ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

ஆனந்தம் தருவாள் ஸ்ரீ ஆனந்தவல்லி !

ஆனந்தம் தருவாள் ஸ்ரீ ஆனந்தவல்லி !

நலம் தரும் நவராத்திரி தரிசனம் !

ஆனந்தம் தருவாள் ஸ்ரீ ஆனந்தவல்லி !
##~##

'சிரா மலையின் அடிவாரத்தில் இருந்தபடி அகிலத்து மக்களுக்கு சர்ப்ப தோஷங்களை நிவர்த்தி செய்து அருளுங்கள்’ என ஆதிசேஷன் கோரிக்கை விடுக்க... அதன்படி சிரா மலைக்கு வடக்கில், மலையடிவாரப் பகுதியில் கோயில் கொண்டார் ஸ்ரீநாகநாத ஸ்வாமி.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மலைக் கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழியில், சுமார் அரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீநாகநாத ஸ்வாமி திருக்கோயில். இங்கே அம்பாளின் திருநாமம் - ஸ்ரீஆனந்தவல்லி!

சாரமா முனிவர், நாக கன்னியரின் உதவியுடன் செவ்வந்திப் பூக்கள் கொண்ட நந்தவனத்தை அமைத்து, இங்கேயுள்ள இறைவனையும் இறைவியையும் பூஜித்து வந்தார் என்கிறது ஸ்தல புராணம். அந்த நந்தவனம் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ராகு - கேது தோஷங்களை நீக்கி, ஸ்ரீநாகநாத ஸ்வாமி மக்களுக்கு அருள்பாலிக்கிறார் என்றால், தன்னை நாடி வரும் அனைவருக்கும் ஆனந்தத்தை அள்ளி வழங்குகிறாளாம் ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள்! மாசி மக நன்னாளில், இந்தத் தலத்தின் சிவகங்கை தீர்த்தக் குளத்தில் நீராடி, அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி வணங்கினால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர்; சகல தோஷங்களும் விலகும்; ஆனந்தமான இல்லறம் திகழும் என்கின்றனர், பக்தர்கள்!

காளஹஸ்தி, திருநாகேஸ்வரத்துக்கு இணையாக நாக தோஷம் போக்கும் தலமாகப் போற்றப்படும் இந்தத் தலத்தில், நாக சதுர்த்தி நாளில் வழிபடுவது மிகுந்த பலனைத் தரும் என்பது ஐதீகம். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ஸ்ரீஆனந்தவல்லி அம்பாளை வந்து வணங்குவோர்க்கு, சகல ஐஸ்வரியங்களும் வந்து சேரும் எனச் சொல்லிச் சிலிர்க்கின்றனர், பக்தர்கள்.

ஆனந்தம் தருவாள் ஸ்ரீ ஆனந்தவல்லி !

நவராத்திரி காலங்களில் ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீராஜராஜேஸ்வரி, தவக்கோலம், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீகஜ லட்சுமி, ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி, சிவலிங்க பூஜை செய்யும் உமையவள் முதலான அலங்காரங்களில் அழகுறக் காட்சி தருவாளாம் ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள். விஜயதசமி நாளில் அம்பு போடுதல் நிகழ்ச்சியின்போது, மலைக்கோட்டை ஸ்ரீதாயுமானவ ஸ்வாமி கலந்துகொள்வார்.

மேலும், நவராத்திரி நாட்களில் நடைபெறும் கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை போன்றவற்றில் கலந்துகொண்டால் திருமண வரம் தருவாள்; தீர்க்க சுமங்கலியாக வாழ வைப்பாள் என்பது ஐதீகம்! இந்த நாட்களில், அம்பிகைக்குத் தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்தித்தால், அதில் குளிர்ந்து போவதுடன், நம்மையும் மனம் குளிரச் செய்வாள்!

சனீஸ்வர பகவான், மனைவியருடன் சூரிய பகவான் மற்றும் கேது பகவான் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் இருந்தபடி அருள்பாலிக்கும் தலம் என்பதால், சகல தோஷங்களும் விலகும்; இங்கேயுள்ள ஸ்ரீகல்யாண சுப்ரமணியரை வணங்கினால், கல்யாண வரம் கைகூடி வரும் என்கின்றனர் பக்தர் பெருமக்கள்!

ஸ்ரீஆனந்தவல்லியை வணங்குங்கள்; ஆனந்த வாழ்வை வரமாகப் பெறுங்கள்!

  - ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்