Published:Updated:

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

Published:Updated:

? ந்துக் கோயில்களில் அமைதியே இல்லையே! எந்நேரமும் 'டாண் டாண்’ என்று மணி அடிக்கிறார்கள். வாத்தியங்களை முழங்குகிறார்கள். இரைச்சல் நிரம்பிய இடத்தில் ஆண்டவனை எப்படி வழிபட முடியும்? 

உண்மைதான். இந்துக்களின் ஆலய வழிபாட்டுக்கும் மற்ற மதத்தினரின் வழிபாட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்துக்கள் கோயிலுக்குச் செல்வது, முக்கிய மாகத் தங்களுடைய நன்றிக்கடனைச் செலுத்து வதற்காகத்தான். அரசனுக்கு வரி செலுத்துவதுபோல், ஆண்டவனுக்கும் பிரசாதங்களை வைத்துக் கும்பிடுகி றோம். இதற்காகவே கோயிலைத் தேடிச் செல்கிறோம். தவிர, இந்துக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் பிரார்த் தனைக்கெனத் தனியாக பூஜையறை இருக்கிறது. அவர்கள் அங்கேதான் அமைதியாக ஆண்டவனைத் தியானிப்பார்கள்.

அருட்களஞ்சியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தர்ம மூர்த்தியைத் தந்த தர்ம மூர்த்தி

தசரத சக்கரவர்த்தியை ராமனுடைய தந்தை என்று தான் அறிமுகப்படுத்துகிறான் கம்பன்.

இம்மாண் கதைக்(கு) ஓர்

இறையாய இராமன்

என்னும்

மொய்ம்மாண் கழலோன்

தருநல்லற மூர்த்தி

அன்னான்.

ராமனைப் பெற்ற பெருமை தசரதனுக்குத்தானே? எனவே, தர்ம மூர்த்தியைத் தந்த தர்ம மூர்த்தி  என்கிறான். ''கங்கையின் உற்பத்தி' 'காவேரியின் உற்பத்தி' என்றெல்லாம் கெளரவிப்பதில்லையா? இந்தப் புண்ணிய நதிகளின் பெருமை முழுவதும் அந்த உற்பத்தி ஸ்தானங்களிலே காணப்படுகிறதா?

இப்படி ராமனின் தந்தையென்று தசரதனைக் கௌரவிக்கும் கவிஞன், இங்கே இந்தச் சக்கரவர்த்தி யின் முன்னோரைக் குறித்துப் பேசாததில் அதிசயம் இல்லை. மனு, இட்சுவாகு, மாந்தாதா, சிபி முதலான அந்தப் பெரிய பெரிய சக்கரவர்த்திகளின் வம்சப் பிரவாகத்தோடு வந்த பெருமையைக் காட்டிலும் எவ்வளவோ மேலானதல்லவா, சந்ததியாக ராமனைப் பெற்றுத் தசரதன் அடையப் போகும் பெருமை, அடையப் போகும் பாக்கியம்?!

அரசன் ஆட்சி செய்யவில்லை!

எனவே, இந்த 'அரசியல் படல’த்திலே 'குலமுறை’யாக வந்த பெருமை பேசப்படவில்லை. அந்தப் பிரமாண்டமான அரண்மனை கூட வர்ணிக்கப்படவில்லை. அந்தக் கொலு மண்டபமும்  ஏன்? அந்தச் சிங்காசனம் கூட  வர்ணிக்கப்படவில்லை. ராஜரீக ஆடம்பரங்களாவது, அதிகார படாடோபங்களாவது பிரஸ்தாபிக்கப்படவுமில்லை.

