Published:Updated:

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள் !

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

க்னேயம் (வெப்பம்), சௌம்யம் (தட்பம்) என இரு வகை கிரகங்கள் உண்டு. சூரியன், சனி, செவ்வாய் ஆகியன ஆக்னேயத்தில் (வெப்பம்) அடங்கும். குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியவை சௌம்யத்தில் (தட்பம்) அடங்கும். ராகுவும் கேதுவும் தட்பம் அல்லாததால் வெப்பத்தில் அடங்கிவிடும். ஆக, சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது ஆகிய ஐந்தும் வெப்ப கிரகங்கள். 

7ல் வெப்பக் கிரகங்கள்...

பெண் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 7ல் இரண்டுக்கு மேல் வெப்ப கிரகங்கள் அமர்ந்திருந்தால், அவள் கணவனை இழக்க நேரிடும் என்கிறது ஜோதிடம். 7ல் சனி, செவ்வாய், சூரியன், ராகு அல்லது கேது என்ற நான்கு கிரகங்கள்தான் இருக்க இயலும். அசாதாரண சூழலில், இந்த நான்கு ஆக்னேய கிரகங்களும் இருக்க வாய்ப்பு உண்டு. வெப்ப கிரகங்களின் தாக்கம் 7ம் வீட்டிலிருந்து (பெண்ணின் 7ம் வீடு, கணவனிடம் இருந்து கிடைக்கும் இன்பத்தின் அளவையும் தரத்தையும் வரையறுக்கும்), நான்கு அல்லது மூன்று கிரகங்கள் லக்னத்தைப் பார்ப்பதால், லக்னம் (பெண்) பலவீனம் அடைந்துவிடும். அந்த பலவீனமானது கணவன் இழப்பில் முடிவடையும். பெண்ணின் கர்மவினை செயல்பட்டு, கணவனது இழப்பை உணரவைக்கிறது.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள் !

கணவனுக்கு தீர்க்கமான ஆயுள் இருக்குமானால் இழப்பு ஏற்படாது; அவனிடம் இருந்து கிடைக்கும் அன்பு இல்லாமல் போய்விடும்; அவன் இருந்தும் பயனில்லாமல் போய்விடும். இந்த நிலையிலான பெண், பண்டைய நாளில் வாழாவெட்டியாகக் கருதப்பட்டாள். இன்றைக்கு இவர்களுக்கு மறுமணம் கைகொடுக்கிறது. இங்கும் உண்மையான கணவனின் அன்பு கிடைக்கவில்லை என்பதால், ஜோதிடத்தின் கணிப்பு வென்றுவிட்டது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டைத் தகர்த்தெறிந்து, வாழ்வு இழந்த பெண்ணுக்கு வாழ்வு அளிக்கிறோம். இங்கும் ஜோதிடத்தின் கணிப்பு வென்றுவிட்டது. கலப்படத்தில் வரும் எதிர்விளைவுகளைத் தவிர்க்க, அன்றைய நாளில் கற்பை ஏற்றார்கள். அது, வம்ச பரம்பரையை நிலைநாட்ட பயன்பட்டது.

பெண்களின் துறவறம்!

7ல் வெப்ப கிரகங்கள் இரண்டு மேல் 3 அல்லது 4 என இருந்தால், அந்த வெப்ப கிரகங்களின்

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள் !

தாக்கத்தில் உடலுறவில் விருப்பம் குன்றியிருப்பது உண்டு. ஆகையால், அவள் விதவையானாலோ, வாழாவெட்டியானாலோ உடல் உறவுக்கு ஏங்குவாள் என்று சொல்லமுடியாது. தனிமையில் வாழ அவளுக்கு விருப்பம் வந்துவிடும். ஆனால், ஆடு நனைகிறதே என்று ஓநாய் கண்ணீர் வடிப்பதுபோல், சீர்திருத்தவாதிகள் சிலர் இவர்களுக்காக வருத்தப்படுவார்கள். உண்மையில் இந்தப் பெண்களில் பலருக்கு மறுமணத்தில் விருப்பம் இருக்காது. சீர்திருத்தவாதியின் பிடிவாதத்தில் சிக்கி, மாற்றுக் கணவனின் பிடியில் அகப்பட்டு துயரத்தைச் சந்தித்தவர்களும் உண்டு.

தாம்பத்திய உறவை விரும்பாத கணவன்மார்களைப் போல் மனைவிமார்களும் உண்டு என்கிறது ஜோதிடம் (பிரம்ம வாதின் யபி). 'உலகப் பற்றைத் துறந்து துறவறம் ஏற்பாள் அவள்’ என்று ஜோதிடம் சொல்வதைக் கவனிக்கவேண்டும். திருமணத்துக்குப் பிறகு உடலுறவில் நெருங்காதவர்களும் உண்டு. இருவரில் ஒருவர் அலியாக இருப்பவர்களும் உண்டு. உடலுறவைத் தவிர்க்கும் ஆண்களும் உண்டு; நெருங்கவிடாமல் தடுக்கும் பெண்களும் உண்டு. திரைமறைவில் நிகழ்வதால் எல்லோரது காதிலும் எட்டாமல் இருக்கும். இதன் பக்கவிளைவுகளில் ஒன்றுதான் விந்து வங்கி வாயிலாக செயற்கைக் குழந்தையைப் பெறுவது.

விதவைக் கோலத்தைத் தவிர்க்கலாம்!

விதவைக்கு வாழ்வளிக்க முற்பட்டவர்கள், பல விஷயங்களை இழந்துதான் வெற்றி பெறுகிறார்கள். இருவரிலும் இருக்கும் இந்தக் குறைக்கு மறுமணம் பரிகாரம் அல்ல என்று தெரிந்தும் இணைய வைப்பது, அவர்களில் கசப்பான உணர்வுகளை ஏற்கவைக்கிறது. சிற்றின்பம் எங்கிருந்து கிடைத்தாலும் ஏற்கலாம் என்கிற எண்ணம் ஆறாவது அறிவுக்கு அழகல்ல. பெண் ஜாதகத்தில் மூன்று அல்லது நான்கு ஆக்னேய கிரகங்களைக் கண்ணுற்று, அவளது தாம்பத்திய உறவின் விருப்பத்தை ஆராய்ந்தால், பலபேர் விதவையாவதைத் தடுக்க இயலும். ஜோதிடம், பக்க விளைவுகள் இல்லாத சீர்திருத்தத்தைச் சொல்லும்.

பெண் ஜாதகத்தில் 7ம் வீட்டில் வெப்ப கிரகங்களுடன் தட்ப கிரகங்களும் இணைந்து இருந்தால், அவள் வைதவ்யத்தைச் சந்திக்கமாட்டாள்; முதல் கணவனைத் துறந்து மாற்றுக் கணவனை ஏற்பாள் என்று சொல்லும். இங்கு, திருமணம் ஆன பிறகு அவனைத் துறந்து மற்றொரு கணவனை ஏற்பாள் என்று பொருள் இல்லை. அவளுடைய மனம் முதல் கணவனை ஏற்பதை  விட்டு, மாற்றுக் கணவனைத் தேர்ந்தெடுக்கும் என்று ஜோதிடம் விளக்குகிறது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு அதைத் தவிர்ப்பதும்,  நேர்காணலில் தவிர்ப்பதும், நிச்சயமான பிறகு அவனிடம் குறை கண்டு மற்றொருவனை ஏற்பதும், பிறப்பிலேயே பிணியுள்ளவன் என்பதை அறிந்து அவனைத் துறப்பதும், உரையாடலில் அவன் தனக்கு ஒத்துவர மாட்டான் என்பதைப் புரிந்துகொண்டு தவிர்ப்பதும் இதில் அடங்கும். எனவே, திருமணம் நடந்து உடலாலும் இணைந்தபிறகு மறு கணவனை ஏற்கும் விவாகரத்து மற்றும் மறுமணத்தை மேற்சொன்ன விளக்கம் குறிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் (மிச்ரை: புனர்பூபவேத்).

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள் !

'புனர்பூ’ என்பதன் பொருள் என்ன?

வெப்ப கிரகங்களும் தட்ப கிரகங்களும் இணைந்தால், முதலில் தேர்ந்தெடுக்கும் கணவனைத் துறந்து, மறு கணவனைத் தேர்ந்தெடுப்பாள் என்று பொருள். இதை, 'புனர்பூ’ என்கிறது ஜோதிடம். 'புனர்பூ’ என்றால் திரும்பவும் கணவனைத் தேர்ந்தெடுத்தவள் என்று பொருள். இங்கு, பெண்ணில் குறை இருக்காது. ஆணில் ஏற்பட்ட குறைகளே அவனைத் தவிர்க்கக் காரணமாவதால், இரண்டாவது கணவனிடம் முழுமையான தாம்பத்தியம் ஏற்பட்டு, இன்றைய விவாகரத்தைச் சந்திக்காமல் இருப்பாள் என்று பொருள்.

பெண்களுக்கு விருப்பப்படி கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும், விருப்பப்படி கணவனைத் துறந்து புதுக் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் இருக்கிறது. ஆனால், அப்படியான தேர்வில் தாம்பத்தியத்தைச் சுவைக்கும் பாக்கியசாலிகள் அரிதாகத் தென்படுவதுதான் வேதனையளிக் கிறது. இந்த நிலையை அறிமுகம் செய்துவைத்த சீர்திருத்தவாதிகளும் சிலையாக மாறிவிட்டார்கள்; கேட்கவும் முடியவில்லை!

அபிமன்யுவும் உத்தரையும்...

பண்டைய கால ரிஷிகளின் மனைவிகளில், உலக சுகத்தைத் துறந்தவர்களும், நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்களும் உண்டு. கணவனோடு இணைந்து வாழ்ந்தவர்கள். அவர்களில் சச்சரவு தலைதூக்கவில்லை. ரிஷிகளும் மனைவிகளைத் துறந்து காஷாயம் ஏற்று துறவறம் ஏற்கவில்லை. இரு மனமும் பற்றற்ற நிலையில் ஒன்றி வாழ்ந்தார்கள். அவர்களது வாழ்க்கை உலக அமைதியைப் பேணிக் காத்தது. ரிஷிகள், முனிவர்கள்  இவர்களைவிட, அவர்களது மனைவிகள் உலக சுகத்தைத் துறந்தவர்களாக இருந்தார்கள். காஷாயம் தண்டம் ஏந்தி, திருமணத்தைத் துறந்த துறவிகள், புராண காலங்களில் தென்படவில்லை. திருமணத்தோடு இணைந்தாலும் உலகப் பற்றற்ற நிலையில் இருக்க முடியும் என்று முனிவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள் !

நிச்சயித்த கணவனைத் துறந்து, மற்றொருவனை கணவனாக ஏற்பது, புராண காலத்திலும் உண்டு. அபிமன்யு திருமணத்தில் உத்தரை அப்படித்தான் இருந்தாள். சுயம்வரம் என்பது பலரது யோக்யதாம்சங்களைத் தெரிந்துகொண்டு ஆராய்ந்து, பலரை விலக்கி ஒருவனைத் தேர்ந்தெடுப்பதுதான். அங்கும் 'புனர்பூ’ என்கிற ஜோதிடத்தின் கணிப்பு பொருந்தும். உண்மையான பற்று உள்ளதா என்பதைக் கணிக்க கோலத்தை நம்பாமல், மனதை நம்பினார்கள். இங்கும் பெண்ணின் மனப்போக்கை ஆராய்ந்து செயல்பட ஜோதிடம் பரிந்துரைக்கிறது.

மன இயல்பை ஆராய்வது அவசியம்!

கணவன் இழப்புக்கு 7ல் இருக்கும் வெப்ப கிரகம் காரணமாகும் இடத்தில், அவளுடைய மன இயல்பை எடைபோட்டுத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல் பட்டால், இருவரும் நிம்மதி அடைவார்கள். தாம்பத்தியத்தில் இணைய வைக்கும் தறுவாயில், அவர்களது மன இயல்பை ஆராய்வது அவசியம் என்கிறது ஜோதிடம். உலக சுகங்களில் ஈடுபாடு இருக்குமா அல்லது பற்றற்ற நிலை இருக்குமா, அவளது பெண்மையும் அவனது ஆண்மையும் தாம்பத்தியத்துக்கு உகந்தவையா, பிறப்பிலேயே பிணி பற்றிக்கொண்டிருக்கிறதா, எண்ணத்தை மாற்றிக்கொள்ளும் இயல்பா, பிடிவாதமாக ஒன்றில் நிலைத்திருக்கும் இயல்பா, இணைப்பின் பெருமை, அதன் குறிக்கோள், அதன் இலக்கு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் இயல்பா... ஆகியவற்றையெல்லாம் ஆராய்ந்தால், அவர்களது வாழ்க்கை செழிப்பதற்கு உகந்த முடிவை எடுக்கலாம் என்று ஜோதிடம் சொல்லும்.

வெளிப்படையான ஆண்மை, பெண்மை தோற்றத்தை வைத்து இணையைச் சேர்த்து, பிறகு சண்டைசச்சரவு, கசப்பான அனுபவங்கள் ஏற்படும்போது, அவற்றை அகற்ற பரிகாரத்தைத் தேடி ஜோதிடர்களின் வீட்டுப் படிகளில் ஏறி இறங்குவது சிறப்பல்ல.  திறந்த புத்தகமாக ஜோதிடம் இருக்கும்போது, அதைத் தவிர்த்துவிட்டு, ஜோதிடர்களிடம் அடிபணிவது சரியான முடிவல்ல. ஆண்பெண் இருவரது மனப் போராட்டத்தைக் கவனிக்காமல், வெளிக் கொண்டாட்டத்தில் (திருமணத்தில்) இணைய வைப்பது சாதனை அல்ல. பொருத்தங்கள் அத்தனையும் மனப் போராட்டத்தின் குறிப்பு. அதை உணராமல் நட்சத்திரத்தையும் ராசிச் சக்கரத்தையும் வைத்து ஒட்டவைப்பதில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை. முறிந்த திருமணத்தை ஒட்டவைப்பது பரிகாரம் ஆகாது. ஒப்பில்லாப் ஜோதிடத்தை உப்பில்லாப் பண்டமாக மாற்றுவது அறிவீனம்.

அசுபனை சுபனாக்கும் சுபகிரகங்கள்!

7ல் வெப்ப கிரகங்களைப் பார்த்து, அவற்றின் தரத்தை உணர்ந்து, அவளுக்கு தாம்பத்தியத்தைச் சுவைப்பதில் அக்கறை இருப்பதை உறுதி செய்தபிறகு, இணையைப் பரிந்துரைக்க வேண்டும். வெப்ப கிரகமும் தட்ப கிரகமும் இணைந்த வேளை, கணவனின் இழப்பை ஏற்படுத்தாது என்று தெரிந்துகொள்ள வேண்டும். முதல் கணவனின் பரிசோதனையில் தோல்வியுற்று, இரண்டாவது கணவனில் சேர்ந்து தாம்பத்யத்தை சுவைக்கத் தகுதியிருப்பதை, வெப்ப தட்ப கிரகங்களின் கலவை உறுதிப்படுத்தும். வெப்ப கிரகத்தின் சேர்க்கை, தட்ப கிரகத்தையும் வெப்ப கிரகமாக்கி விடும்; அல்லது பாபத்தோடு (அசுபனோடு) இணைந்த சுபனும் பாபியாக மாறிவிடுவான் என்கிற எண்ணத்தில், எதிரிடையான ஜாதகங்களை சேர்த்துவைக்கும் முயற்சியும் தவறாக மாறிவிடும்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள் !

ஜாதகத்தில் எந்தெந்த கோட்பாடுகளை எங்கெங்கே நடை முறைப்படுத்த வேண்டும் என்ற அட்டவணை உண்டு. இங்கு, வெப்ப கிரகத்தின் நடைமுறையை தட்ப கிரகத்தின் சேர்க்கை மாற்றியமைத்துவிடுகிறது. கணவன் இழப்பை மறுத்து, புதுக் கணவனில் இணைத்து, சிறந்த தாம்பத்தியத்தை அளிக்கிறது. இந்த நுணுக்கங்களை வராஹமிஹிரரின் இந்தச் செய்யுள் சுட்டிக் காட்டுகிறது (ஆக்னேயை:விதவாஸ்தகை:...).

சுப கிரகத்தின் (தட்பம்) சேர்க்கை அசுபனையும் சுபனாக்கிவிடும் என்ற கோட்பாடு இங்கு நடைமுறைக்கு வரும். அசுப கிரகத்தின் சேர்க்கை சுபனையும் அசுபனாக்கிவிடும் என்ற கோட்பாடு இங்கு நடைமுறைக்கு வராது. ஆக, தனது கோட்பாடுகளை உணர்ந்து ஆராய்ச்சியில் முடிவெடுக்கச் சொல்கிறது ஜோதிடம்.

சிந்திப்போம்...

அடுத்த கட்டுரைக்கு