Published:Updated:

திடீர் பக்தி !

கலகல கடைசி பக்கம்வீயெஸ்வி, ஓவியம்: வேலன்

திடீர் பக்தி !

கலகல கடைசி பக்கம்வீயெஸ்வி, ஓவியம்: வேலன்

Published:Updated:

பிளஸ்டூ தேர்வுக் காலம் துவங்கி முடிவுகள் வரும் வரையிலும் பக்திப் பழமாகத் திகழ்ந்தான் பக்கத்து வீட்டு பார்த்தசாரதி. விடியற்காலையில் தெருமுக்கு பிள்ளையாருக்கு 108 தோப்புக்கரணம், வீட்டில் பூஜையறையில் உட்கார்ந்து அனுமனிடம் பிரார்த்தனை, மாலையில் சிவாலயத்தில் நவகிரக தரிசனம்... மற்றபடி ஃபேஸ்புக், வாட்ஸ் அப் விஷயங்களுக்கெல்லாம் விட்டாச்சு லீவு! பின்னே... பிளஸ்டூ தேர்வில் நல்லபடியாகத் தேர்ச்சியாக வேண்டுமே! அதனால்தான் இந்த திடீர் பக்தி! 

எதிர்வீட்டு ஏகாம்பரத்தின் இல்லாள் இன்பரசியும் இரண்டு வாரங்களாக பக்தியில் மூழ்கித் திளைக்கிறாள். வெள்ளிக்கிழமை மாங்காடு அம்மனுக்குப் புடவை சாத்துகிறாள். சனிக்கிழமைதோறும் தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் சென்று, வரிசையில் நின்று பெருமாளை சேவிக்கிறாள். மற்ற நாட்களில் மாலை வேளைகளில் லோக்கல் அம்மன் கோயிலுக்குச் சென்று நெய் விளக்கு ஏற்றுகிறாள். வீட்டில் இருக்கும் நேரங்களில், பிளேயரில் ஸ்லோகங்களை அலறவிடுகிறாள்; அல்லது, பிரேயரில் உட்கார்ந்துவிடுகிறாள். மற்றபடி, டி.வி. சீரியல்களுக்கு பை.. பை! கல்யாணத்துக்குப் பெண்ணின் ஜாதகத்தை வெளியே எடுத்தாகிவிட்டது. பகவானே, சுபஸ்ய சீக்கிரம் அது முடிஞ்சுடணும்!

திடீர் பக்தி !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மற்றொரு நண்பரான புண்ணியகோடியின் மகன், வாரம் ஒரு திருத்தலம் என்ற முறையில் திருச்செந்தூர், மதுரை, சுவாமிமலை, சிதம்பரம், வைத்தீஸ்வரன்கோயில்... இதோ இந்த வாரம் ஏரிகாத்த ராமர் கோயிலுக்குக் கிளம்பிவிட்டார். அவர் உயிருக்கு உயிராகக் கருதும் ஐ.பி.எல் போட்டிகளைக்கூட தியாகம் செய்யத் துணிந்துவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். காரணம், இப்போது பிரமோஷன் சீஸன். அப்ரைஸல் அது இது என்று அலுவலகமே பரபரப்பாக இருக்கிறது. பிரமோஷன் கிடைத்தால், சிங்கப்பூர் டாலரில் நீச்சலடிக்கலாம். ஒரு நடை அமெரிக்கா போய், நியூயார்க் பிள்ளையாரையும் கும்பிட்டுவிட்டு வரலாம்.

'சிவானந்த லஹரி’யில் பக்தியின் லட்சணத்தை ஆதிசங்கரர் வர்ணித்திருப் பது பற்றி, காஞ்சி பெரியவர் கூறுகிறார்...

''அழிஞ்சில் விதை எப்படித் தாய் மரத்துடனேயே ஒட்டிக்கொள்கிறதோ, ஊசி எப்படி காந்தத்தால் கவரப்படுகிறதோ, பதிவிரதை எப்படி தன் பதியின் நினைவிலேயே ஆழ்ந்திருக்கிறாளோ, கொடி எப்படி மரத்தைத் தழுவி வளர்கிறதோ, நதி எப்படி சமுத்திரத்தில் கலக்கிறதோ, அப்படியே பசுபதியின் பாதாரவிந்தங்களில் சதா சர்வ காலமும் நம் மனதை அமிழ்த்தியிருப்பதுதான் நிஜமான பக்தி என்கிறார் பகவத் பாதர். முதலில், பொருள் வேண்டும், அந்தஸ்து வேண்டும் என்று வியாபார ரீதியில் பக்தி செய்ய ஆரம்பித்தாலும், பகவானின் குண விசேஷம் காரணமாக அவனுக்காகவே அவனிடம் அன்பு செலுத்தும் பக்குவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக பெறுவோம்'' என்கிறார் காஞ்சி முனிவர்.

உண்மைதான்! நமக்கு என்ன வேண்டும் என்று அவனுக்குத் தெரியும். பிளஸ் டூவில் பாஸ், மகளுக்குத் திருமணம், டாலரில் நீச்சல்... எல்லாவற்றையும் அவன் பார்த்துக்கொள்வான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism