மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 6

சத்தியப்பிரியன், ஓவியம்: ஸ்யாம்

9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே? 

ஸ்ரீ விஷ்ணுதர்மத்தில் 97வது அத்தியாயத்தில் இந்த க்ஷத்ரபந்து கதை வருகிறது.

விஷ்ரவதன் என்ற மன்னனின் மகன் க்ஷத்ரபந்து. இவன் மிகவும் துஷ்டன். இவனுடைய உபத்திரவம் தொடரவே, மக்கள் எல்லாம் ஒன்றுதிரண்டு அவனைக் காட்டுக்குத் துரத்திவிடுகிறார்கள்.காட்டிலும் அவனுடைய துஷ்ட குணம் சிறிதும் மாறவில்லை. வழியில் தென்படுபவர்களை எல்லாம் அடித்துச் சித்ரவதை செய்து வந்தான்.

ஆனால், அவனுடைய ஆத்மாவும் முக்தி பெற வேண்டும் அல்லவா? எல்லா ஜீவர்களுக்குள்ளும் அந்தராத்மியாக இருக்கும் பகவானைத் தவிர, வேறு எவரால் அதைத் தீர்மானிக்க முடியும்? க்ஷத்ரபந்து முக்தி பெறும் காலமும் வந்தது.

அந்தக் காட்டில்,  முனிவர் ஒருவர் இருந்தார். அவர், க்ஷத்ரபந்துவின் விநோதமானகோலத்தைக் கண்டார். கைகளில் வில், குறுவாள் போன்ற ஆயுதங்கள்; சிக்குப்பிடித்த கேசம்; துர்நாற்றம் வீசும் மேனியுடன் கூடிய க்ஷத்ரபந்துவைப் பார்த்தார். 'யாரப்பா நீ?' என்றார்.

அவன் அவரிடம் தன் குலத்தையும், தனது அதம குணம் பற்றியும் கூற சற்றும் வெட்கமுறவில்லை. தன்னைப் பற்றிச் சொல்லிவிட்டு, 'சுவாமி, நீர் எதற்கு இந்தக் கொடிய காட்டுக்குள் வந்தீர்?' என்று கேட்டான். 'தாகம் ஏற்படவே, தண்ணீர் கிடைக்குமா எனத் தேடி வந்தேன்' என்றார் முனிவர். க்ஷத்ரபந்து அவரை, அருகில் இருந்த தாமரைக் குளத்துக்கு அழைத்துச் சென்றான். நீர் அருந்தக் குளத்தின் படிக்கட்டில் இறங்கிய முனிவர், கால் வழுக்கி விழுந்துவிட்டார். க்ஷத்ரபந்து அவரைத்

தூக்கி நிறுத்தி, ஆசுவாசப்படுத்தி, மர நிழலில் அமரச்செய்து, நீர் கொண்டு வந்து பருகத் தந்தான். 'இவ்வளவு நல்லவனான உன்னை ஏனப்பா மற்றவர்கள் க்ஷத்ரபந்து என்று அழைக்க வேண்டும்?' என்று கேட்டார் முனிவர்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 6

'காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்ஸர்யம் போன்ற தீய குணங்களின் அடிமை நான். அவற்றை விலக்கி, நான் நல்வழிப்பட ஏதேனும் உபாயம் இருக்கிறதா?' என்று கேட்டான் க்ஷத்ரபந்து.

'இருக்கிறது. மிகச் சிறிய மூன்றெழுத்து மந்திரம் அது. அதனை தினமும் உச்சரித்து வர, படிப்படியாக உன்னுடைய தீய குணங்கள் மறைந்து,

நீ முக்தியடையவாய்' என்றார் முனிவர்.

'அட, அதென்ன மந்திரம்?' என்று வியப்புடன் கேட்டான் க்ஷத்ரபந்து.

'அது உச்சரிப்பதற்குத்தான் எளிய மந்திரம். தியானிப்பது அவ்வளவு சுலபமில்லை' என்று

சொன்ன முனிவர், 'கோவிந்த’ என்ற மந்திரத்தை அவனுக்கு உபதேசித்தார். அவனும் நம்பிக்கை யுடன் அந்த மந்திரத்தை தினமும் தியானம் செய்து, பகவத் கிருபையால் முக்தி அடைந்தான் என்பது கதை. 'அப்படி க்ஷத்ரபந்துவைப்போல நான் மூன்றெழுத்து மந்திரம் சொல்லி  முக்தியடைந் தேனோ? இல்லையே? அப்படி இருக்கும்போது, திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்று சொல்லிக்கொண்டே போகி றாளாம் அந்தத் திருக்கோளூர் பெண்பிள்ளை.

10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே?

கௌதம ரிஷியின் மனைவியான அகலிகை மிகவும் அழகு நிறைந்தவள். அவள்மேல் மோகம் கொள்ளும் தேவர் தலைவன் இந்திரன் அவளை அடைய விரும்பி, கௌதம ரிஷி அவருடைய ஆசிரமத்தில் இல்லாதபோது, அவரைப் போலவே வேடமிட்டு, அவர் குடிலுக்குள் நுழைகிறான்.

இந்தக் காட்சி மயக்கத்தை அல்லது தோற்றப் பிழையை, அகலிகை படலத்தின் ஆரம்பப் பாடல்களிலேயே குறிப்பால் உணர்த்திவிடுகிறார் கம்பர். 'வயல்களில் அப்போதுதான் தூங்கி எழும் நாரைகள், வயலில் வேலைசெய்யும் பெண்களுடைய கண்களின் அசைவு கண்டு, அவற்றைக் கயல்மீன்கள் என எண்ணி, கொத்திச் செல்ல வருகின்றன. அருகில் வந்ததும், அவை பெண்களின் கண்கள் என அறிந்து ஏமாறித் திரும்புகின்றன.’ (பால காண்டம்  அகலிகைப் படலம் 457வது பாடல்)

இப்படியான பாடல்கள் மூலம், உருமாறி வந்த இந்திரனை வெளியில் விரட்டாமல், உள்ளே அனுமதித்த அகலிகையின் செயலுக்கு ஒருவகை நியாயம் கற்பிக்கிறார் கம்பர்.

மிதிலை நகரின் மதிலுக்கு அப்பால் உள்ள ஒரு வெட்டவெளியில், மாதவன் கௌதமனின் பத்தினி ஒரு கருங்கல்லாகக் கிடப்பதை ராமன் காண்கிறான். இங்கே கம்பர், 'மாதவப் பன்னி’ என்ற பதத்தைப் பிரயோகிக்கிறார். 'பன்னி’ என்பது பத்தினி என்பதன் திரிபு. அப்போதே, அவள் பத்தினி என்ற நற்சாட்சிப் பத்திரத்தை ராமன் கொடுத்துவிடுகிறார்.

'கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்  துகள் கதுவ

உண்ட பேதைமை மயக்கு ஆற வேறுபட்டு உருவம்

கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப

பண்டை வண்ணமாய் நின்றனள்’ என்கிறார் கம்பர். 'உண்ட பேதைமை மயக்கு அற’ எனும் போது, இன்னும் தெளிவாக அவளுடைய பழைய பேதைமை மறைந்துவிட்டது என்கிறார்.

காலில் உள்ள தூசி பட்டதும் ஒரு கல் பெண் ணாகி நின்றால், பதறிப்போய் அந்த அதிசயம் குறித்து ராமன் காரணம் கேட்க வேண்டாமா? ஆனால், விசுவாமித்திரர் தாமே அதற்குப் பதில் சொல்வதாகக் கூறுகிறார் கம்பர். ஒரே வரிதான் ஆனாலும், ஒரு பெரிய சரித்திரத்தையே உள்ளடக்கிய வார்த்தைகள் அவை. 'தீவினை நயந்து செய்த தேவர்கோன் தனக்குச் செங்கண் ஆயிரம் அளித்தோன் பன்னி; அகலிகை ஆகும்’ என்றான். 'இழிசெயலைச் செய்த இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் சாபமளித்த கௌதமனின் பத்தினி அகலிகை’ என்பதே இதன் பொருள்.

பெண்ணான அகலிகை தள்ளி நிற்கிறாள். உடல்மொழி என்ற ஒன்று ஒருவரின் இயல்பைக் கூறும் அல்லவா? அந்த உடல்மொழியை அறிந்து கொள்ளும் ராமன், 'இது பழவினை காரணமா? அன்னையைப் போன்ற தோற்றமுடைய இவளுக்கு இது எவ்வாறு நிகழ்ந்தது?’ என்று கேட்கிறான்.

விசுவாமித்திரர் அப்போதுதான் அகலிகையின் கதையைக் கூறுகிறார். 'ரிஷி உருவில் இந்திரன் ஏமாற்றினாலும், பின்பு அவன் தன் கணவன் இல்லை, இந்திரன் என்பது தெரிந்தும், அவனை விலக்காமல் அந்தச் செயலில் இருந்தாள்’ என்கிறார் கம்பர். வால்மீகியிடமிருந்து வாங்கி தமிழில் எழுதும்போது, அனைத்தையும் மாற்றும் உரிமை கம்பனுக்கு இல்லை. ஆனால், வால்மீகி தன்னுடைய கூற்றாகவே அகலிகையை மிக மோசமானவளாக ஏசுகிறார். ஆனால், கம்பர் இந்த விஷயத்தில் நுணுக்கமான வேலை ஒன்றைச் செய்கிறார். 'தகாது அன்று என்ன ஓராள்’ என்னும்போது, அது விசுவாமித்திரரின் கூற்றாகிவிடுகிறது.

ராமன் கூறும்போது, 'அன்னையே அனையாட்கு இவ்வாறு அடுத்தவாறு அருளுக!’ என்கிறான். 'தாயைப் போல தோன்றும் இவள்’ என்று ராமன் சொல்லும்போது, ராமனை உயர்த்துவதோடு அகலிகையையும் கம்பர் உயர்த்திவிடுகிறார். கௌதமரின் வாய்மொழியாக அகலிகைக்கு மாசு கற்பித்த கம்பர், விசுவாமித்திரரின் வாய்மொழியாக 'நெஞ்சினால் பிழைப்பு இலாளை’ என, அகலிகையைக் குற்றமற்றவள் என்று கூறிவிடுகிறார். இல்லையென்றால்...

'இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;

இனி இந்த உலகுக்கு எல்லாம்

உய்வண்ணம் அன்றி, மற்று ஓர்

துயர் வண்ணம் உறுவது உண்டோ?

மை வண்ணத்து அரக்கி போரில்,

மழை வண்ணத்து அண்ணலே! உன்

கை வண்ணம் அங்குக் கண்டேன்;

கால் வண்ணம் இங்குக் கண்டேன்’

என, இத்தனை வண்ணங்கள் சேர்த்து ஓர் ஓவியம் தீட்டியிருப்பாரா கம்பர்?

'அப்படிப்பட்ட அகலிகையைப் போல ராமனின் அடித்துகளைப் பெறும் பேறு பெற்றவளா நான்? இந்தத் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்று கேட்கிறாள் அந்தப் பெண்பிள்ளை.

ரகசியம் வெளிப்படும்