ராஜரீக ஆடம்பர மாட்சிகளிலே ராஜதர்மம் மறைந்து போகிறது; மறந்தும் போகிறது ராஜாக்களுக்கும் ராஜதந்திரிகளுக்கும். தசரதனோ, ராஜ குணங்களெல்லாம் தனக்குப் பணி செய்ய தான் ஜனங்களுக்குப் பணி செய்து வருகிறானாம். தசரத மன்னன் ஆட்சி செய்யவில்லை; பணி செய்கிறான்: இதுதான் இந்த மன்னன் மாட்சி!  என்கிறான் கவிஞன்.

அருட்களஞ்சியம்

இந்த மாட்சியைப் பாருங்கள்; அன்புப் பணியைப் பாருங்கள்;

தாய்ஒக்கும் அன்பின்;

தவம்ஒக்கும் நலம்ப யப்பின்;

சேய்ஒக்கும் முன்நின்(று)

ஒருசெல்கதி உய்க்கும்

நீரால்;

அன்பின் சிகரமல்லவா தாயன்பு? குழந்தைகளுக்குத் தாய் எப்படியெல்லாம் பணி செய்கிறாள்! எப்படிப்பட்ட தியாகங்களையும் அனாயாசமாய்ச் செய்து விடுகிறாளல்லவா? அப்படியெல்லாம் அன்புப் பணிகள் செய்கிறானாம் தசரதனும் தன் மக்களுக்கு.

பாக்கியத்திலே பங்கு

ஒரு பகல் உலகெலாம்

உதரத் துள்பொதிந்(து)

அருமறைக்(கு) உணர்வரும்

அவனை, அஞ்சனக்

கருமுகில் கொழுந்(து)எழில்

காட்டும் சோதியைத்

திருவுறப் பயந்தனள்,

திறம்கொள் கோசலை.

உலகங்களையெல்லாம் தன் வயிற்றிலே அடக்கி வைத்துக் காப்பாற்றிய அகில லோக ஜோதியாகிய பெருமாளையே கௌசலை தன் வயிற்றில் அடக்கி வைத்திருந்து பெற்றெடுத்தாளாம், பிள்ளையாக, எப்பேர்ப்பட்ட பாக்கியசாலி!

பாக்கியம் இவளுக்குத்தானா? கோசல நாட்டிற்கு மட்டுமா? இந்த உலகத்திற்கு மட்டுமா? பகவான், வயிற்றிலே வைத்து ரட்சிக்கிறானே அருமையாக, அந்த உலகங்களெல்லாம் பங்கு கொண்டனவாம் கௌசல்யா தேவியின் பாக்கியத்திலே. இவளுடைய புத்திர சம்பத்து, உலக மக்களுக்கெல்லாம் இகபர சம்பத்தாயிற்று! சாதுக்களுக்கெல்லாம் ஆத்ம சம்பத்தாகி விட்டது!

கைகேயி பரதனைப் பெற்றாள். சுமித்திராதேவி லட்சுமணனையும், சத்ருக்னனையும் பெற்றாள்.

இப்படித் தசரதனுக்கு நாலு பிள்ளைகள் பிறந்ததும், மண்ணுலகத்தோடு மேலுலகமும் ஆடிப் பாடி ஆனந்தம் அடைந்ததாம். ''துஷ்ட ராட்சஸர்கள் தொலைந்தே போனார்கள்!' என்று:

ஆடினர் அரம்பையர்;

அமுத ஏழிசை

பாடினர் கின்னரர்;

துவைத்த, பல்லியம்;

'வீடினர் அரக்கர்’ என்(று)

உவக்கும் விம்மலால்,

ஓடினர்; உலவினர்

உம்பர் முற்றுமே!

ஞான வசீகரம்

பிள்ளைகள் ஆண்டிலும் வளர்ந்து, அழகிலும் வளர்ந்து அறிவிலும் வளர்ந்து வருகிறார்கள், வசிஷ்ட முனிவனுடைய குரு குலத்திலே. அக அழகிலும் புற அழகிலும் ஒருங்கே வளர்ந்து வருகிறார்கள்,  'என்ன அதிசயமான குரு குலக் கல்வி?’ என்று பிரமிக்கும்படி. இவர்களில், ராம லட்சுமணர்கள் ஒருவரை யொருவர் பிரிவதில்லை; ஆறு, குளம், சோலை முதலான இடங்களில் விளையாடும்போதும் பிரிவதில்லை.

அப்படியே பரத சத்ருக்னர்களும் ஒருவரை யொருவர் பிரியாமலே கல்வி கற்று வந்தார்கள்; குதிரையேற்றம் முதலான போர்க் கலைகளில் பயிற்சி பெறும்போதும் பிரியாமலேயிருந்தார்கள். இத்தகைய குருகுலக் கல்வியால் கிடைத்த ஞான சௌந்தரியமும் ராமனுடைய வசீகர சக்தியை அதிகப்படுத்தியிருக்க வேண்டும்.

* 2.4.44 மற்றும் 30.4.44

ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...

'ஏசுநாதரைக் கண்டேன்!’ 

ஆர்தர் கோஸ்ட்லர் என்னும் ஆசிரியர் ஒரு மாஜி கம்யூனிஸ்ட். நீண்டகாலமாக அரசியல் துறையில் ஈடுபட்டிருந்த இவருடைய மனம் எதனாலோ மத சம்பந்தமான ஆராய்ச்சியில் திரும்பிவிட்டது. பல்வேறு மதங்களைப் பற்றியும், அம்மதங்களிலுள்ள குறைவு நிறைவுகளைப் பற்றியும் நேரில் விசாரித்து அறிந்துகொள்ளும் பொருட்டுப் பல நாடுகளுக்குச் சுற்றுப் பிரயாணம் செய்தார். ஆங்காங்கே உள்ள பெரியோர்களைச் சந்தித்துப் பேசினார். இவர் இந்தியாவுக்கும் வந்து, பல பகுதிகளுக்கும் சென்று, பல துறவிகளையும் மகான்களையும் கண்டு உரையாடியிருக்கிறார். அவர்களுள் காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு சங்கராசாரிய சுவாமிகளும் ஒருவர்.

கோஸ்ட்லர் தம்முடைய சுற்றுப்பயணத்தின் போது கண்டு கேட்ட விவரங்களை எல்லாம் தாம் எழுதியுள்ள 'ஜிலீமீ லிஷீtus ணீஸீபீ tலீமீ ஸிஷீதீஷீt' எனும் புத்தகத்தில் விவரித்திருக்கிறார். ஆசாரிய சுவாமிகளை அவர் சந்தித்தது பற்றியும் அவர்களுடன் நடத்திய உரையாடல்களும் அந்நூலில் இடம்பெற்றுள்ளன. (அதில் ஒரு கேள்வியும் அதற்கு காஞ்சி மகாபெரியவர் அளித்த பதிலும்தான் அருட்களஞ்சியத்தின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.)

''கோயில் ஒன்றை அடுத்தாற்போல் உள்ள சிதிலமான ஒரு சின்னஞ்சிறிய வீட்டுக்குள் நாங்கள் பிரவேசிக்கிறோம். எங்கள் முன்னால் இருண்ட குறுகலான சந்து வழி ஒன்று காணப்படுகிறது. அந்த வழியின் குறுக்கே வைக்கப்பட்டுள்ள 'மேனா’வின் முன்னும் பின்னும் பலம் வாய்ந்த கம்புகள் இரண்டு வெளியே நீண்டிருக்கின்றன.

தாழ்வாரத்தை ஒட்டினாற்போல், கைதிகளை அடைக்கும் அறை போன்ற ஒரு சிறிய இடம். அங்கே போடப்பட்டுள்ள பாயின்மீது போய் உட்காருகிறோம். ரகசியக் குரலில் சில நிமிட நேரம் நடைபெறும் சம்பாஷணைக்குப் பின்னர், ஒரு வாலிபர் அந்த மேனாவை அணுகி உடம்பை வளைத்துக் குனிந்து ஏதோ கூறுகிறார். அடுத்தாற்போல், காவி நிறச் சால்வை ஒன்று மேனாவுக்குள் அசைகிறது. மூட்டைப்போல் தோன்றும் அந்தச் சால்வைக்குள்ளிருந்து ஜகத்குரு  சங்கராசாரிய சுவாமிகள் வெளிப்படுகிறார். வெளிவரும்போதே அந்தச் சால்வையால் தம் தலையைச் சுற்றிலும் மூடிக்கொள்கிறார்.

மெலிந்த உயரமான தோற்றம் கொண்ட அவர் அந்த இருட்டறைக்குள் வந்து கால்மேல் குறுக்குக் கால் போட்டுக்கொண்டு அமர்ந்தபடியே பாயில் உட்கார்ந்திருக்கும் என்னைக் கவனிக்கிறார்.  உடனே அந்த அறையில் உள்ளவர்கள் அனைவரும் எழுந்துபோய்ச் சந்து வழியில் நின்று கொள்கின்றனர். சிலர் மட்டும் எங்கள் சம்பாஷணைகளைக் கேட்கும் ஆவலில் ஜன்னல் மீது சாய்ந்தவண்ணம் உள்ளே பார்த்து நிற்கின்றனர்.

விவேகானந்தா கல்லூரி வேதாந்த புரொபசர் ஒருவர் தான் எங்களுக்கு இடையே மொழி பெயர்ப்பாளராக அமர்கிறார்.

அருட்களஞ்சியம்

அரை நிமிஷ நேரம் மெளனம். அப்போது நான் சுவாமிகளின் ஒப்பிலா முகத்தைக் காண்பதில் ஈடுபட்டிருக்கிறேன். கடுந்தவ வாழ்க்கையின் பயனாக சுவாமிகளின் முகம் வாடியிருந்த போதிலும் விழிகள் மட்டும் தீட்சண்யமாக ஜொலிக்கின்றன. உதடுகள் வார்த்தைகளை அளந்து வெளியிடுவதில் எச்சரிக்கையுடன் அசைகின்றன.

'நீ எதற்கு இந்தியாவுக்கு வந்தாய்?’ என்று மெதுவாகக் கேட்கத் துவங்கிய அவர், 'இந்த தேசத்தையும் இங்குள்ளவர் களையும் பார்க்க வந்திருக்கிறாயா? அல்லது அவர்களுக்கு ஏதாவது நல்ல வழி காட்ட வந்திருக்கிறாயா?’ என்று விசாரித்தார்.

'நான் இங்குள்ளவர்களைப் பார்த்துத் தெரிந்துகொண்டு போகவே வந்திருக்கிறேன்’ என்றேன்.

'ஒருவருடைய தீவிரமான கருத்தே சுற்றியுள்ள சூழ்நிலையை மாற்றிவிடும் சக்தி படைத்தது.  அவர் எதுவும் செய்யவேண்டியதில்லை...’

'அதற்காக நான் வருத்தப்படுகி றேன். நம்முடைய நிழலை நாம் புறக்கணித்துவிட முடியாது’ என்றேன். பேசிக்கொண்டே இருந்தபோது சுவாமிகள் சாந்தம் ததும்பக் குழந்தை போல் சிரிக்கக் கண்டேன். அதற்கு ஈடானதொரு சிரிப்பை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை. அசாதாரண, வசீகரமிக்க, அன்பும் அமைதியும் பொருந்திய அந்தத் தெய்விக முகத்தை நான் வேறெங்கும் கண்டதே இல்லை.

ஏசுநாதரின் அன்பு ததும்பும் முகத்தை எத்தனையோ சித்திரங்களில் கண்டு வியந்துள்ள போதிலும் இத்தகைய வசீகரம் அந்த சித்திரங்களில் இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.''

* 28.10.62 ஆனந்த விகடன் இதழில் இருந்து...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism