Published:Updated:

கலகல கடைசி பக்கம் !

இசைபட வாழ்வோம் !வீயெஸ்வி, ஓவியம்: வேலன்

விடியற்காலை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தெய்விகக் குரலில் வேங்கடேச சுப்ரபாதம் காற்றில் தவழ்ந்து வந்து என்னைத் துயில் எழுப்பினால், பக்கத்து ஃப்ளாட் பரமசிவம் எழுந்துவிட்டார் என்று பொருள். சுப்ரபாதம் முடிந்ததும், காருக்குறிச்சியின் நாகஸ்வரம்! அதைத் தொடர்ந்து, எங்கள் வீட்டு காலிங்பெல் ஒலிக்கும். கதவைத் திறந்தால், கையில் காபி டம்ளருடன் பரமசிவம் காட்சி தருவார். 

'பரமசிவம் சார்... நாள் முழுக்க இப்படிப் பாட்டு ஒலிச்சிட்டே இருந்தா, உங்களால மத்த வேலைகள்ல கவனம் செலுத்த முடியுதா? முக்கியமா, பேப்பரை முழுசா படிக்க முடியுதா?' என்று ஒருநாள் அவரிடம் கேட்டேன்.

'சொல்லப்போனா, பேக்ரவுண்ட்ல பாட்டு ஒலிச்சிட்டு இருந்தாதான் என்னால பேப்பரையே நிதானமா படிக்க முடியும், தெரியுமோ?' என்று, ஏதோ பெரிய நகைச்சுவை சொல்லிவிட்டது போன்று இடி இடியெனச் சிரித்தார்.

நாள் முழுக்க ஏதாவது ஒரு பாடல் தன் காதுகளுக்குள் நுழைந்துகொண்டே இருக்க வேண்டுமாம் பரமசிவத்துக்கு. இது தொட்டில் பழக்கமாம். ஆமாம், குழந்தையாக இவர் தொட்டிலில் படுத்திருந்த காலத்தில் இவரின் அம்மா வெறுமே தொட்டிலை ஆட்டினால், கையைக் காலை உதைத்து அழுவாராம். ரேடியோவில் ஏதாவது பாட்டைப் போட்டுவிட்டால் சமர்த்துப் பிள்ளையாகத் தூங்குவாராம். ஸ்கூல் படிக்கும்போதுகூட, பின்னணியில் ஏதாவது பாடலை ஓடவிட்டுத்தான் பாடங்களைப் படிப்பாராம். 24ஙீ7 சி.டி. சேனல் என்று தன்னுடையதைக் குறிப்பிட்டார். நாகஸ்வரம் ஒரு மணி நேரத்துக்கு ஓடுமாம். அது முடிந்த தும், சாப்பாட்டு நேரம் வரையில் கர்னாடக இசை; பகல் 1 மணி முதல் திரைப்பட இசை ஆல்பங்கள் பிளேயரில் ஓடுமாம்.

கலகல கடைசி பக்கம் !

'லேட்டஸ்ட் 'மாரி’ வரையில் இப்போ என் கலெக்‌ஷன்ல இருக்கு' என்றார் பெருமையுடன். மாலையில் விளக்கு வைத்ததும், வீணை, வயலின், புல்லாங்குழல் என இன்ஸ்ட்ரூமென்ட் இசைக்கு மாறிவிடுவது அவர் வழக்கம்.

'இரவு படுக்கையில் சரிந்ததும் இந்துஸ் தானி மியூஸிக் கேட்பேன். பீம்சென் ஜோஷி, அஜய் சக்ரபர்த்தி, ஹரிபிரசாத் சௌராஸ்யா என்று வட இந்திய உஸ்தாதுக்களைக் கேட்டால் தான் எனக்குத் தூக்கமே வரும்...' என்றார்.

கம்பன் வர்ணிக்கும் கோசல நாடுதான் என் நினைவுக்கு வந்தது. செவிக்கினிய இசையோடு உறங்குவதும், உறங்கிய பின் செவிக்கினிய இசையோடும் எழுவதுமாய் அமைந்த நாட்டில், அவ்விருபோதும் அல்லாது மற்றெப்போதுமே இசையும், பாடலும், கதைகள் சொரிகின்ற செவிநுகர் கவிகளுடன் கலந்தொலிக்கும் என்பார் கம்பர்.

'தண்டலை மயில்க ளாடத்

தாமரை விளக்கந் தாங்கக்

கொண்டல்கள் முழவி னேங்கக்

குவளைகண் விழித்து நோக்கத்

தெண்டிரை எழினி காட்டத்

தேம்பிழி மகர யாழின்

வண்டுக ளினிது பாட

மருதம்வீற் றிருக்கு மாதோ!’

ஆஹா! என்ன ஒரு ரசனை!

இவ்வளவெல்லாம் இல்லையென்றாலும், அட்லீஸ்ட் 'கத்தும் குயிலோசை’யாவது காதில் விழவேணும் என்கிறார் நமது மகாகவி பாரதி!

நாமும் இசைபட வாழ்வோமே!