Published:Updated:

எதிர்பார்ப்பும் இல்லை... ஏமாற்றமும் இல்லை !

தர்ம சிரேஷ்டருக்கு சதாபிஷேகம்...எஸ்.கண்ணன்கோபாலன்

உள்ளதை உள்ளபடியே சொல்லி, சமூகத்துக்கு நன்மை தரக்கூடிய செயல்களைச் செய்பவர்கள் அரிதிலும் அரிது! அப்படிப்பட்ட ஆன்றோர்களால்தான் இந்த உலகத்தில் தர்மம் சிறிதளவேனும் ஜீவித்து இருக்கிறது. அத்தகைய ஆன்றோரும் சான்றோருமாக  நம்மிடையே இருக்கும் ஒருவர்  சக்தி விகடன் வாசக அன்பர்களுக்கு ஏற்கெனவே நன்கு பரிச்சயமானவர்  ப்ரம்மஸ்ரீ  சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

வாழும் முறையைப் பற்றி தர்மசாஸ்திரம் என்ன சொல்கிறதோ, அதிலிருந்து சற்றும் பிறழாமல், அது காட்டும் நெறிப்படியே தடம் பதித்து வாழ்ந்து வருபவர் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். அடுத்த வாரம் அவருக்குச் சதாபிஷேகம்! அவருடைய வாழ்க்கை அனுபவங்களைச் சக்தி விகடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டால், வளரும் தலைமுறைக்கு உந்து சக்தியாகவும் ஊக்க சக்தியாகவும் இருக்குமே என்று அவரிடம் விண்ணப்பித்துக்கொண்டபோது, மிகுந்த உற்சாகத்துடன், 'அதற்கென்ன... எப்போது வேண்டுமானாலும் வாருங்கள்!' என்று உற்சாகத்துடன் வரவேற்றார்.

வீடு முழுக்க தர்மசாஸ்திரம், வேதம் தொடர்பான புத்தகங்கள்தான்! அதிலிருந்தே படிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவரிடம் பேசப் பேச, அவருடைய ஞானம் நம்மை வியப்பில் ஆழ்த்தியது. அதைவிடவும் அவருடைய எளிமை நம்மை வெகுவாக வசீகரித்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எதிர்பார்ப்பும் இல்லை... ஏமாற்றமும் இல்லை !

கேரளா, பாலக்காடு அருகில் உள்ள குழல்மன்னம் என்ற ஊரில் பிறந்தவர் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். இவருடைய முன்னோர், சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழ்நாட்டில் உள்ள கண்டரமாணிக்கம் என்ற பகுதியில் இருந்து அங்கே சென்று குடியேறியவர்கள். அவர்கள் அனைவருமே வேத சாஸ்திரங்களைக் கற்றுத் தெளிந்து, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், சமூகத்துக்குப் பயன்தரும் வகையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள்தான். தங்கள் பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு அவர்கள் மாறினாலும், தங்கள் பண்பாடு, கலாசாரம் போன்றவற்றில் இருந்து கொஞ்சமும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால், தாய்மொழி தமிழுடன், மலையாள மொழியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தது.

பாரம்பரியம் மிக்க குடும்பத்தில், வேங்கடேசுவர சாஸ்திரி, பார்வதி அம்மாள் தம்பதியருக்கு, மூன்று பெண்களுக்குப் பிறகு நான்காவதாகப் பிறந்தவர்தான் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். இவரின் குழந்தைப் பருவத்திலேயே பெற்றோர் மறைந்துவிட, தந்தைவழிப் பாட்டிதான் இவரை எடுத்து வளர்த்தார். சிறிய வயதிலேயே ஓரளவு வேதம் கற்றிருந்த இவர், மெட்ரிக் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பிறகு, வேதம் படிப்பதற்காக இவரை நூரணி வேத பாடசாலையில் சேர்த்துவிட்டார் பாட்டி.

சாஸ்திரிகளின் ஏழு வயதுக்குள்ளாகவே, அவருடைய மூத்த சகோதரிகள் இருவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவர்களுடைய புகுந்த வீட்டு உறவினர்கள், சாஸ்திரிகளை வேதபாட சாலையில் சேர்த்துவிட்டதைக் கேள்விப்பட்டு, பாட்டியிடம் வந்து, தேவையான பணத்தைத் தாங்கள் தருவதாகவும், சாஸ்திரிகளை மேற்கொண்டு உயர்கல்வியில் சேர்க்கவேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். ஆனால், பாட்டியோ அதை

மறுத்துவிட்டு, தன் கணவரும் மகனும் எப்படி வேதம் படித்துச் சமூகத்துக்குப் பயன் தரும் வகையில் வாழ்ந்தார்களோ, அதே போல்தான் தன்னுடைய பேரனும் வேதம் படித்துச் சமூகத்துக்குப் பயன் தரும்படியாக வாழவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டாராம். சாஸ்திரிகளுக்குமே லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான கல்வியைக் கற்பதைவிடவும், வேதம் மற்றும் தர்ம சாஸ்திரங்களைப் படிப்பதில்தான் ஆர்வம் இருந்தது. அதன் பின்னணியிலும் ஒரு சுவையான நிகழ்ச்சி இருக்கவே செய்கிறது. அவரே சொல்கிறார், கேளுங்களேன்...

எதிர்பார்ப்பும் இல்லை... ஏமாற்றமும் இல்லை !

''நான் வேத பாடசாலையில் படித்த முதல் வருஷத்தில் நடந்த தேர்வுகளில் 120 மதிப்பெண்களுக்கு 117 மதிப்பெண்கள் எடுத்தேன். அதைப் பார்த்துப் பாடசாலையின் முதல்வர், 'இந்தப் பிள்ளையின் அறிவுத் திறமையைப் பார்த்துச் சந்தோஷப்பட இவனுடைய தகப்பனார் இல்லையே’ என்று ஆதங்கப்பட்டார். அதற்கு என்னுடைய ஆசிரியர், 'நீங்கள் சொல்வதுபோல் இந்தப் பிள்ளையின் திறமையைக் கண்டு இவனுடைய அப்பா சந்தோஷப்பட்டு இருக்கமாட்டார். படித்தது போதும் என்று தன்னுடைய வைதீக காரியங்களுக்குத் துணையாக அழைத்துச் சென்றிருப்பார்’ என்று சொன்னார். இந்தப் பதிலை நான் மிகவும் ரசித்தேன். காரணம், அந்தக் காலத்தில் அப்படி ஒரு பழக்கம் இருந்தது. தன் மூத்த பிள்ளை வேத சாஸ்திரங்களில் ஓரளவு தேர்ச்சி பெற்றுவிட்டான் என்று தெரிந்துவிட்டால், அவனைத் தங்களுடைய வைதீக காரியங்களுக்குத் துணையாக இருக்கட்டும் என்று அழைத்துக்கொண்டு விடுவார்கள். அடுத்தடுத்த பிள்ளைகளைத்தான் நன்றாகப் படிக்கவைப்பார்கள்.''

இதை சாஸ்திரிகள் நகைச்சுவையாகக் கூறினாலும்கூட, தந்தை இல்லையே என்கிற ஆதங்கம் அவருடைய குரலில் தொனித்ததை நம்மால் உணரமுடிந்தது.

நூரணியில் இருந்த வேதபாடசாலையில் பத்து வருடங்களுக்கும் மேலாக பூர்வ அபர பிரயோகம் போன்ற சாஸ்திர நூல்களையும், காவியம், நாடகம், அலங்காரம், ஜோதிஷம் போன்றவற்றையும் முறைப்படி கற்றார். படிப்பு முடிந்ததும், மேற்கொண்டு படிப்பதற்காக நுழைவுத் தேர்வு எழுதினார். அதில் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேர்ச்சிபெற்றார். கூடவே, உயர்கல்வியில் சேரும்படி சென்னை சமஸ்கிருத கல்லூரியில் இருந்தும் அழைப்புக் கடிதம் வந்தது. அதன்படியே, சென்னை சமஸ்கிருத கல்லூரியில் சேர்ந்து படித்து, மாநிலத்திலேயே முதல் மாணவராக 'சாகித்ய சிரோமணி' பட்டம்  பெற்று, பிட்டி முனுஸ்வாமி செட்டிகாருவின் பெயரில் வழங்கப்பெறும் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அந்தப் பதக்கத்தைப் பெற்ற முதல் மாணவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்ஸ்கிருதத்துடன் வேதாந்தமும், சென்னை வேங்கடரமணா ஆயுர்வேத கல்லூரியில் ஆயுர்வேத மருத்துவமும் படித்துச் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்று, இரண்டு துறைகளிலும் சிரோமணி பட்டம் பெற்றவர் சாஸ்திரிகள்.

