Published:Updated:

குரு பலம் வேண்டுமா? புளியறைக்கு வாருங்கள் !

இளந்தமிழருவி

பாண்டிய தேசத்திலும், சோழவள  நாட்டிலும் சமணர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலகட்டம் அது. அடியவர் கூட்டம் ஒன்று பொதிகை மலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. அவர்களில் ஒருவரது தோள் மீது ஸ்ரீ நடராஜ விக்கிரகம்! 

யார் அவர்கள்? எங்கு சென்று கொண்டிருக் கிறார்கள்?

திருச்சிற்றம்பலம் என்று புராணங்களாலும், கோயில் என்று சைவப் பெருமக்களாலும் போற்றிக் கொண்டாடப்படும் தில்லையைச் சேர்ந்த அடியவர் கூட்டம் அது. பரத கண்டத்தின் தெற்கில், சமணர்களின் ஆதிக்கம் மிகுந்து விட்டது அல்லவா? அதன் பொருட்டே இந்த நகர்வு. அதுவும் தங்களின் உயிரையோ உடைமையையோ காப்பாற்றிக் கொள்வதற்காக அல்ல; தங்களது உயிரினும் மேலானதில்லை அம்பலவாணனின் விக்கிரகத் திருமேனியை, அந்நியரிடம் இருந்து எவ்வித பங்கமும் இல்லாமல் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்திலேயே, விக்கிரகத் திருமேனியை ஆளுக்கு ஆள் மாற்றி, தோளுக்கு தோள் மாற்றி சுமந்தபடி பயணித்துக் கொண்டிருந்தார்கள் அந்த அடியவர்கள்.

குரு பலம் வேண்டுமா? புளியறைக்கு வாருங்கள் !

சமணர்களின் கண்ணுக்குப் புலப்படாத இடத்தைத் தேடியபடி பயணப்பட்டு, இதோ பொதிகை மலைச்சாரலை அடைந்து விட்டார்கள். ''இங்கிருந்தும் தெற்கே இன்னும் சில கல் தொலைவு நகர்வோம். அங்கே, அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டால், மூர்த்தத்தை மறைத்துவைக்க தோதாக இருக்கும்'' கூட்டத்தில் ஒருவர் சொல்ல, அவர் கருத்தை ஆமோதித்தபடி அடியவர் கூட்டம் இன்னும் வேகமாக நகர்ந்தது.

அப்படி அவர்கள் வந்துசேர்ந்த அந்த வனப்பகுதி மிகச் செழுமையாக இருந்தது. வானுயர்ந்து நிற்கும் ஆல், அரசு முதலான விருட்சங்களும், மூங்கில் கூட்டமும் தளைத்து வளர்ந்திருக்க, பழுத்து நிலம் தொட முயற்சிக்கும் தேன்பலாவும், தெள்ளிய நீர் நிறைந்த சுனைகளும், அதில் கயல்களைத் தேடும் நாரைகளுமாக... கண்ணுக்கு மட்டுமல்ல, அடியவர்களின் உள்ளத்துக்கும் மிகுந்த குளிர்ச்சியையும் ஆசுவாசத்தையும் கொடுத்தது அந்தக் காடு.

கிட்டத்தட்ட வனத்தின் மையப்பகுதியில் பெரியதாக ஒரு புளிய மரம். அதை அவர்கள் கண்ணுற்ற அதே நேரம், வானில்  அந்த மரத்துக்கு நேர் மேலே, சிறகு விரித்து பறந்தபடி வட்டமிட்டது கருடப்பறவை. பயபக்தியுடன் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். நடராஜப் பெருமானை மறைத்துவைக்க உகந்த இடம் அந்த புளிய மரம்தான்; அதற்கான கடவுளின் கட்டளையே இந்த கருட தரிசனம் என்று கருதியவர்கள், அந்த புளிய மரத்தின் பொந்து ஒன்றில் நடராஜ விக்கிரகத்தை மறைத்துவைத்துவிட்டு புறப்பட்டார்கள்!

குரு பலம் வேண்டுமா? புளியறைக்கு வாருங்கள் !

நாட்கள் நகர்ந்தன. அந்த வனப்பகுதிக்குச் சொந்தக்காரரான சிவபக்தர் ஒருவர், மரப் பொந்தில் நடராஜப் பெருமானைக் கண்டு சிலிர்த்துப் போனார். தினமும் வந்து பெருமானுக்கு பூஜைகள் செய்து மகிழ்ந்து வந்தார்.

பல வருடங்களுக்குப் பிறகு, சமணர்களின் ஆதிக்கம் வலுக் குன்றியது. சைவம் தழைத்தோங் கியது. தில்லையில் நடராஜர் இல்லாமல் களையிழந்து போன கோயிலை மீண்டும் பொலிவு பெறச் செய்ய வேண்டும் என்று கருதிய சிவனடியார்கள், முன்பு தாங்கள் மறைத்து வைத்திருந்த நடராஜர் சிலையை திரும்பவும் எடுத்துக் கொண்டு வர நினைத்து பொதிகை மலை வனப்பகுதிக்குப் புறப்பட்டு வந்தனர்.

ஆனால், அவர்கள் எவ்வளவோ முயன்றும் சிலையை மறைத்து வைத்த இடத்தையும் புளிய மரத்தையும் அடையாளம் காண முடியவில்லை. அதனால் அவர்கள் கலங்கித் தவித்த நிலையில் ஓர் அசரீரி: 'சாரை சாரையாகச் செல்லும் எறும்புக் கூட்டத்தைப் பின்தொடர்ந்து திரிகூடாசலத்துக்கு அருகிலுள்ள வேணு வனத்துக்கு செல்க’ என்று ஒலித்தது.

குரு பலம் வேண்டுமா? புளியறைக்கு வாருங்கள் !

அதன்படியே, எறும்புக் கூட்டத்தைப் பின் தொடர்ந்து சென்று வனத்தை அடைந்து, புளியமர பொந்தில் வைத்திருந்த நடராஜர் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு சிதம்பரம் திரும்பினர்.

இந்த நிலையில், தான் தினமும் பூஜித்து வந்த நடராஜப்பெருமானைக் காணாமல் பெரிதும் வருந்தினார் சிவபக்தர். 'இறைவா!  என்னைவிட்டு எங்கு சென்றீர்கள்... என்னைப் பிரியும் அளவுக்கு நான் செய்த பாவம்தான் என்ன?’ என்று புலம்பி கண்ணீர் விட்டார். அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது!

குரு பலம் வேண்டுமா? புளியறைக்கு வாருங்கள் !

அந்த இடத்தில் பூமியைப் பிளந்துகொண்டு சிவலிங்கம் முளைத்தது. சுயம்புவாய்த் தோன்றிய லிங்கத்திருமேனியைக் கண்டு அளவில்லா ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தார் சிவ பக்தர். சிவனாரைப் பலவாறு போற்றித் துதித்தார். அதற்குள்ளாக அந்தச் செய்தி ஊருக்குள்ளும் பரவியது. மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து இறைவனை வணங்கிச் சென்றனர்.

சேர மன்னனுக்கும் தகவல் எட்டியது. பரிவாரங்களுடன் அந்த இடத்துக்கு விஜயம் செய்தான். அகமகிழ, முகமலர சிவனாரைத் தரிசித்து வணங்கியவன், அங்கே ஆலயம் எழுப்பவும் ஆணையிட்டான். அதன்படி, சிவப்பரம்பொருளுக்கு அங்கே அழகியதொரு ஆலயம் எழும்பியது. சதாசிவமூர்த்தி என்ற திருப்பெயருடன் ஈஸ்வரன் கோயில் கொள்ள, அம்பிகை சிவகாமி அம்மையாக எழுந்தருளினாள். புளிய மரத்தின் அறையில் (பொந்துக்குள்) ஸ்வாமியை ஒளித்துவைத்ததால், இந்தத் தலத்துக்கு புளியறை என்று பெயர் ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, கொல்லம் நெடுஞ்சாலையில்... செங்கோட்டையி லிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந் துள்ளது புளியறை. இங்கே அழகியச் சூழலில் அமைந்துள்ளது ஆலயம். பின்னாளில் பாண்டியர்களும் இந்தக் கோயிலுக்கு திருப்பணி கள் செய்ததாக தலவரலாறு சொல்கிறது.

ஸ்வாமியும் அம்பாளும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்க... வேறெந்த தலத்திலும் இல்லாத விசேஷ அம்சமாக, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் இடையே தென்முகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தி. நேர்க்கோட்டில் அமர்ந்து அருள்பாலிக்கும் மூவரையும் ஏக காலத்தில் ஒரே இடத்தில் இருந்தபடி தரிசிக்கலாம் என்பது சிறப்பம்சம்!

அதுமட்டுமா? ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தியின் திருப்பாதத்தின் அருகில் சதுரக்கல் ஒன்றில் ஒன்பது ஆவர்த்த பீடங்கள் கட்டங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. அத்தனைக் கிரகங்களும் தென்முக தெய்வத்துக்குக் கட்டுப்பட்டு இங்கே இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கே வந்து இவரை வழிபட சகல தோஷங்களும் நீங்கும்; தாலி பாக்கியம் கிட்டும், தார தோஷம் நிவர்த்தியாகும், குழந்தைப்பேறு, தொழில் வளம் முதலான சகல வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும், சிவனாருக்கு எதிரிலேயே சிவாம்சத்துடன் இந்த யோக தட்சிணாமூர்த்தி அருள்வதால், வியாழக்கிழமை மட்டுமல்லாது, அனைத்து நாட்களிலும் வந்து இவரை வழிபட்டு வரம்பெறலாம் என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

குரு பலம் வேண்டுமா? புளியறைக்கு வாருங்கள் !

கோயிலின் எதிரில் சடாமகுட தீர்த்தக்கரையில் அரசடி விநாயகர், கோயிலுக்குள் கன்னி மூலை கணபதி, தேவியருடன் முருகப்பெருமான், பைரவர் மற்றும் நாக தெய்வங்களையும் தரிசிக்க முடிகிறது.  இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு, பலநூறு ஆண்டுகளுக்குமுன் இங்கு விஜயம் செய்த அப்போதைய சிருங்கேரி சங்கராச்சார்ய ஸ்வாமிகள், இத்தலத்தை 'சிறிய சிருங்கேரி’ என்று சிறப்பித்துக் கூறியதாக செவிவழித் தகவல் உண்டு என்கிறார்கள்.

சதாசிவ மூர்த்தி சிவாலயத்துக்கு அருகிலேயே நவநீதகிருஷ்ணன் கோயில் அமைந்துள்ளது. சைவவைணவ ஒற்றுமைக்குச் சான்றாகத் திகழும் இந்தச் சிறிய ஆலயம், பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்டதாம்.

குரு பலம் வேண்டுமா? புளியறைக்கு வாருங்கள் !

குருவுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தியைத் தரிசிப்பதுடன், கீதை சொன்ன குருவான கண்ணபிரானையும் தரிசிக்கக் கிடைக்கும் வாய்ப்பு, பக்தர்களுக்கான பெரும்பேறு என்றே சொல்லலாம்!

இத்தகு மகிமைகள் பலகொண்ட இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்துச் சென்றால் சிதம்பரத்தைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்றும், சுமையோடு வருபவர்கள் எல்லாம், ஸ்வாமியைத் தரிசித்ததும் சுகமாய் திரும்பலாம் என்றும் நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள் என்கிறார்கள், உள்ளூர் பெரியவர்கள்.

நாமும் ஒருமுறை புளியறை சென்று சிவனருளாலும், குருவருளாலும் புதுவாழ்வு பெற்று வருவோமே!

படங்கள்: எல்.ராஜேந்திரன்

நட்சத்திர படிகளும்... புண்ணியம் தரும் தீர்த்தங்களும்!

இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு நட்சத்திரங்களே படிக்கட்டுகளாக அமைந்திருப்பதுதான். கோயிலுக்குச் செல்பவர்கள் 27 படிகளைக் கடந்துதான் கோயிலுக்குள் செல்லவேண்டும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நட்சத்திரத்தைக் குறிப்பதாம்.

அனைத்து நட்சத்திரக்காரர்களும், குருவாரமாகிய வியாழக்கிழமைகளில் இங்கு வந்து படிபூஜை செய்து, ஸ்வாமி, அம்பாள் மற்றும் ஸ்ரீ  யோக தட்சிணாமூர்த்தியை மனமுருகி வழிபட்டால், சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

இந்தத் தலத்தில் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. கோயிலின் முகப்பில் (சிவனாருக்கு நேர் எதிரில்) சடாமகுட தீர்த்தமும், கோயிலின் தென்புறம் தட்சிணாமூர்த்திக்கு எதிரே சாஸ்தா குளமும் உள்ளன. இந்த தீர்த்தங்களில் நீராடி, இறைதரிசனம் செய்தால் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை. எனினும், சடாமகுட தீர்த்தத்தில் மட்டுமே பக்தர்கள் நீராட இயலும். சாஸ்தா குளத்தில் சிறிதளவே நீர் இருக்கிறது.

வியாழன் தோறும் காலை 4.30 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடைதிறந்திருக்கும். மற்ற நாட்களில் காலை 6 முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு