மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 5

சத்தியப்பிரியன், ஓவியம்: ஸ்யாம்

7. தாய்க்கோலம் செய்தேனோ அனசூயையைப் போலே? 

அனசூயை அத்ரி மகாமுனிவரின் பத்தினி. கற்புக்கரசிகளில் ஒருத்தி. அனசூயை பற்றி 'லக்ஷ்மீ தந்த்ரம்’ என்ற பாஞ்சராத்ர ஆகம நூலில் கூறப்பட்டுள்ளது. அனசூயை கணவனுக்கு தகுந்தாற் போல் நடந்து கொள்ளும் பெண்களில் மிகவும் சிறந்தவள். அத்ரி முனிவரின் தர்ம பத்தினி. ஒருமுறை, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் தாயாக மாறும் பாக்கியம் பெற்றவள். தேவர்களால் இடைவிடாது போற்றப்படுபவள். அனைத்து அறங்களும் தர்மங்களும் அறிந்தவள். கணவரிடம் உண்மையோடு இருப்பவள்.

வனம் புகும் காலத்தில், சித்திரக்கூடம் செல்லும்போது அன்றைய பொழுதைக் கழிக்க, அத்ரி முனிவரின் ஆசிரமத்தில் சீதை, இலக்குவனோடு தங்குகிறான் ராமன். 'கற்பின் அனசூயை’ என்கிறான் கம்பன். அத்ரியின் ஆசிரமம்

மந்தாகினி நதிக்கரையில் அமைந்திருந்தது. அசூயை என்றால் பொறாமை என்று பொருள். அனசூயை என்றால், பொறாமையற்று இருத்தல் என்று பொருள். நல்ல குணங்களைத் தீய குணங்களாகக் காணும் தன்மை அசூயை. அனசூயை அப்படிப்பட்ட தன்மையற்று இருப்பதோடு, வாத்சல்யம் நிறைந்தவளாகவும் விளங்கினாள். ஒவ்வொரு வீட்டிலும் விவேகம் மிக்க, வயதான மூதாட்டி ஒருவர் இருப்பார். அவருக்கு நல்லவை கெட்டவை தெரியும்; தர்ம நியாயங்கள் தெரிந்திருக்கும்; வாழ்வில் அடைய வேண்டியதை அடைந்ததால், ஒரு சமமான பார்வை இருக்கும். அந்த மூதாட்டியைப் பார்த்தால், வாழ்ந்தால் இவரைப் போல வாழ வேண்டும் என்ற எண்ணம் வரும். அப்படி ஒரு தன்மையளாக அத்ரியின் தர்மபத்தினி விளங்கியதாக பூர்வாச்சார்யர்கள் சொல்கின்றனர்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 5

'அன்ன மா முனியொடு அன்று,

அவண் உறைந்து, அவன் அரும்

பன்னி, கற்பின் அனசூயை

பணியால், அணிகலன்,

துன்னு தூசினொடு சந்து, இவை

சுமந்த சனகன்

பொன்னொடு ஏகி, உயர் தண்டக

வனம் புகுதலும்...’

எனும் பாடலில் கம்பர் அனசூயை பற்றிக் குறிப்பிடுகிறார். வால்மீகி தனது ராமாயணத் தில் அனசூயையின் பெருமைகளை மிக அருமையாகச் சொல்கிறார்.

'ஒருமுறை, உலகில் மழையின்றித் தவித்தபோது, அனசூயை கடும் தவம் இயற்றி, கங்கையை அங்கே கொண்டு வந்தாள். அந்த இடத்தில் கங்கை, மந்தாகினி என்ற பெயருடன் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. மற்றொரு முறை, தேவர்களின் நலன் கருதி, ஒரு தேவ இரவை பத்து இரவுகளாக மாற்றிக் கொடுத்தாள் அனசூயை. கோபமோ அசூயையோ சற்றும் இல்லாத தனது செயல்களாலேயே இவள் அனசூயை என்ற பெயர் பெற்றாள்’ என்கிறார் வால்மீகி.

முதிர்ந்த உடல், தும்பைப் பூ போல நரைத்த தலை, காற்றில் ஆடும் வாழைமரத் தண்டு போன்ற மெல்லிய கால்கள் என்று வால்மீகி வருணிக்கிறார். ரிஷிபத்தினி என்பதால், அனசூயைக்கு கணவரைப் பின்தொடரவேண்டியது தர்மம். ஆனால் ஜனக மகாராஜாவின் புத்ரியும், சக்கரவர்த்தித் திருமகனின் மனைவியுமான சீதைக்கு, ராமனுடன் இளம்பிராயத்தில் காடு செல்ல நேரிட்டதற்குச் சிறிதும் மனவருத்தம் கொள்ளாமல், 'பிரிவினும் சுடுமோ பெருங்காடு’ என்று கூறிப் புறப்பட, எத்துணை மனத்திண்மை இருக்க வேண்டும்? இந்த இரும்பொறைதான் அனசூயைக்கு சீதை மேல் அதீத வாஞ்சையை ஏற்படுத்திக் கொடுத்தது. மகளைப் போல் பாவிக்கிறாள்.

''என்ன வேண்டும், கேள் சீதா?'' என்கிறாள்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 5

சீதைக்கு ஆச்சர்யம்! தனது இனிமையான, பரிவு மிக்க குரலால் அந்த மூதாட்டி கூறிய அறிவுரைகளைவிட, அவரிடம் பெறுவதற்கு வேறு என்ன இருக்கிறது என்கிற வியப்பு.

'வேறு எதுவும் வேண்டாம்' என்ற சீதையின் மறுமொழியைக் கேளாமல், சீதையை அலங்காரம் செய்ய முடிவெடுக்கிறாள் அனசூயை.

'மரவுரி தரிக்கவேண்டும் என்பது உன் கணவனுக்குத் தலைவிதி. நீயும் இப்படியே இருக்க வேண்டுமா? வா'' என்று அலங்காரம் செய்ய அழைத்துப் போகிறாள்.

ஒரு ரிஷிபத்தினியிடம் பெரிதாக என்ன அலங்காரப் பொருள் இருக்கப்போகிறது? தன்னிடம் உள்ள சில தெய்விகமான மாலைகள், எளிமையான ஆடைகள், சின்னச் சின்ன ஆபரணங்கள், அங்கராகம் என்று உடலில் பூசிக்கொள்ளும் வாசனைப் பொருட்கள் போன்றவற்றைக் கொடுக்கிறாள்.

கூடவே, ''இந்தப் பொருட்களை நீ அணிந்து கொண்டால், பத்து வருடங்கள் ஆனாலும் அவை புதுக்கருக்கு அழியாமல் அப்படியே இருக்கும்'' என்கிறாள். சீதையின் நேரத்தைப் பாருங்கள்... அடுத்த சில நாட்களில் ராமனுடன் தண்டகாரண்யம் போய், ராவணனால் சிறைப்பிடிக்கப்பட்டு, இலங்கையில் அசோக வனத்தில், 'இருந்த இடத்தை விட்டு அசையாத கற்பெனும் தவம் களிநடனம் புரிந்த காலத்தில்’ அவள் இந்த ஆடைகளையும் ஆபரணங்களையும்தான் அணிந்து கொண்டிருந்தாள். அப்படி என்றால், அந்த அனசூயை எத்தனை உயர்ந்த குணம் படைத்தவளாக இருக்க வேண்டும்?

'அந்த அனசூயையை போல பெரிய பிராட்டிக்கு நான் தாய்க் கோலம் செய்தேனா? இல்லையே! அதனால்தான் இந்த ஊரை விட்டுப்

போகிறேன்’ என்கிறாளாம் திருக்கோளூர் பெண்பிள்ளை.

8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே?

துருவனுடைய சரித்திரம் மிகவும் உன்னதமான சரித்திரம். பக்திக்கும், இறை நம்பிக்கைக்கும் இளம்பிராயம் எவ்வளவு முக்கியம் என்று சொல்வதற்குப் பெண்களில் சிறந்தவள் ஆண்டாள்; ஆண்களில் சிறந்தவன் துருவன்.

ஆண்டாளுக்காவது அவளுடைய தந்தையும், சிறந்த வைஷ்ணவருமான விஷ்ணுசித்தர் சிறு வயதிலிருந்தே கிருஷ்ணபிரேமையை ஊட்டி வளர்த்தார். ஆனால், துருவனுக்கு ஒரு விபத்தாகத்தான் விஷ்ணுவின் மகிமை காதில் விழுகிறது.

பிரம்மா இந்த உலகைப் படைக்க, முதலில் ஸ்வயாம்புவ மனுவைப் படைக்கிறார். மனுவுக்கு ப்ரியவிரதன் மற்றும் உத்தான பாதன் என இரண்டு புதல்வர்கள் பிறக்கிறார்கள். உத்தானபாதனுக்கு இரண்டு மனைவிகள். மூத்தவள் சுநீதி. இளையவள் சுருசி. சுநீதியின் மகன்தான் துருவன். சுருசியின் மகன் உத்தமன்.

உத்தமன் ஒருநாள் தனது தந்தையின் மடியில் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறான். அந்தப் பக்கம் வரும் துருவன் இதைப் பார்க்கிறான். அவனும் பாலகன்தானே? அவனுக்கும் தந்தையின் மடியில் அமர்ந்துகொள்ளவேண்டும் என்று ஆசை உண்டானது. எனவே, தந்தையருகில் செல்கிறான். சிற்றன்னை சுருசி அவனைத் தடுத்துக் கீழே தள்ளிவிடுகிறாள்.

துருவன் அழுதுகொண்டே சிற்றன்னை யிடம் காரணம் கேட்கிறான். ''உன் தந்தை மடியில் நீ அமரவேண்டும் என்றால், ஒன்று நீ என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும்; இல்லையென்றால், சர்வ ரட்சகரான பகவான் மகாவிஷ்ணுவிடம் வரம் கேட்க வேண்டும்'' என்கிறாள்.

இந்தப் பிறப்பில் மீண்டும் சுருசி வயிற்றில் மகனாகப் பிறப்பது இயலாத காரியம்; எனவே, இயலும் காரியமான மகா விஷ்ணுவிடம் வரம் கேட்கலாம் என்று துருவன் காட்டுக்குக் கிளம்பினான். முடியும் என்பது அவனுடைய நம்பிக்கை. அதை வெறுமே நம்பிக்கை என்றுகூடச் சொல்ல முடியாது. தினப்படி நடவடிக்கைபோல வாடிக்கையான ஒன்றாகவே அது துருவனிடம் காணப்பட்டது.

மகாவிஷ்ணுவிடம் கேட்டால் கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையை மட்டும் பற்றிக்கொண்டு போனவன் துருவன். நாமானால் 'நிஜமாகவே மகாவிஷ்ணு இருக்கிறாரா? அடுத்தது, அப்படியே இருந் தாலும் நாம் கூப்பிட்டால் வருவாரா? அவர் வருவதற்கு எத்தனை காலம் ஆகும்?’ என்றெல்லாம் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டிருப்போம்.

துருவன் இது போன்ற கேள்விகளைக் கேட்கவேயில்லை. சட்டென்று கானகம் கிளம்பிவிட்டான்.

நாரதர் வருகிறார். தடுக்கிறார். 'உன் ஆன்ம தாகத்தைத் தீர்க்கும் உபாயத்தை நான் கூறுகிறேன். திரும்பிப் போ' என்கிறார்.

'மகாவிஷ்ணுவைக் காண்பது ஒன்றுதான் என் குறிக்கோள், ஆன்ம தாகம் எல்லாம். முடிந்தால் அதற்கு உபாயம் சொல்லுங்கள்' என்கிறான்  துருவன். நாரதர் அவனது மனஉறுதியைப் புரிந்துகொள்கிறார்.

முதலில், உணவு உண்பதை விட்டுவிடச் சொல்கிறார். அந்தப் பச்சிளம் பாலகன் பசி பொறுப்பானா? ஆனாலும், உணவை விட்டுவிடுகிறான். அடுத்து, தண்ணீர் குடிப்பதை நிறுத்தச் சொல்கிறார். துருவன் அதையும் செய்கிறான். அவன் தியானம் உச்சத்தை அடைகிறது.

மன்நாராயணன் அந்தச் சிறுவனின் அந்தராத்மாவுக்குள் நுழைந்துவிடுகிறார். அதைச் சிறுவன் உணர்கிறான். ஆனால், அவன் லட்சியமெல்லாம் மகாவிஷ்ணு கண்ணெதிரே பிரத்யட்சமாவது மட்டும்தான். அதற்கு நாரதரிடம் வழி கேட்கிறான்.

பிரணவத்தில் சுவாசத்தை நிலை நிறுத்தச் சொல்கிறார். 'ஓம்’ என்ற ஓங்காரம் மட்டுமே எங்கும் ஒலிக்கிறது. ஈரேழுலகமும் அசைவற்றுப் போகிறது. 'இனி வேறு வழியில்லை’ என்று மகாவிஷ்ணு அவன் முன் பிரத்யட்சமாகிறார். தனது மடியில் அமர்த்திக்கொள்கிறார். உத்தான பாதனின் மடியை எண்ணி ஏங்கிய பிள்ளைக்கு, சர்வலோகங்களுக்கும் தந்தையான மகாவிஷ்ணுவின் மடியில் அமரும் பாக்கியம் கிட்டியது.

'அப்படிப்பட்ட துருவனைப் போல,  சர்வலோகங்களுக்கும் தந்தையான மகா விஷ்ணுவைத் தேடி அடையும் பொருட்டு, 'தந்தை எங்கே' என்றேனா? எனவே தான், நான் போகிறேன்’ என்கிறாள் அந்தப் பெண்பிள்ளை.

ரகசியம் வெளிப்படும்