Published:Updated:

அரச மரத்தில் ஆனைமுகன் !

வேர் விநாயகர் ! பிரேமா நாராயணன்

ற்றங்கரை ஓரத்திலும் அரசமர நிழலிலும் அமர்ந்திருக்கும் ஆனைமுகன், அதிசயமாக ஒரு சில திருத்தலங்களில் சுயம்புத் திருமேனியாக தோன்றுவது உண்டு. ஆனால், ஒரே இடத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல... ஒட்டுமொத்தமாக 19 சுயம்பு விநாயகர் வடிவங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றியிருக்கின்றன. அதுவும் ஓர் அரச மரத்தில்! 

சென்னை  சாலிகிராமம், பரணி காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலவிநாயகர் ஆலயத்தில் அரச மரத்தில் தோன்றிய சுயம்பு விநாயகர் வடிவங்களைத் தரிசித்து வரச் சென்றோம்.

அமைதியான சூழ்நிலையில், மிகவும் சுத்தமாக இருக்கும் அந்தக் கோயிலில், தென்மேற்கு மூலையில், உயர்ந்து கிளை பரப்பி நின்ற அந்த அரசமரத்தைக் கண்டோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அரச மரத்தில் ஆனைமுகன் !

மரத்தின் அடியில் நாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க, மரத்தின் அடிப்பகுதியில் கிளைவிட்டிருக்கும் வேர்களில் சின்னச் சின்னதாக விநாயகர் திருமுகங்கள். சுற்றி வந்து ஆச்சர்யம் விலகாமலேயே கையெடுத்துக் கும்பிட்டு நிமிர்ந்தால், அந்தப் பேரதிசயம் நம் கண்களில் படுகிறது. மரத்தின் நடுப்பகுதியில் நர்த்தன விநாயகர் திருமேனி. ஒரு காலில் நின்று, ஒரு காலைத் தூக்கி ஆடும் அழகுத் திருவுருவம்...! திருவாச்சி, கிரீடம், பஞ்சகச்ச வேஷ்டி முதலிய அலங்காரங்களுடன் திவ்ய தரிசனம் தருகிறார் சுயம்பு விநாயகர். மேனி சிலிர்க்கப் பார்த்துக்கொண்டே நின்றோம். வேழமுகனின் அந்த வடிவத்தைக் காணும்போது வேதனைகள் யாவும் தீர்ந்து, மனம் லேசாகிப் போன உணர்வு!

''முதன்முதலில் கோயில் கட்டினபோது, பிள்ளையாருக்குக் குடைபிடிச்சு நின்னது இந்த அரசமரம்.

அரச மரத்தில் ஆனைமுகன் !

பிள்ளையாருக்குக் குடையாக நின்ற மரமே, படிப்படியாகப் பிள்ளையாராகவே மாறிப்போனது நாங்கள் கண்கூடாகப் பார்த்த அற்புதம்! இந்தக் கலியுகத்தில், 'கடவுள் எங்கே இருக்கிறார்?’னு கேட்கிறவங்களுக்கு 'நான் எங்கும் இருக்கேன்... மண்ணிலும் இருக்கேன், மரத்திலும் இருக்கேன்’னு சொல்லாமல் சொல்றது மாதிரி இருக்கு இந்த சுயம்புத் திருவுருவங்கள் எல்லாம்!'' என்று சொன்ன பால விநாயகர் சேவா டிரஸ்டின் அறங்காவலர் கே.சுப்ரமண்யன் தொடர்ந்து, ''1983ம் வருஷம் ஜனவரி 26ம் தேதிதான் இங்கே பிள்ளையாரை பிரதிஷ்டை செய்தோம். கோயிலில் வருடம்தோறும் லட்சார்ச்சனை நடைபெறும். 16வது வருஷம் லட்சார்ச்சனைக்கும் முன்னதாக கோயிலில் 16 விநாயக மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்ய நினைத்திருந்தோம். ஆனால், அதற்கு முன்பே சுயம்புவாக வெளிப்படத் திருவுள்ளம் கொண்டுவிட்டார் விநாயகர். சிற்பிகளுக்கு வேலை வைக்காமல், உளி படா உருவமாக, சுபிட்சம் அருளும் சுந்தர வடிவமாக மரத்தில் தோன்றினார் பிள்ளையார். மரத்தின் நடுபாகத்திலிருந்து திடீர்னு சிவந்த நிறத்தில் சிம்பு வேர்கள் தோன்றின... கிரீடம், துதிக்கை, தந்தம், முகம்னு மெள்ள மெள்ள விநாயகரின் வடிவம் ஒவ்வொண்ணா வெளிப்பட்டு, மொத்தமா விநாயகர் உருவம் வெளிப்பட்டபோது, அடடா... அந்தக் காட்சியை என்னன்னு சொல்றது! நர்த்தன கணபதி உருவம் நல்லாவே தெரிய, பார்த்தவர்கள் எல்லாம் சிலிர்த்துப் போனார்கள். நாளடைவில் மரத்தின் கீழ்ப்பகுதியிலும் ஒவ்வொரு விநாயகரின் வடிவம் வெளிப்பட ஆரம்பித்தது. இதோ.. இங்கே பாருங்க... ஐந்து தலை கொண்ட ஹேரம்ப கணபதிகூட தோன்றியிருக்கிறார்!'' என்று நம்மை மரத்தைச் சுற்றி அழைத்துச் சென்று சுட்டிக் காட்டினார். ஆச்சரியம் தங்க முடியாமல், விரித்த கண்கள் இமைக்காமல் பார்த்துப் பரவசம் அடைந்தோம்.

அரச மரத்தில் ஆனைமுகன் !

இந்த சுயம்பு விநாயகரின் தோற்றமும் புகழும் அயல்நாடுகளிலும் பரவி, அடிக்கடி மலேசியா, சிங்கப்பூர் என்று வெளிநாட்டு பக்தர்களும் தரிசனத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.  

அரச மரத்தின் கீழ்ப்பாகம் (வேர் பாகம்) பிரம்ம ரூபம். நடு பாகம் விஷ்ணு அம்சம். மேல் பகுதி சிவ ரூபம்! மகா விஷ்ணுவின் பாகத்தில் அவதரித்திருப்பதால், இந்த சுயம்பு விநாயகரை, அனுக்கிரஹ மூர்த்தி என்கிறார்கள். தன்னிடம் வந்து, மனமுருகி பக்தர்கள் வேண்டுவதை வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்கிறார் இந்த அரசமரப் பிள்ளையார். ஞாயிற்றுக்கிழமைதோறும், ராகுகாலத்தில் இந்த விநாயகருக்கு சிறப்புப் பூஜை நடக்குது... பக்தர்கள் திரண்டு வந்து வழிபடுகிறார்கள்.

அரச மரத்தில் ஆனைமுகன் !

சென்னை வடபழநி பேருந்து நிலையத்தில் இருந்து, விருகம்பாக்கம் செல்லும் வழியில் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பரணி ஸ்டூடியோவை ஒட்டி இருக்கும் பரணி காலனியில் அமைந்திருக்கும் இந்தகோயிலுக்கு, ஷேர் ஆட்டோ மூலம் செல்லலாம். பேருந்து நிலையத்தில் இருந்து நடந்தேகூட சென்று விடலாம்.

படங்கள்: பா.அருண்