ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

வேண்டும் வரம் தருவாள் மூங்கில் அன்னை காமாட்சி!

நலம் தரும் நவராத்திரி தரிசனம்!

##~##

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் அருளும் மூங்கில் அன்னை ஸ்ரீகாமாட்சியம்மனை அறிவோம். உத்தமபாளையம் அருகிலும் ஒரு தலத்தில் மூங்கில் அன்னை காமாட்சி அருளாட்சி செய்கிறாள்! 

தேனி மாவட்டம், உத்தம பாளையம் அருகில் உள்ள உ.அம்மாபட்டியில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீமூங்கில் அன்னை காமாட்சி. சுமார் 350 வருடங்களுக்கு முன்பு, காஞ்சி ஸ்ரீகாமாட்சி ஆலயத்தில் இருந்து பிடி மண்ணை எடுத்து வந்து, ஒரு பெட்டியில் வைத்து வழிபட்டு வந்தனர் கிராம மக்கள். அந்நியர்களின் படையெடுப்பின் போது, பெட்டிக்கும் பெட்டியில் உள்ள பிடி மண்ணுக்கும் ஏதும் ஆகிவிடக்கூடாதே என்று அந்தப் பெட்டியுடன் ஊர் ஊராக அலைந்தார்களாம். வனமும் மலையுமாக இருந்த பகுதியில், கண்மாய்க்கு அருகில் வந்து ஓய்வெடுத்தவர்கள், அங்கிருந்து கிளம்பத் தயாரானார்கள். ஆனால், பெட்டியை அசைக்கக்கூட முடியவில்லை. அதுமட்டுமா? அந்தப் பெட்டி பூமிக்குள் சென்றுவிட... அங்கே மூங்கில் மரத்தின் வேர் ஒன்று தென்பட்டது. அன்று முதல், மூங்கில் அன்னை காமாட்சிக்கு அங்கேயே சிறிய குடிசை ஒன்று அமைத்து, வழிபடத் துவங்கினர். காலப்போக்கில், அம்மனின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, கோயில் கட்டி, வழிபட... அந்த ஊரே செழிக்கத் துவங்கியது என்பது ஸ்தல வரலாறு.

வேண்டும் வரம் தருவாள் மூங்கில் அன்னை காமாட்சி!

தென் மாவட்ட காமாட்சி, மூங்கில் அன்னை என்றெல்லாம் கொண்டாடப்படும் இந்த அம்பிகைக்கு மாசித் திருவிழா விசேஷம். பௌர்ணமியில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வெள்ளிக்கிழமையன்று இவளுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபட, ஐந்தாவது வெள்ளிக்குள் நினைத்தது ஈடேறுமாம்!

நவராத்திரி 9 நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் தரிசனம் தருகிறாள், அம்பிகை. இந்த நாட்களில் இங்கு வந்து புடவை சார்த்தினாலோ, எலுமிச்சை தீபம் ஏற்றினாலோ... தோஷங்கள், கண் திருஷ்டிகள் யாவும் விலகும்; விளைச்சல் செழிக்கும் என்கின்றனர் பெண்களும், விவசாயிகளும்!

கட்டுரை, படம்: தி.விக்னேஷ்