மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 7

சத்தியப்பிரியன், ஓவியம்: ஸ்யாம்

11. பிஞ்சாய்ப் பழுத்தேனோ 

ஆண்டாளைப் போலே?

சைவ நெறியில் பிஞ்சாய்ப் பழுத்தவர் திருஞான

சம்பந்தர். மூன்று வயதில் பாலுக்கு ஏங்கி அழ, அம்பிகை சமேதராகத் தோன்றிய சிவபெருமா னின் தரிசனம் பெற்றதுடன், அம்பிகை புகட்டிய ஞானப்பாலைப் பருகும் பேற்றினையும் அவர் பெற்றது நாம் அறிந்த விஷயம்.

ஸ்ரீ வைஷ்ணவத்தில் பிஞ்சாய்ப் பழுத்தவள் ஆண்டாள். மணவாள மாமுனிகள் தமது உபதேச ரத்ன மாலையில்,

அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்

தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய்  பிஞ்சாய்ப்

பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்

வழுத்தாய் மனமே மகிழ்ந்து.

என்று பாடுகிறார்.

வேதம் ஸ்ரீ வைஷ்ணவர்கட்கு இன்றியமையாத ஒன்று. அதேபோன்று திராவிட வேதம் என்று போற்றப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தமும் அவர்களுக்கு முக்கியமானது.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 7

பன்னிரண்டு ஆழ்வார்கள் பல்வேறு காலங் களில் அருளிச் செய்த நாலாயிரம் பாசுரங்கள் பின்னாளில் நாதமுனி எனப்படும் வைணவ ஆச்சாரியரால் தொகுக்கப்பட்டது. இந்த திராவிட வேதத்துக்கு அத்தியயன காலம், அனத்தியயன காலம் என இரண்டு உண்டு. அதாவது, இந்த இந்தப் பாசுரங்களை இந்த இந்தக் காலத்தில்தான் பாட வேண்டும் என்று விதிமுறை. அனத்தியயன காலங்களில் அந்தப் பாசுரங்களை பாராயணம் செய்வதற்கு பதிலாக பூர்வாச்சாரியார்கள் எழுதிவைத்துள்ள தனியன்களைப் பாராயணம் செய்யலாம். இது வைணவர்களுக்கு உள்ள முக்கியமான விதி. ஆனால், ஆண்டாள் எழுதிய திருப்பாவைக்கு அப்படி அனத்தியயன காலம் கிடையாது என்ற ஒன்றே அவளுடைய பாசுரங்களின் சிறப்பைக் காட்டும்.

மற்ற ஆழ்வார்களுக்கு இல்லாத பல சிறப்புகள் ஆண்டாளுக்கு உண்டு. மற்ற பத்து ஆழ்வார்களுக்கு (மதுரகவியாழ்வார் கணக்கில் வர மாட்டார் என்பதால், மொத்தம் பத்து ஆழ்வார்கள் ஆண்டாள் தவிர்த்து என்க). நடுவில் ஆண்டாள் ஒருத்திதான் பெண்ணாக அவதரித்தவள். எனவே அவளுக்கு செல்வாக்கு அதிகம்.

ஆண்டாள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் அயோநிஜையாக துளசிச் செடியின் கீழே விஷ்ணுசித்தர் என்றழைக் கப்படும் பெரியாழ்வாரின் திருக்குமாரத்தியாக அவதரித்தாள். பூமாதேவியின் அம்சமாக பிறந்த தாக ஐதீகம். பெரியாழ்வார் அந்த ஊரில் மிக உன்னதமான பட்டர் குலத்தில் தோன்றியவர்.

வாழாட்பட்டு நன்றீ ருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும்கொண்மின்

கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்

ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை

பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

என்ற திருப்பல்லாண்டு பாசுரத்தில், ஏழு தலைமுறைகளாக அவர்கள் எம்பெருமானுக்கு சேவை செய்து வந்தவர்கள் என்பதைக் கூறுகின் றார். எனவே, அந்த ஏழு குடியின் புண்ணியமும், பெருமையும், பாண்டித்யமும் ஆண்டாளுக்குத் தானே வந்து சேர்கின்றன.

பெண்களின் பருவங்களை ஏழு நிலைகளாகப் பிரிக்கலாம். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண். ஐந்தாம் வயதில் இருந்து ஏழாம் வயது வரையில் பேதை; எட்டாவது வயதில் இருந்து பன்னிரண்டாம் வயது வரையில் பெதும்பை, பதின்மூன்றாம் வயது மட்டும் மங்கை எனப்படும். பதினாலாவது வயதில் இருந்து பத்தொன்பதாவது வயது வரை யிலும் மடந்தை எனப்படும். இருபது வயதில் இருந்து இருபத்தைந்து வயது வரையில் அரிவை, இருபத்தாறு வயதில் இருந்து முப்பத்திரண்டு வயது வரையில் தெரிவை. அதன் பிறகு பேரிளம் பெண். ஆண்டாள் இந்த நிலையில் பேதை பருவத்தைச் சேர்ந்தவள்.

பகவத் விஷயங்களை வளர்த்துக்கொள்வதில் நமக்கு ஏழு நிலைகள் உள்ளன.

அபிலாஷை, சிந்தனை, அனுஸ்ம்ருதி, இச்சா, ருசி, பரபக்தி, பரமபக்தி என்ற ஏழு நிலைகள். ஒரு வஸ்துவைப் பார்த்தவுடன் அதன் மேல் ஏற்படும் விருப்பம் அபிலாஷை எனப்படும். அதன்பிறகு வேறோர் இடத்தில் வேறொரு காலத்தில்

மீண்டும் இந்த வஸ்துவைப் பற்றிய நினைப்பு வருவதற்குப் பெயர் சிந்தனை. இந்தச் சிந்தனை அதிக நேரம் நீடிக்காது. அதற்கு அடுத்து அந்த வஸ்துவைக் குறித்து தொடர் சிந்தனையோட்டம் ஏற்படும் நிலைக்கு அனுஸ்ம்ருதி என்று பெயர். அனுஸ்ம்ருதி தொடருமானால், அந்த வஸ்துவின் மேல் இச்சை ஏற்படும். இச்சை நிலைக்குப் பிறகு, அந்த வஸ்துவை அடைய வேண்டும் என்ற எண்ண நிலைக்கு ருசி என்று பெயர். இந்த நிலையில்தான் எம்பெருமானுடன் கூடியிருக்க வேண்டும் என்ற நினைப்பு அதிகரிக்கும். இறைவனுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்ற இன்பநிலையான சேர்க்கையும் இந்த எம்பெருமானைப் பிரிந்திருக்கவேண்டிய துன்ப நிலையான பிரிவும் சேர்ந்தது பரபக்தியாகும். எம்பெருமானுடன் ஒன்றாகக் கலந்து வைகுண்டத்தில் பதவி வகிக்கும் நிலையே பரமபக்தி.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 7

இந்த ஏழு நிலைகளும் ஒரு பெண்ணின் தன்மையிலிருந்தே ஸ்ரீ வைஷ்ணவத்தில் பேசப்படுகிறது. ஆண்டாள் பேதைப் பருவத் திலேயே ஆண்டவனுடன் கலக்கும் ஏழு நிலைகளையும் அடைந்துவிடுகிறாள். எம்பெருமானின் வாத்சல்யம் அவளை எவ்வித பிரயத்தனமும் இன்றி உத்தாரணம் செய்துவிடுகிறது.

ஆண்டாள் ஏற்கெனவே வராகப் பெருமானால் உத்தாரணம் பண்ணப்பட்ட பூமித் தாயார் அல்லவா? இறைவன் அவளுடைய பயத்தைப் போக்கி, அவளை மடியில் இருத்தி வேதங்கள் அனைத்தையும் ஓதுகிறார். அப்போது தாயாருக்கு ஒரு சந்தேகம் வருகிறது. வேதம் அத்தனையையும் கற்றுக்கொண்டு, பரம்பொருளைக் கண்டுபிடித்து, எம்பெருமானை அடைவதற்கு ஜீவன் மிகவும் சிரமப்பட வேண்டுமே என்ற சந்தேகம். எனவே, எம்பெருமானின் ஆக்ஞைப்படி அவள் கோதை நாச்சியாராக பூவுலகில் பிறந்து, நான்கு வேதத்துக்கும் நிகரான திருப்பாவையை படைக்கிறாள். பூமிபிராட்டியை அதிகம் தவிக்கவைக்காமல் உத்தாரணம் பண்ணிய பெருமாளே, ஆண்டாளையும் மிகச் சிறு வயதிலேயே ஞானம் அடையவைத்து, திருப்பாவை என்ற வேதத்தின் சாரத்தை நமக்கு அளித்துவிட்டு, உத்தாரணம் செய்துவிட்டான்.

அப்படிப்பட்ட ஆண்டாளைப் போல் சிறுபிராயத்திலேயே ஞானம் பெற்று எம்பெருமானை அடையவில்லை என்பதையே, 'பிஞ்சாய் பழுத்தேனோ ஆண்டாளைப் போல?’ என்று கேட்கிறாள் அந்தத் திருக்கோளூர் பெண்பிள்ளை.

ரகசியம் வெளிப்படும்