ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

உங்கள் குழந்தையை அம்பாளுக்கு 'தத்து' கொடுங்கள்!

ஆலங்குடி ஸ்ரீஅறும் வளர்த்த நாயகிநலம் தரும் நவராத்திரி தரிசனம்!

##~##

புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில், சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலங்குடி. இங்கே, அழகிய ஆலயத்தில் அருள்பாலித்துக்கொண்டு இருக்கிறார் ஸ்ரீநாமபுரீஸ்வரர். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீதர்ம சம்வர்த்தினி. அதாவது, அறம் வளர்த்த நாயகி. 

சுமார் 800 வருடங்கள் பழைமை வாய்ந்த, அற்புதமான திருக்கோயில். ''கும்பகோணம் அருகேயும் ஆலங்குடி என்றொரு தலம் உள்ளது. அதை 'குரு ஸ்தலம்’ எனப் போற்று வார்கள். அந்தத் தலத்துக்கு அடுத்ததாகப் போற்றி வழிபடப்படும் திருத்தலம் இது'' என்கிறார் கோயில் அர்ச்சகர்.

சிவ சந்நிதி கோஷ்டத்தில் பெருமாள் காட்சி தர, ஸ்ரீபிரம்மாவும் தனிச்சந்நிதியில் அருள்கிறார். இந்த ஆலயத்தில், அம்பிகைக்குத்தான் அதிக விழாக்கள்.

லட்சுமி கடாட்சமும் கருணையும் பொங்குகிற திருமுகத்தோடு திருக்காட்சி தரும்

ஸ்ரீஅறம் வளர்த்த நாயகியை, கண்ணாரத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்.

உங்கள் குழந்தையை அம்பாளுக்கு 'தத்து' கொடுங்கள்!

ஆடிப்பூர நன்னாளில் அறம் வளர்த்த நாயகியைத் தரிசிக்க ஆலங்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பட்டுக் கோட்டை எனப் பல ஊர்களிலிருந்து மட்டுமின்றி, ஆலங்குடியைச் சொந்த ஊராகக் கொண்டு, வெளியூர்களில் வசிக்கும் அன்பர்களும் தவறாமல் வந்துவிடுவார்களாம். அன்றைய நாள் காலையில், அறம் வளர்த்த நாயகிக்கு சந்தனக்காப்பு  செய்யப்படுகிறது. மாலையில், கண்ணாடி வளையல்களால் அலங்கரிப்பட்ட தேவியைத் தரிசிக்க... மெய்ம்மறந்து போவோம்!

தடைப்பட்ட திருமணம் நடைபெற வேண்டுமே என்று கலங்குபவர்களும், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று விரும்பும் தம்பதிகளும், தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்று ஏங்கும் பெண்களும் உமையவளுக்கு

மஞ்சள், வளையல், கண்ணாடி, ரவிக்கைத் துணி, அரிசி ஆகியவற்றைப் படைத்து, ஏழு சுமங்கலிகளுக்கு தானம் தந்து பிரார்த்திக்க, கேட்ட வரங்கள் கிடைக்குமாம்!

நவராத்திரி விழாவின்போது  அலங்காரம், சிறப்பு பூஜைகள், விசேஷ வழிபாடுகள் என அமர்க்களப்படுகிறது ஆலயம். முதல் நாள், கொலு மேடையில் அம்பாளையும் சிவனாரையும் வைத்து, கொலுவைத் துவக்குவார்கள். அன்றைய தினம், சக்தியை சிவமாகவே பாவித்து பூஜை செய்வது கோயிலின் தனிச்சிறப்பு என்கின்றனர், பக்தர்கள். உமையவளுக்கு மல்லிகை மற்றும் வில்வத்தால் அர்ச்சனை செய்து, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபாடுகள் நடைபெறும்.

உங்கள் குழந்தையை அம்பாளுக்கு 'தத்து' கொடுங்கள்!

அதேபோல், முதல் 3 நாட்கள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில், உக்கிரத்துடன் காட்சி தருவாள் அறம் வளர்த்த நாயகி. அன்றைய நாளில், முல்லைப் பூ மற்றும் துளசியால் அர்ச்சனை செய்து, புளியோதரை நைவேத்தியம் செய்து, வழிபாடுகள் நடைபெறும்.

அடுத்த 3 நாட்கள், ஸ்ரீமகா லட்சுமியாக  அலங்கரித்து, ஜாதி மல்லிகையால் அர்ச்சித்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். கதம்ப சாதம் நைவேத்தியம் செய்து அறம் வளர்த்த நாயகியைப் பிரார்த்தித்தால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும்!

அதையடுத்து ஸ்ரீஅறம் வளர்த்த நாயகி, ஸ்ரீசரஸ்வதிதேவியாகக் காட்சி தருவதைக் காண, பக்தர்கள் திரண்டு வருவார்கள். அப்போது, தாழம்பூவால் அவளுக்கு அர்ச்சனை செய்து, பிரார்த் தனை செய்தால், குழந்தைகள் கல்வி- கேள்வியில் சிறந்து விளங்குவார்களாம்.  

இங்கேயுள்ள ஸ்ரீதுர்கையும் பிரசித்தி பெற்றவள். சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட ஸ்ரீதுர்கையை செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளின் ராகு கால வேளையில் அர்ச்சனை செய்து தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும்; ராகு முதலான தோஷங்கள் யாவும் விலகும். இங்கே, லட்சார்ச்சனை மற்றும் 108 சங்காபிஷேகம் என சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

வெள்ளிக்கிழமையன்று, அறம் வளர்த்த நாயகியை தீபமேற்றி வழிபட்டால், சுகப் பிரசவம் நிகழும் என்கின்றனர், பெண்கள். மேலும், குழந்தைகளின் கிரக பலன்கள் சரியில்லை என்றாலோ, கிரக தோஷங்கள் இருந்தாலோ, குழந்தையுடன் இங்கு வந்து, அம்பிகைக்கு தங்கள் குழந்தையைத் தத்துக் கொடுக்கின்றனர். அப்படி, குழந்தையை அறம் வளர்த்த நாயகிக்குத் தத்துக் கொடுத்த பிறகு, அம்பாள் சந்நிதியில் இருந்து அந்தக் குழந்தையை அதன் தாய் மாமன் எடுத்துக் கொள்ள... அனைத்து தோஷங்களும் நீங்கும்; குழந்தைகள் ஆரோக்கியத்துடனும் புத்திசாலியாகவும் வளர்வார்கள்

என்பது ஐதீகம்!

தை மாதத் திருவிழாவின்போது அன்னாபிஷேகம், பூப்பாவாடை, விசேஷ அலங்காரம் என ஜொலிப்பாளாம் அறம் வளர்த்த நாயகி! பெற்றோரை இழந்தவர்கள், மகா சிவராத்திரி நன்னாளில் ஸ்ரீஅறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீநாமபுரீஸ்வரரை வணங்கி வழிபட... அவர்களுக்குப் பெற்றோராக இருந்து காத்தருள்வார்களாம்! சிவ- பார்வதியை 'அம்மையப்பன்’ என்று சும்மாவா சொன்னார்கள்!

    - பெ.தேவராஜ்

படங்கள்: பா.காளிமுத்து