Published:Updated:

ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா ?

கேள்வி - பதில்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா ?

கேள்வி - பதில்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

? உறவினர் குடும்பத்தில் பிரச்னை. அவருடைய மகள் மணவாழ்வை முறித்துக் கொண்டுவிட்டாள். ''பத்துப் பொருத்தமும் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணி வைத்தேன். இப்படி ஆகிவிட்டதே...' எனப் புலம்புகிறார் நண்பர். நீங்கள் சொல்லுங்கள், ஜாதகப் பொருத்தம் பார்ப்பதனால் பலன் உண்டா? 

கல்யாணராமன், சென்னை 28

முதல் கோணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பண்டைய நாளில் ஆண்பெண் இருவரிலும் நட்பை உறுதிப் படுத்தத் திருமணத்தை கையாண்டார்கள். பூப்பெய்தாத நிலையில் பெண் இருப்பாள். போதுமான சிந்தனை வளம் பெறாத நிலையில் ஆண் இருப்பான். ஆசைகள் முளைவிடாத மனம்; ஆனால், நட்பைத் தேடி அலையும் மனம் இருவரிடமும் இருக்கும். இந்த நிலையைப் பயன்படுத்தி நட்பில் இருவரையும் இணைக்க முற்படுவார்கள். இரு மனமும் நட்பில் இணைவதுதான் திருமணம்.

தாய் தந்தை சொல்லை ஏற்கும் இயல்பும், சமுதாய சட்ட திட்டத்துக்குப் பணியும் பாங்கும்தான் அவர்களிடம் தென்படும். தானாக இணையைத் தேர்ந்தெடுக்கும் மனப்பக்குவம் அவர்களிடம் இருக்காது. ஆசை முளைத்தால் மட்டுமே ஆராய்ச்சிக்குத் தகவல் கிடைக்கும். அறியாப் பருவத்தில், நட்பின் அடிப்படையில் அவர்களை இணையவைத்தால், இறுதிவரையிலும் தாம்பத்தியம் செழிக்கும் என்பதை உணர்ந்து, அவர்களது முன்னேற்றத்தை முன்னிறுத்தி, அதற்கேற்ப முடிவெடுத்து அவர்களை அவர் களுடைய பெற்றோர் திருமணத்தில் இணைய வைத்தார்கள்.

ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா ?

நட்பில் இணைந்த மனம், பிற்பாடு ஆசைகள் முளைத்து வளர்ந்து அனுபவிக்கத் துடிக்கும் வேளையில், நட்பில் இணைந்த துணையிடம் செயல்பட்டு இருவரும் இன்பத்தைச் சுவைப்பர். உண்மையான இன்பத்தின் முழுச் சுவையும் அவர்களுக்குக் கிடைத்துவிடும். அந்த அனுபவம் திருப்தியை அளிக்கும்போது பழைய நட்பு, புது உறவில் திடமாகிவிடும். தாம்பத்தியம் சிறக்கும்.

? எனில், பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் பொருத்தங்கள் பார்க்கவில்லையா?

அன்றைய நாளில் இருவரையும் நட்பில் இணையவைக்க ஜாதகம் பார்க்கும் படலம் தேவையில்லாமல் இருந்தது. பங்காளிகள், ஒழுக்கம், ஆரோக்கியம், படிப்பு, மகப்பேறு ஆகியவையே அவர்களது இலக்கணம். இவற்றை ஆராய்ந்து திருமணத்தில் இணைத்தார்கள். மனப்பொருத்தம் பார்க்கப்படவில்லை. நட்பு அவர்களின் மனப் பொருத்தத்தை நிறைவுசெய்து விடும்.

இந்த நிலையில் சமுதாயப் புரட்சியாளர்கள் சிலர் தோன்றி, இதில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி, நிறைவை மறைத்து பால்ய விவாஹத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர். பால்ய விவாஹத்தில் இளம் விதவைகள் பெருகி விட்டார்கள். மக்கள் பெருக்கமும் அளவைத் தாண்டிவிடுகிறது. அந்தப் பெண்ணானவள் மகப் பேற்றைச் சந்தித்து, உடல் வளம் குன்றி, சிறு வயதிலேயே முதுமையைச் சந்திக்க, அவளது

வாழ்க்கை பாலைவனமாகிவிடுகிறது. ஆணாதிக்கமானது பெண்மையை அடிமையாக்கி நுகர் பொருளாகவே பார்ப்பதால், பெண்மை தரம் இழந்து தவிக்கிறது. அவர்கள் வீட்டில் அடைந்து கிடக்கிறார்கள்.

