மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம் !

மாங்கனி திருவிழா !எஸ்.கண்ணன்கோபாலன்

ம்மா! அனைத்து உயிர்களுக்கும் முதல் உறவாகவும் முதன்மை உறவாகவும் திகழ்பவள் அம்மா! நம் எல்லோருக்கும் அம்மாதானே முதல் தெய்வம்?! ஆனால், இப்படி ஓர் உன்னதமான தெய்வம் ஒருவருக்கு மட்டும் வாய்க்கவில்லை. காரணம், அவர் பிறப்பிலி! 

நமக்கெல்லாம் அன்பு செலுத்தி அரவணைக்க 'அம்மா’ என்னும் புனித உறவு இருப்பதைப் பார்த்து, தனக்கும் ஓர் அம்மா வேண்டும் என்ற ஆசை அந்தப் பிறப்பிலிக்கும் ஏற்பட்டு விட்டது. இப்படி ஆசைப்பட்ட அந்தப் பிறப்பிலி யார் தெரியுமா? வேறு யார்? சாட்சாத் சர்வேஸ்வரனான அந்த சிவபெருமான்தான்!

சகல லோகங்களுக்கும் நாயகனான அந்த சர்வேஸ்வரனுக்குத் தாயாக இருக்கவேண்டுமானால், அந்த ஈசனைப் போலவே மிக மிக மேன்மையும் புனிதத்துவமும் கொண்ட ஒரு பெண்ணால்தானே முடியும்? தனக்கு ஒரு தாய் வேண்டும் என்று விருப்பம் கொண்டுவிட்ட சிவபெருமான், அதற்குத் தகுதி உள்ள ஒரு பெண்ணை தன் சங்கல்ப மாத்திரத்தில் உலகத்தில் தோன்றச் செய்தார்.

அந்தப் பெண்மணிதான் காரைக்காலில் அவதரித்த புனிதவதி என்னும் பெண்ணரசி!

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம் !

காரைக்கால் நகரத்தில், தனதத்தன் தம்பதியர்க்கு அவர்தம் தவப்பயனாக வாய்த்த புனிதவதி, செல்வ சுகத்தில் திளைத்தாலும், அவளுடைய சித்தமெல்லாம் சிவமே நிலைபெற்று இருந்தது. தோழியருடன் ஆடும்போதும், உண்ணும்போதும், உறங்கும்போதும் சித்தமெல்லாம் சிவமே நிறைந்திருக்கும் தன்மையினால், சிவனடியார்களைக் காணும்போதெல்லாம் அவர்களை பயபக்தியுடன் அடிபணிந்து அன்புடன் அமுதளித்து வருவதைத் தன்னுடைய கடமையாகவே கொண்டாள். உரிய பருவத்தில் பெற்றவர் விருப்பப்படி பரமதத்தனைத் திருமணம் செய்துகொண்டாலும், சிவனடியார்களை உபசரிப்பதே இல்லற தர்மம் என்ற எண்ணத்துடன் இல்லற வாழ்க்கையை இனிதே தொடங்கினாள் புனிதவதி.

நாரதர் கொண்டு வந்த மாங்கனியால் முருகனுக்கு ஒரு படைவீடு கிடைத்தது என்றால், மாங்கனியை வைத்து சிவபெருமான் நிகழ்த்திய ஒரு லீலையால் அவருக்கு ஓர் அன்னை கிடைத்துவிட்டார். மா, பலா, வாழை என முக்கனிகளிலேயே முதல் கனியாக மாங்கனிக்குத் தனிச் சிறப்பு கிடைத்திருப்பதற்கு இதுதான் காரணம் போலும்!

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம் !

புனிதவதியை தாயாகப் பெறவேண்டும் என்பதற்காக மாங்கனியைக் கருவியாகக் கொண்டு இறைவன் நிகழ்த்திய அந்த அருளாடல் நமக்கெல்லாம் தெரிந்ததுதான்! அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஆனி மாதம் நடைபெறும் மாங்கனித் திருவிழாவைத்தான் நாம் இப்போது தரிசிக்கப் போகிறோம்.

இந்த மாங்கனித் திருவிழா, விநாயகர் உற்ஸவத்தைத் தவிர்த்து மூன்று நாட்கள் நடைபெறும் வைபவம் ஆகும். முதல் நாளில், புனிதவதியாருக்கும் பரமதத்தனுக்கும் திருமணம் நடைபெறுதல்; அடுத்த நாள், மாங்கனித் திருவிழா; மூன்றாவது நாளில் புனிதவதியார் எலும்புருக்கொண்டு கயிலைக்குச் சென்று, சிவபெருமானால் 'அம்மையே’ என்று அழைக்கப் பெற்று, இறைவனின் திருவடியில் அமர்ந்திருக்கும் பேறு பெறுதல் ஆகியவை நடைபெறும். நாம் இரண்டாவது நாளில் நடைபெற்ற பிரதான திருவிழாவான மாங்கனித் திருவிழாவைத் தரிசிப்பதற்காக முதல் நாள் மாலையே காரைக்காலுக்குச் சென்றுவிட்டோம்.

காரைக்கால் அம்மையார் கோயில் மண்டபத்தில், அன்று காலை நடைபெற்ற திருமணக் கோலத்தில் புனிதவதியும் பரமதத்தனும் மண்டபத்தில் வீற்றிருக்க, திரளான பக்தர்கள் வந்து தரிசித்தபடி இருந்தார்கள். நகரமெங்கும் பத்தடிக்கு ஒரு கடை எனக் கடை விரித்து மாங்கனிகளைக் குவித்து வைத்திருந்தார்கள். அதைப் பார்த்த நமக்கு அவ்வளவு பழங்களும் ஒரு நாளில் விற்றுவிடுமா என்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது. நம்முடைய சந்தேகத்தையும், மறுநாள் நடைபெறவிருக்கும் வைபவம் குறித்தும் அங்கிருந்த ஓர் அன்பரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு விவரம் கேட்டோம்.

'ஆர்க்கிடெக்ட்’ அருள்முருகன் என்ற அந்த அன்பர், ''இத்தனை மாங்கனிகளும் ஒரே நாளில் விற்றுவிடுமா என்று கேட்கிறீர்கள். நாளை மாலைக்குள் அத்தனையும் விற்றுத் தீர்வதை நீங்கள் பார்க்கத்தானே போகிறீர்கள்!'' என்றவர், தொடர்ந்து ''நாளை அதிகாலை 3 மணிக்கே கயிலாசநாதர் கோயிலில் பிச்சாடன மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறத் தொடங்கிவிடும். அபிஷேக ஆராதனைகள் முடிய எப்படியும் 9 மணிக்கு மேல் ஆகிவிடும். அதே நேரத்தில், காலை 8 மணியளவில் அம்மையார் கோயிலில் இருந்து பரமதத்தனின் கடைக்குச் செல்வதும், அவர் புனிதவதியாருக்கு இரண்டு மாங்கனிகளைத் தந்து அனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம் !

அதன் பின்னர், கயிலாசநாதர் கோயிலில் இருந்து பிச்சாடனர் வீதி உலா தொடங்கும். குறிப்பிட்ட இடங்களில் பிச்சாடன மூர்த்தி சுமார் ஒரு மணி நேரம் எழுந்தருளுவார். அந்த இடங்களில் பக்தர்கள் இறைவனுக்குப் பட்டு சார்த்தி, மாங்கனிகளை நைவேத்தியம் செய்வார்கள். இப்படி சுவாமி வீதியுலா வரும்போது, சுவாமி ஒவ்வொரு வீட்டைக் கடந்ததும், அந்தந்த வீட்டு மாடிகளில் இருந்து மாங்கனிகளை இறைப்பார்கள். அந்தப் பழங்களைப் பிடிக்க பக்தர்கள் போட்டி போடுவார்கள். இப்படியாக, காலை 10 மணிக்குத் தொடங்கும் வீதியுலா திரும்பவும் கோயிலுக்கு வந்து சேர மாலை 6 மணிக்கு மேல் ஆகிவிடும். அதன் பின்னர், இறைவனுக்குக் கோயிலில் அமுது படையல் நடைபெறும்'' என்று மாங்கனித் திருவிழா பற்றிய விவரங்களைத் தெரிவித்தார்.

மறுநாள் காலை 6:30 மணிக்கே நாம் கோயிலுக்குச் சென்றுவிட்டோம். பிச்சாடனருக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அருகில் இருக்கும் அம்மையார் கோயிலுக்குச் சென்றோம். அங்கே, பரமதத்தன் கடைக்குச் செல்லும் நிகழ்ச்சி தொடங்க இருந்தது. நிகழ்ச்சி தொடங்க 8 மணிக்கு மேல் ஆகும் என்று தெரியவர, நாம் மீண்டும் கயிலாசநாதர் கோயிலுக்குத் திரும்பினோம். இன்னும் அலங்காரம் நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது. நாலா பக்கங்களில் இருந்தும் பக்தர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். அதிகாலை 3 மணியில் இருந்து பிச்சாடன மூர்த்திக்கு நடைபெற்ற அபிஷேக விவரம் பற்றித் தெரிந்துகொள்ள அங்கிருந்த ஓர் அன்பரிடம் கேட்டோம். அவர் நம்மை ஓர் அர்ச்சகரிடம் அழைத்துச் சென்றார்.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் பரம்பரை முதல்முறை பூஜை ஸ்தானீகராக இருக்கும் சைவாகம ரத்னம் கோட்டீஸ்வர குருக்களிடம் அபிஷேக விவரம் குறித்துக் கேட்டோம்.

''அதிகாலை 3 மணிக்கு எண்ணெய்க் காப்புடன் அபிஷேகங்கள் தொடங்கும். அதே நேரத்தில் கலச ஸ்தாபனம் செய்து ஹோமங்களும் தொடங்கிவிடும். பலவகையான திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றாலும்கூட, மாங்கனி அபிஷேகம்தான் பிரதான அபிஷேகமாக இருக்கும். அனைத்து அபிஷேகங்களும் நிறைவு பெறவும் ஹோமம் முடியவும் சரியாக இருக்கும். பின்னர், கலசங்களில் உள்ள மந்த்ர சக்தி கொண்ட தீர்த்தத்தால் கலசாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, பிச்சாடன மூர்த்திக்கு அலங்கார ஆராதனைகள் முடிந்து, பிக்ஷைக்குப் புறப்படும் வைபவம் நடைபெறும்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம் !

சிவபெருமானுக்கு ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஒரு அபிஷேகம் செய்யவேண்டும் என்பது ஆகம விதி. ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறுவதுபோல் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஓர் அபிஷேகம் செய்யவேண்டும். அந்த வகையில், ஆனி மாதப் பௌர்ணமி அன்று மாங்கனி அபிஷேகம் செய்யவேண்டும். எனவேதான், மாங்கனியால் பிரசித்தி பெற்ற இந்தத் தலத்தில் இந்தத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது'' என்றார். இவருடைய பாட்டனார்தான் பிச்சாடன மூர்த்திக்கு அபிஷேகம் செய்யும் முறைகளை வகுத்துக் கொடுத்துத் தொடங்கி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரிடம் பேசிக்கொண்டிருந்த போதே அம்மையார் பரமதத்தன் கடைக்குச் சென்றதும், அவரிடம் பரமதத்தன் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்த னுப்பியதுமான நிகழ்ச்சிகள் நடந்து விட்டதாகத் தெரிந்துகொண்டோம். இன்னும் சற்று நேரத்தில் பிச்சாடன மூர்த்தி புறப்பாடு தொடங்கிவிடும் என்று பேசிக் கொண்டார்கள். கோடீஸ்வர குருக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, கோயிலுக்கு வெளியில் வந்தோம்.

வீதிகளிலும் வீட்டு மாடிகளிலும் எங்கு பார்த்தாலும் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் கூட்டம். சிறு பிள்ளைகள் கையில் பைகளுடன் வந்திருந்தார்கள். கேட்டால், வீட்டு மாடிகளில் இருந்து இறைக்கப்படும் மாங்கனிகளைப் பிடித்து, வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காகவே அந்தப் பைகளை எடுத்து வந்திருக்கிறார்களாம்.

நாம் வெளியில் வந்த சிறிது நேரத்துக்கெல்லாம், பிச்சாடன மூர்த்தி பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் வெளியில் அலங்கரிக்கப்பட்டு இருந்த பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளி னார். ஆண்களும் பெண்களுமாக பக்தர்கள் கூட்டம் இறைவனுக்குப் பட்டு சார்த்தி, மாங்கனி நைவேத்தியம் செய்யப் போட்டி போட்டுக் கொண்டி ருந்தனர். எல்லோர் முகங்களிலும் பெருமிதத்துடன் கூடிய மகிழ்ச்சி நிறைந்திருந்தது. கோயில் வாசலிலேயே இறைவன் நீண்ட நேரம் இருக்கவே, பக்தர்களின் முகங்களில் சுவாமி எப்போது புறப்படுவார் என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு! அப்போதுதானே மாங்கனிகளை இறைக்கவும், இறைக்கப்படும் மாங்கனி களைத் தாவித் தாவிப் பிடிக்கவும் முடியும்? அவர்களின் எதிர்பார்ப்பை விரைவில் நிறைவேற்றுவதுபோல் செண்டை வாத்தியமும் நாதஸ்வர இசையும் ஒலிக்க, இறைவனின் புறப்பாடு தொடங்கியது. இறைவன் தங்கள் வீட்டைக் கடந்ததுமே வீட்டு மாடிகளில் இருந்த பெண்மணிகள் தாங்கள் கூடைகூடையாக வாங்கி வைத்திருந்த மாங்கனிகளை வீதியில் இறைத்தனர். வீதியில் திரண்டிருந்த பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவற்றைத் தாவித் தாவிப் பிடித்தனர். மானுடமும் தெய்வீகமும் கலந்த ஒரு குதூகலக் காட்சி அது!

ஒரு வீட்டின் முன்பாக இருந்த முதிய சுமங்கலிப் பெண்மணி ஒருவரிடம் இந்த விழா குறித்த அவருடைய கருத்தைக் கேட்டோம். நவநீதம் என்ற அந்தப் பெண்மணி, ''காரைக்காலில் பிரசித்தி பெற்ற விழா இந்த மாங்கனித் திருவிழாதான். பக்தர்களால் இறைவனுக்குக் காணிக்கையாக இறைக்கப்படும் மாங்கனிகள் யாருக்கெல்லாம் கிடைக்கிறதோ, அவர்களுடைய விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். குறிப்பாக, பெண்களுக்கு நல்ல குடும்ப வாழ்க்கையும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்'' என்றார்.

பிச்சாடன மூர்த்தி புறப்பட்ட பிறகு, நாம் கோயில் குருக்கள் சிவ சட்டநாத குருக்களிடம் காரைக்கால் அம்மையார் எலும்புருவம் கொண்டு இறைவனின் திருவடிகளில் சேரும் வைபவம் குறித்துக் கேட்டோம்.

''இப்போது வீதியுலா புறப்பட்டு இருக்கும் சுவாமி மாலை 6 மணியளவில் கோயிலுக்கு எழுந்தருளி, அமுது படையலை ஏற்றுக்கொள்வார். அதே நேரத்தில் அம்மையார் கோயிலில், புனிதவதி அம்மையை தெய்வப் பிறவி என்று வணங்கி, அவரை விட்டுக் கணவர் பரமதத்தன் பிரிந்து சென்றுவிட்டதால், புனிதவதியார் சிவபெருமானிடம் பிரார்த்தித்துத் தனக்கு எலும்புருவம் ஏற்பதும் நடக்கும். மறுநாள் 2ம் தேதி அதிகாலை 4 மணியளவில் காரைக்கால் நகரத்தில் உள்ள அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டுவிடும். அப்போது கயிலாசநாதர் கோயில் வாசலில் சிவபெருமானைக் குறிக்கும் வகையில் ஒரு தீபச் சுடர் ஏற்றப்பட்டிருக்கும். அம்மையார் கோயிலில் அதே போல் காரைக்கால் அம்மையாரைக் குறிக்கும் வகையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபச்சுடரை கயிலாசநாதர் கோயிலுக்கு எடுத்து வந்து, ஈசனைக் குறிக்கும் தீபச் சுடரில் சேர்ப்பார்கள். அதுதான் புனிதவதியார் என்ற காரைக்கால் அம்மையார் இறைவனின் திருவடி சேர்ந்ததாக ஐதீகம்!'' என்றார்.

பிறப்பிலியும் பிரபஞ்ச நாயகனுமான சிவபெருமானுக்கே அன்னையாகும் பேறு பெற்ற அன்னை காரைக்கால் அம்மையாரின் அவதார திருத்தலத்தில் நடைபெற்ற மாங்கனித் திருவிழாவை சிலிர்ப்போடு தரிசித்துத் திரும்பிய நம் மனதில்...

'ஆதியோடு அந்தம் இல்லான் அருள்நடம் ஆடும்போது    கீதம்முன் பாடும் அம்மை கிளர்ஒளி மலர்த்தாள் போற்றி’  என்று சேக்கிழார் பெருமானால் போற்றப்பட்டவரும், கயிலைநாயகனின் உறைவிடத்தில் பாதம் படக்கூடாது என்று தலைகீழாகச் சென்று ஈசனால் 'அம்மையே’ என்று அழைக்கப் பெற்றவருமான காரைக்கால் அம்மையார் என்னும் புனிதவதியாரின் திருவடிகளைச் சிந்தித்து, நம்மையும் புனிதர்களாகச் செய்யவேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டபடி அங்கிருந்து புறப்பட்டோம்.

படங்கள்: க.சதீஷ்குமார்