Published:Updated:

பிரம்ம முகூர்த்தத்தில்... பிரம்மன் தரிசனம்!

பிரம்ம முகூர்த்தத்தில்... பிரம்மன் தரிசனம்!

பிரம்ம முகூர்த்தத்தில்... பிரம்மன் தரிசனம்!

பிரம்ம முகூர்த்தத்தில்... பிரம்மன் தரிசனம்!

Published:Updated:
பிரம்ம முகூர்த்தத்தில்... பிரம்மன் தரிசனம்!
பிரம்ம முகூர்த்தத்தில்... பிரம்மன் தரிசனம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சை
வமும் வைணவமும் கைகோத்த நிலையில் உள்ள திருத்தலங்கள் உண்டு. அதாவது, ஒரே ஆலயத்தில் ஹரியும் சிவனும் திருக்காட்சி தரும் ஆலயங்கள் ஏராளம். இவர்களுடன் நான்முகனும் சேர்ந்து அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று உள்ளது! ஈசன், பெருமாள், பிரம்மா என மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் அந்த அற்புதத் தலம்... உத்தமர்கோவில்!

108 திவ்விய தேசங்களில் ஒன்று; திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்; சிவனாரின் 63 திருக்கோலங்களில் ஒன்றான, பிட்சாடனராக அருள் பாலிக்கும் ஆலயம் எனப் பெருமைகள் பல கொண்டது உத்தமர்கோவில் திருத்தலம்.

அதுமட்டுமா?! ஸ்ரீபிரம்ம குரு, ஸ்ரீவிஷ்ணு குரு, ஸ்ரீசிவகுரு, ஸ்ரீசக்தி குரு, ஸ்ரீசுப்ரமணிய குரு, ஸ்ரீதேவ குரு பிரகஸ்பதி, ஸ்ரீஅசுரகுரு சுக்கிராச்சார்யர் ஆகிய ஏழு குரு பகவான்களும் சப்த குருமார்களாகக் காட்சி தரும் ஒப்பற்ற தலமும் இதுவே! விமானத்துடன் கூடிய தனிச் சந்நிதியில் காட்சி தந்து, தன்னை நாடி வரும் அன்பர்களின் வாழ்வில் ஒளியேற்றுகிறார் ஸ்ரீபிரம்மா. இவரைப் போலவே தனிச் சந்நிதியில், ஸ்ரீஞானசரஸ்வதியும் காட்சி தருகிறாள்.

இத்தனைப் பெருமைகளையும் ஒருங்கே கொண்ட உத்தமர்கோவில், திருச்சியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள பிச்சாண்டார்கோவில் எனும் ஊரில், கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் எழிலார்ந்த சூழலில் அமைந்துள்ளது.

விஷ்ணுவும் பிரம்மாவும் சிவனாரின் அடி- முடி தேடிச் சென்ற கதை தெரியும்தானே?! அப்போது, 'அன்ன வாகனத்தில் சென்று, முடியைக் கண்டுகொண்டேன்’ என்று பிரம்மன் பொய் சொல்ல... அதற்குத் தாழம்பூவும்  'ஆமாம்’ என்று பொய்சாட்சி சொல்ல... அன்று முதல்,  பிரம்மனுக்குத் தனிக் கோயில்கள் இல்லை, தாழம்பூவுக்கு பூஜையில் இடமில்லை எனச் சபித்தார், சிவனார். 'பிழையைப் பொறுத்தருளுங்கள் ஸ்வாமி’ என பிரம்மன் மன்னிப்புக் கேட்க... 'ஆலயங்களில் பத்து நாட்கள் நடை பெறும் பெருந் திருவிழாக்கள், பிரம்மோத்ஸவம் என உன் பெயரில் நடைபெறும்’ என அருளினார். அத்துடன், கோயில் கருவறையின் கோஷ்டப் பகுதியில், பிரம்மனுக்கு இடமளித்தார் சிவபெருமான்.

சரி... ஆலயங்களில் கோஷ்டத்தில் உள்ள பிரம்மா, இங்கு மட்டும் எப்படித் தனிச் சந்நிதியில் கோயில் கொண்டிருக்கிறார்?!

பிரம்ம முகூர்த்தத்தில்... பிரம்மன் தரிசனம்!

திருமாலின் நாபிக்கமலத்தில் இருந்து தோன்றியவர் பிரம்மா. அவரின் கட்டளைப் படி, பகவானின் பெருமைகளை அனைத்துலகுக்கும் எடுத்துச் சொல்லி வந்த பிரம்மா, தன்னுடைய சத்யலோகத்தில் திருமாலை வைத்து பூஜித்து வந்தார். பக்தர்களைச் சோதிப்பதில் பிரியம் கொண்ட திருமால், பிரம்மனை மட்டும் விட்டுவிடுவாரா?!

