொரு தெய்வமாக மாறி மாறிப் போய்க்கொண்டே இருந்தால், கடைசி வரை நமக்கு விமோசனமே கிடைக்காது.

அதனால்தான் பாபா தம்முடைய பக்தர் களுக்கு நம்பிக்கை, பொறுமை என்ற இரண்டு மகா வாக்கியங்களை உபதேசித்திருக்கிறார். அதேபோல், தன்னுடைய பக்தர்கள் ஒரு தெய்வத்திடம் உறுதியான நம்பிக்கையுடன் இருந்தால், அந்த தெய்வத்தின் வடிவிலேயே அந்த பக்தர்களை ஆட்கொண்டு அருளுகிறார்.

ஸாதே என்ற பாபாவின் பக்தர் ஒருவரிடம், மேகா என்று ஒரு பிராமண இளைஞர் சமையல்காரராக இருந்தார். இளைஞராக இருந்தாலும், ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டிருந்தார். அவருக்கு நாளும்பொழுதும் 'நமசிவாய’ மந்திரத்தை ஜபிப்பதைத் தவிர, வேறு எதுவும் தெரியாது. அவருடைய ஆத்மநலனில் அக்கறை கொண்டிருந்த ஸாதே, அவரை ஷீர்டிக்குச் சென்று பாபாவை தரிசித்து வரும்படி சொல்லி அனுப்பினார். செல்லும் வழியில், பாபா ஒரு முஸ்லிம் என்று தெரிந்து கொண்ட மேகா, ஷீர்டிக்குச் செல்லத் தயங்கியவராகத் திரும்பிவிட்டார். ஆனாலும் ஸாதே வற்புறுத்தவே, பாபாவை தரிசிக்க மீண்டும் ஷீர்டிக்குச் சென்றார். அவரைப் பார்த்ததும், ''நீ உயர்ந்த சாதி பிராமணன். நான் ஒரு முஸ்லிம். நீ இங்கே வந்தால் உன் சாதியை இழந்துவிடுவாய். இங்கிருந்து ஓடிப் போய்விடு!'' என்று கோபத்துடன் விரட்டினார் பாபா.

தான் நினைத்ததை அப்படியே சொன்ன பாபாவின் ஞானதிருஷ்டி மேகாவுக்கு வியப்பைத் தந்தாலும், அவரின் மனதுக்குச் சமாதானம் ஏற்படவில்லை. தயக்கத்துடன் ஊர் திரும்பினார். ஆனாலும் மேகாவால் ஷீர்டியையும் சரி, பாபாவையும் சரி... மறக்க முடியவில்லை. அப்படி பாபா மறக்கவிடுவாரா என்ன?! விரைவிலேயே மேகா, திரும்பவும் ஷீர்டிக்கு வந்தார். பாபா அவருக்கே உரிய முறையில் மேகாவைத் தடுத்து ஆட்கொண்டார்.

மேகா, பாபாவைத் தன்னுடைய இஷ்ட தெய்வமான சிவபெருமானாகவே பாவித்து வழிபடலானார். அதுமட்டுமல்ல, பாபாவை சிவபெருமானின் அவதாரமாகவே நம்பவும் செய்தார். பாபாவும் மேகாவுக்கு அப்படி சிவபெருமானாகவே அருள்புரியலானார். ஆசார அனுஷ்டானங்களில் உறுதியான பிடிமானம் கொண்டிருந்த மேகா, கோதாவரி நதியின் தீர்த்தத்தால் பாபாவுக்கு அபிஷேகம் செய்யவும், வில்வ தளங்களால் அர்ச்சனை செய்யவும் விரும்பினார். தினசரி போக வர எட்டு மைல் தூரம் நடந்து சென்று, கோதாவரியின் புனித நீரைக் கொண்டு வந்து வழிபடத் தொடங்கினார். மேகா தம்மைச் சிவபெருமானாக மட்டுமே பாவித்து வழிபடுவதைக் கண்ட பாபா, அனைத்து வடிவங்களிலும் இருப்பவன் ஒரே இறைவன்தான் என்ற எண்ணத்தை மேகாவின் மனதில் ஏற்படுத்த விரும்பினார். மேகாவின் போக்கிலேயே போய் அப்படி ஏற்படுத்தவும் செய்தார்.

மேகா தினமும் ஷீர்டியில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று வழிபட்டுவிட்டு, அதன்பிறகே துவாரகாமாயிக்கு வருவது வழக்கம். ஒருநாள் காலையில் அப்படிக் கோயில்களுக்குச் சென்றபோது, கண்டோபா கோயில் மட்டும் பூஜாரி வராததால் திறக்கப்படாமல் இருந்தது. எனவே, அவர் மற்ற கோயில்களுக்குச் சென்றுவிட்டு துவாரகாமாயிக்கு வந்துவிட்டார். மேகாவைக் கண்டதும் பாபா, ''மேகா, நீ ஒரு வழக்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினால், எந்தக் காரணம் கொண்டும் அதிலிருந்து தவறவே கூடாது. இப்போது கண்டோபா கோயில் திறக்கப்பட்டுவிட்டது. பூஜாரியும் வந்துவிட்டார். அதனால் உடனே கண்டோபா கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து விட்டு வா!'' என்றார். இப்படியாக, மேகாவின் போக்கிலேயே போய், அவருடைய மனதில் பரிபக்குவ நிலையை ஏற்படுத்தத் தொடங்கினார் பாபா.  

ஸ்ரீசாயி பிரசாதம் - 16

புனிதமான நாளாகிய மகர சங்கராந்தி அன்று, தான் சிவலிங்கத்தை வழிபடும் முறையிலேயே பாபாவை வழிபட விரும்பினார் மேகா. பாபாவின் உடல் முழுவதும் சந்தனம் பூசி, கோதாவரியின் புனித நீரைக் கொண்டு பாபாவுக்கு அபிஷேகம் செய்ய நினைத்த மேகா, பாபாவிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். முதலில் பாபா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், மேகா திரும்பத் திரும்பக் கேட்டுக்கொள்ளவே, பாபாவும் ஒப்புக்கொண்டார். பின்பு, அபிஷேகம் செய்வதற்காக மேகா புனித நீரைக் கொண்டு வந்தபோது, பாபா தனக்கு அபிஷேகம் செய்யவேண்டாம் என்றும், பக்கீராகிய தாம் அதை அனுமதிப்பதில்லை என்றும் சொன்னார். ஆனால், மேகாவோ பாபாவை தான் சிவபெருமான் வடிவத்திலேயே கண்டதால், பாபா சொல்லியும்கூட, உணர்ச்சிப் பெருக்கில் பரவசத்துடன் 'ஹரஹர மஹாதேவா’ என்று சிவநாமத்தை உச்சரித்தபடியே புனித நீரை பாபாவின் உடல் முழுவதும் பொழிந்தார். ஆனால், என்ன ஆச்சரியம்..! பாபாவின் தலை மட்டுமே ஈரமாக இருந்தது; மற்ற பாகங்களில் தண்ணீர் பட்ட சுவடுகூடத் தென்படவில்லை. இதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துபோனார் மேகா. அதன்பின்பு, தான் தங்கி இருந்த இடத்திலும் பாபாவின் படத்தை வைத்து, நாள்தோறும் பூஜித்து வரத் தொடங்கினார்.

இப்படியாக ஓர் ஆண்டு கடந்த நிலையில், மேகாவுக்கு ஓர் ஆனந்த அனுபவத்தைக் கொடுத்து அருளினார் பாபா. ஒரு நாள் விடியற்காலையில் துயில் கலைந்த மேகா, படுக்கையில் இருந்து எழுந்திருக்காமல், கண்களை மூடியபடியே படுத்திருந்தார்.

அப்போது பாபா, மேகா முன் தோன்றி, அவரின் தலையில் அட்சதையைத் தூவி, ''மேகா, உன் அறையின் சுவரில் திரிசூலம் ஒன்று வரை'' என்று சொல்லி, மறைந்தார். மேகா உடனே கண்களைத் திறந்து பார்த்தார். அங்கே யாரையும் காணவில்லை. அறையின் கதவுகளும் மூடி இருந்தன. ஆனால், அறைக்குள் அட்சதைகள் சிதறிக் கிடந்தன. ஆனாலும், மேகா உடனே திரிசூலம் வரையாமல், நேரே பாபாவிடம் சென்று, 'நான் உண்மையிலேயே திரிசூலம் வரைய வேண்டுமா?’ என்று கேட்டார்.

அதற்கு பாபா என்ன சொன்னார் தெரியுமா..?

பிரசாதம் பெருகும்