Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

Published:Updated:
கேள்வி-பதில்
கேள்வி-பதில்
கேள்வி-பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்களின் குலதெய்வம் ஸ்ரீசௌடேஸ்வரி அம்மன். சிலர், இந்த அம்மனின் படத்தை வீட்டில் வைத்துக் கும்பிடக்கூடாது என்கிறார்கள்... என்ன செய்வது?

- வி.சுப்ரமணியம், திருப்பூர்-2

உங்களின் குலதெய்வமான ஸ்ரீசௌடேஸ்வரி அம்மன் படத்தை, தாராளமாக வீட்டில் வைத்து வழிபடலாம்!

சான்று இல்லாத மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு, பாமர மக்களின் மனதைக் குழப்பும் செயல்பாடு மறைய வேண்டும். நமது பண்டைய பண்பாட்டை வளர்க்கும் சீரிய நடைமுறைகளை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டது இன்றைய பரம்பரை. அவர்களை நல்வழிப்படுத்த அவர்கள் சிந்தனைக்கு உகந்த முறையில் பண்பாட்டை ஊட்டும் முயற்சி வளர வேண்டும். நாம் பண்பாட்டை ஏற்றால் சிந்தனை வளம் பெருகும். அப்போது, மாற்றுக் கருத்தை வாங்கிக்கொள்ள மனம் இடம் தராது.

கோயில் திருவிழாவுக்குக் காப்புக் கட்டியபிறகு, உள்ளூர்க்காரர்கள் வெளியூர்களுக்கு போகக்கூடாது என்கிறார்களே... ஏன்?

- எஸ்.கார்த்திகேயன், சென்னை-118

உள்ளூர்க்காரர்கள் கோயில் திருவிழாவை நடத்த வேண்டியவர்கள். அந்த செயல்பாட்டில் தடங்கலை அகற்றவே, கையில் பாது'காப்பு’ வளையத்தைத் தரித்திருக்கிறார். இந்த நிலையில், கடமையைப் புறக்கணித்து வெளியே செல்வது புத்திசாலித்தனம் ஆகாது. எடுத்த காரியத்தைப் பாதியில் போட்டுவிட்டுப் போவது அழகல்ல. ஆகையால், திருவிழா முடிந்த பிறகு செல்வதே சிறப்பு!

மகா விஷ்ணுவின் கல்கி அவதாரம், குதிரையில் அமர்ந்து வருவது குறித்து புராணங்கள் கூறும் தாத்பரியம் என்ன?

- ஏ.எச்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை-4

கேள்வி-பதில்

சமுதாயம் முற்றிலும் சீரழிந்து, இனி சீர்திருத்த இயலாது என்கிற சூழலில், கல்கி அவதாரம் நிகழும். உலக வெப்பம் படிப்படியாக உயர்ந்து, தாவரங்களைத் தோற்றுவிக்கும் தகுதியை பூமி இழந்துவிடும். உணவின்றி விலங்கினங்களும் மடிந்து விடும். மனிதர்கள் சக மனிதரையே உணவாக்க முயற்சிப்பர். அப்போது கல்கி அவதாரம் நிகழும்.

வேகமாகச் செயல்படும் வாகனம் குதிரை. தனியருவராக போர் புரியக் கிளம்பும் கல்கிக்கு அந்தக் குதிரை உதவும். எல்லாம் அற்றுப்போன அந்த வேளையில், நமது பண்பாட்டில் ஊறிய ஒரு குடும்பத்தில் தோன்றுவார் கல்கி. அந்தக் குடும்பத்தின் பராமரிப்பில் இருக்கும் குதிரை, அவருக்கு வாகனமாகச் செயல்படும்.

வெப்பம் அதிகமாக அதிகமாக, வாழ்கைக்குத் தேவையான நீர்வளம் குறையும். உயிரினங்களின் வாழ்வு ஸ்தம்பிக்கும். புதுப் படைப்புக்குத் தோதாக, வெப்பத்தில் எல்லாமும் மறைந்து, கடைசியில் தண்ணீரில் மூழ்கிவிடும். இதையே பிரளயம் என்கின்றன புராணங்கள். அதன் பிறகு, படைப்பு தொடரும். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியன பரம்பொருளின் பொறுப்பில் இருப்பதால், படைப்பதற்காக அழிக்க முற்படுகிறார் கல்கி என்பது புராணத் தகவல்.

ஒரே ஆலயத்தில் பல்வேறு தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்யலாமா?

- திருமலை, மதுரை

ஒரே ஆலயத்தில் பல்வேறு இறையுருவங்களை பிரதிஷ்டை செய்யலாம். ஆனால், ஒரு நிபந்தனை... பிரதான தெய்வம் ஒன்றுதான்; கோயிலில் இருக்கும் மற்ற தெய்வங்கள் அனைத்தும் பரிவாரத் தெய்வங்களாகக் காட்சியளிக்கலாம்.

