ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

பாக்கியம் ராமசாமிகுண்டுமாமணிகளுக்கு ஒரு கும்பிடு!

##~##

ல்லாமே பழக்கம்தான்! எழுத்து ஒரு பழக்கம்; பாட்டு, சித்திரம், பக்தி... எல்லாமே பழக்கம்தான். 

என் உறவினர் சபேசனை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. மனிதர் பார்க்க தொப்பையும் தொந்தியுமாக, தளக் புளக்கென்று கன்னமும் சதையுமாக, நாட்டுத் தக்காளி நிறத்தில் இருப்பார். வி.ஆர்.எஸ். வாங்கி, ஓய்வு பெற்று உல்லாசமாக இருக்கிறார். 'குழந்தை குட்டி இல்லையே’ என்று ஏக்கம் இருக்குமோ என்னவோ... ஆனால், அதை வெளிப்படுத்திக் கொண்டதில்லை. குழந்தைகளைக் கண்டால் 'வா வா வா... தொப்பை மாமா கிட்டே வா வா’ என்று அருகே அழைத்து தூக்கி வைத்துக்கொண்டு, குஷன் மாதிரியான தனது தொப்பை மீது குழந்தையின் பஞ்சுப் பாதம் குதிப்பதை ரசித்து மகிழ்வார்.

நான் போயிருந்த நேரத்தில், அவர் கீழே தரையில் அமர்ந்து, மட்டைத் தேங்காய் உரித்துக்கொண்டு இருந்தார்.

கலகல கடைசிப் பக்கம்

''இதெல்லாம்கூட உங்களுக்குத் தெரியுமா மாமா, உரிக்க முடிகிறதா உங்களால்?'' என்று கேட்டேன். ''எல்லாம் பழக்கம்தான்'' என்று சொல்லிச் சிரித்தார்.

''நான் ஒல்லிதான். ஆனாலும், கீழே உட்கார முடியறதில்லை. நீங்க எப்படி அநாயாசமாகக் கீழே உட்கார்ந்து தேங்காய் உரிக்கிறீங்க?'' என்றேன் ஆச்சரியமாக.

''பழக்கம்தான். தொந்தி, தொப்பை இருந்தால் கீழே உட்கார முடியாது, குனிய முடியாது, நிமிர முடியாதுங்கறதெல்லாம் நாமளாவே நினைச்சுக்கறது. நீ டி.வி-யில வேர்ல்ட் ரெஸ்லர்ஸ் மோதிக்கற  சீரியலைப் பார்க்கிறாயோ?'' என்றார்.

''ரொம்ப சுவாரஸ்யமான மல்யுத்த நிகழ்ச்சியாச்சே!'' என்றேன்.

''அவங்க எத்தனை குண்டா, தொப்பையும் தொந்தியுமா இருக்காங்க. ஆனா, எப்படி விழறாங்க, எப்படி சடால்னு எழுந்துக்கறாங்க, பறந்து பறந்து உதைச்சுக்கறாங்க... பார்த்தியா? என்னைவிட மூணு நாலு மடங்கு பருமனாக இருக்கும் அவங்களாலே எப்படி இது முடியுது? பழக்கம்தான் காரணம். 'டயட்... டயட்’னு பார்த்துப் பார்த்துப் பட்டினிச் சாப்பாடு சாப்பிடற உன்னைப் போன்ற ஆசாமிகளால எல்லாம் அப்படிக் குதிச்சு, எழுந்திருக்க முடியாது. உடம்பை, அது எந்த சைஸில் இருந்தாலும், பழக்கி வைக்கணும். சர்க்கஸ் யானை முக்காலியில் உட்காருதே, ஒத்தைக் காலில் நிக்குதே... எப்படி? பழக்கம்தானே?'' என்றார்.

சபேசன் மாமாவின் பேச்சை நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தேன். உடம்பைப் பற்றி அவர் சொன்னாரே... உள்ளத்துக்கும் அது பொருந்தும் என்று தோன்றியது. உடம்பைப் போலவே மனசையும் கொஞ்சம் கொஞ்சமாக, விடாமுயற்சியுடன், பலவித உபாயங்களைக் கொண்டு பழக்கப்படுத்த வேண்டும்.

'எனக்குப் பக்தி வரவில்லையே! அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்’ என்று சிலர் சௌகரியமாகக் கூறி, பக்திக்கு முயற்சியே செய்யமாட்டார்கள். பக்தி மார்க்கத்தில் மனத்தைச் செலுத்த, அதற்கு நாம் பயிற்சி தரவேண்டும். பயிற்சி; பயிற்சியால் பழக்கம்; பழக்கத்தால் பலன்!

அஸம்ஸயம் மஹாபாஹோ மனோ துர்நிக்ரஹம் சலம்

அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே

'மனம் அடங்குவதற்கு அரியதுதான்; நிலையற்றதுதான். அதில் சந்தேகமில்லை. ஆனால், பழக்கத்தாலும் வைராக்கியத்தாலும் மனத்தை அடக்க முடியும். பக்திக்கு அதைப் பழக்க முடியும்’ என்கிறது கீதை.