மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

ஆன்மிகத்திலும் ஆடம்பரமா ?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

?   ந்திய மக்கள் தொகையில் 15 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் போதிய உணவின்றி தவிக்கிறார்கள் என்பது சமீபத்திய செய்தி. பாலியல் வன்கொடுமைகள், கொலைகொள்ளை போன்ற துயரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆன்மிகம் தழைத்தோங்கிய நம் தேசத்தின் இன்றைய நிலைக்கு யார் காரணம்? 

 - சி.வள்ளிநாயகம், செங்கோட்டை

முதல் கோணம்

பண்டைய நாட்களில் தூய வாழ்வும் உயர்ந்த சிந்தனையும் மக்களின் அடையாளமாக இருந்தன. ரிஷிகளும், முனிவர்களும் தூய வாழ்க்கையைக் கடைப்பிடித்தார்கள். அவர்களது சிந்தனை உயர்ந்ததாக இருந்தது. எல்லோரும் இன்புற்றிருந்தார்கள்.

காட்டில் வாழும் முனிவர்களைத் தேடி அரசர்கள் வருவார்கள். தங்களுடைய குறைகளை நிறைவு செய்யும்படி அவர்களை வேண்டுவார் கள். வனவாசம் ஏற்ற ராமர் அங்கிருக்கும் முனிவர்களை அணுகி, தனது வெற்றிக்கு அவர்களிடம் அருள் பெற்றார். முனிவர்களின் கண்ணோட்டத்தில் உயிரினங்கள் அத்தனையும் ஒன்றுதான். அவர்களுடைய பார்வையிலும் நடைமுறையிலும் பாகுபாடு இருக்காது. வன விலங்குகளும் பறவைகளும் அவர்களோடு இணைந்து வாழ்ந்தன. ஓர் அறை இருக்கும் குடிலிலேயே வாழ்ந்தார்கள். மழை, வெயில், பனிப்பொழிவு ஆகியவற்றின் தாக்கம் அவர்களது மனதைப் பாதிக்கவில்லை. காட்டில் கிடைக்கும்

காய்கனிகளை உண்டு மகிழ்ந்தார்கள். விலங்கினங்களிலும் செடி கொடிகளிலும் அன்பு செலுத்தினார்கள். பிணிகளும் அவர்களைத் தாக்கவில்லை.

கேள்வி - பதில்

? இன்றைய நிலைமைக்கான காரணத்தைக் கேட்டால், நீங்கள் பண்டைய பெருமைகளைச் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே?

பண்டைய காலம் சிறப்புற்று இருந்ததற்கான காரணத்தைச் சொல்கிறோம். அக்காலத்தில், முனிவர்கள் காட்டில் இருந்துகொண்டு

நாட்டின் நலனுக்குப் பாடுபட்டார்கள். அவர்களது தவம் உலகம் உய்யப் பயன்பட்டது. அவர்கள் தவத்தை விலங்கினங்களும் கலைக்கவில்லை. உடல் உபாதையும் இடையூறு செய்யவில்லை. மனம் சாந்தமாக இருந்தது. வாழ்க்கையின் தேவை பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். நீண்ட ஆயுளைப் பெற்றார்கள். உடல் தளர்ந்து செயல்பாடு தடுமாறும் வேளையில், தங்களது தவ வலிமையால் உடலைத் துறந்து விடுவார்கள். உயிர் பிரிவதிலும் அவர்களைத் துயரம் தொடாது.

விஸ்வாமித்திரரும், வசிஷ்டரும் சூர்ய வம்சத்து அரசர்களுக்கு அருளினார்கள். வேத வியாசர் சந்திர வம்சத்துக்கு உயிரூட்டினார்.  வனவாசத்தில் பாண்டவர்களுக்கு அறத்தை ஓதி, அவர்களது வெற்றிக்கு வித்திட்டார். அகஸ்தியர் நஹுஷனைக் கண்டித்து, நல்வழி காட்டி உதவி செய்தார். அரக்கர்கள் தங்களைத் துன்புறுத்தினாலும், நாராயணனை வேண்டி அவரது அருளால் அரக்கர்களை அடக்குவார்கள். முனிவர்களின் மனைவிகளை அரக்கர்கள் அலைக்கழிக்க முற்படும் வேளையில், அந்த மாதரசிகளின் பாதிவ்ரத்ய நெருப்பில் விட்டில் பூச்சிகளாக மரணத்தைத் தழுவுவார்கள். அனசூயையும் நளாயினியும் எதிரிகள் நெருங்கமுடியாத நெருப்பாக மாறினார்கள்.