பெருமாள் கோயிலில், மற்ற தெய்வங்கள் பரிவார தேவதைகளாக, பிராகாரத்தில் குடியிருக்கவேண்டியிருக்கும். அதுபோல் ஈசன், கந்தன், கணபதி, அம்பாள் கோயில்களிலும் நடைமுறைப்படுத்தலாம்; ஆகமம் அதை எதிர்க்காது. பிரம்மோற்ஸவம் போன்ற விசேஷங்கள், பிரதான தேவதைக்கு மட்டும் சிறப்பாக நடந்தேறும். நித்ய வழிபாட்டில் பிரதான தேவதைக்கு வழிபாடுகள் நடந்த பிறகுதான் மற்ற தெய்வங்களுக்கு நடந்தேறும்.

பல பிராகாரங்களுடன் திகழும் பெரிய ஆலயங்களில் பரிவார தேவதைகள் தென்படுவது உண்டு. காலப்போக்கில் பிராகாரமே இல்லாத சிறிய கோயில்களிலும்... இருக்குமிடத்திலெல்லாம் பல்வேறு இறையுருவங்களை பிரதிஷ்டை செய்வது சம்பிரதாயமாக மாறியிருக்கிறது. பக்தர்களது விருப்பத்துக்காக, பல்வேறு இறையுருவங்களை, வலம் வரவும் இடமில்லாமல் அடைத்து வைப்பது பெருமைக்கு உரியது அல்ல! கர்ப்பக்கிரஹத்தின் சுவர்களில் கூண்டுக்குள் பல தெய்வங்களை அடைத்து வைப்பதும் முறையல்ல!

கேள்வி-பதில்

எல்லா ஆலயங்களிலும் மோட்ச தீபம் ஏற்றலாமா?

- வனஜா, திருச்சி

  ஏற்றலாம். ஆலயங்களில் உறைந்திருக்கும் இறையுருவம், பரம்பொருளின் மறு உருவம். மூன்று வடிவங்களில் முத்தொழிலை நடை முறைப்படுத்துபவர் அவர்.

ஒட்டுமொத்த துயரத்திலிருந்தும் முற்றிலும் விடுபட்ட நிலை என்பதே, 'மோட்சம்’ என்ற சொல்லுக்கான பொருள். நம்மை விட்டுப் பிரிந்தவர், அந்த நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஏற்றி வைக்கும் தீபம், மோட்ச தீபம் ஆகும்! அந்த நபர், ஒளிமயமான தீபத்தைப் போன்று, ஒளிமயமான பரம்பொருளுடன் இணைந்து, ஒளி வடிவில் நிலைத்து இருக்க வேண்டும்; துயரத்தைச் சந்திக்கும் மறுபிறவியைச் சந்திக்காமல் இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணமே மோட்ச தீபம் ஏற்றுவதற்கான காரணம்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை... இறந்த முன்னோருக்கு, ஆலயத்தில் ஒரு தீபத்தை ஏற்றிவைத்துவிட்டு, அத்துடன் நம் நினைவில் இருந்து அவரை விலக்குவதைவிட, தினம் தினம் வீட்டில் தீபத்தின் முன் நின்று, அவரை நினைத்து வணங்குவது சிறப்பு!

##~##
தர்ப்பையை சிறுநீரகப் பிரச்னைக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்கிறார்களே?!

- வசந்தா ரங்கராஜன், சென்னை (வாய்ஸ் ஸ்நாப்)

தர்ப்பை, சிறுநீரகப் பிரச்னைக்கு மருந்தாகப் பயன்படும் என்பது உண்மைதான். தர்ப்பையின் வேரில் மருத்துவ குணம் அதிகம் உண்டு. அதைப் பயன்படுத்தும் முறை, ஆயுர்வேதத்தின் பரிந்துரையில் நிகழ வேண்டும்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சிறுநீரகப் பிரச்னையை தோற்றுவிக்கும். அதிலும், வாதமும் பித்தமும்தான் முக்கியப் பங்காற்றும்! காற்று- அதாவது வாதம், அதிலிருக்கும் நீரை உறிஞ்சி, வற்றச் செய்யும். பித்தம்- வெப்பத்தால் நீரைச் சுண்ட வைக்கும். இந்த இரண்டு செயல்பாடுகளையும் தடுக்கும் திறமை, இனிப்புக்கும், வழவழப்பான குணத்துக்கும் உண்டு. இந்த இரண்டு தகுதியும் தர்ப்பையின் வேரில் இருப்பதால், அதன் தாக்கம், வாதம் உறிஞ்சுவதையும், பித்தம் சுண்ட வைப்பதையும் தடுத்துவிடும்; பிரச்னைகள் முளைக்காது என்று ஆயுர்வேதம் கூறும் (தர்பஸ்யமூலம் மதுரம் ஸ்னித்தம் பித்தானிலாபஹம்).

எந்தந்த இடங்களிலெல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்?

- எஸ்.கார்த்திகேயன், கொடுங்கையூர்

கேள்வி-பதில்

தங்கம், தீபம், கண்ணாடி, புஷ்பம், பழம், தேங்காய், மஞ்சள், கும்பஜலம் ஆகிய மங்கலப் பொருட்களில் திருமகள் குடியிருப்பாள். பசுவிடமும், அதன் பஞ்சகவ்யத்திலும் அலைமகள் குடியிருப்பாள் என்கிறது சாஸ்திரம்.

எல்லாப் பொருட்களிலும் தென்படும் 'கலை’ அவளது இருப்பிடம். உடலில் தென்படும் அழகு... அதாவது, லாவண்யம் அவள் வசிக்கும் இடம். நம் மனம், எந்தப் பொருளை லக்ஷ்மிகரமாகப் பார்க்கிறதோ அதிலும் திருமகள் தோன்றுவாள். மங்கலகரமான பொருட்களிலும் செயல்களிலும் அவள் குடிகொண்டிருப்பாள். கலையை இழந்த பொருட்களில் அலைமகள் தென்படமாட்டாள். தன லட்சுமி, தான்ய லட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, மோட்ச லட்சுமி - இப்படி எப்பொருளிலும் உட் பொருளாக மிளிர்பவள், ஸ்ரீலட்சுமிதேவி.

ஆச்சார- அனுஷ்டானம் மிகுந்தவர்கள், சுரைக்காய், பூசணி போன்ற காய்களைத் தவிர்க்கிறார்களே, ஏன்?

- செல்லம் ராமமூர்த்தி, ஓசூர்

சீரிய நடைமுறை, உடல்- உள்ளத்தைத் தூய்மையுடன் நிலைநிறுத்தும் செயல்பாடுகள் ஆகியவையே ஆசார- அனுஷ்டானங்கள் ஆகும். இவை, ஒருசாராருக்கு மட்டுமே ஏற்பட்டது அல்ல. மகிழ்ச்சியாக வாழ விரும்பும் அத்தனைபேருக்கும் தேவை.

போர்க்களத்தில் அர்ஜுனனின் குழம்பிய மனம் தெளிவு பெற, அறநெறிகளைப் போதித்தான் கண்ணன். அப்போது, போரில் ஈடுபடும் போராளிகள் குறித்த அறத்தை விளக்கியதுடன், உணவு வகைகளின் தராதரத்தையும் உணர்த்தினான்.

ஸாத்விகம், ராஜஸம், தாமஸம் என்ற மூன்று பிரிவுகளில் உணவுப் பதார்த்தங்களை அடக்கிவிடலாம் என்கிறார். ஆசை, பகை ஆகியன மனத்தை ஆட்கொள்ளும்போது, அசையாமல் அமைதியுடன் செயல்பட வேண்டுமெனில், ஸாத்விக உணவை ஏற்கவேண்டும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றியைச் சந்திக்க ராஜஸ உணவு ஒத்துழைக்கும். அறியாமை, சோம்பல், மயக்கம், தூக்கம் ஆகியவற்றுக்கு ஊக்கமளிப்பது, தாமஸ உணவு. ஆகவே, எப்போதும் ஸாத்விக உணவையே தேர்ந்தெடுக்கவேண்டும் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

உணவு வகைகளில், நல்லதும் கெட்டதும் கலந்துதான் தென்படும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. தென்படும் குறைகளைச் செயலிழக்கச் செய்து, நிறையைப் பெருக்கிப் பயன்படுத்தவேண்டும். அறியாமை, உறக்கம், சுணக்கம், சோம்பல், மயக்கம் போன்றவற்றை தரும் தாமஸ உணவுகளை விலக்க வேண்டும். அவற்றுள் சுரைக்காயும் பூசணியும் உண்டு. விஷப் பரீட்சைக்கு முற்படாமல், இந்த இரண்டையும் விலக்கிவிடுவார்கள் முன்னோர்கள்.

உணவுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டுவிட்ட நம் மனம், சுவைக்கு முன்னுரிமை அளித்து, எதையும் ஏற்கத் தயாராகி விடுகிறது. ஆசையைக் கட்டுப்படுத்த இயலாத மனம் தராதரத்தை அறியாது செயல்படும். ஆகவே, ஆசையைத் தவிர்ப்பது நலம்.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism