Published:Updated:

பசித்தவர்களுக்கு உணவிடுவதே அங்கே வழிபாடு! - சீக்கியர் கோயிலான குருத்வாராவில் ஒருநாள்

பசித்தவர்களுக்கு உணவிடுவதே அங்கே வழிபாடு! - சீக்கியர் கோயிலான குருத்வாராவில் ஒருநாள்

பசித்தவர்களுக்கு உணவிடுவதே அங்கே வழிபாடு! - சீக்கியர் கோயிலான குருத்வாராவில் ஒருநாள்

பசித்தவர்களுக்கு உணவிடுவதே அங்கே வழிபாடு! - சீக்கியர் கோயிலான குருத்வாராவில் ஒருநாள்

பசித்தவர்களுக்கு உணவிடுவதே அங்கே வழிபாடு! - சீக்கியர் கோயிலான குருத்வாராவில் ஒருநாள்

Published:Updated:
பசித்தவர்களுக்கு உணவிடுவதே அங்கே வழிபாடு! - சீக்கியர் கோயிலான குருத்வாராவில் ஒருநாள்

சீக்கிய மதத்தின் நிறுவனரும் முதல் குருவுமான குருநானக் தேவ்ஜியின் 549 வது பிறந்த நாள் விழா இன்று. இவ்விழா சென்னை தி.நகர், பார்த்தசாரதிபுரம் கோபதி நாராயணசாமி சாலையில் உள்ள குருத்வாராவில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அவ்விழாவைத் தரிசிக்கச் சென்றோம். 

மின்னொலியால் ஜொலித்துக்கொண்டிருந்தது குருத்வாரா. அன்பாக நம்மை வரவேற்று கையில் ஒரு துணியைக் கொடுத்தார்கள். அதைத் தலையில் கட்டிக்கொண்டோம். குருத்வாராவை ஒட்டியிருந்த சிறு உணவு கூடாரத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்கள். சமோசா, குளோப் ஜாமுன், பிரெட் பஜ்ஜி, கட்லெட், ஐஸ் க்ரீம், பஞ்சாபி சர்பத் எனப் பெரும் விருந்து பரிமாறப்பட்டது. 

விருந்து உபசரிப்பு முடிந்ததும் குருத்வாராவுக்குள் அழைத்துச் சென்றார்கள். படிகளில் கால் வைக்கும் முன்னர் காலணிகளை விட்டுவிட்டு, நீரில் கால்களைச் சுத்தப்படுத்திக்கொண்டே உள்ளே நுழைய வேண்டும். உள்ளே சீக்கிய கீர்த்தனைகளைப் பாடிக்கொண்டிருந்தார்கள். மொழி புரியாவிட்டாலும் அந்த ராகமும் ஆலாபனைகளும் மனதுக்கு இதமாக இருந்தன. 

 ஹாலின் மத்தியில் 'குருகிரந்த சாஹிப்' புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. எல்லோரும் அதை மண்டியிட்டு வணங்கி, அருகிலிருந்த பெட்டியில் காணிக்கைகளைச் செலுத்திவிட்டு அமர்ந்து கீர்த்தனைகளில் லயிக்கிறார்கள்.

குருத்வாராவை நிர்வகிக்கும் குருநானக் சத் சங்க சபாவின் பொதுச் செயலாளர் ஹர்பிந்தர் சிங் நம்மை வரவேற்று அமரவைத்து குருத்வாரா நடவடிக்கைகள் பற்றிப் பேசினார். 

"எங்கள் குருவின் பிறந்தநாளை, ஒவ்வொரு சீக்கியரும் தன்னுடைய பிறந்தநாளாகவே கருதி கொண்டாடுவார்கள். வழிபடுவார்கள். சென்னையில் வாழும் 700-க்கும் மேற்பட்ட பஞ்சாபியர்களின் குடும்பங்களுக்கு இந்த ஒரே குருத்வாராதான். நாள்தோறும் இங்கு வழிபாடுகளும் கீர்த்தனைகளும் நடந்தாலும், உணவிடுவதுதான் எங்கள் கோயிலின் முக்கியமான பணி. நாள்தோறும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு இங்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் 1,000 பேர் வரை பசியாறுவார்கள்.

பசித்தவர்களுக்கு உணவிடுவதே எங்கள் வழிபாடு. அதற்காகவே 'லங்கர்' எனப்படும் எங்கள் உணவுக்கூடம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. காலணியை அவிழ்த்துவிட்டு தலையில் துணி அணிந்து, எவரும் இங்கே பசியாற வரலாம். ஏழை, பணக்காரர் வேறுபாடெல்லாம் எங்கள் குருத்வாராவில் இல்லை. எல்லோருமே தரையில் அமர்ந்து ஒன்றாகத்தான் உண்ண வேண்டும். இங்கு உணவு மட்டுமல்ல. வசதியில்லாதவர்கள் தங்கிச் செல்ல குறைந்த வாடகையில் அறைகளும் அளிக்கிறோம். 

எங்களுக்கு 10 குருமார்கள் உண்டு. அவர்களின் ஜெயந்தி விழா, 'வைஸாக்கி' எனும் புத்தாண்டு விழா போன்றவை எங்களுக்கான முக்கிய விழாக்கள். இங்கு பணியாற்றும் அத்தனை பேருமே பக்தர்கள்தான். ஒருவரைக்கூட நாங்கள் வேலையாள் என்று வைத்துக்கொள்வதில்லை. எங்கள் முன்னோர்களும் எங்கள் கடவுளான குருகிரந்த சாஹிபும் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தது, மக்கள் சேவையை மட்டும்தான்..."  கனிவும் கருணையாகப் பேசுகிறார் ஹர்பிந்தர் சிங்.  

குருத்வாராவின் இன்னொரு பக்கம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம் செய்வதற்கான பதிவுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்நிகழ்வுகளை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த வரீந்தர் சிங் என்பவரிடம் பேசினோம். 

"குருநானக் தேவ்ஜி தன்னை எப்போதுமே கடவுளாகச் சொல்லிக்கொண்டதில்லை. அவர், ஓர் இறைத்தூதுவர்... அவ்வளவே. குருநானக் தேவ்ஜியைப்போல எங்களுக்குப் 10 குருமார்கள் இருக்கிறார்கள். எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துகளும் எங்கள், 'குருகிரந்த சாஹிப்'பில் உள்ளன. உலகின் எல்லாத் தேவைகளுக்குமான தீர்வுகளும் எங்களது இந்தப் புனித நூலில் உள்ளன. அதனாலேயே அது எங்களின் கடவுளாக உள்ளது. அதிகாலை 4 மணிக்கு புனிதநூலைத் துயில் எழுப்பி வாசிப்போம். மீண்டும் மாலை சந்தியா வேளையில் 'சுக் ஹாசன்' செய்வோம். 'சுக் ஹாசன்' என்பது, எங்கள் கடவுளான புனிதநூலை அமைதியாக துயில் கொள்ளும் வகையில் அனுப்பி வைப்போம்.  இதுவே எங்களின் முக்கிய அன்றாட கடமை. இதைத்தவிர மக்கள் பணியே முக்கிய வழிபாடாக உள்ளது. 

எங்கள் மத்தியில்  'தஸ்வந்த்' என்றொரு நடைமுறை உள்ளது. அதாவது, ஒவ்வொருமாதமும் சம்பாதிப்பதில் பத்து சதவிகிதத்தைக் கோயிலுக்காகக் கொடுத்து விடுவோம். அதைக்கொண்டே இந்த சம பந்தி விருந்து நடைபெறுகிறது. அதைப்போலவே ஒவ்வொரு குடும்பமும், மாதத்தில் சில நாள்களை கோயில் பணிக்கென்று ஒதுக்கி விடுவோம். இங்கு சிறு அளவு கூட உணவைக் கூட வீணாக்க நாங்கள் அனுமதிப்பதில்லை. அப்படிச் செய்வது பாவம் என்று எங்கள் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்..." என்கிறார்  வரீந்தர் சிங்.