Published:Updated:

நாரதர் உலா !

ஆழித்தேர் ஓடுமா ?

'நாராயண... நாராயண...’ என்று பகவானின் நாமத்தை உச்சரித்தபடியே நம் எதிரில் பிரசன்னமானார் நாரதர்.

நாரதர் உலா !

''என்ன, எல்லோரும் ஒருவித படபடப்பில் இருப்பது மாதிரி தெரிகிறதே? இதழை முடிக்க வேண்டிய கடைசிகட்ட வேலைகளில் மும்முரமாக இருக்கிறீர்களோ? நானும் என் பங்குக்கு தாமதமாக வந்து உங்கள் படபடப்பை அதிகரித்து விட்டேனாக்கும்!' என்றவர், வெயிலுக்கு இதமாக ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கிப் பருகிவிட்டு திருவாரூர் கோயில் குறித்த ஃபாலோ அப் விஷயங்களைப் பேச ஆரம்பித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''கோயிலின் தலவரலாறு மட்டும் இல்லாமல் கோயில் நிர்வாகம், சுற்றிலும் உள்ள ஊர்களைப் பற்றிய விவரங்கள், தமிழர்களின் பாரம்பர்யம், கலாசாரம் போன்றவற்றையும் விவரிக்கும் பொக்கிஷங்கள், கோயில் கல்வெட்டுகள். அந்த வகையில், திருவாரூர் கோயிலில் ஆதித்த சோழன் காலம் துவங்கி தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜி காலம் வரையிலுமான 80க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளும், 10க்கும் மேற்பட்ட ஒருவரிக்கல் எழுத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. ஆனால், அவை படுமோசமான நிலையில் உள்ளன என்பதுதான் சோகம்.

குடமுழுக்கு நன்கொடையாளர்களின் விவரம் பொறிக்கப்பட்ட சலவைக்கல் ஒன்று, சுவர் கல்வெட்டை மறைக்கும்படி வைக்கப்பட்டி ருக்கிறது. அதுபோக, கல்வெட்டின் மேற்பகுதியில் தண்ணீர்க் குழாய் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில கல்வெட்டுகளின் மீது இரும்பு ராடுகள் சாய்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவை நம் பொக்கிஷங்களான கல்வெட்டுகளை சேதப்படுத்தும் வகையில் உள்ளன. நம் கலையின் அருமை பெருமை தெரியாதவர்களின் அலட்சியமான நடவடிக்கை இது! ஹூம்..!' என்று கவலைப் பெருமூச்சு விட்டார் நாரதர்.

அதிர்ச்சியில் வாயடைத்து நின்றோம். நாரதரே தொடர்ந்தார்... ''திருவாரூர் கோயிலில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருக்கும் கே.ஞானபண்டிதனைச் சந்தித்தேன். ஆலங்குடி கோயிலில் தற்காலிக ஷெட் அமைத்திருக்கிறார்கள்; அதேபோல, திருவாரூர் கோயிலிலும் ஷெட் அமைத்துத் தர சென்னை அன்பர் ஒருவர் முன்வந்தாராம். ஆனால், அதற்கு அனுமதி மறுத்துவிட்டார்கள் என்று வருத்தத்துடன் சொன்னார். தெற்கு கோபுர வாசலில் இருந்து ஆயிரங்கால் மண்டபம் வரை தரைதளம் அமைத்துத் தர பெரிய தொழிலதிபர் ஏற்பாடு செய்தார். ஏனோ அதுவும் பாதியில் நிற்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பறை மற்றும் குளியலறை வசதி போதிய அளவு இல்லை; ராமகிருஷ்ண மடம் சார்பில் மேற்கு கோபுர வாசலில் காலணிகள் பாதுகாப்பு அறையும், கழிவறையும் கட்டித் தருவதாகச் சொன்னார்கள். அதற்கும் கோயில் நிர்வாகம் தரப்பில் பல வருடங்களாக பதிலே இல்லையாம்!

நாரதர் உலா !