அவர்கள் ஈட்டிய அறம் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தது. அவர்களுக்கு அதில் நம்பிக்கை இருந்தது. அதைக் கடமையாக ஏற்றார்கள். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்தார்கள். அவர்களது பிறப்பு அவர்களுக்கு மட்டும் பெருமை அளிக்கவில்லை; உலகம் நல்வழியில் பயணிக்க பழகிக்கொண்டது. நட்பின் இலக்கணம் அவர்களது பண்பில் ஊறிவிடும். இதுதான் புண்ணிய பாரதத்தின் தனி உருவம்.

? எனில், எல்லோரையும் வனவாசம் ஏற்கச் சொல்கிறீர்களா?

உங்கள் கேள்வி குதர்க்கமானது! இன்றையச் சூழல் முற்றிலும் மாறிவிட்டது எனச் சொல்ல வருகிறோம். காரணத்தை ஆராய்ந்தால்தானே, தீர்வைச் சொல்ல முடியும்!

இன்றைக்கு ஆடம்பரமான வாழ்க்கையும், குறுகிய சிந்தனைகளும் விளையாடுகின்றன. கடவுளுக்குப் பிரதிநிதியாக அறிமுகம் செய்து கொண்ட சில மகான்களும், முற்றும் துறந்த சில துறவிகளும் மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு மக்களிடம் வந்துவிடுகிறது; மக்களின் யோகக்ஷேமத்தைக் கண்காணிக்கும் கட்டாயம் அவர்களுக்கு வந்துவிடுகிறது. ஆக, ஒரு படி இறங்கி வந்து மக்களுடன் இணைந்து வாழ்கிறார்கள்.

அதன் காரணமாக மக்கள் அளிக்கும் ஆடம்பர வாழ்க்கையை ஏற்கவேண்டியிருக்கிறது. துறவை ஏற்றும் உலகவியலில் நுழைய வேண்டியுள்ளது. இவர்கள், புராணங்களில் தென்படும் ரிஷிகளின் வாழ்க்கையை ஏற்கும்படி பரிந்துரைப்பார்கள். அவர்களது உயர்ந்த வாழ்க்கையை நினைத்துப் பெருமைப்படுவார்கள். லோகாயத வாழ்வைத் துறந்து ஆன்மிக வழியில் இணையும்படி பரிந்துரைப்பார்கள். ஆன்மிக வாழ்வின் பெருமையை வானளாவப் புகழ்ந்து மக்களை ஏற்கவைப்பார்கள். ஆனாலும், தங்களது வாழ்வில் பழங்கால முனிவர்களது நடைமுறையைக் கொண்டு வருவதில் ஒருசிலரே வெற்றி பெறுகிறார்கள். பெரும்பாலும் லோகாயத வாழ்வைத் துறக்கத் துணிவில்லாமல் தவிக்கிறார்கள்!

கேள்வி - பதில்

? மக்களுக்காக மகான்கள் இறங்கி வருவது தவறா?

துறவியானவர் ஜீவன் முக்தர் (வாழும்போதே துயரத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டவர்). லோகாயத வாழ்வில் பிடிப்பு இல்லை. உலகத்தில் இருப்பவர்கள் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக, அவர் அதில் இணைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. அவருக்கு எந்த வேலையும் இல்லை. இதை உணராத பாமர மக்கள், அவர் சும்மா இருப்பதைப் பார்த்து, தாங்களும் அறத்தைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறுகிறார்கள். இந்த நிலையில், அவர்களுக்கு ஊக்கம் அளிக்க அவரும் அறத்தைக் கடைப்பிடித்துக் காட்டவேண்டியிருக்கிறது (லோகஸங்க்ர ஹார்த்தம்). உலகை நல்வழியில் இழுத்துச் செல்வதற்காக தானும் ஒருபடி இறங்கி வந்து, பாமரர்கள் போன்று வாழ்ந்துகாட்ட வேண்டியுள்ளது.

கண்ணன் பரம்பொருள். அவருக்கு எந்தக் கடமையும் இல்லை. இருந்தாலும், உலகுக்காக எல்லோரையும் போன்று தானும் அறத்தை நடைமுறைப்படுத்துகிறார். இப்படியே, நாட்டில் வாழும் புது முனிவர்கள் சமுதாயமும் தென்படுகிறது. காட்டில் வாழ்ந்த முனிவர்கள் உலகம் உய்ய தவத்தைக் கையாண்டார்கள். நாட்டில் வாழும் இந்தப் புது முனிவர்கள், தங்களை உயர்த்திக்கொள்ள மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள். அதனால், மக்களை தூய வாழ்க்கையையும் உயர்ந்த சிந்தனையையும் ஏற்கவைக்க இவர்களால் இயலவில்லை. தற்போது, இந்த இரண்டும்தான் மக்களுக்கு நிம்மதி அளிக்கும். அதை உணர்ந்து செயல்படுத்தும் துறவிகள் உதயமாகவேண்டும்.

இரண்டாம் கோணம்

பழம்பெரும் சித்தாந்தங்கள் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் என்பதில்லை. மனித சிந்தனையின் மாற்றத்துக்கு ஏற்ப சித்தாந் தங்கள் மாறுபடுவதில் தவறில்லை. ஆடம்பர வாழ்வை ஏற்பதால் தூய்மை அழியாது; எளிமையும் மறையாது. அவர்களுடைய மனத் தூய்மையே எளிமையை அளிக்கும். ஆக, நாட்டு நடப்புக்கு ஏற்ப ஆடம்பரப் பொருள்களை ஏற்பது தகும்.

? ஆனால், நாட்டு நடப்புகள் நல்லபடியாக இல்லையே! ஆடம்பர மோகம், தர்ம சிந்தனைகளைச் சிதைத்து விடாதா?

சிந்தனை எல்லோரிடமும் உயர்ந்து இருக்கிறது. முனிவர் வேஷமும், காட்டு வாசமும்தான் தூய வாழ்வுக்கும், உயர்ந்த சிந்தனைக்கும் அடையாளம் என்று சொல்ல முடியாது.  ஆன்மிகத்தில் மட்டுமல்ல, மக்களின் தலைவர்கள் பலரும், காலத்துக்கு ஏற்ப தூய வாழ்வையும் உயர்ந்த சிந்தனையையும் மக்கள் ஏற்கும்படி செய்திருக்கிறார்கள். இருக்க இடமும், உடுக்க உடையும், உண்ண உணவும் எல்லா மக்களுக்கும் கிடைக்கும்படி செய்திருக்கிறார்கள்.

அதேபோல், பாரதம் தனியாக வாழ இயலாது. மற்ற உலக நாடுகளுடன் இணைந்துதான் வாழவேண்டும். அந்த நாடுகளுக்கு இணையாக நாமும் முன்னேற வேண்டும். அதற்கு உகந்த முறையில் எல்லோருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். நம் தலைவர்கள், காலத்துக்கு ஏற்ற உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள். மந்திரிப் பதவியை ஏற்றிருந்தாலும், சாமானிய மனிதர்கள் போல் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்களோடு மக்களாக இணைந்து வாழ்கிறார்கள். அதுவே, அவர் களின் உயர்ந்த சிந்தனைக்கு அடையாளம்.