எதிர்பார்ப்பும் இல்லை... ஏமாற்றமும் இல்லை !

பத்திரிகைத் துறையிலும் இவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஸ்வல்ப மத்ஸய புராணா, புராண புல்லட்டின் புத்தகத்தின் 4 தொகுதிகள், ஆயுர்வேதம் தொடர்பான அஷ்டாங்க ஹ்ருதய நிகண்டு, மலயமாருதா, சிவ கீதா போன்ற புத்தகங்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கும் இவர், தர்மோதயம் மற்றும் ரசிகப்ரியா போன்ற இதழ்களின் கௌரவ ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். மத்திய அரசின் 'சமஸ்கிருத பிரதிபா’ என்ற இதழிலும் உதவி ஆசிரியராகத் தம்முடைய பங்களிப்பை மிகச் சிறப்பான முறையில் வழங்கியிருக்கிறார்.

சாஸ்திரபூர்வமாக ஜோதிஷ சாஸ்திரத்தில் பாண்டித்யம் பெற்றிருக்கும் இவர், அதற்காக 'தர்ஷணஜோதிஷ பராங்கத’ என்ற விருதைப் பெற்றிருக்கிறார். தர்ம சாஸ்திரங்கள், பிரகரண கிரந்தங்களான சர்வ வேதாந்த சித்தாந்த சாரசங்கிரஹம், ஆதிசங்கரரின் பஜகோவிந்தம், மனீஷா பஞ்சகம், சௌந்தர்ய லஹரி, சிவானந்த லஹரி போன்ற நூல்களை ஆராய்ச்சிபூர்வமாகக் கற்று, கேட்பவர் மனதில் பதியும்படியாகப் பிரவசனமும் செய்து வருகிறார்.

தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் மலையாளம் தவிர, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நல்ல பாண்டித்யம் பெற்றிருக்கும் இவர், ஆறு ஆண்டுகள் சென்னை வேங்கடரமணா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் கௌரவ விரிவுரையாளராகவும், சென்னை சம்ஸ்கிருத கல்லூரியின் விரிவுரையாளர் மற்றும் முதல்வராகவும் சிறப்பான முறையில் பணிபுரிந்திருக்கிறார்.

அவருடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவங்கள் மற்றும் அறிவுரைகள் பற்றிக் கேட்டபோது, ''மறக்கமுடியாத அனுபவம் என்று ஏதும் இல்லை. எல்லா அனுபவங்களுமே எனக்கு ஒன்றுதான். காரணம், நான் சென்னைக்குப் படிக்க வந்தபோது, நூரணி வேதபாடசாலையில் எனக்கு ஆசிரியராக இருந்த வெங்காடசல கனபாடிகள் சொன்ன ஒரு அறிவுரை. 'வாழ்க்கையில் எதையுமே எதிர்பார்க்காதே! அந்தந்த நேரத்துக்கு உனக்கு என்ன சுதர்மம் விதிக்கப்பட்டு இருக்கிறதோ, அதை பயனை எதிர்பார்க்காமல் செய்துகொண்டு இரு’ என்றார் அவர். அதன்படியே, ஈடுபடும்

பணி எதுவாக இருந்தாலும், அதை முழுமையான ஈடுபாட்டுடனும் சிரத்தையுடனும் எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமலும் செய்து வந்திருக்கிறேன். எனவே, எனக்கு ஏமாற்றங்களும் இல்லை; பெரிய அளவில் மறக்கமுடியாத அனுபவங்களும் இல்லை!'' என்று சொன்ன சாஸ்திரிகள் தம்முடைய வாழ்க்கையில் மறக்க முடியாதவர்களாகக் குறிப்பிடுவது, தன்னுடைய பாட்டியையும், எதையும் எதிர்பார்க்காதே என்று அறிவுரை வழங்கிய ஆசிரியரையும்தான்!