'தியாகராஜ சாமிக்கு தினசரி சாத்துகிற செங்கழுநீர்ப் பூ விளையும் ஓடை ஆக்கிரமிப்பில் இருக்கிறது. அவர்களை காலிசெய்ய வைக்க, மக்களுடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினேன். என்ன செய்தும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கமலாலயம் குளத்தை தூர் வாருவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அந்த அறிவிப்புக்கு நன்றி சொல்லி உள்ளூர் பிரமுகர்கள் பிரமாண்ட போஸ்டர்களெல்லாம் அடித்து ஒட்டினார்கள். ஆனால், அந்த வேலையும்கூட நடக்கவில்லை.

கோயிலை அழகுபடுத்த முன்வரும் தனியார்களுக்கு அனுமதி தருவதில்லை. அரசு தரப்பிலும் எதையும் உருப்படியாகச் செய்வது இல்லை. இந்தக் கோயில் தொடர்பாக எந்த ஒரு விஷயம் செய்ய வேண்டுமானாலும், முதல்வரின் அனுமதி பெற்றுத்தான் செய்யவேண்டுமாம். ஆனால், இங்கே இத்தனை பிரச்னைகள் சரிசெய்ய வேண்டியுள்ளன என்று யாராவது முதல்வரின் காதுக்கு விஷயத்தைக் கொண்டு செல்கிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது’ என்று வருத்தப்படுகிறார் ஞானபண்டிதன்'' என்று நாரதர் மளமளவென்று கொட்டித் தீர்த்தார்.

''கோயிலில் பாலாலயம் முடிந்து படுவேகமாக திருப்பணிகளை ஆரம்பித்தார்களாம். அப்போது, அமைச்சர் காமராஜ் சொல்லி, அவரின் அறநிலையத்துறைக்கான அரசு செயலர் கண்ணன்

ஐ.ஏ.எஸ். நேரிடையாக கோயிலுக்கு வந்து திருப்பணி வேலைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டுப் போனாராம். அதனால், கோபுரங்கள் புதுப்பிக்கும் பணி பாதியில் நின்றுபோனதாம். கோயிலுக்குள் சாரங்கள் சரிந்து உருக்குலைந்து கிடக்கின்றன; கோயிலே பொலிவிழந்து காணப் படுகிறது என்று பக்தர்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்களே... அதுபற்றி அதிகாரிகளிடம் பேசினீர்களா?''

நாரதர் உலா !

''பேசினேன். கோயிலின் பழைமையும் பாரம்பர் யமும் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு, திருப்பணி துவங்குமுன் மத்திய அரசின் (தொல் பொருள் துறை)அதிகாரிகளை அழைத்து வந்து காட்டி, அவர்களின் வழிகாட்டுதலோடு திருப்பணியை ஆரம்பித்திருக்க வேண்டும். பொதுவாக, இயற்கைப் பொருட்களையும் மூலிகைப் பொருட்களையும்தான் பயன்படுத்த வேண்டும். முக்கிய இடங்களில் சிமென்ட்டைப் பயன்படுத்தக் கூடாது; சுண்ணாம்பைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், கோயில் வளாகத்தில் சிமென்ட் தளம் போட வேலை துவக்கியிருக்கிறார்கள்.

அதேபோல், கோபுரங்களில் முதலில் வாட்டர் கலர் கோட்டிங் கொடுத்துவிட்டுப் பிறகுதான் அலங்கரிக்கும் வேலையைச் செய்யவேண்டும். ஆனால், இங்கே எடுத்த எடுப்பில் அலங்கரிக்கும் வேலையைத் தொடங்கிவிட்டார்கள். கோயில் திருப்பணிகள் தொடர்பான முக்கிய டெக்னிக்கல் விஷயங்கள் குறித்த ஆலோசனைகளை அறநிலையத்துறை ஆணையருக்கு எழுத்துப் பூர்வமாக அனுப்பி, அவரின் ஒப்புதலை வாங்கிய பிறகே திருப்பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும். இதுமாதிரியான நடைமுறைகளில், நிதி ஒதுக்கீடு தவிர மற்ற விஷயங்களில் அப்போதைய கோயில் அதிகாரிகள் கோட்டை விட்டிருக்கிறார்கள். எனவேதான் கண்ணன் ஐ.ஏ.எஸ். திருப்பணிகளை நிறுத்தச் சொன்னாராம். முறைப்படி தொல்பொருள் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று வேலையைத் தொடருங்கள் என்று அவர் சொல்லிவிட்டுப் போயிருப்பதாகச் சொல்கிறார்கள் கோயில் அதிகாரிகள்.'