சமுதாயத்தில் இணைய அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. படிப்பிலும் அவர்களை  இணையவிடுவது இல்லை. அவர்களின் பிறப்புரிமை பறிக்கப்படுகிறது. அவர்கள் விருப்பப்படி இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கவேண்டும். ஆகையால் படிப்பு, வேலை வாய்ப்பு, மனதில் ஆசைகள் முளைத்தபிறகு அலசி ஆராய்ந்து தன்னிச்சையாக இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஆகியன அவளுக்கு இருக்கவேண்டும். இப்படியான புரட்சி எண்ணங் களின் கூற்றை ஏற்று, சார்தா சட்டம் வாயிலாக, வயது வந்த பிறகே திருமணத்தை ஏற்கவைத்தது.

ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா ?

? இதில் என்ன தவறு இருக்கிறது? உரிய வயதுக்கு வந்த பிறகு மணம் முடித்தால்தானே பிரச்னைகளை எதிர்கொள்ளும் பக்குவம் வாய்க்கும்?

அப்படிச் சொல்லிவிட முடியாது. தற்போது திருமண வயது 30க்கும் 40க்கும் இடையில் நடைமுறையில் இருக்கிறது. திருமண வாழ்வின் அடித்தளம் என்பது மறைந்து, அது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது. இளமைப் பருவம் முடிந்து முதுமையை எட்டியவர்களும் திருமணத்தை ஏற்பது உண்டு. இளமை தோன்றி செழிப்புற்று ஏறக்குறைய 10 வருடங்கள் கழிந்தபிறகு திருமணத்தில் இணைவார்கள்.

இதனால், குழந்தைச் செல்வம் தடைப்பட்டு, செயற்கை வழியில் அதை ஈட்டும் தம்பதிகளும் இன்றைக்குப் பெருகி இருக்கிறார்கள். படித்துப் பட்டம் பெற்று, வேலையில் அமர்ந்து பொருளாதாரத் தில் நிறைவு பெற்ற பிறகு, ஆணும் பெண்ணும் திருமணத்தில் இறங்குகிறார்கள். சமுதாயத்துடன் நெருங்கி வாழும் அவர்களுக்குப் பலதரப்பட்ட அனுபவங்கள் மனதில் பதிந்து இருக்கும். சிலரிடம் சுயநலம் ஓங்கி, அஹங்காரமும் வளர்ந்திருக்க இடமுண்டு. இருவரும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இணை, தங்கள் வசம் இருக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளித்து இணையை அணுகுவார்கள். தேர்வில் அவரவர் சிந்தனைதான் முடிவுக்கு ஆதாரம். பிறரின் பரிந்துரையை ஏற்காத வகையில், எதையும் மாற்றிக்கொள்ளாத நிலையை அவர்களுடைய இயல்பு எட்டிவிடும். எதற்கும் வளைந்து கொடுக்க மாட்டார்கள்.

அன்பைவிட, காதலைவிட, சுயநலம் வென்று விடும். இருவரும் தங்களுடைய சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். ஆசை உச்சக் கட்டத்தை எட்டும் வேளையில், திருமணத்துக்கு அவசரப்படுவார்கள். ஆசையின் உந்துதலில் பல விருப்பங்களை விட்டுக்கொடுத்து, தன்னையும்

அறியாமல் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்து விடுவார்கள். ஆசை தணிந்ததும், இருவரிடமும் அவர்களின் மாறுபட்ட இயல்பு தலைதூக்கும். முடிவில், இருவரும் விருப்பத்துடன் விவாஹரத்தை ஏற்பார்கள். மீண்டும் புது இணையைத் தேட முயற்சிப்பார்கள். சுருங்கச்சொன்னால் திருமண வாழ்க்கை கசப்பான அனுபவங்களை உணர வைப்பதும் உண்டு. இருவரும் ஒருவரையொருவர் தூற்றிக்கொள்வதுடன், பெற்றோரையும் சமுதாயத்தையும் குறை கூறி, தங்களது இயலாமையை மறைத்துக்கொண்டு வாழ்வார்கள்.

ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா ?

? பொருத்தங்கள் குறித்துப் பேசுவதை விட்டுவிட்டு வயது வரம்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஜாதகப் பொருத்தம் தேவையா இல்லையா? அதுபற்றிக் கூறுங்கள்.

இந்த அவலத்தைப் போக்குவதற்கான அருமருந்து ஜாதகப் பொருத்தம். இருவரின் சிந்தனைப்போக்கை ஆராய்ந்து, அவர்களின் இயல்பில் இருக்கும் சாதகபாதகங்களை நிலையிருத்தி, இணையோடு இணைந்து வாழும் தகுதியை எடைபோட்டு, திருமணத்தில் இணைத்தால் அந்தத் தாம்பத்தியம் சிக்கல் இல்லாமல் செழிப்பாக அமையும். அவர்களது மனநிலை, ஆசையின் அளவு, இயல்பின் தரம் ஆகிய அத்தனையையும் ஜாதகம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் காட்டித் தந்துவிடும்.

எனினும், ஜாதகத்தைப் பொறுமையாக ஆராயும் திறமை வேண்டும். அப்போது வெற்றியை எட்டலாம். பத்து பொருத்தமோ, கிரஹ அமைப்புகளோ பொருத்தத்தை நிறைவு செய்யாது. மனதை ஆராய்ந்து, அதன் செயல்பாட்டின் தரத்தை உணர்ந்து, அவர்களது இயல்பையும் ஆராய்ந்து பார்த்து முடிவுக்கு வந்தால் அவர்களின் இணைப்பு வெற்றிபெறும். அவர்களது வாழ்க்கை இனிக்கும். சண்டைசச்சரவு இல்லாத தாம்பத்தியம் இருக்கும். பிறவி பயனுள்ளதாக மாறும். விவாஹரத்து தலைதூக்காது. பிறன் மனை நோக்கும் எண்ணம் உதிக்காது. பாலியல்பலாத்காரத்தில் இறங்காது. தான் தேர்ந்தெடுத்த துணையிடம் திருப்தி ஏற்பட்டு நிம்மதி பெறும். நாகரிகமான வாழ்க்கை கிடைத்துவிடும். நல்ல குடிமகனாக

மாற இயலும். சமுதாயத்தில் உண்மையிலேயே பெரிய மனிதர்களாக வளையவரலாம். அப்பழுக்கற்ற மனிதனாக மாறலாம்.

இரண்டாவது கோணம்

ஜாதகப் பொருத்தம் நம்பிக்கைக்கு உகந்ததாக இன்னும் மாறவில்லை. பொருத்தம் பார்த்து இணைந்த திருமணங்களும் விவாஹரத்தில் முடிவடைந்து இருக்கின்றன. இணையின் இழப்பில் மறுமணத்தை ஏற்கவேண்டியிருக்கிறது. குழந்தைக்காக செயற்கை வழியை ஏற்க வேண்டியிருக்கிறது. இருவரிடமும் நட்புக்குப் பதிலாக பகை வளர்ந்து, தாம்பத்தியம் சுமையாகிறது.

குழந்தைகள் பராமரிப்பும், முதியோர் களிடமும் பற்றும் அற்றுப் போய்விடுகிறது. நடைப்பிணமாக மாறும் தம்பதிகளையும் பார்க்க முடிகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட விவாஹரத்தைச் சந்தித்தவர்களும் இருக்கிறார்கள். ஆக, ஜாதகம் பார்க்கும் படலம் நம்பிக்கை இழந்துவிட்டது. அதேநேரம், இன்றையச் சூழலில் ஜாதகம் பார்ப்பது வேலைவாய்ப்பாக மாறிவிட்டது. ஜாதகம் பார்ப்பதை  இளக்காரமாக நினைத்தவர்கள், அதைக் கையாண்டு வாழ்க்கை நடத்து கிறார்கள். ஜாதகப் பரிவர்த்தனையும், நேர்காணலில் இணையைச் சேர்த்து வைப்பதும் வளர்ந்தோங்கி இருக்கின்றன. திருமணத்தை நடத்திவைக்கும் தரகர்கள் வளர்ந்திருக்கிறார்கள். கணினி, ஜாதகப் பொருத்தம் சொல்லும் அளவுக்கு, அதன் தரம் அடித்தளத்தை எட்டியிருக்கிறது.

? எனில், ஜோதிடமே வீண் என்கிறீர்களா?

ஆமாம்! ஜோதிடம் ஒரு மாயத் தோற்றம். அப்பாவி மக்களின் ஒத்துழைப்பில் அது வளர்ந்திருக்கிறது. அதில் சிக்கி தவறான இணையை ஏற்றுத் தவிப்பவர்களும் உண்டு. தனி மனிதனின் சிந்தனைப் போக்கை வரையறுக்க இயலாது. காலத்தின் மாற்றம் சிந்தனையின் தரத்தை மாற்றிவிடும். சந்தர்ப்பம், சூழல் மாறுதலை விளைவிக்கும். வருங்காலத்தில் அவர்கள் சந்திக்கும் கால மாற்றங்கள், சூழல்களை இன்றைக்கே வரையறுக்க இயலாது. வரப்போகும் காலத்தை மதிப்பீடு செய்வது கடினம்.

மருத்துவ விஞ்ஞானமே மனப்போக்கை அறிய இயலாமல் தத்தளிக்கும் நிலையில், கிரகங்கள் மனப்போக்கைச் சுட்டிக்காட்டும் என்பதை நம்பமுடியவில்லை. மற்ற நாடுகளில் எல்லாம் ஜாதகம் பார்த்து இணைவது இல்லை. வானவியல் விஞ்ஞானம் ஜோதிடம் எனப்படும். ஜாதகம் பார்த்தல் ஜோதிடமே அல்ல. பிற்பாடு வந்த சிந்தனையாளர்களால் ஏற்பட்ட புதுப்பிறப்பு, ஜாதகம் பார்க்கும் படலம். தர்மசாஸ்திரம் ஜாதகம் பார்ப்பதை

கட்டாயப்படுத்தாது. பரிணாம வளர்ச்சியில் ஆணும் பெண்ணும் இணைந்தே வாழ வேண்டும் என்பது இயற்கையின் கட்டளை. இனப்பெருக் கத்துக்கு இயற்கை அளித்த வரம் அந்த இணைப்பு. காலம் நிர்ணயம் செய்யும் போது, மனித சிந்தனைக்கு இடமில்லை.

? ஜோதிடமும் காலத்தால் முனிவர்களாலும் மகான்களாலும்  பெற்றுத் தரப்பட்டதுதானே?

அதை மறுக்கவில்லை. ஆனால் மனித சிந்தனை உட்புகுந்து ஜோதிடத்தை தடம் மாற்றிவிட்டது எனச் சொல்ல வருகிறோம். குழந்தை தவழ்வது, முட்டுக்குத்தி நடப்பது, நிற்பது, நடப்பது, ஓடுவது, பேசுவது, விளையாடுவது, படிப்பது, பழகுவது, உரையாடுவது போன்ற பரிணாம வளர்ச்சியில் மனித சிந்தனை தலையிடுவது

இல்லை. அதுபோல், ஆசை முளைத்து இணையைத் தேடுவதிலும் நமது சிந்தனைக்கு வேலையில்லை. எந்த சாஸ்திரமும் இணை சேரும் விஷயத்தில் (தாம்பத்யத்தில் இணைய திருமணத்தை ஏற்க) தலையிட வேண்டிய  தேவை இல்லை. அப்படியான தலையீடு விபரீத விளைவுகளுக்குக் காரணமாகுமே தவிர, ஒத்துழைக்காது.

திருமணத்துக்காக ஜோதிடம் உருவாக வில்லை. அவர்களிடம் இல்லாத தகுதியை ஈட்டித் தரவோ, இருக்கும் தகுதியை குறைக்கவோ ஜோதிடத்தால் இயலாது. தானே இணைய முற்படும் அவர்களை தான் இணையவைத்ததாக பாசாங்கு செய்கிறது. இணையைச் சேர்க்க ஜோதிடம் தேவை இல்லை.

மூன்றாவது கோணம்.

சந்திரன், புதன், சுக்கிரன், குரு ஆகியன தட்பக் கிரகங்கள். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியன வெப்பக்கிரகங்கள். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியன காலத்தில் வெப்பதட்பங்களை இணைக்கும். நாம் உட்கொள்ளும் உணவும் வெப்பதட்பங்களோடு கலந்திருக்கும். நம் உடலும் வெப்ப தட்பங்களின் இணைப்பில் வளரும்; வாடும். உண்ட உணவின் வெப்பதட்பம் மட்டும் உடலின் வெப்பதட்பத்துடன் இணைந்து மாறுதலுக்குக் காரணமாகும். வெப்பதட்பத்தின் தாக்கம் மனதிலும் ஒட்டிக்கொண்டிருக்கும். வாசனைக்கு உருவம் கொடுத்து, சிந்தனையில் மாறுதலை உண்டுபண்ணும்.

? அப்படியெனில் மனித சமூகத்தின் சிந்தனை மாற்றங்களுக்கும்  கிரகங்களுக்கும் பங்கு உண்டா?

நிச்சயமாக! நீரோடு கலந்த அரிசியை வெப்பத் தில் பக்குவப்படுத்துவோம். கோபப் பார்வையில் வெப்பமும், குளிர்ந்த பார்வையில் தட்பமும் அனுபவப்படும். வெளி வெப்பதட்பத்தில் மனமானது மாறுபட்ட உணர்வை உணரும். இப்படி, கர்மவினை வாசனை வடிவில் பற்றிக் கொண்டிருக்கும். அது, வெப்பதட்பங்களின் சேர்க்கையில் மாறுபட்ட சிந்தனையாக மாறிவிடும்.

வாசனையின் சிந்தனை மாற்றத்தை நவ கிரகங்கள் வாயிலாகவும் (ஐம்பெரும் பூதங்கள்), நட்சத்திரங்கள் வாயிலாகவும் (தசா காலங்கள்) தெரிந்துகொள்ளும் வழிமுறைகளை தவ சீலர்களான ரிஷிகள் உலகத்துக்கு எடுத்துரைத்து இருக்கிறார்கள். கண்ணுக்குப் புலப்படாத கடவுளை உணர்ந்தவர்களும் உண்டு. கண்ணுக்குப் புலப்படாத மனதை பற்றுதலில் இருந்து விடுவித்து, ஆனந்தத்தை உணர்ந்தவர்களும் உண்டு (சித்த விருத்திநிரோத:). கண்ணுக்குப் புலப்படாத மனமானது உணரும் துயரத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்றுக் கொள்கிறோம். பண்டைய முனிவர்களின் சிந்தனை, தத்துவத்தை எட்டியவை. புதிய சிந்தனையாளர்களின் சிந்தனை, சிறு அனுபவ வட்டத்தில் முடங்கியிருக்கும். அதை எல்லையாக நினைத்து மனதின் போக்கையும், வருங்காலத்தின் வரைபடத்தையும் தெரிந்துகொள்ள முடியாது.

? விஞ்ஞானங்கள் நிகழ்த்தும் அற்புதங்களைக் கண்முன் பார்க்கும்போது, ஜோதிட பொருத்தங்கள் எல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையே?

ஜோதிட வாசனையே இல்லாத சிந்தனைகள் அதைப் பொய்யாகவும், புரட்டாகவும், மாயையாகவும் பார்ப்பது என்பது அறியாமை.

புலன்களுக்கு எட்டாத விஷயங்கள் ஏராளம். அதை இல்லை என்று சொல்பவரது கூற்று ஏற்கத்தக்கது அல்ல. தன் கண்ணையே தான் பார்க்க இயலாது (பார்க்கும் திறன் கண். அது கண்ணுக்குப் புலப்படாது). அந்த கண்கள் பார்ப்பதை ஏற்கிறான். பிறந்தவனுடைய கர்ம வாசனை இணைந்திருக்கும்

மனதை ஆராய்ந்து அளிப்பதுதான் ஜோதிடத்தின் வேலை. முற்பிறவியில் சேமித்த கர்மவினையின் செயல்பாடுகளை அனுபவிக்கக்கூடிய தருணத்தைச் சுட்டிக்காட்ட வந்தது ஜோதிடம் (யதுபசித மன்யஜன்மனி சுபாசுபம் தஸ்யகர்மண: பக்திம்). மன வளத்தை ஆராய்ந்து தகவல் அளிப்பதுதான் ஜோதிடத்தின் வேலை.

மனப்போக்கை உறுதி செய்ய விஞ்ஞானமும் பெரு முயற்சி எடுத்துக்கொண்டு ஆராய்ந்து கொண்டிருக்கிறது. தத்தமது சிந்தனைக்கு முன்னுரிமை அளித்து, அதன் அடித்தளத்தில் வருங்காலத்தை ஆராய்பவர்கள்தான் அத்தனை பேரும். சிலர் வெற்றியைச் சந்திக்கிறார்கள். சிலர் தோல்வியைத் தழுவுகிறார்கள். ஏனெனில், அவரவர் கர்மவினையின் தரம் சிந்தனையில் இணையாததால் தோல்வியை ஏற்க வேண்டி வருகிறது. வெற்றி தோல்வியை கர்மவினையின் இணைப்பில் மதிப்பீடு செய்து அளிப்பது ஜோதிடம்.  நேர்காணலில், இருவரும் உரையாட லில் மகிழ்ந்து, மனம் ஒன்றிப்போனதாக நினைத்து திருமணத்தில் இணைகிறார்கள். சில மாதங்களில் அவர்களது இணைப்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. அவர்கள் இருவரது கர்மவினை வாசனையின் பாகுபாட்டை ஆராயாமல் எடுத்த முடிவு வெற்றிபெறவில்லை.

? ஜோதிடப் பொருத்தம் இதற்கெல்லாம் தீர்வாகுமா?

நிச்சயமாக தீர்வாகும். அரசாங்கமும் வருங்கால வரவுசெலவை வரையறுக்கிறது. குடும்பத்திலும் வருங்கால வரவுசெலவு மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், இரு தரப்பினரது மதிப்பீடும் உண்மையாவது இல்லை. நாம் நினைப்பது ஒன்று; நடப்பது ஒன்று. அதேபோல், ஆண் குழந்தையை எதிர்பார்ப்பார்கள்; கிடைப்பது இல்லை. தரமான வேலையை எதிர்பார்ப்பார்கள்; கிடைக்காமல் போகும். அதே நேரம், எதையும் எதிர்பார்க்காதவனுக்கு சிறப்பான வாழ்க்கை அமைந்துவிடுகிறது. வெளிநாட்டில் தங்க விரும்புவான் ஒருவன்; ஆனால், தாய்நாடு திரும்பவேண்டி வரும். விழுந்து விழுந்து உழைத்து நம்பிக்கையோடு வேலையில் ஈடுபடுகிறான். எதிர்பார்த்த ஊதியம் கிடைப்பதில்லை. ஆனால், நுனிப்புல் மேய்பவன் பெரிய மனுஷனாகப் போற்றப்படுகிறான். அவரவர் சிந்தனையில் எழும் வருங்கால மதிப்பீடு பெரும்பாலும் தோல்வியில் முடிவடைகிறது.

பூர்வஜன்ம வாசனையின் இணைப்பில் ஆராய்ந்த மதிப்பீடு உண்மையாக அனுபவத்துக்கு வந்துவிடும். ஆறாவது அறிவில் உருவான வருங்கால வரைபடம் காட்சிக்கு வராமலே போய்விடுகிறது. சிலபேருக்கு, தனது மதிப்பீட்டைவிட உயர்ந்த நிலையில் வருங்காலம் அமைந்துவிடும். எதிர்காலம் நினைத்ததைவிட சிறப்பாக இருக்கும்; அல்லது, விபரீத பலனை ஏற்கவைக்கும். இந்த மாறுதலுக்கு ஆதாரம் அவனது கர்ம வாசனையின் தரம். அதை அறியாதவரை அல்லது அதன் இணைப்பு சிந்தனையில் சேராதவரை, வருங்காலம் இருட்டா கவே இருக்கும். இன்றையச் சூழலில் வாழ்க்கை செழிக்க ஜோதிடம் வேண்டும். அது கசப்பாகத் தோன்றினாலும், வாழ்க்கைக்கு இனிப்பாக மாறிவிடும்!

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

மனித சிந்தனை வரையறைக்கு உட்பட்டது. இயற்கையின் அழியா தத்துவங்களின் தகவல்கள், முடங்கிய சிந்தனையை வளர்த்துவிடும். வளர்ந்த சிந்தனைகள் உண்மையை எட்டிவிடும். வேதங்களும் தரிசனங்களும் அந்தத் தத்துவத்தை தான் வெளியிடுகின்றன. அவற்றை ஒதுக்கிவிட்டு, சுயசிந்தனையில் செயல்படுபவன், கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டது போன்று தடுமாறுவான். ஜோதிடம் என்ற வெளிச்சம் இருந்தும் அதைப் பார்க்காமல் இருட்டில் முடங்கிவிடுவான்.

வெளித் தகவல்களை ஏற்றுதான், சிந்தனை தன்னை வளர்த்துக்கொள்கிறது. தகவலின் தரத்தைக் கண்டுகொள்ளாமல், எல்லா சிந்தனைகளையும் ஏற்றுக்கொண்டால், வாழ்க்கையில் வழி

தெரியாமல் தவிக்க நேரிடும். இயற்கையில் தோன்றிய ஜோதிட சிந்தனை அழியாமல், முக்காலத்திலும் இருக்கும். அதை வரவேற்பதும், விலக்குவதும் அவரவர் கர்மவினையின் பாகுபாடு. உறங்குபவனுக்கு ஜோதிடம் இல்லை; விழித்துக் கொண்டிருப்பவனுக்கு அது அருமருந்து.

பதில்கள் தொடரும்...