மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்

தசரதன் பேச்சு 

'பிள்ளையையும் அனுப்பாமல் இருக்க வேணும்; மகரிஷிக்கும் கோபம் வராமல் இருக்கவேணுமே! ஐயோ, என்ன தர்ம சங்கடம்! ஏதாவது ஒரு சமாதானம் சொல்லித் தீர வேணுமே! என்ன யுக்தி செய்யலாம்?’ என்று ஆலோசித்த அரசனுக்குத்

திடீரென்று அந்த யுக்தியும் உதயமாகி விட்டது. துயரம் கொஞ்சம் தணிந்தது.

'நான் சொல்லப் போகும் கட்சி நியாயமானது; முனிவரும் ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே?’ என்று எண்ணியவ னாய் முதல் முதல், ''ராமனுக்கு அவ்வளவு

ஆயுதத் தேர்ச்சி இல்லையே!' என்று நிதானமாகவும் அழுத்தமாகவும் சொன் னான். 'போர்ப் பயிற்சிதானே பெற்று வருகிறான். வசிஷ்ட குருகுலத்திலே!’ என்பது

குறிப்பு. அடுத்தபடியாக, 'அவன் சிறு பிள்ளைதானே!' என்றான்.

'இப்படிப்பட்ட சிறுவன், போர்வெறி கொண்ட அரக்கர்களை அழித்து வேள்வி காக்க முடியுமா? ஆகவே இந்தப் பிள்ளையாண்டான் எதுக்கு?' என்றெல்லாம்

வாய்திறந்து சொல்லிவிடவில்லை; விசுவாமித்திரனுடைய ஊகத்திற்கு விட்டு விடுகிறான்.

'ஆனால் அந்த யாகக் காவலுக்கு  உன் கட்டளையை நிறைவேற்றித் துஷ்ட அரக்கரோடு போர்புரிந்து வெற்றியும் பெறுவதற்கு  நான் இருக்கிறேனே!' என்றான். முனிவனுக்குத் தெரியாதா? பரம துஷ்டனான சம்பராசுரனையும் வம்ச நாசம் செய்த அந்தப் பெருந்திறமையை விசுவாமித்திரனே பிரமாதப் படுத்தவில்லையா?

அருட்களஞ்சியம்

எனவே, உறுதியான குரலில், 'இடையூறு களுக்கெல்லாம் இடையூறாக நானே வந்து காக்கிறேன்!' என்று ஆத்திரமாய்ச் சொன்னான்; சொல்லிப் புறப்படவும் ஆயத்தமானான்.

விசுவாமித்திர கோபம்

''எழுக' என்றதும் எழுந்துவிடுகிறான் முனிவன்.

தசரதனை அழைத்துக்கொண்டு வேள்வி செய்யப் போவதற்கு அல்ல. ''நம்முடைய  அபிப்பிராயத்திற்கு மாறுபட்டானே! நம்மையும் ஏமாற்றப் பார்க்கிறானே!' என்றுதான் எழுந்திருக்கிறான்.

அந்தக் கோப எழுச்சியைக் கண்டதும், 'உலகத்திற்கே முடிவு

வந்துவிட்டதோ?' என்று தேவர்களும்

சந்தேகிக்கிறார்களாம். அந்த உக்கிரமான கோபாக்கினியில் வெயிலே மறைந்துவிட்டது போலத் தோன்றுகிறது.

அப்போது வசிஷ்ட முனிவனும் பக்கத்திலேதான் இருக்கிறான். விசுவாமித்திரனுடைய பழைய எதிரி; பிரம்ம ரிஷி; சிறந்த தத்துவ ஞானி; அகத் தூய்மையோடு சேகரித்த தபோதனங்களின் முதலாளி; சாந்தகுண பூஷணன். சாந்தப் படுத்துகிறான் விசுவாமித்திரனை.

'இந்த முனிவனுடைய கூட்டுறவால் நம்முடைய சிஷ்யனான ராமனுக்கு எவ்வளவோ நன்மை உண்டாகப் போகிறது!' என்று ஊகித்துப் பார்த்தான் வசிஷ்டன். 'எனக்காக நீ பொறுத்தருள்வாயாக' என்று அந்தப் பழைய எதிரியை நோக்கிச் சொன்னான், அவனுக்கு உச்சி குளிரும்படி!

சக்ரவர்த்தியும் குருவின் வார்த் தையை ஏற்றுக் கொள்கிறான்.

ஏற்கெனவே கல்விக் கடல்தான் ராமன். எனினும் தண்ணீர் நிறைந்து கிடக்கும் கடலில்தானே மழை பெய்து பெருகும் வெள்ளமும் முடுகிப் போய்ச் சங்கமம் ஆகிறது. எனவே, 'இன்று விச்வாமித்திர ரூபத்திலே காலன் வரவில்லை; யோக காலம்தான் வந்திருக்கிறது! அள வில்லாத வித்தைகள் உன் மகனை வந்தடையும் அந்த யோக காலமே வந்துவிட்டது!' என்கிறான் வசிஷ்டன்.

பிறகு தசரதன் என்ன செய்கிறான்? எவ்வளவு பரபரப்பாய்க் காரியங்கள் நடக்கின்றன! பார்த்துக் கொள்ளுங்கள்:

குருவின் வாசகம் கொண்டு கொற்றவன்,

'திருவின் கேள்வனைக் கொணர்மின் சென்றெ'ன

'வருக என்றனன்' என்ன லோடும், வந்(து)

அருகு சார்ந்தனன் அறிவின் உம்பரான்.

'ராமனை அழைத்து வாருங்கள்' என்று தசரதன் அவசர அவசரமாய் உத்தரவு போடுகிறான்.

ராமனை அழைத்து வரச் சொல்லும்போது தசரதன் அவனைத் 'திருவின் கேள்வன்'

(லட்சுமி நாயகன்) என்று குறிப்பிடு கிறான். இதனால் ராமன் லட்சுமி  நாராயண மூர்த்தியான பகவானுடைய அவதாரம் என்று தசரதன் உணர்ந்து கொண்டதாக ஏற்படாது. 'ராஜ்ய லட்சுமிக்கு உரியவன்;

மூத்த பிள்ளை' என்றுதான் சக்ரவர்த்தி குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஆனால் நமது உள்ளமோ அவசர அவசரமாய் மேலும் ஓடுகிறது. 'மங்களமான வார்த்தை தசரதன் வாயிலிருந்து விழுகிறது. ஒரு சுபசூசகம். ஆம்; கல்யாணம் வரப்போகிறது! ஆம், ஆம்; சீதா கல்யாணம்... அதற்காகத்தானே விச்வா மித்திரன் வந்திருக்கிறான்? அந்தத் திருமணத் தூதனாக அல்லவா வந்துவிட்டான்? உலகத்திற்கும் யோக காலம்தான்!' என்றெல்லாம் நமது உள்ளத்திலே உத்ஸாகம் பிறக்கச் செய்கிறது, 'திருவின் கேள்வன்' என்ற சொற்றொடர்.

மன்னன் உயிர்  

மாதவன் சாயை

தசரதன் ராமனை மாத்திரம் அழைத்திருந்தான். ராமன் வந்தபோதே தம்பியும் வந்து விடுகிறான் பின் தொடர்ந்து. எந்தத் தம்பி? சொல்லவும் வேண்டுமா?

குழந்தைப் பருவம் தொட்டு ஆறு, சோலை, தடாகங்களில் விளையாடும் போதும் ராமனைப் பிரியாமல் இருந்தானே, அந்தத் தம்பிதான்.

அருட்களஞ்சியம்

'லட்சுமணனும் ராமனுக்குத் துணையாகப் போவது நல்லதுதான்; ஒருவனுக்கு இருவர்' என்று கருதும் சக்ரவர்த்தி முதலில் மறுத்ததற்கு அபராதம் செலுத்துவதுபோல் ராமனோடு லட்சுமணனையும் சேர்த்து ஒப்புவிக்கிறான் விசுவாமித்திர மகரிஷியிடம்.

வந்த நம்பியைத்

தம்பி தன்னொடும்

முந்தை நான்மறை

முனிக்குக் காட்டி, 'நல்

தந்தை நீ, தனித்

தாயும் நீஇவர்க்(கு);

எந்தை! தந்தனன்:

இயைந்த செய்கெ'ன்றான்.

'இனி இவர்களுக்குத் தந்தையும் நீ; தாயும் நீயே!' என்று அடைக்கலமாகக் கொடுக்கிறான். அதிலும், நல்ல தந்தை என்கிறான் விசுவாமித்திரனை, 'நான் பிரியத்தைச் செய்ய விரும்பினேன் பிள்ளை யாண்டானுக்கு; நீயோ இதத்தை (உண்மையான இன்பமாகிய நன்மையை)ச் செய்யப் போகிறாய்; எனவே நீதான் நல்ல தந்தை!' என்பது குறிப்பு.

இதத்திற்கு மாறுபடாமல் பிரியத்தையும் காட்டவேணும் என்ற குறிப்புடன் 'ஒப்பற்ற தாயாரும் நீ!' என்கிறான்.

ராமன் ஆயுதபாணியாகிப் புறப்படுகிறான்:

வென்றி வாள்புடை

விசித்து, மெய்ம்மைபோல்

என்றும் தேய்வுறாத்

தூணி யாத்(து), இரு

குன்றம் போன்(று) உயர்

தோளில் கொற்றவில்

ஒன்று தாங்கினான்,

உலகம் தாங்கினான்.

வெற்றியைத் தரக்கூடிய உடைவாளை இடது பக்கத்திலே கட்டிக் கொண்டான். அம்புக் கூட்டைத் தோளிலே கட்டிக் கொண்டான். எடுக்க எடுக்க அம்புகள் குறையாமல் இருக்கும் அந்த அம்பறாத் தூணிக்கு, என்றும் தேயாத சத்தியத்தை உபமானமாக்குகிறான் கவிஞன். ராம வீரம் சத்திய வீரம் என்பது குறிப்பு.

'வில் ஒன்று தாங்கினான்': எதற்காக? 'உலகம் தாங்கினான்' என்கிறான் கவிஞன். உலகம் தாங்கவே வில்லைத் தாங்கினானாம் இந்தத் தெய்வ வீரன். சத்தியத்தைக் காப்பாற்றவே குறி தவறாத அம்புகளையும் எடுத்துக் கொண்டானாம். பாடப் பாடப் பாட்டின் ஓசை  நயம், அந்த வில்லின் ஓசையையும் செவியில் போடுவது போலத் தோன்றுகிறது.

** 28.5.44 மற்றும் 4.6.44

ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...