ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

பிரமாண்ட கொலு !

பிரமாண்ட கொலு !

கொண்டாட்டங்களும் குதூகலங்களும் நிறைந்த பண்டிகை என்றதும், சட்டென்று நம் நினைவுக்கு வருகிற வைபவம் நவராத்திரி கொலு! வீடுகளில் வைக்கிற கொலு பொம்மைகளே நம் கண்களையும் கருத்தையும் கவரும் என்றால், புராதனக் கோயில்களில் வைக்கப்படும் கொலுவின் பிரமாண்டத்தைச் சொல்லவும் வேண்டுமோ?!

பிரமாண்ட கொலு !
##~##

சென்னை, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் கடந்த வருடம் வைத்திருந்த பிரமாண்டமான கொலுவை, இதோ... வரப்போகிற நவராத்திரி வரையிலும் சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறார்கள், சென்னை வாழ் பக்தர்கள்.

''போன வருஷம், பார்த்தசாரதி கோயில்ல 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பா, மயிலாப்பூர் ட்ரியோ நிறுவனத்தார் ஒரு பிரமாண்ட கொலுவை வைச்சாங்க. கோயிலுக்கு வந்தவங்க அந்த கொலுவைப் பார்த்து அசந்து போயிட்டாங்க. நண்பர்கள், உறவுக்காரங்ககிட்டெல்லாம் சொல்லி, பார்க்கச் சொல்லி உற்சாகப்படுத்தினாங்க. இதனால, போன வருஷம் நவராத்திரி நாட்கள்ல, வழக்கத்தைவிட இரண்டு மடங்கு கூட்டம் வந்துச்சுன்னா, பாருங் களேன்!'' என்கிறார், பாலாஜி.

இதே நிறுவனங்கள் இணைந்து, இதற்கு முன்பு, 2009-ஆம் வருடம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இதே போன்று பிரமாண்ட கொலுவை வைத்தன. அப்போது, அந்த கொலுவுக்கு பக்தர்களிடம் இருந்து கிடைத்த பலத்த வரவேற்பைப் பார்த்துவிட்டுத்தான், திருவல்லிக் கேணி ஆலயத்தில் கொலு வைக்கும் வாய்ப்பு தரப்பட்டதாம்!

ஒவ்வொரு நாள் கொலுவிலும், கதை கதையாகப் புராணங்களைச் செய்த விதம், அனைவரையும் மலைக்கச் செய்தது என்றால், அந்த கொலு பொம்மைகளுக்காகத் தேடித் தேடி வாங்கியதை அவர்கள் விவரித்தபோது, பிரமிப்பாக இருந்தது. சென்னை, கடலூர், பண்ருட்டி எனத் தமிழகம் மட்டுமின்றி, கொல்கத்தா முதலான ஊர்களில் இருந்தும் சிற்பங்கள் சிலவற்றை வாங்கி வந்து, கொலுவில் வைத்ததாகச் சொல்கின்றனர், அன்பர்கள்.

பிரமாண்ட கொலு !

''குறிப்பாக, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் கொலு வைபவத்தில், 'ஸ்ரீவைஷ்ணவம்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைத் திருந்த கொலுவுக்கு ஏகப்பட்ட வரவேற்பு! பார்த்த வர்கள் பிரமித்தார்கள்! '' என்று, மயிலை ட்ரியோ அமைப்பைச் சேர்ந்த அபர்ணா, சுரேந்திரநாத், அமர்நாத் ஆகியோர் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர்.

ஏழு படிகள்; அதன் நாலா திசைகளிலும் படிகள் அமைத்து, மேலேயுள்ள படியில் செயற்கையான அல்லிக்குளம், தங்க முலாம் பூசப்பட்ட விமானம், கோயிலில் சந்நிதி கொண்டி ருக்கும் விக்கிரகத் திருமேனிகளுக்கு இணையான சிலைகள் என கொலுவின் ஒவ்வொரு விஷயத்திலும் இவர்களின் நேர்த்தியும் ஈடுபாடும் தெரிந்ததைச் சொல்லி வியக்கின்றனர், பக்தர்கள்.

வைணவக் கதைகள், பரந்தாமனை தரிசிக்கச் செல்லும் ஆழ்வார்கள், ராமாயணக் காட்சிகள், தசாவதாரங்கள், கோபியருடன் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீரங்க கோபுரப் பின்னணியில் பள்ளிகொண்ட ஸ்ரீரங்கநாதர்... என ஸ்ரீவைஷ்ணவத்தின் அனைத்து நிகழ்வுகளையும் களிமண், மரம் மற்றும் காகிதக் கூழ் பொம்மைகளாகச் செய்து, வண்ணம் தீட்டி வைத்திருந்ததைக் கண்டு வியக்காதவர்களே இல்லை!

பிரமாண்ட கொலு !

''அடுத்தடுத்து, இன்னும் பல புதுமைகளுடன் செய்ய ஆர்வமாக இருக்கிறோம். இதோ... இந்த நவராத்திரி விழாவுக்கும் கொலு வைக்க, நாங்கள் தயாராகிவிட்டோம். அநேகமாக, மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கோயிலில் கொலு வைப்போம் என நினைக்கிறோம்'' என்று உற்சாகத்துடன் சொல்கிறார் பங்கஜ் பண்டாரி.

கொடுத்து வைத்த மதுரை பக்தர்கள்!

 இரா.மங்கையர்கரசி