தமது ஆசிரியர் வெங்கடாசல கனபாடிகளைப் பற்றி மிகவும் நெகிழ்ந்து சொல்கிறார் சாஸ்திரிகள்.

எதிர்பார்ப்பும் இல்லை... ஏமாற்றமும் இல்லை !

''அவர் வெறுமனே, ஏதோ கடமைக்காக எனக்கு அறிவுரை சொல்லவில்லை. நான் நன்றாக வாழவேண்டும் என்ற ஆத்மார்த்தமான அன்புடனும் நல்லெண்ணத்துடனும் எனக்கு உபதேசம் செய்தார். அவருடைய அந்த அக்கறை யுடன் கூடிய ஆத்மார்த்தமான அன்புதான் என்னை அந்த உபதேசத்தின்படி நடைமுறையில் வாழவைத்தது'' என்கிறார்.

ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, சம்ஸ்கிருத கல்லூரி, மற்றும் பல பத்திரிகைகளில் எழுத்துப் பணி என இன்றைக்கும் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தாலும், ஆர்வம் உள்ள பலருக்கும் சம்ஸ்கிருதமும் ஜோதிஷமும்

கற்றுத் தருகிறார். எண்ணற்ற மாணவர்களுடன் 20க்கும் மேற்பட்ட பெண்களும் இவரிடம் சம்ஸ்கிருதமும் ஜோதிஷமும் கற்றிருக்கிறார்கள்.இவர்கள் அனைவருமே தங்களுடைய வித்யையை, சேவை மனப்பான்மையுடன் மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை அறிந்தபோது, வியப்பொன்றும் ஏற்படவில்லை. காரணம், ஆசான் எவ்வழியோ மாணவர்களும் அவ்வழியில்தானே நடப்பார்கள்!

அவர் பெரிதும் சிலாகித்துப் பேசிய அவருடைய மாணவர் சுப்புராமன், தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சாஸ்திரிகளிடம் பல ஆண்டுகள் ஜோதிஷ சாஸ்திரம் கற்றுக்கொண்டதுடன், குருவின் வழியில் தாமும் பலருக்கும் ஜோதிஷ சாஸ்திரம் கற்றுத் தந்து வருகிறார். தம்முடைய குருவான சாஸ்திரிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில்,

''எனக்குக் கிடைத்த குருநாதர்போல் ஒருவருக்குக் கிடைப்பது அரிது. வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் அபார ஞானமும், ஞாபக சக்தியும் கொண்டவர். எந்த ஒரு பிரச்னைக்கும் வேதங்களில் இருந்தும் சாஸ்திரங்களில் இருந்தும் உரிய மேற்கோள்களுடன் தீர்வு சொல்வார். அவரிடம் எந்த ஒரு பிரச்னை என்று போனாலும் நாம் ஏற்றுக்கொள்ளும்படியாகப் பேசி, நம்முடைய மன பாரத்தை இறக்கிவிடுவார்.'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ஒருவரின் வாழ்க்கை அமையும் தன்மையில், மனைவியின் பங்களிப்பு மிக அதிகம். அந்த வகையில், சாஸ்திரிகளின் மனைவியைப் பற்றி அவரிடம் கேட்டோம்.

''மற்றவர்கள் மதிக்கும்படியாக நான் வாழ்வதற்குக் காரணம் என் மனைவி டி.வி.சாரதாதான்'' என்றவர், ''அவளும் என்னைப் போலவே எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவள். எனக்கு எப்போது என்ன தேவையோ அதையதை அப்போதைக்கப்போதே செய்துவிடுவார். அவரைப் பற்றி ஒரு சில நிமிடங்களுக்குள் பூரணமாகச் சொல்லி முடிக்கமுடியாது. சுருக்க மாகச் சொல்லவேண்டும் என்றால், வள்ளுவருக்கு ஒரு வாசுகியைப் போலவும், பாரதிக்கு ஒரு செல்லம்மாவைப் போலவும், கடவுளின் கிருபையினால் எனக்குக் கிடைத்த வரம்தான் என் மனைவி'' என்று பூரிப்புடன் குறிப்பிட்டார்.

''இவரைக் கல்யாணம் செய்துகொண்டு புகுந்த வீட்டில் அடியெடுத்து வைத்தபோது, நான் வெறும் களிமண்ணாகத்தான் இருந்தேன். என் கணவர்தான் எனக்கு ஆசானாகவும் இருந்தார். அவரால்தான் நான் சம்ஸ்கிருதம் படித்து 'சாகித்ய சிரோமணி’ பட்டமும் பெற்றேன்' என்கிறார் சாஸ்திரிகளின் மனைவி சாரதா.

'இவரிடம் 20 பெண்கள் வரை ஜோதிஷ சாஸ்திரம் கற்றுக் கொண்டபோது, அவர்களுடன் சேர்த்து எனக்கும் ஜோதிஷ சாஸ்திரம் கற்றுக்கொடுத்தார் என் கணவர். இவர் என்னை மனைவியாக மட்டும் இல்லாமல் மாணவியாகவும், தோழியாகவும் பாவித்து எல்லாவற்றையும் என்னிடம் பகிர்ந்துகொள்வார். நான் இன்றைக்கு ஓரளவுக்கு சம்ஸ்கிருதத்திலும் ஜோதிஷத்திலும் ஞானம் பெற்று இருக்கிறேன் என்றால் அதற்கு இவர்தான் காரணம்!'' என்கிறார் சாரதா நெகிழ்ச்சியுடன்.

இல்லற தர்மம் என்பதற்கேற்ப, தர்ம சாஸ்திரம் வகுத்துத் தந்துள்ள நெறிப்படியே வாழ்க்கையை நடத்திச் செல்லும் சேஷாத்ரிநாத சாஸ்திரி தம்பதி, இல்லறத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம்!

படங்கள்: வீ.நாகமணி, ப.சரவணகுமார்

எதிர்பார்ப்பும் இல்லை... ஏமாற்றமும் இல்லை !

பரமாசார்யார் விருது!

'தர்ஷண ஜோதிஷ பாரங்கத’, 'பிரவசன வாசஸ்பதி’, விஸ்வகர்மா விருது, 'பாரத் பிஷாக் ரத்ன’ விருது, ஆயுர்வேதத்துக்கான 'தன்வந்திரி’ விருது, நல்லாசிரியர் விருது, 2008ம் வருஷம் அன்றைய மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணியால் அளிக்கப்பட்ட 'தர்ம ஸ்ரேஷ்டா’ விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கும் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், தாம் பெற்ற விருதுகள் அனைத்திலும் உயர்வாக நினைப்பது, பரமாசார்யார் பெயரில் தமக்கு வழங்கப்பட்ட 'பரமாசார்யார் விருதை’த்தான்.

ஆய்வுப் பணியில்!

அரிய பல நூல்கள் மறைந்துவிடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டு வருபவர் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். சுமார் மூன்று ஆண்டுக் காலம் கடுமையாக உழைத்து, இம்மிடி தேவராயரின் 'மகா நாடக சூக்தி சுதாநிதி’ என்னும் காவியத்தை, டாக்டர் ராகவன் அவர்களின் வழிகாட்டுதலுடன் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் புத்தகமாக

எதிர்பார்ப்பும் இல்லை... ஏமாற்றமும் இல்லை !

எழுதிப் பாராட்டும் பரிசுகளும் பெற்றிருக்கிறார். ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும் மிகச் சிறந்த பணி இது என்று சிறப்பித்துக் கூறி இருக்கிறார்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்கள்.

தர்நானந்தரின் 'சித்ரமீமாம்ச வியாக்யசுதா’ என்னும் அலங்கார நூலையும் ஆய்வு செய்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் சாஸ்திரிகள். அகில இந்திய காசிராஜா டிரஸ்ட் ஆதரவுடன், ஐந்து ஆண்டுக் காலம் கடுமையாக உழைத்து ஆய்வு செய்து, 'மத்ஸ்ய புராணம்’ என்னும் தொன்மை வாய்ந்த நூலையும் வெளிவரச் செய்துள்ளார்.