எளியவனுக்கும் மந்திரிப் பதவியில் அமர இடம் உண்டு. மந்திரிகளின் பார்வையில் அத்தனை மக்களும் ஒன்றுதான். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், கல்வியை ஏற்று சிந்தனை வளம் பெற்றவர்களாக மாறியிருக்கிறார்கள். தாடியும், மீசையும், நீண்ட தலைமுடியும் இருக்கும் முனிவர்களுடைய உருவம் மட்டுமே தூய வாழ்க்கைக்கு அடையாளம் ஆகிவிடாது. காலத்துக்கு ஏற்ப ஆடை அணிகளை ஏற்பது ஆடம்பரம் ஆகாது. அது, வாழ்க்கையின் தேவையாக மாறியிருக்கிறது. வாகனங்களும், சிற்றுண்டி ஓட்டல்களும் ஆடம்பரம் இல்லை.

? பண்டைய முனிவர்களின் ஆடைஅணிகளையும் உருவத்தையும் பின்பற்றச் சொல்லவில்லை; அவர்களது செயல்பாட்டை, பண்பாடு மிகுந்த உயர்ந்த சிந்தனைகளையே பின்பற்றச் சொல்கிறோம். அந்தப் போக்கு இன்று இல்லையே?!

ஏன் இல்லை?! இனம், மதம், மொழி என்றெல்லாம் வேற்றுமை பார்க்காமல், எல்லோரையும் சமமாகப் பார்க்கும் நோக்கு, உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடு! உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு, காலத்துக்குப் பொருத்தமான மக்களின் முன்னேற்றத்தை எல்லோரிடமும் ஏற்படுத்தும் முயற்சி, உயர்ந்த சிந்தனையின் விளைவு.

அடித்தட்டு மக்களையும் சிந்தனையாளர் களாக மாற்ற அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பு அளிப்பது, உயர்ந்த சிந்தனையாகும். ஜனாதிபதியும் கவர்னர்களும் நாட்டுக்காக உழைப்பார்கள். ஓய்வு பெற்ற பிறகு, நாட்டின் பராமரிப்பில் வாழ்வார்கள். அவர்கள் பணம் சேமித்து வைப்பதில்லை. ஓய்வு ஊதியத்தில் வாழ்க்கையை நடத்துவார்கள். எந்த மதமாக இருந்தாலும் சுதந்திரமாக வாழலாம். உலகளாவிய மாற்றம் நம் நாட்டிலும் பிரதிபலிக்கும். பழைய முனிவர்களது வாழ்க்கையை ஒப்பிட்டு இப்போது தென்படும் வாழ்க்கையை ஆடம்பரம் என்கிறீர்கள். வாழ்க்கையின் தேவைகளை ஏற்பதில் ஆடம்பரம் இல்லை. முன்னேறிக் கொண்டிருக்கும் விஞ்ஞானத்தின் தாக்கம் எல்லோரிலும் தென்படும். அதை ஆடம்பரம் என்று சொல்லக் கூடாது.

எனவே, காட்டில் தனியே இருந்துகொண்டு மக்களுடனும் தலைவர்களுடனும் இணையாமல் இருந்த முனிவர்களே உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள் என்பது பொருந்தாது. அன்றாடம் மக்களின் குறைகளை அகற்றி, அவர்களின் சிந்தனை வளத்தை வளர்க்கும் தலைவர்களே உயர்ந்த சிந்தனையை எட்டியவர்கள். அன்றைய தூய வாழ்க்கையும், உயர்ந்த சிந்தனையும் இப்போதும் காலத்துக்கு உகந்த முறையில் தொடர்கிறது. அதை ஏற்று மக்களும் முன்னேறி இருக்கிறார்கள்.

கேள்வி - பதில்

மூன்றாவது கோணம்

உலகளாவிய மாற்றம் புது சிந்தனையாளர் களிடம் ஆடம்பரத்தில்  ஈர்ப்பையும், சிந்தனை யில் சுணக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பதை எவரும் மறுக்க முடியாது. எளிமையான, தூய்மையான வாழ்க்கையை ஏற்கும் எண்ணம் பலரில் இல்லை. சுயநலம் மேலோங்கி இருக்கும் இன்னாளில் குறுகிய சிந்தனையே இருக்க முடியும். இன்றைய வாழ்வில் ஆடம்பரத்தில் நிறைவு பெற்றவரை உயர்ந்த வராகப் பார்ப்பவர்களே அதிகம். அவர்களது சிந்தனை எப்படி உயர்வானதாக இருக்கும்?!

?எதை வைத்து சுயநலம் மேலோங்கிவிட்டது எனச் சொல்கிறீர்கள்?

பொதுநலப் போர்வையில் சுயநலத்தைச் செழிப்பாக்கும் எண்ணம் எங்கும் பரவியிருக் கிறது. இன்றைய புது துறவிகளும், தலைவர் களும், சீர்திருத்தவாதிகளும் தங்களது சுயநலத்துக்கு ஊறு விளைவிக்காத நிலையிலேயே பொதுநலத்தில் இணைவார்கள். பெரும்பாலானோர் தாமரை இலைத் தண்ணீர் போன்று ஒட்டும் ஒட்டாமலும் இருப்பவர்கள் தான்! அங்கும் இங்குமாக சில நல்லவர்கள் தென்பட்டாலும், அவர்களது உயர்ந்த சிந்தனையை மற்றவர்கள் குறையாகப் பார்த்து, சமூகத்தில் இருந்து அவர்களை ஒதுக்கிவைத்து விடுவார்கள்.

தலைவன் தனது வலுவைக் காப்பாற்ற மக்களை ஈர்க்கிறான். மக்களின் முன்னேற்றத் தில் அவன் சிந்தனை செயல்படவில்லை. அவர்கள் முன்னேறினால், அவனது பலம் சரிந்துவிடும். எனவே, அவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கையை அளித்து, அவர்களது சிந்தனையை முடக்கிவைப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். கடைத் தேங்காயை வழிப் பிள்ளையார்க்கு உடைப்பது போல், நாட்டின் பொதுச் சொத்தைப் பகிர்ந்து அளிப்பார்கள். மக்களுக்கு இனாமாக... இருக்க இடமும், உடுக்க உடையும், குடிக்கக் கஞ்சியும் அளிப்பார்கள். அதோடு நிற்காமல் ஆடம்பரப் பொருள்களையும் மலிவு விலையில் அவர்களுக்கு அளிப்பார்கள். அவர்களைப் பராமரிக்கும் பணியை ஏற்பார்கள். அவர்களது இந்த சிந்தனை, அவர்களது சுயநலம் சரியாமல் இருக்க உதவுகிறது.

? மக்கள் பணி மகேசனுக்கான பணி என்பார்கள். வறியவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வது, பண்டைய முனிவர்கள் செய்த பணியைவிட மேலானது அல்லவா?

உள்ளங்கை நெல்லிக்கனி போல், இன்றைய சில தலைவர்களின் செயல்பாட்டை அனுபவத்தில் உணரும்போது, 'அவர்கள் முனிவர்களைவிடவும் உயர்ந்தவர்கள்’ என்ற கூற்றை உள்நோக்கம் கொண்டதாகவே கருதவேண்டியுள்ளது. தாழ்ந்த நிலையில் இருக்கும் ஒருவனை உயர்த்துவதற்கு அல்லது உயர்ந்தவனுக்குச் சமமாக இருத்துவதற்கு, உயர்ந்தவனைத் தாழ்த்தினாலே போதும்; இருவரும் சமமாகிவிடுவார்கள் என்ற நிலையே இப்போது! அடித்தட்டு மக்களை சிந்தனை சிற்பிகளாக மாற்ற நினைக்கமாட்டார்கள். இவர்களின் சுயநலம் அதை நடைமுறைப்படுத்தவிடாது.