''இதுமாதிரி டெக்னிக்கலான விஷயங்களில் கீழ்மட்ட அதிகாரிகள் கோட்டைவிடலாம் என் பதை முன்கூட்டியே எதிர்பார்த்து, அப்போதைய அறநிலையத் துறை கமிஷனர், திருவாரூர் கோயில் அதிகாரிகளை அழைத்துப் பேசியிருந்தால், இப்படியான சிக்கல்கள் வந்திருக்காது அல்லவா?''

''உண்மைதான்! மக்கள் புலம்புவதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஜூன் மாதம் முதல் வாரத்தில்தான் மத்திய அதிகாரிகள் கோயிலுக்கு விசிட் செய்துவிட்டுப் போனார்களாம். ஒரு வாரத்துக்கு முன்புதான் அவர்களது அறிக்கையைத் தந்திருக்கிறார்கள். ஆக, நான் அங்கே போனபோது, பாதியில்

நின்ற திருப்பணிகள் மீண்டும் தொடங்கு வதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன!''

''ஆனால், பொதுத் தேர்தல் வேறு வரப்போகிறது. அதைக் காரணம் காட்டி மீண்டும் வேலைகள் சுணங்கி விடுமே!'' என்று பெருமூச்சு விட்டோம்.

''முழு வேகத்துடன் திருப்பணியை முடுக்கிவிட்டால், இரண்டே மாதத்தில் முடித்துவிடலாம் என்று உறுதியாகச் சொல்கிறார், கோயில் செயல் அதிகாரி பாரதிராஜா. கோபுரங்களில் செடிகள் மண்டியுள்ளதால், கோபுரச் சிற்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகுமே என்று கேட்டேன். 'கோபுரப் பணி நடக்கும்போது, அந்தச் செடிகளை அகற்ற சில நுணுக்கமான வழிமுறைகள் உள்ளன. அப்படி அவற்றைச் சுத்தம் செய்துவிடுவோம்’ என்றார்.''

''அதெல்லாம் இருக்கட்டும்... ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட ஆழித்தேர் திருப்பணி எப்போது பூர்த்தி ஆகுமாம்?' என்று கேட்டோம்.

நாரதர் உலா !

''தேர் செய்யப் பயன்படும் மரங்கள் அரிதான ரகத்தைச் சேர்ந்தவை. பல ஊர்களில் தேடி அலைந்து, ஒருவழியாக அதை வாங்கினாா்களாம். 90 சதவிகிதம் பணி முடிந்துவிட்டதாம். 'இறுதிக்கட்ட வேலை யாக பெயின்ட் அடிக்கும் பணி, ஹைட்ராலிக் பிரேக் அமைக்கும் பணி, கிரேன் மூலம் ராட்சத ஆணிகள் பொருத்தும் பணி ஆகியவைதான் நடந்துகொண்டிருக்கின்றன. சீக்கிரமே ஆழித்தேர் ரெடியாகிவிடும்’ என்றார் பாரதிராஜா.

கமலாலய குளக்கரை பணிகள் குறித்துக் கேட்டேன். 'வடக்குக் கரை சுற்றுச் சுவரின் ஒரு பகுதி சேதமடைந்திருந்தது. அதைப் புதுப்பிக்கும் பணி முடிந்துவிட்டது. படித்துறையில் கருங்கல் வேலைகள் விரைவில் முடிந்துவிடும். அதேபோல், மேற்குக் கரையிலும் சேதம். அதற்கு டெண்டர் விட்டு இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. இடையில் மழை பெய்ததால், வேலை தொய்வானது. இப்போது வேகமாக நடந்துவருகிறது. அதேபோல், கோயிலின் உட்புற, வெளிப்புற மதில்கள் மற்றும் சிறிய மண்டபங்களைப் புதுப்பிக்கும் பணிகள் முடிந்துவிட்டன. கோயிலின் உள்ளே சுந்தரர் மண்டபம் புதுப்பிக்கும் பணியும் 70 சதவிகிதம் முடிந்துவிட்டது’ என்றார் பாரதிராஜா. வேறு சில திருப்பணிகளுக்காகச் சுமார் 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருக் கிறார்களாம். அது வந்ததும், அந்த வேலைகள் தொடங்கும் என்றார்.'

'தேவாசிரியன் மண்டப ஒவியங்கள் பற்றி அவரிடம் கேட்டீர்களா?'

''அந்த மண்டபத்தின் மேற்பகுதி சேதம் அடைந்து தண்ணீர் ஒழுகியதால், ஓவியங்கள் சேதமாகிவிட்டனவாம். 2010ல் இதற்கென நிதி ஒதுக்கி, சரிசெய்தார்களாம். அத்தோடு, தண்ணீர் ஒழுகுவது நின்றுவிட்டதாம். 'அப்போது பாதிப்படைந்த ஓவியங்கள் மோசமான நிலையில் இருப்பதை நானும் பார்த்துக் கலங்கினேன். பாது காப்புக் காரணங்களுக்காக அந்த மண்டபத்தைத் தற்காலிகமாகப் பூட்டியே வைத்திருக்கிறோம்! பொதுமக்கள் வெளியில் இருந்து எட்டிப் பார்த்து விட்டுப் போகிறார்கள்’ என்றார் பாரதிராஜா.''  

''கிழக்குக் கோபுரத்தில் மேற்பக்கம் தேன்கூடு களைப் பார்த்ததாகச் சொன்னீரே? அதைப் பற்றிக் கேட்டீரா?''

''பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தீயணைப்புத் துறையினர் வந்து தேன்கூடுகளை அப்புறப்படுத்து கிறார்களாம். ஆனால், மீண்டும் மின்னல் வேகத்தில் புதிய கூட்டை தேனீக்கள் கட்டிவிடுகிறதாம். இந்தப் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு வழி தேடிக்கொண்டிருப்பதாக பாரதிராஜா சொன்னார்.'

'போகட்டும்... தேனீக்களாவது சுறுசுறுப்பாக இருக்கிறதே!' என்று நாம் சொன்னதும், குபீர் என்று சிரித்துவிட்டார் நாரதர்.

'இந்து அறநிலையத்துறை அமைச்சர் காமராஜின் சொந்த மாவட்டமாயிற்றே இது! அவர் என்ன சொல்கிறார்?' என்று கேட்டோம்.

''தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தொகுதி என்பதால்தான் இந்தக் கோயில் பிரச்னைகளை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வது இல்லையாமே என்று அவரிடம் கேட்டேன். இதற்கு அவர் நேரிடையாக பதில் சொல்லவில்லை. கோயில் பிரச்னைகளைப் பற்றி மட்டும் சுருக்கமாகப் பேசினார்.

'தொல்பொருள் துறையினரிடம் ஆலோசனை பெற்று திருப்பணி வேலைகள் படிப்படியாக நடந்துகொண்டிருக்கின்றன. நான் அமைச்சராக வருவதற்கு முன்புகூட, ஒரு மண்டபம் கட்ட ஆரம்பிச்சாங்க. ஆகம விதிகளின்படி அந்த மண்டபம் கட்டக்கூடாதுன்னு சில அமைப்புகள் சொல்லவும், அந்தப் பணி அப்படியே நின்னு போச்சு. மற்றபடி, உபயதாரர்களை ஒருங்கிணைத்து திருப்பணி வேலைகள் திருப்திகரமாக நடந்து வருகின்றன. பொதுவாக, திருப்பணி நடக்கும் காலகட்டத்தில் கட்டுமானப் பொருட்கள் அங்குமிங்கும் இறைந்து கிடக்கத்தான் செய்யும். திருப்பணி வேலை முழுமை அடையும்போது எல்லாமே சரியாகிவிடும்’ என்றார் அமைச்சர்.''

தொடர்ந்து... ''சரி, நான் கிளம்பட்டுமா? நேரே திருப்பாம்புரம் மற்றும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்களுக்கு ஒரு விசிட் அடிக்கலாம் என்றிருக்கிறேன்' என்ற நாரதர், சடுதியில் காணாமல் போனார்.

படங்கள்: க.சதீஷ்குமார்