Published:Updated:

வியாசராயர் வழிபட்ட லக்ஷ்மிநாராயணர் !

ஆலயம் தேடுவோம்ரெ.சு.வெங்கடேஷ்

ஸ்ரீ ராகவேந்திரரின் முந்தைய அவதார மாகப் போற்றப்பெறும் ஸ்ரீ வியாசராயர், விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரின் குருவாக இருந்த அந்த மகான், நாடெங்கிலும்ப் 700க்கும் மேற்பட்ட ஆஞ்சநேயரின் திருவுருவங் களைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார். அப்படி அவர் கல்லில் வடித்துப் பிரதிஷ்டை செய்துள்ள அனைத்து ஆஞ்சநேயர் விக்கிரஹங்களும் பிரத்தியேகமான தோற்றத்துடன் திகழும்.

அதாவது, ஆஞ்சநேயரின் வால் நுனியில் ஒரு மணி அமைந்திருப்பதுடன், அவருடைய கையில் ஒரு தாமரை மலரும் இடம் பெற்றிருக்கும். தன் ஜீவனான ராமபிரானை மறந்துவிடாமல் இருப்பதற்காக, மணியோசை ஒலிக்க, கையில் இருக்கும் தாமரை மலரால் சதாசர்வ காலமும் ராமனை அனுமன் பூஜித்துக்கொண்டிருப்பதாக ஐதீகம். அப்படி வியாசராயர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஆஞ்சநேயர் திருவுருவங்களில் ஒன்றிரண்டே ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்று, இதோ இப்போது நாம் இந்த 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் தரிசித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயிலும் இருப்பது விசேஷம்!

திருவாரூர் மாவட்டம், ஆவூரில் அமைந்திருக்கும் இந்த கோயிலில், தெற்கு நோக்கி அருட்காட்சி தருகின்றார் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர். கோயிலின் மூலவர் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள், தம்முடைய மடியில் மகாலக்ஷ்மி தாயாருடன் எழிலார்ந்த கோலத்தில் திருக்காட்சி தருகின்றார். மற்றும் விஷ்வக்சேனர், கருடாழ்வார், அன்னபூரணி ஆகியோரும் இங்கே அருள்புரிகின்றனர். உற்ஸவ மூர்த்தங்களாக வரதராஜ பெருமாளும் கோவிந்தராஜ பெருமாளும் அருள்புரிகின்றனர்.

வியாசராயர் வழிபட்ட லக்ஷ்மிநாராயணர் !

ராஜகோபுரம் கட்டுவதற்கான அமைப்பு இருந்தும், ஏனோ இதுவரை கோபுரம் கட்டப் படவில்லை. அல்லது, முன்காலத்தில் கோபுரம் இருந்து பின்னர் இடிந்துவிட்டதோ என்னவோ? அதுவும் யாருக்கும் தெரியவில்லை. இங்குள்ள பெருமாளின் கருவறை விமானத்தில் கல்கலசம் பொருத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள ஆஞ்சநேயர் மிகவும் வரப்பிரசாதி. இவருக்கு வெண்ணெயும் வெற்றிலை மாலையும் சாற்றி வழிபட்டால், குழம்பிய மனம் தெளிவு பெறுவதுடன், கடன் பிரச்னை, எதிரிகளின் தொல்லை போன்றவையும் விலகுவதாக பக்தர்களின் நம்பிக்கை.  

வைகாநச ஆகமப்படி அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் கட்டட அமைப்பில் இருந்து, இந்தக் கோயில் சோழர்கள் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று தெரியவருகிறது. ஒருகாலத்தில் நித்தியகால பூஜைகளும், வேத பாராயணங்களும், விழாக்களும் விசேஷங்களுமாக திகழ்ந்த இந்தக் கோயிலின் இன்றைய

நிலைமை மிகப் பரிதாபம்! கோயிலின் பிராகாரங்களில் புதர் மண்டிக் கிடக்கிறது. மதில்களில் மரங்களின் வேர்கள் ஊடுருவி, ஒரு சின்ன அதிர்வேட்டு வெடித்தால்கூட இடிந்து விழும் அளவுக்கு பலவீன மாகக் காணப்படுகிறது. ஒரு தீர்த்தக் கிணறும் உள்ளது. ஆனாலும், அதைப் பயன்படுத்த முடியாதபடி பாழடைந்து காணப்படுகிறது.

வியாசராயர் வழிபட்ட லக்ஷ்மிநாராயணர் !

1969ம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றதாகச் சொல்லப்படும் இந்தக் கோயில் பல வருடங்களாகச் சிதிலம் அடைந்து இருப்பதைக் கண்டு மனம் வருந்திய, இந்த ஊரைச் சொந்த ஊராகக் கொண்டு பல்வேறு ஊர்களில் தற்போது வசித்து வரும் அன்பர்கள் ஒன்றுசேர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு திருப் பணிக் கமிட்டியை அமைத்து, திருப்பணிகளைத் தொடங்கி இருக் கிறார்கள். திருப்பணிக் கமிட்டியின் உறுப்பினர்களில் ஒருவரான சேது மாதவன் என்பவரிடம் பேசினோம்.

''எங்கள் தாத்தா காலத்தில் பல ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் சென்றிருக்கிறார்கள். ஒரு காலத்தில், கார்த்திகை மாதம் துவாதசியை ஒட்டி இந்த ஊரில் நான்கு நாள்கள் வனபோஜனம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெரிய காளவாய் அடுப்புகளில் உணவு சமைத்து, கோயிலுக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் அமர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாப்பிடுவார்கள். அந்த அளவுக்கு அமோகமாக இருந்த இந்தக் கோயில்தான், சரியான பராமரிப்பு இல்லாமல் சிதிலம் அடைந்துவிட்டது.

வியாசராயர் வழிபட்ட லக்ஷ்மிநாராயணர் !

கோயிலின் முழுமையான வரலாறு எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், வியாசராயர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர் இது என்பதால், குறைந்தபட்சம் 400 வருஷங்களுக்கு முன்பே இந்தக் கோயில் இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி! சொல்லப்போனால், அதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கோயில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை, சோழர்கள் காலத்திய இதன் கட்டட அமைப்பில் இருந்து நாம் யூகிக்கலாம்.

இப்போதுதான் இந்த ஊர் மக்கள் மற்றும் இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டு வெளியூரில் வசிக்கும் மக்கள் போன்றவர்களின் துணையுடன் திருப்பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். இப்போதைக்கு மடப்பள்ளி வேலை மட்டும்தான் முடிந்துள்ளது. இன்னும் புது ராஜகோபுரம் கட்டுவது, கிணற்றைச் சுத்தப்படுத்துவது, கோயில் கட்டடத்தைப் புதுப்பித்துக் கட்டுவது, மதில் சுவர், ஆஞ்சநேயர் சந்நிதி, முன் மண்டபம் என்று பல பணிகளைச் செய்யவேண்டி இருக்கிறது.

போதிய நிதி இல்லாமல் இருப்பதால், திருப்பணிகள் சற்று மெதுவாகத்தான் நடக்கின்றன. பெருமாளின் பேரருளால் திருப்பணிகள் விரைவில் முடிந்து சம்ப்ரோக்ஷணம் நடைபெற வேண்டும் என்பதே எங்களின் பிரார்த்தனை'' என்றார் சேது மாதவன்.

பெருமை வாய்ந்த இந்தக் கோயில் திருப்பணிகள் விரைவிலேயே நிறைவு பெற்று, சம்ப்ரோக்ஷணம் நடைபெற, நாமும் நம்மால் இயன்ற பொருளுதவிகளைச் செய்வோம்; ஆவூர் பெருமாளின் திருவருளைப் பெற்றுச் சிறப்புடன் வாழ்வோம்.

படங்கள்: க.சதீஷ்குமார்

எப்படிச் செல்வது?

கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆவூர். கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு