ஸ்ரீ சாயிநாதரை தன்னுடைய இஷ்ட தெய்வமான சிவபெருமானாக எண்ணி வழிபட்டு வந்த மேகா, தன்னுடைய கனவில் சாயிநாதர் தோன்றி, தன்மேல் அட்சதை தூவி ஆசீர்வதித்து, திரிசூலம் வரையுமாறு சொன்னது உண்மைதானா என்று பாபாவிடம் கேட்டார். 

''அதில் என்ன சந்தேகம் உனக்கு? உன்னை திரிசூலம் வரையச் சொன்னது உண்மைதான். நான் எதையுமே தேவையில்லாமல் சொல்வதில்லை. என்னுடைய வார்த்தைகளும் எப்போதும் வீண்போவதே இல்லை. நான் எங்கும் இருப்பேன். எனவே, நான் உன்னிடம் வருவதற்கு வாசல் கதவுகள் திறந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.'' என்றார் பாபா.

பாபாவின் வார்த்தைகளை வேதவாக்காக எண்ணும் மேகா, உடனே தான் தங்கி இருந்த இடத்துக்குச் சென்று, பாபா சொன்னதுபோலவே சுவரில் திரிசூலத்தின் படம் வரைந்து வழிபட்டார். மறுநாள், பூனாவில் இருந்து வந்த பக்தர் ஒருவர், பாபாவுக்கு ஒரு சிவலிங்கத்தை அளித்தார். அப்போது அங்கே வந்த மேகாவிடம் பாபா அந்த சிவலிங்கத்தைக் கொடுத்து, ''உன்னுடைய இஷ்ட தெய்வமான சிவபெருமான் உன்னிடம் வந்திருக்கிறார். நீ அவருக்குப் பணிவிடை செய்'' என்றார். பரவசத்துடன் அதைப் பெற்றுக்கொண்ட மேகா, தினமும் அதை  பயபக்தியுடன் பூஜித்து வந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சில வருடங்களுக்குப் பிறகு மேகா மறைந்தபோது, ''மேகா என்னுடைய உண்மையான பக்தன்'' என்றார் பாபா, தம்மைச் சுற்றி இருந்தவர்களிடம். மேகாவின் உள்ளம் பரிசுத்தமாக இருந்தபடியால்தான், பாபாவின் பரிபூரண அன்பும் அருளும் அவருக்குக் கிடைத்தது.

மகான்களின் வார்த்தைகளுக்கு மிகுந்த சக்தி உண்டு. அவை நியதிக்கு மாறாக இருந்தாலும், அவற்றில் நம்பிக்கை கொண்டு நடந்தால், எந்த ஒரு ஆபத்தும் நம்மை நெருங்காது. அப்படிப் பல நிகழ்ச்சிகள் பாபாவின் பக்தர்களின் வாழ்க்கையில் நடந்திருக்கின்றன. இங்கே ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

ஸ்ரீ சாயி பிரசாதம் - 17

பாபாவின் பக்தரான காகா சாஹேப் என்பவர், அடிக்கடி ஷீர்டிக்குச் சென்று, சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து பாபாவை தரிசிப்பது வழக்கம். அப்படி ஒருமுறை அவர் ஷீர்டிக்குச் சென்றிருந்தபோது, கடுமையான ஜுரம் கண்டு கஷ்டப்பட்டார். அதுபற்றி ஷாமா, பாபாவிடம் சொன்னபோது, ''என்னிடம் எதற்குச் சொல்கிறாய்? நான் என்ன டாக்டரா? அவன் விலேபார்லேயில் இருக்கும் அவனுடைய வீட்டுக்குப் போகட்டும்'' என்று சொன்னதுடன், உதி கொடுக்கவும் மறுத்துவிட்டார் பாபா.

''உம்மிடம் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கும் அவருடைய ஜுரத்தைப் போக்குவது உங்கள் கடமை இல்லையா?'' என்று ஷாமா மன்றாடிக் கேட்டபோதும், பாபா சற்றும் மனம் இரங்கவில்லை. முன் சொன்ன வார்த்தைகளையே திரும்பவும் சொன்னார். ஷாமா வேறு வழியின்றி, காகா சாஹேபிடம் சென்று, பாபா சொன்னதைக் கூறினார். பாபா சொன்ன வார்த்தைகளை எப்போதுமே மீறாத காகா சாஹேப், உடனே வீட்டுக்குச் செல்ல முடிவு செய்து, பாபாவிடம் விடைபெறச் சென்றார். ''கவலைப்படாமல் வீட்டுக்குப் போ. வந்த ஜுரம் தானாகவே போய்விடும். அதுவரை, படுக்கையில் படுக்காமல், நடமாடிக்கொண்டிரு. பாதாம், பிஸ்தா, ஸீரா (ரவா கேசரி) சாப்பிட்டுக் கொண்டிரு'' என்று சொல்லி, உதி பிரசாதம் கொடுத்து அவருக்கு விடை கொடுத்தார் பாபா. துணைக்கு ஷாமாவையும் உடன் அனுப்பினார்.

நள்ளிரவுக்கு மேல் வீட்டுக்கு வந்த காகா சாஹேபைப் பார்த்த அவருடைய உறவினர்கள், 'ஷீர்டிக்குப் போனால் உடனே திரும்பி வரமாட்டாரே! இந்தமுறை, உடனே வந்துவிட்டாரே’ என்று நினைத்து, திகைத்துப் போனார்கள். மறுநாள் காலையில், பாபா சொன்னதுபோலவே பாதாம், பிஸ்தாவுடன் ரவா கேசரியும் உண்டார் அவர். அதன் காரணமாக, அவருடைய ஜுரம் அதிகரித்தது. அதனால் கவலை அடைந்த அவருடைய மனைவி, குடும்ப மருத்துவரை வரவழைத்தாள். அவர் காகா சாஹேபின் உடலைப் பரிசோதித்துப் பார்த்து, உரிய மருந்துகளைக் கொடுத்ததுடன், நடமாடாமல் படுக்கையிலேயே சில காலம் படுத்து பூரண ஓய்வு எடுக்கவேண்டும் என்று கூறிச் சென்றார்.

ஸ்ரீ சாயி பிரசாதம் - 17

ஆனால், காகா சாஹேப், பாபா சொன்ன படியே நடந்தார். இதனால், அவருடைய ஜுரம் மேலும் அதிகமாகிவிட்டது. காகா சாஹேபின் பிடிவாதத்தைக் கண்ட உறவினர்கள், 'யாரோ பக்கிரி ஒருவரின் வார்த்தைகளை நம்பி உயிருக்கே ஆபத்து ஏற்படுத்திக்கொள்கிறாரே இவர்’ என்று அவரைக் குறித்துக் கவலைப்பட்டனர். ''நீங்கள் பாபாவின் வார்த்தைகளைத்தான் கேட்பீர்கள் என்றால், நான் வெட்டியாக எதற்கு இங்கே இருக்கவேண்டும்?'' என்று டாக்டரும் கோபித்துக்கொண்டு போய்விட்டார். ஆனாலும், அவரோ உறவினர்களோ சொன்னதைக் கொஞ்சம்கூடப் பொருட்படுத்தாமல், பாபா சொன்னபடியே நடந்துகொண்டார் காகா சாஹேப். அடுத்த ஒன்பதாவது நாளில் அவருடைய ஜுரம் நீங்கி, பூரண நலம் அடைந் தார். சில தினங்களுக்குப் பிறகு, காகா சாஹேப் ஷீர்டிக்குச் சென்றபோது அவரிடம் பாபா, ''என்ன, உன் உறவினர்களும் மருத்துவரும் என்னைப் பைத்தியக்காரப் பக்கிரி என்று சொன்னார்களா?'' என்று கேட்டுச் சிரித்தார்.

இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் ஓர் ஆன்மிகத் தத்துவம் இருக்கிறது. நாம் எப்போதும் நம்முடைய குருநாதரின் அருகிலேயே இருந்தால்தான், நம்முடைய துன்பங்களுக்கு ஒரு விடிவுகாலம் வரும் என்பதாக நம்மில் பலருக்கும் ஓர் அபிப்பிராயம் உண்டு. ஆனால் உண்மையில், நாம் நம்முடைய குருநாதரை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும்கூட, அவருடைய அருளானது நம்முடைய துன்பங்கள் அனைத்தையும் இல்லாமல் செய்துவிடும். இந்தத் தத்துவத்தை காகா சாஹேப் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பாபா அப்படி ஓர் அருளாடலை நிகழ்த்தினார்.

தேசத்தின் விடுதலையைப் பற்றிய பேச்சு, ஒருமுறை சாயிநாதரின் முன்னிலையில் நடைபெற்றது. 'அதற்கென ஒருவன் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டான். அவன் வரும்வரையில் நீங்கள் அமைதியாக இறைவனைப் பிரார்த்தனை செய்துகொண்டு இருங்கள்’ என்று கூறி, அவர்களை அமைதிப் படுத்தினார் பாபா. இந்தச் சம்பவம் குறித்து, கவியோகி சுத்தானந்த பாரதியார் குறிப்பிட்டிருக் கிறார்.

இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மகாத்மா காந்தி தேர்ந்தெடுக்கப்படுவதற்குச் சில வருஷங்களுக்கு முன்பு, அதாவது 1916ம் வருஷ இறுதியில் நடைபெற்றது அந்தச் சம்பவம்.

லக்னோவில் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.   பாலகங்காதர திலகர், பண்டிட் மதன்மோகன் மாளவியா போன்றோருடன் சுத்தானந்த பாரதியார் பேசிக் கொண்டிருந்த வேளையில், ஒரே இரைச்சலாக இருந்தது. ''இத்தகைய இரைச்சலால் நமக்குச் சுதந்திரம் கிடைத்துவிடப் போகிறதா என்ன?'' என்று சுத்தானந்த பாரதி இந்தியில் சொல்ல, ''எப்படி சுதந்திரம் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டார் திலகர்.

அதற்கு, ''மகான்களின் அருளாசிகளால் மட்டுமே அது சாத்தியப்படும்'' என்றார் கவியோகி. ''அப்படி ஒரு மகான் இருக்கிறாரா?'' என்று திலகர் கேட்டபோது, ''ஆம், ஷீர்டியில் இருக்கிறார். அவர்தான் சாயிபாபா'' என்றார் கவியோகி.

பின்பு, திலகர் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஷீர்டி சாயிநாதரை தரிசிக்கச் சென்றார். 'என்ன, இரைச்சலால் சுதந்திரம் கிடைத்துவிடப் போகிறதா?’ என்ற கவியோகியின் கேள்வியுடனே ஒரு புன்னகையோடு அவர்களை வரவேற்றார் சாயிநாதர். அதைக் கேட்டுப் பெரிதும் வியப்புற்ற திலகர், ''தேசம் விடுதலை பெறுவது எப்போது?'' என்று விநயத்துடன் கேட்டார்.

''அதற்கென ஒருவன் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டான். விரைவில் அவன் தன்னுடைய கடமையை நிறைவேற்ற வருவான். அதுவரை மௌனமாக உங்களுடைய கடமைகளைச் செய்துகொண்டிருங்கள். தியாகங்கள் ஒருபோதும் வீண்போவதில்லை'' என்றார் பாபா.

பின்னர், மகாத்மா காந்தி விடுதலை இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்ததும், அவருடைய அகிம்சைப் போராட்டத்தின் மூலம் தேசம் விடுதலை பெற்றதும் நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான்.

ஸ்ரீ சாயிநாதரின் நாமாவளிகளில்...

'ஓம் யோக க்ஷேமாய நம:’ என்ற நாமாவளியும் ஒன்று.

'அனுதினமும் என்னையே நினைத்துச் சரணடைபவர்களின் யோக க்ஷேமத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்’ என்னும் பகவான் கிருஷ்ணரின் கீதை மொழியை நினவுறுத்துவதுபோல் அமைந்திருக்கும் இந்த நாமாவளியின் பின்னணியில், தம்மையே சரணம் என்று உறுதியாகப் பற்றிக்கொண்ட ஒரு பக்தருக்காக, பாபா ஒரு சேவகனாகவும் உருமாறிச் சென்று அருள் புரிந்திருக்கிறார்.

அந்த அற்புத அருளாடல்...

பிரசாதம் பெருகும்