சத்யலோகத்தில் இருந்து கிளம்பி, கதம்பவனத்துக்கு வந்து ஒளிந்துகொண்டார் திருமால். பேரருளாளனைக் காணாமல் தவித்தார் பிரம்மா. எங்கெல்லாமோ தேடினார்; இறுதியில், கதம்ப வனத்துக்கு வந்தார். அங்கேயுள்ள கதம்ப மரம் ஒன்றுக்குள் திருமால் ஒளிந்திருப்பதை அறிந்தவர், நெக்குருகிப் போனார். 'பெருமாளே! உனக்குக் கைங்கர்யம் செய்து எத்தனை நாளாயிற்று?!’ என்றபடி, கமண்டல நீரால் அந்த மரத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். அதில் நெகிழ்ந்த திருமால், பிரம்மனுக்குக் காட்சி தந்தருளினார்; அத்துடன், இழந்த படைப்புத் தொழிலையும் பிரம்மனுக்கு வழங்கினார்.  

பிரம்ம முகூர்த்தத்தில்... பிரம்மன் தரிசனம்!

அந்தக் கதம்பவனமாகத் திகழ்ந்த பகுதியே, பிச்சாண்டார்கோவில் எனும் கிராமமாகவும், கதம்ப மரத்தில் பெருமாள் குடிகொண்டிருந்த இடமே உத்தமர் கோவிலாகவும், இன்றைக்கு அருள்பாலிக்கும் தலமாக விளங்குகிறது. பெருமாளுக்கு நடைபெறும் நித்தியப்படி பூஜைகளைக் கண்ணுற்று, அகம் மகிழ்வதற்காகவே ஸ்ரீபிரம்மனும் இங்கேயே தங்கிவிட்டதாகச் சொல்கிறது புராணம். அத்துடன், இந்தத் தலத்துக்கு வந்து, சிவனாரையும் விஷ்ணுவையும் வணங்கும் பக்தர்களுக்குச் சுபிட்சத்தை வழங்குகிறார் ஸ்ரீபிரம்மன்.  

அழகிய ஆலயம்; சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த திருத்தலம். பிரம்மன் அபிஷேகித்த நீரிலிருந்து குளம் ஒன்று உருவானது. இதன் கரையில் முனிவர் ஒருவர், மும்மூர்த்தியரையும் தம்பதி சமேதராக காட்சி தர வேண்டும் என்று கடும் தவமிருந்தார்.

அவருடைய தவத்தில் மகிழ்ந்த மும்மூர்த்தியரும் தங்களின் தேவியருடன் இங்கு திருக்காட்சி தந்தருளினர் என்கிறது ஸ்தல புராணம். இந்தத் தீர்த்தக் குளம் 'கதம்ப புஷ்கரணி’ எனப் போற்றப்படுகிறது.

நான்கு வேதங்களுக்கு அதிபதியாக, ஜடாமகுடத்தைச் சூடியவராக, ஆபரணங்களை அணிந்தவராக இடது கையில் கமண்டலம், வலது கரத்தில் ஜபமாலையுடன், அன்ன பட்சி வாகனத்தில், தாமரை மேல் அமர்ந்த நிலையில், பக்தர்களுக்கு அருளையும் பொருளையும் அள்ளித் தருகிறார் ஸ்ரீபிரம்மா!  

மார்கழி மாத நன்னாளில், பிரம்ம முகூர்த்த வேளையில், பிரம்மனைத் தரிசிப்பது கூடுதல் பலனைத் தரும் என்பர். ஆகவே, பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலையில், சூரிய உதயத்துக்கு முந்தைய வேளை யில், உத்தமர்கோவிலுக்கு வந்து ஸ்ரீபிரம்மனுக்கு முல்லைப்பூ மாலையும் மஞ்சள் வஸ்திரமும் சார்த்தி வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும்; வியாபாரம் செழிக்கும்; இல்லறம் சிறக்கும் என்பது ஐதீகம்!

குறிப்பாக, பிரம்மகுருவுக்கு உகந்த வியாழக்கிழமையன்று, பிரம்ம முகூர்த்தத்தில் பிரம்மனை வழிபட்டால், குழந்தைகள் கல்வி- கேள்வியில் சிறந்து விளங்குவர்.

தவிர, பிரம்மனுக்கு இடப்புறச் சந்நிதியில், கையில் வீணைக்குப் பதில் ஏட்டுச்சுவடியும் ஜப மாலையும் ஏந்தி, அபய- வர முத்திரையுடன், தெற்கு நோக்கிக் காட்சி தரும் ஸ்ரீசரஸ்வதியையும் வணங்கி வழிபடுங்கள்.  

இங்கு திருமாலின் திருநாமம்- ஸ்ரீபுருஷோத்தமர். தாயார்- ஸ்ரீபூர்ணவல்லித் தாயார். இவர்களை வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் பெறலாம்; இதேபோல், பிட்சாடனராகக் காட்சி தரும் சிவனாரையும், ஸ்ரீசௌந்தர்யநாயகியையும் வணங்கினால், உணவுக்குக் குறைவிருக்காது; விளைச்சல் செழிக்கும்; காடு- கரை நிறையும்; வீட்டில் நிம்மதி நிலைக்கும்.

பிரம்மனை வணங்கினால், கல்வியும் ஞானமும் கிடைக்கப் பெறலாம்!

- இ.லோகேஸ்வரி
படங்கள்: செ.சிவபாலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism