Election bannerElection banner
Published:Updated:

தலைவிதியை மாற்றுவார், எம பயம் போக்குவார் காலபைரவர்! #Kalabairavashtami

தலைவிதியை மாற்றுவார், எம பயம் போக்குவார் காலபைரவர்! #Kalabairavashtami
தலைவிதியை மாற்றுவார், எம பயம் போக்குவார் காலபைரவர்! #Kalabairavashtami

தலைவிதியை மாற்றுவார், எம பயம் போக்குவார் காலபைரவர்! #Kalabairavashtami

சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் காலபைரவர் வடிவமும் ஒன்று. கால பைரவர், எதிரிகளுக்கு அச்சத்தைத் தருபவர்; தன்னைச் சரணடைந்த பக்தர்களை சகல ஆபத்துகளில் இருந்தும் பாதுகாத்து, அவர்களுக்கு அனைத்து நலன்களையும் அருளக்கூடியவர். படைப்புத் தொழில் புரிவதால் தானே மும்மூர்த்தியரிலும் உயர்ந்தவர் என்று பிரம்மதேவர் கர்வம் கொண்டபோது, பிரம்மதேவரின் கர்வத்தை அடக்க, சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய கால பைரவர், பிரம்மதேவரின் ஒரு தலையைக் கொய்தார். கர்வம் யாருக்கும் இருக்கக்கூடாது என்பதற்காக சிவபெருமான் நிகழ்த்திய லீலை இது. 


காசி நகரின் காவல் தெய்வமாக விளங்குபவர் கால பைரவர். சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் சந்நிதி கொண்டிருக்கும் கால பைரவர், வறுமை நிலை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கக் கூடியவர். பைரவருக்கு அஷ்டமி பூஜை மிகவும் விசேஷமானது. குறிப்பாக கால பைரவாஷ்டமி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பொதுவாக கால பைரவாஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும். ஆனால், இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 25-ம் தேதி (11.11.17) வருகிறது. இந்த நாள்தான் கால பைரவரின் ஜன்மாஷ்டமி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இலக்கியங்களில் கால பைரவாஷ்டமி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 

அனைத்து சிவாலயங்களிலும் கால பைரவாஷ்டமி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக காசி பைரவர் ஆலயம், இலுப்பைக்குடி  சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம், சீர்காழி சட்டைநாதர் ஆலயம், வாஞ்சியத்தில் யோக பைரவர் சந்நிதி, புதுவை இடையார் பாளையம் சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் ஆகிய இடங்களில் பைரவருக்கான ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ பைரவர் ஹோமம் போன்றவை நடைபெறும். காலபைரவர் அவதரித்த  கால பைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இந்த நாள் குறித்து மேலும் தகவல்கள் பெற புதுவை இடையார் பாளையம் சொர்ணா கர்ஷண பைரவர் ஆலய தலைமை குருக்கள் வேதவியாசரிடம் பேசினோம். 

“ஆணவத்தை அழிக்க சிவபெருமான், ஸ்ரீ கால பைரவராக அவதரித்த நாளே கால பைரவாஷ்டமி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும். அந்த நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம். அதிலும் அவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும். சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது. ஸ்ரீ ஸ்ரீ பகவத்பாதாள் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பைரவ வழிபாடு தொன்மையான பிணி தீர்க்கும் வழிபாடு. ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர். 

12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால் இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். 21 அஷ்டமி நாளில் பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம். காலத்தின் கடவுளான கால பைரவர்  தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். எனவே துன்பப்படும் எல்லா மக்களும் நாளை வரும் கால பைரவாஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி , விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா வளங்களும் பெறலாம்.

தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் சில ஆலயங்களில் சிறப்பாக ஏற்றப்படுகிறது. பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாத்துவதும் உண்டு. 
பைரவ லட்சார்ச்சனை, ஶ்ரீருத்ர யாகம், ஶ்ரீபைரவ ஹோமம் போன்றவற்றில் கலந்துகொள்வது மிகவும் விசேஷம். எட்டு விதமான மலர்களால் அர்ச்சித்து, பைரவரின்

"ஓம் கால காலாய வித்மஹே 

 கால தீத்தாய தீமஹீ 

 தந்நோ கால பைரவ பிரசோதயாத்:"

என்ற காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வழிபட்டால், தீராத பிணிகளும் தீரும்; கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும். எனவே, கால பைரவாஷ்டமி தினத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடுவோம். அதன் பயனாக, எதிரிகளின் தொல்லை, வறுமைப் பிணி போன்ற பிரச்னைகள் எல்லாம் நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற வாழலாம்'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு