Published:Updated:

ரக்‌ஷா தாண்டவம் !

ஜூன்:24 - ஆனித்திருமஞ்சனம்

லகில் படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் நன்கு வாழவும், வினைப்பயன்களால் விளையும் இன்பதுன்பங்களை வென்று மேன்மை பெறவும் சிவபெருமான் நிகழ்த்தும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையே அவரது தாண்டவகோலம் உணர்த்தும் என்பார்கள் பெரியோர்கள். இவற்றுள், சிவனாரின் காத்தல் தொழிலை இரண்டாக வகைப்  பிரித்து விளக்குவர். அவை: அருளிக் காத்தல் மற்றும் அழித்துக் காத்தல். 

உயிர்களுக்குத் துன்பம் நேரும்போது சிவபெருமான் தானே முன்வந்து அத்துன்பத்தை நீக்கி உயிர்களுக்கு அருள்புரிகிறார். இது அருளிக்காத்தல் அல்லது இன்பக் காத்தல் எனப்படும்.

உதாரணமாக, தேவ அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது  உண்டான ஆலகால விஷத்தை அருந்தி, உயிர்களைக் காத்தருளிய சிவனார் சூலத்தைச் சுழற்றித் தாண்டவம் ஆடினார். அதுவே சந்தியா தாண்டம் (பிரதோஷ தாண்டவம் என்றும் சொல்வர்) என்று போற்றப்படுகிறது. சிவபெருமான் அருளிக்காத்தல் தாண்டவராக எழுந்தருளியிருக்கும் தலம் மதுரை. அங்குள்ள வெள்ளியம்பலத்தில் சந்தியா தாண்டவராக அவர் விளங்குகிறார்.

ரக்‌ஷா தாண்டவம் !

இனி, அழித்துக் காத்தலைக் காணலாம். தாருகாவனத்து ரிஷிகள் வேள்வித் தீயிலிருந்து தோற்றுவித்து ஏவிய யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்திக்கொண்டு திருநடனம் புரிந்தார் சிவபெருமான். அதேபோன்று, மார்க்கண்டேயனுக்காக யமனை தண்டித்தவர், அந்த மகிழ்வால் பெருங்கூத்து ஆடினார். இப்படி, ஒவ்வோர் அழித்தல் செயலுக்குப் பின்னும் ஆர்ப்பரித்து வீரட்டகாசமாக நடனமாடினார். இதுவே, பகைவனை அழித்து தமது அடியவனைக் காத்தபின் ஆடிய காத்தல் தாண்டவமாகப் போற்றப்படுகிறது.

சிவபெருமான் வைரவ கோலத்துடன், கஜசம்ஹாரராக வழுவூர் வீரட்டகாசர் ஆலயத்திலுள்ள பெரிய சபையில் எழுந்தருளி உள்ளார். இதை ஞானசபை என்கின்றனர். அன்பர்கள், இந்தச் சபையை இறையவனின் ஏழு வகைத் தாண்டவ சபைகளில் ஒன்றாகக் கொள்ளவில்லை. ஆனால், சிவபெருமான் வைரவ மூர்த்தியாகச் சிறப்புடன் எழுந்தருளியிருக்கும் திருப்பத்தூரில் உள்ள சபையை சப்த தாண்டவ சபைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளனர். திருப்பத்தூர் புராணம் இந்தச் சபையை கௌரி தாண்டவ சபை என சிறப்பித்துப் பேசுகிறது.

கீழ்வேளூர் அட்சய தாண்டவம்

ரக்‌ஷா தாண்டவம் !

நாகப்பட்டினம் திருவாரூர் வழியில் உள்ள கீழ்வேளூர் பாடல்பெற்ற பதியாகும். இங்கு பெருமான் பத்து கரங்களுடன் அட்சய தாண்டவத்தை ஆடுகிறார். இது பெருமான் ஆடும் காப்புத் தாண்டவமாகும். வலதுகாலின் குதிகாலை மட்டும் சற்று உயர்த்தி ஸ்வஸ்திக நிலையில் வைத்துள்ளார். பிரம்மனும் லட்சுமியும் கர தாளமிட, நந்தி மத்தளம் முழக்க, இந்திரன் வேணுகான இசை முழக்க, திருமால் மிருதங்கம் வாசிக்க,  பெருமான் ஆடும் கூத்தை அகத்தியரும் லோபாமுத்திரையும் கண்டு களிக்கின்றனர். இதனையும் சந்தியா தாண்டவம் என அழைக்கின்றனர்.

பூசை அருண வசந்தன், சென்னை - 4

திருமணத்தடை நீங்கும்!

பூந்தமல்லி பட்டாபிராம் அருகிலுள்ள கிராமம் சித்துக்காடு. சௌகந்திகாபுரம், ஹரிசரணாயநல்லூர், திருமன்றம், திருமணம் என்றெல்லாம் புராணம் போற்றும் இந்தத் தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகத் திகழ்கிறது.

ரக்‌ஷா தாண்டவம் !

ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர் ஆகியோர் வழிபட்ட தலம் இது. திருமணத்தடை உள்ளவர்கள், இந்தத் தலத்தின் இறைவன் தாத்திரீஸ்வரருக்கு நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்வித்தும், பூங்குழலி அம்பாளுக்கு பச்சை வஸ்திரம், வளையல் அணிவித்து அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள். இது, சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார தலமாகவும் திகழ்கிறது.

மேலும், இங்கு அருளும் ஸ்ரீ நடராஜர்சிவகாமி அம்மைக்கு மார்கழி திருவாதிரை யில் நடைபெறும் திருக் கல்யாணம், வேறு தலங்களில் காண்பதற்கரிய அற்புத வைபவம் என்கிறார்கள் பக்தர்கள். இந்தத் திருக்கல்யாணத்தைத் தரிசித்தால் கல்யாணம் விரைவில் கைகூடும்; தம்பதியர் கருத்தொற்றுமையுடன் வாழ்வர் என்பது நம்பிக்கை. ஆனித் திருமஞ்சனமும் இங்கே சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

ரக்‌ஷா தாண்டவம் !

சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை எனும் ஊருக்குச் செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ தொலைவிலும், ஆவடிக்கு  அருகிலுள்ள பட்டாபிராம் வழியே சென்றால் சுமார் 4 கி.மீ தொலைவிலும் உள்ளது சித்துக்காடு(திருமணம்). பேருந்து வசதி குறைவு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று வரலாம். இந்தக் கோயில் காலை 8 முதல் 10 மணி வரையிலும், மாலை 5 முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.

     க.தனலட்சுமி

படங்கள்: பா.அருண்

அடுத்த கட்டுரைக்கு