Published:Updated:

தண்ணார் தமிழும் கவினார் கலைகளும்!

தண்ணார் தமிழும் கவினார் கலைகளும்!

முழுக்க முழுக்கச் சிற்பங்களைத் தொகுத்து, ‘தண்ணார் தமிழும் கவினார் கலைகளும்’ என்ற ஒளிப்படக் காட்சித் தொகுப்பை உருவாக்கியுள்ளார் வரலாற்று ஆய்வாளர்  முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம். இதன் நோக்கம் என்ன என்பது பற்றி அவரிடம் கேட்டபோது...

தண்ணார் தமிழும் கவினார் கலைகளும்!

‘‘தண்ணார் தமிழ் என்னும் சொற்றொடரை அருளியவர் மணிவாசகப் பெருமான். குளிர்ந்த தமிழ் என்பது இதன் பொருள். தமிழை மொழி, இலக்கியம் என்ற பார்வைகளில்தான் பெரும்பாலோர் நோக்குவர். அதுபோன்றே சிற்பம், ஓவியம், செப்புத் திருமேனிகள் போன்ற கலையியல் படைப்புகளை அழகியல் நோக்கில் காண்பர். தமிழகத்தில் உள்ள கலைப்படைப்புகள் பலவும் தமிழ் மொழியையே அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பெற்றவையாகும். தமிழ்க் கவிதை மரபில் சித்திரக் கவி என்றொரு மரபு உண்டு. அக்கவி மரபில் கலையும் கவிதையும் பின்னிப்பிணைந்து காணப்பெறும் அதுபோன்றே தமிழகத்துக் கோயில்கள்தோறும் இடம்பெற்றுள்ள சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், ஓவியங்கள் இவையனைத்தும் தமிழ்க் கவிதைகளைச் சுமந்த வண்ணம்தான் காட்சி நல்குகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தண்ணார் தமிழும் கவினார் கலைகளும்!

ஆரம்பப் பள்ளிகளில் தமிழ் எழுத்துக்களைப் பயிலும் சிறார்கள் ‘ந’ என்ற தமிழ் எழுத்தை காகத்தின் உருவமாக மாற்றுவார்கள். ‘ய’ என்ற எழுத்தைத் தலைகீழாக எழுதி, யானையின் உருவத்தை அதில் காட்டுவார்கள். அப்போது மொழி கலையாகப் பரிணமிக்கும். தமிழகத்துச் சிற்பிகள் தேவாரம், பிரபந்தம், திருமுறைகள், பெருங்காப்பியங்கள் ஆகியவற்றில் தோய்ந்து, அவற்றை உள்வாங்கி, தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த அற்புத கலையியல் மரபை ஒளிப்படக் காட்சிகள் மூலம் விளக்கிக் காட்டுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்.

இந்தத் தொகுப்பை ஐந்தாறு மாதத்துக்கு முன்பு சிங்கப்பூரில் நடந்த விழா ஒன்றில் திரையிட்டேன். அதன் தொடர்ச்சியாக, வரும் 27.7.15 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் எதிரில் உள்ள பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் திரையிட இருக்கிறோம்’’ என்றார் குடவாயில் பாலசுப்பிரமணியம்.

திருப்புகழ்ச் சங்கம், குமரன்குன்றம் திருப்புகழ் மன்றம், திருமயிலை சிங்காரவேலர் திருப்புகழ் சபை ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த ஒளிப்படக்காட்சியை நாமும் கண்டுகளிப்போம். பயன்பெறுவோம்.

- இ.ராஜவிபீஷிகா