Published:Updated:

"ஐந்து அப்பங்களும், இரண்டு மீன் துண்டுகளும்" - இயேசு கிறிஸ்து நிகழ்த்திய அற்புதம்! #Biblestory

"ஐந்து அப்பங்களும், இரண்டு மீன் துண்டுகளும்" - இயேசு கிறிஸ்து நிகழ்த்திய அற்புதம்! #Biblestory
"ஐந்து அப்பங்களும், இரண்டு மீன் துண்டுகளும்" - இயேசு கிறிஸ்து நிகழ்த்திய அற்புதம்! #Biblestory

பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய 'பைபிள் கதைகள்' உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்படுபவை. ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன் துண்டுகளையும் வைத்து, அவர் நிகழ்த்திய அற்புதத்தைப் பார்ப்போம்.

இயேசு கிறிஸ்து தனது இறைச் செய்தியை இஸ்ரேலின் முக்கிய நகரங்களிலும் கிராமங்களிலும் தனது சீடர்களுடன் நிகழ்த்திக்கொண்டிருந்த நேரம். அவர் உரை நிகழ்த்தியதுடன் நில்லாது சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் வாழ்விலெல்லாம் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். இதில் நோய் வாய்ப்பட்டவர்கள் ஏழைகள், பார்வையற்றோர், காதுகேளாதவர்கள் வாய் பேச முடியாதவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சுகமடைந்தனர்.     

 அவரது சொற்பொழிவுகள், அதுவரை  கேட்டிராத கருத்துக்களாக இருந்ததுடன், மிகுந்த தோழமையுடனும் இருந்ததால், மக்கள் பெருந்திரளாக சென்று அவரது உரையைக் கேட்டனர்.  அப்படியொரு முறை அங்கிருந்த சிறிய மலையின்  மீது நின்று கொண்டு இறை செய்தியை மக்கள் மத்தியில்  உரை நிகழ்த்த ஏற்பாடாகி இருந்தது.

அந்த மலையடிவார கிராமத்தின் மக்கள் மட்டும் அல்லாது, சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் பலரும் வந்திருந்தனர்.

மலைக் கிராமத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவனும், 'கிறிஸ்துவைப் பார்க்க வேண்டும்' என்ற ஆவலுடன், புறப்பட்டான். வழியில் பசி எடுத்தால், சாப்பிடுவதற்கு ஏதாகிலும் இருந்தால் நன்றாக இருக்குமே என  எண்ணி,  தனது அம்மாவிடம், 'நான் இன்று நெடுந்தூரம் சென்று, இயேசு கிறிஸ்துவின் உரையைக் கேட்கப்போகிறேன். அதனால், எனக்கு உணவு தயாரித்துக்கொடுங்கள்' எனக் கேட்டான். 

''அடடே, மகனே! உனக்குப் புதிதாக என்னால் திடீரென உணவு தயாரிக்கமுடியாது. ஆனால், நமது காலை உணவாகத் தயாரிக்கப்பட்ட அப்பங்களில் ஐந்தும் இரண்டு மீன் துண்டுகளும் உள்ளன. அதை எடுத்துச்செல் மகனே''எனக்கூறி  வழியனுப்பி வைத்தார்.

சிறுவனுக்கோ, 'கிறிஸ்து நாதரைப் பார்க்கப்போகிறோம்' என்று மனம் முழுவதும் மகிழ்ச்சி. உற்சாகத் துள்ளலுடன் கிளம்பிப்போனான். அவன் செல்லும் வழியெங்கும் மக்கள் பெரும் திரளாகச் சென்றார்கள். அவர்களோடு சேர்ந்துகொண்டான். 

மலையின் மீது நின்றுகொண்டு கிறிஸ்து பேசத் தொடங்கினர். 

மக்கள் யாவரும் அவரது பேச்சை ஆழ்ந்த அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். நேரமோ , மதியத்திலிருந்து மாலைப்பொழுதை நெருங்கிக்கொண்டிருந்தது.

  அவரது சீடர்களில் ஒருவர் அவரிடம் வந்து, "இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது. மக்களை அனுப்பி வையுங்கள். அப்படிசெய்தால்தான் அவர்கள் உணவருந்திச் செல்ல வசதியாக இருக்கும்" என்று ரகசியமாக அவரது காதில் கூறினார். அதற்கு அவர், ''அவர்களைப் பசியோடு அனுப்புவானேன். நீங்களே அவர்களுக்கு உணவளியுங்கள்'' என்றார். இந்த அகால நேரத்தில்,  எங்கு சென்று இத்தனை பேருக்கும் உணவுப் பொருட்கள் வாங்கி வர முடியுமென யோசித்தனர் சீடர்கள். 

"இயேசு அவர்களின் தயக்கத்தைப் புரிந்துகொண்டு இங்கு வந்திருப்பவர்களில் மதிய உணவாக எவரேனும் உணவு கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று கூட்டத்தைப் பார்த்து வினவினார்.

சிறுவனும் எழுந்து, ''என்னிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் உள்ளன" என்று கூறி தன் கைகளை உயர்த்தினான். அந்தச் சிறுவனை தன்னிடத்தில் வரவழைத்து, அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வாங்கி வானத்தை நோக்கிக் காண்பித்து, ஆண்டவரை நோக்கிப் பிரார்த்தித்தார். அப்பங்கள் பல்கிப் பெருகின. 

பிரசங்கத்தைக் கேட்க வந்த மக்கள் அனைவரையும் வரிசை வரிசையாக உட்காரச் செய்து அவர்களுக்கு, சீடர்கள் உணவைப் பரிமாறத் தொடங்கினர். எல்லோரும் தேவையான அளவு திருப்தியாக சாப்பிட்டு முடித்தனர். அவர்கள் அனைவரும் தங்களது ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானார்கள். அவர்கள் சாப்பிட்டது போக, மிகுதியாக 12 கூடைகளில் அப்பமும் மீன் துண்டுகளும் இருந்தன. அதன் பிறகு இயேசுவும் அவரது சீடர்களும் அங்கிருந்து புறப்பட்டுப்போனார்கள்.