இப்படியான ஒரு சூழலை, பழைய முனிவர்களது செயல்பாட்டின் மறுபதிப்பாக விளக்கிச் சொல்வது, சிந்தனைக் குறைபாட்டையே காட்டுகிறது. மக்கள் ஆசைகளைத் துறக்க எப்போது தயாராகிறார் களோ, அப்போது எளிய வாழ்வும், உயர்ந்த சிந்தனையும் அவர்களில் குடியேறிவிடும். இதையறிந்த இன்றைய சீர்திருத்தவாதிகள், மக்களின் ஆசைகளைக் கொழுந்துவிட்டு எரிய வைக்கிறார்கள். அதன் விளைவே, திருட்டும், கொலையும், கற்பழிப்பும் அதிகரித்திருப்பது.

? விஞ்ஞான வளர்ச்சியுடன் உலகம் முன்னேறிக் கொண்டிருக்க... ஆசை, ஆடம்பரம் என்று காரணம் சொல்லி, குண்டாஞ்சட்டியில் குதிரை ஓட்டச் சொல்கிறீர்களே?

ஒட்டுமொத்த உலகமும் ஆடம்பரத்தை ஏற்பதால், நாமும் அதை ஏற்கவேண்டும் என்பதில்லை. அவர்கள் அனைவரும் நட்பை மறந்து பகையில் வாழ்கிறார்கள். உலகநாடுகள் பலவும் 'நாம் ஒருவருக்கொருவர் நட்போடு வாழ வேண்டும்’ என்று அடிக்கடி

ஓலமிடுவதில் இருந்தே, அவர்களின் மனதின் அடித்தளத்தில் பகை விடாமல் ஒட்டிக்கொண்டிருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். பகையில் உயர வேண்டும் என்ற சிந்தனை உயர்ந்த சிந்தனையாகாது.

தலைவர்களின் தவறான வழிகாட்டுதலில் எங்கேயோ சென்று கொண்டிருக்கிறோம். உயர்ந்த வாழ்க்கைக்குத் தேவையான தூய வாழ்க்கையும், உயர்ந்த சிந்தனையும் வேண்டும். அதை ஊட்டும் தலைவனே இன்றைய தேவை. சுயநலம் மறைந்து, பொது நலன்  தலைதூக்க வேண்டும். தூய வாழ்வு, உயர்ந்த சிந்தனை இந்த இரண்டால் மட்டுமே சுயநலத்தை அழிக்க இயலும். ஆரம்பக் கல்வியில் இருந்து இந்தக் குறிக்கோளை ஊட்ட வேண்டும். அப்போது, தலைவர்களின் உதவி இல்லாமல் மக்கள் உயர்ந்துவிடுவார்கள். அவர்களைப் பார்த்து தலைவர்களும், துறவிகளும், சீர்திருத்தவாதிகளும் திருந்திவிடுவார்கள். அந்த நாளை கடவுள் சீக்கிரமாகச் சுட்டிக்காட்ட வேண்டும்.

தங்களின் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

மக்கள் செல்வம்தான் நாட்டின் அடையாளம். மக்களிடையே இதய பரிவர்த்தனம் நிகழவேண்டும். பரிந்துரைகளால் மக்களை ஈர்க்க இயலாது. அவர்களின் மனம் செப்பனிடப்பட வேண்டும். சிறு வயது கல்வி முதலே தூய வாழ்வில் ஈர்ப்பும் உயர்ந்த சிந்தனையில்

நாட்டமும் எட்ட உதவவேண்டும். வளரும் நிலையிலேயே, இந்தக் குறிக்கோள் மனதில் ஊன்றி நிலைபெற்றிருக்க வேண்டும். அப்போது, காலமாற்றத்தின் தாக்கம் அவர்கள் சிந்தனையை திசைமாற வைக்காது. அவர்களைக் கவனிக்க தலைவர்கள் தேவையில்லாமல் போய்விடும்.

பிறப்பில் சுதந்திரத்தை அளிக்கிறது இயற்கை. அதைத் தலைவர்கள் தலையீட்டால் இழக்கக் கூடாது. ஆசையை அடக்கி, சுதந்திரத்தை இழக்காமல் பாதுகாத்து வந்தால், மக்கள் மனதில் எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையும் பசுமையாக இருக்கும்; தேசமும் வளம் பெறும்.

பதில்கள் தொடரும்...