ன்னை நம்பிச் சரண் அடைந்த பக்தனுக்காக, இறைவனும் சரி, மகான்களும் சரி... எதையும் செய்வதற்குத் தயாராகவே இருக்கின்றனர். மாணிக்கவாசகருக்காக இறைவன் மண் சுமந்ததும், சுந்தரருக்காகக் காதல் தூது சென்றதும் நாம் அறிந்த செய்திகள்தான். அதேபோல், கிருஷ்ணரும்கூட பாண்டவர்களுக்காகத் தம்மைத் தாழ்த்திக்கொண்டு, பல வகைகளிலும் உபகாரம் செய்திருக்கிறார்.

ஸ்ரீ சாயி பிரசாதம் - 18

 குருக்ஷேத்திரப் போரின்போது, மறுநாள் போரில் பாண்டவர்களை அழித்துவிடுவதாக துரியோதன னிடம் சபதம் செய்திருந்த பீஷ்மரின் வாயாலேயே திரௌபதிக்கு, 'தீர்க்கசுமங்கலி பவ’ என்ற ஆசீர்வாதத்தைக் கிடைக்கச் செய்துவிடவேண்டும் என்று முடிவு செய்து, திரௌபதியை அழைத்துக் கொண்டு பீஷ்மரின் கூடாரத்துக்குச் சென்றார் ஸ்ரீ கிருஷ்ணர். அப்போது, திரௌபதியின் காலணிகளின் ஓசை கேட்டு பீஷ்மர் எச்சரிக்கை அடைந்துவிடக்கூடாது என்பதற்காக, திரௌபதியை காலணிகளைக் கழற்றச் சொல்லி, அவற்றைக் கிருஷ்ணர் தம்முடைய கைகளில் எடுத்துக்கொண்ட ஒரு நிகழ்ச்சியே போதும், தம்மை நம்பிச் சரண் அடைந்தவர்களுக்காக அவர் எதையும் செய்யச் சித்தமாக இருந்தார் என்பதை நாம் புரிந்துகொள்ள!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கீதையில் பக்தர்களின் யோகக்ஷேமத்தை தாம் நிறைவேற்றுவதாகக் கூறிய கிருஷ்ணரைப் போலவே, ஸ்ரீ சாயிநாதரும் தம்முடைய பக்தர்களின் துன்பங் களைப் போக்குவதற்காக எந்த நிலைக்கும் தம்மைத் தாழ்த்திக் கொள்ளவோ, எந்த வேதனைக்கும் தம்மை உட்படுத்திக்கொள்ளவோ தயங்கியதே இல்லை.

எங்கோ ஓர் இடத்தில் நெருப்பில் தவறி விழப் போன ஒரு குழந்தையை, துவாரகாமாயியில் துனியில் (பாபா எப்போதும் அணையாமல் எரியவிட்டுக் கொண்டிருக்கும் அக்னி குண்டம்)

எரிந்துகொண்டு இருந்த அக்னியில் தம்முடைய கைகளை விட்டு, தாம் இருந்த இடத்தில் இருந்த படியே அந்தக் குழந்தையைக் காப்பாற்றியவர் பாபா. அதேபோல், பிரசவ வேதனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு தாயின் உயிரையும், தாம் இருந்த இடத்தில் இருந்தபடியே காப்பாற்றிய லீலையையும் நிகழ்த்தியுள்ளார்.

ஸ்ரீ சாயி பிரசாதம் - 18

நானாசாஹேப் சந்தோர்க்கர் என்ற தம்முடைய பக்தரின் மகளுக்காக பாபா நிகழ்த்திய அந்த அற்புத அருளாடல்...  

1904ம் ஆண்டு, நானாசாஹேப் ஷீர்டியில் இருந்து சுமார் நூறு மைல்கள் தொலைவில் இருந்த ஜாம்னர் என்ற கிராமத்தில், முன்சீப்பாக வேலை பார்த்துவந்தார். அவருடைய மகள் மைனத்தாய், பிரசவத்துக்காகத் தாய்வீட்டுக்கு வந்திருந்தாள். மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்த நாள் கடந்தும்கூட, குழந்தை பிறக்காமல், பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டு இருந்தாள் அவள். மருத்துவர்களும் அவள் அபாயகரமான நிலையில் இருப்பதாகக் கூறிவிட்டனர். வேறு வழியே இல்லை என்ற நிலையில், திக்கற்றவர் களுக்கு ஒரே புகலிடமான பாபாவிடம் தன் மகளைக் காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்து கொண்டார் நானாசாஹேப்.

அதே நேரத்தில், ஷீர்டியில் ராம்கீர்புவா என்ற பக்தர் பாபாவிடம் சென்று, தான் ஊருக்குப் புறப்பட விரும்புவதாகத் தெரிவித்து, பாபாவின் உத்தரவை எதிர்பார்த்து நின்றார். அந்த பக்தரை பாபா பாபுகீர்புவா என்றுதான் அழைப்பது வழக்கம். அவர் ஊருக்குச் செல்ல அனுமதி தந்த பாபா, அதற்கு முன்பாக ஜாம்னருக்குச் சென்று, நானாசாஹேப் சந்தோர்க்கரிடம் உதியையும், ஷாமா இயற்றிய ஆரத்தி பாடல் எழுதப்பட்ட ஒரு காகிதத்தையும் கொடுக்கும்படி சொன்னார். ராம்கீர்புவாவும் பாபா சொன்னபடியே செய்ய முடிவெடுத்தார். ஆனால், அவரிடம் அப்போது இருந்தது வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே! அந்தப் பணத்தைக் கொண்டு, ஜல்கான் என்ற இடம் வரை மட்டுமே போகமுடியும். அங்கிருந்து ஜாம்னர் 30 மைல் தொலைவில் இருந்தது. அங்கு செல்வதற்குப் போதிய பணம் இல்லை. பாபாவும் அவருக்குப் பணம் எதுவும் தரவில்லை. ஆனாலும், வழியில் அவருக்குத்  தேவையானவை அனைத்தும் அளிக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

பாபாவின் வார்த்தைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ராம்கீர்புவா, சற்றும் தாமதிக்காமல் இரவு ரயிலில் ஜாம்னருக்குப் புறப்பட்டார். அதிகாலை 3 மணிக்கு ரயில் ஜல்கானை அடைந்தது. அவரிடம் அப்போது இரண்டணாக்கள் மட்டுமே மீதி இருந்தது. மற்ற பயணிகள் வாடகை  வண்டிகளை அமர்த்திக்கொண்டு அவரவர்களின் ஊர்களுக்குச் செல்வதைக் கண்ட ராம்கீர்புவா, தாம் 30 மைல்கள் நடந்து செல்லவேண்டும் என்பதுதான் பாபாவின் சங்கல்பம் போலும் என்று நினைத்துக்கொண்டு நடக்க யத்தனித்த வேளையில், ''ஷீர்டியில் இருந்து பாபுகீர்புவா என்று யாரேனும் வந்திருக்கிறீர் களா?'' என்று கேட்டுக்கொண்டே ராம்கீர்புவா இருந்த இடத்துக்கு வந்தான் ஒருவன்.

அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ராம்கீர்புவா, அவனைப் பற்றிய விவரம் கேட்டார். தான் நானாசாஹேப் சந்தோர்க்கரின் பணியாள் என்றும், அவர்தான் தன்னை அனுப்பி வைத்ததாகவும் கூறி, தான் கொண்டு வந்திருந்த குதிரை வண்டியில் ராம்கீர்புவாவை ஏற்றிக்கொண்டு, ஜாம்னர் செல்லும் பாதையில் ஓட்டிச் சென்றான்.

பாதி தூரம் சென்ற பிறகு, ஓர் ஓடை தெரிந்தது. அந்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, குதிரைகளை அவிழ்த்து, தண்ணீர் பருக ஓடைக்கு அழைத்துச் சென்றான். பின்னர், ராம்கீர்புவாவிடம் சிற்றுண்டி அருந்துமாறு சொன்னான். ராம்கீர்புவா வேண்டாம் என மறுக்க, அவர் மறுப்பதற்கான காரணத்தை ஒருவாறு யூகித்துத் தெரிந்து கொண்டவன், தான் இந்து க்ஷத்திரிய குலத்தைச் சேர்ந்தவன் என்று கூறியதுடன், அந்த உணவும்கூட நானா சாஹேபினால் அனுப்பிவைக்கப் பட்டதுதான் என்றும் சொல்லி, அவரைச் சாப்பிடச் சொன்னான். இருவரும் சாப்பிட்டு முடித்ததும், அங்கிருந்து புறப்பட்டனர்.

கருக்கல் வேளையில், ஓர் இடத்தில் ராம்கீர்புவா இயற்கை உபாதைகளைப் போக்கிக்கொள்ள, வண்டியில் இருந்து இறங்கினார். திரும்பி வந்து பார்த்தபோது அங்கே வண்டியும் இல்லை; வண்டியை ஓட்டி வந்தவனும் இல்லை. ஆனால், ஜாம்னர் கிராமத்தின் எல்லைக்குத் தான் வந்து விட்டதை அறிந்து கொண்ட ராம்கீர்புவா, சற்றும் தாமதிக்காமல் விரைவாக நடந்தே நானா சாஹேபின் வீட்டுக்குச் சென்று, பாபா தன்னிடம் கொடுத்தனுப்பிய உதியையும், ஆரத்திப் பாடல் எழுதப்பட்டு இருந்த காகிதத்தையும் கொடுத்தார்.

ஸ்ரீ சாயி பிரசாதம் - 18

நானாசாஹேப் பாபாவுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தபடியே, உதியை தன் மகளுக்குக் கொடுத்து, பாபாவின் ஆரத்தி பாடலைப் பாடினார். அடுத்த சில நிமிடங்களில், அவருடைய மகளுக்கு சுகப் பிரசவத்தில் அழகான குழந்தை பிறந்தது. அதன் பிறகு, பாபாவின் ஆற்றல் பற்றியும், பக்தர்களின் நலனில் அவர் எவ்வளவு கருணையுடன் அருள்புரிகிறார் என்பது பற்றியும் பெரிதும் வியப்புடன் பேசிக்கொண்டனர். பேச்சினிடையே ராம்கீர்புவா நானாசாஹேபிடம், அவர் தன்னை அழைத்து வர ரயில்வே ஸ்டேஷனுக்குக் குதிரை வண்டியை அனுப்பி இருக்காவிட்டால், தன்னால் குறிப்பிட்ட நேரத்தில் வந்திருக்க முடியாது என்று சொல்லவும், நானாசாஹேப் பெரிதும் வியப்பு அடைந்தார். காரணம், அவர் அப்படி யாரையும் ரயில் நிலையத்துக்கு அனுப்பவில்லை. அதைக் கேட்டு, ராம்கீர்புவாவும் திகைத்துப் போனார். எனில், குதிரை வண்டியுடன் வந்த அந்தச் சேவகன் யார்? அவனை எங்கிருந்து பாபா அனுப்பி வைத்தார்?

பாபாவின் இந்த நாடகம் நமக்கு உணர்த்தும் உண்மைதான் என்ன?

பிரசாதம் பெருகும்