Published:Updated:

புண்ணிய பூமி!

புண்ணிய பூமி!

டம்பரங்களையும் வெற்று ஆரவாரங்களையுமே நாகரிகங்களாகக் கண்ட இந்த உலகில், ஆன்ம பலத்தை உயிர்நாடியாகக் கொண்டு திகழ்ந்த ஒரு தேசம் உண்டு என்றால், அது நமது பாரத தேசம்தான். பிறக்க முக்தி தரும் தலம், இறக்க முக்தி தரும் தலம், நினைத்தாலே முக்தி தரும் தலம் என்றெல்லாம் புராணங்கள் புகழும் திருத்தலங்கள் பல்லாயிரம் நிறைந்த பூமி இது. சிவனார் உறையும் திருக்கயிலை, ஶ்ரீமந் நாராயணன் உறையும் வைகுண்டம் இவற்றுக்கு நிகரான க்ஷேத்திரங்களையும் தன்னகத்தே கொண்ட புண்ணிய பூமி நமது பாரத பூமி!

மஹான்களும் மஹரிஷிகளும் சித்த புருஷர்களும் சிறப்பித்துப் போற்றிய இந்தப் புண்ணியபூமியில் தலையாய சில தலங்களை இந்தத் தொடரின் வாயிலாக நாம் தரிசித்து மகிழப்போகிறோம். அந்த வரிசையில் முதல் திருத்தலம்... தலக்காவிரி!

புண்ணிய பூமி!

எந்தவிதமான நோன்பும், தவமும் இன்றி, அன்றாட வாழ்வின் அலைக்கழிப்பில் அல்லாடும் ஒரு சாதாரணனுக்கும் அன்னை பிரத்யட்சமாகக் காட்சி தரும் தலம் - தலக்காவிரி!

ஆம்! ஆடிக்கு ஆடி, பெருக்கெடுத்து ஓடி வந்து அவனியை நனைத்து, அகிலத்தாரை அரவணைக்கும் காவிரி அன்னையைத்தான் அகங்குளிர இப்போது தரிசிக்க இருக்கிறோம். கர்நாடக மாநிலம்... காபித் தோட்டங்களும், தைல மரங்களும் நிறைந்த குடகு நாடு. பனி மேகங்கள் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைகள். அங்கே, அகத்திய முனிவர் அருந்தவம் செய்து பிரம்மனைத் தரிசித்த பிரம்மகிரிக் குன்றங்கள். இங்குள்ள தலக்காவிரி யில்தான் குன்றாத ஜீவநதியாக அன்னை அவதரிக்கிறாள்.

புண்ணிய பூமி!

இங்கே, பிரம்ம குண்டம் எனும் இரண்டடிக்கு இரண்டடி என்ற சிறிய சதுரவடிவ சுனையில்தான் அன்னை காவிரி அவதரித்து, பின்பு பிரமிக்க வைக்கும் பிரமாண்டமான அலைகள் புரளும் மகாநதியாக விசுவரூபம் எடுத்து விரைகிறாள். யுகம் யுகமாக காவிரித் தாய் இங்கே ஊற்றெடுத்துக்கொண்டே இருப்பதை ஒரு கணம் கண் மூடி யோசித்தால், இது எப்பேர்ப் பட்டதொரு தெய்வசக்தி என்பதை உணர்ந்து சிலிர்க்க முடியும். அந்த பிரம்மகுண்டத்தில் பக்தர்கள் இறைத்திருக்கும் வெள்ளிக்காசுகள், காவிரி கலகலவெனச் சிரிப்பது போன்றதொரு தோற்ற மாயையை அளிக்கிறது.

பிரம்மகுண்டத்தில் ஊற்றெடுக்கும் காவிரி, அதை ஒட்டியுள்ள சற்றே பெரிய குளத்தில் நிறைந்து, அமைதியானதொரு புன்னகையுடன் தன் நீண்ட நெடும்பயணத்தைத் துவக்குகிறாள். இந்தக் குளத்தில் பக்தர்கள் புண்ணிய நீராடி, காவிரியின் கருணையை யாசிக்கிறார்கள். பிரம்மகுண்டமே அவள் சந்நிதியாக உணரப்பட்டு பூஜைகளும், வழிபாடுகளும், வேண்டுதல்களும் ஜலரூபிணிக்கே அர்ப்பணிக்கப்படுகின்றன.

பிரம்மகிரிக் குன்றத்தில், நிலமட்டத்திலிருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் உள்ள இந்தக் குறிப்பிட்ட குறுநிலத்தைத் தன் பிறப்பிடமாக, காவிரி அன்னை எப்படித் தேர்ந்தெடுத்தாள்?

வைகுந்தம்! திருமாலின் திருவுளம், உலகைக் காக்கும் உன்னதப் பணிக்கான திட்டம் ஒன்றைத் தீட்டிக் கொண்டிருந்தது. சிந்தனையின் முடிவில், ஆதிசக்தியின் அம்சமாக லோபாமுத்ரா என்னும் கன்னிகையை உருவாக்கினார்.

“லோபாமுத்ரா, உலக நன்மைக்காக உன்னை உருவாக்கியிருக்கிறேன். உன் அவதரிப்புக்கான காரணத்தை இப்போதே அறிந்துகொண்டால், இக்கணமே நீ என்னை விட்டுப் பிரிந்து விடுவாய். காலம் கனியும்போது, கருவினில் தங்காமல் உருவானது எதற்காக என்று உனக்குப் புரியும்” என்று அனந்தசயனன் அருளுரை வழங்கினார்.

லோபாமுத்ரா கன்னிப்பருவத்தை எய்தினாள்.

தனது திட்டத்தைச் செயல்படுத்தும் நேரம் வந்து விட்டதை உணர்ந்த மஹாவிஷ்ணு, பிரம்ம தேவனை அழைத்தார். லோபாமுத்ராவை அவருக்கு வழங்கினார்.

அதே நேரம், பிரம்மகிரிக் குன்றத்தில் கவேர மகரிஷி, பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து கொண்டிருந்தார். பிரம்மன் பிரத்யட்சமாகி, “வேண்டும் வரம் கேள்” என்றார். “எனக்கு ஒரு மகள் வேண்டும்” என வேண்டினார் கவேர மகரிஷி. உடனே பிரம்மன் லோபாமுத்ராவை கவேர மகரிஷிக்கு வழங்கினார். கண்ணுக்கு நிறைவான லோபாமுத்ராவை, கவேர மகரிஷி தமது மகளாக ஏற்றுக் கொண்டார்.

இமயத்திலிருந்து பொதிகை நோக்கி வந்து கொண்டிருந்த அகத்தியர் கவேர ஆசிரமத்துக்கு வந்தார். லோபாமுத்ராவைப் பார்த்தார். அவளு டைய அழகும் அடக்கமும் முனிவரை வசீகரித்தன. அவளை தர்மபத்தினியாக ஏற்க விரும்பினார். தமது விருப்பத்தைக் கவேர மகரிஷியிடமும் லோபாமுத்ராவிடமும் தெரிவித்தார்.

என்ன பதிலைச் சொல்வது என்று புரியாமல் லோபாமுத்ரா தடுமாறினாள். மஹாவிஷ்ணு, லோபாமுத்ராவின் வாக்கில் வந்தமர்ந்தார். “ஐயனே, திருமணத்துக்குப் பின் ஒரு நாழிகைகூட என்னைப் பிரியாமல் இருப்பதாகத் தாங்கள் வாக்குக் கொடுத்தால் மட்டுமே திருமணத்துக்கு நான் சம்மதிக்க முடியும்” என்றாள் லோபாமுத்ரா. அகத்தியரும் ஒப்புக்கொண்டார். திருமணம் அமோகமாக நடந்தேறியது.

புண்ணிய பூமி!

ஒரு நாள், அவசியம் காரணமாக அகத்தியர், பிரம்மகிரிக் குன்றத்தின் மறுபுறத்தில் இருக்கும் கனிக நதிக்கு, லோபாமுத்ராவை விட்டு விலகிச் செல்லவேண்டி இருந்தது. எனவே, லோபா முத்ராவை அவர் தமது தவ வலிமையால் நீர் வடிவமாக்கிக் கமண்டலத்தில் நிரப்பினார். அதைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லி சிஷ்யர்களுக்கு உத்தரவிட்டுவிட்டு, மலையின் மறுபுறம் போனார்.

கமண்டலத்தில் நீராக நிரம்பியிருந்த லோபா முத்ராவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. சுழன்றாள். அமைதியின்றிப் பரிதவித்தாள். திடீரென இப்படி ஓர் உணர்வு தன்னை ஆட் கொள்ள என்ன காரணம் என்று யோசித்தாள். அவளது உள்ளத்தில் உண்மை உதயமானது. தான் ஆதிசக்தியின் அம்சம்; இவ்வுலக மக்களுக்கு உதவவே லோபாமுத்ராவாக தனது பிறப்பு நிகழ்ந்திருக்கிறது என்கிற உண்மை அது.

உடனே லோபாமுத்ரா, தனது பிறவி நோக்கத்தை நிறைவேற்றத் தீர்மானித்தாள்.

‘ஒரு நாழிகையும் பிரியேன்’ என வாக்குக் கொடுத்த அகத்தியர் திரும்பி வரத் தாமதமானதால், அவரை விட்டுப் பிரிவது என்று முடிவெடுத்தாள். அடைபட்டிருந்த கமண்டலத்திலிருந்து தளும்பி, தரணி மீது தாவிக் குதித்தாள். அகத்தியரின் சீடர்கள் வழிமறித்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க லோபாமுத்ரா, பூமிக்குள் பாய்ந்து, சற்று தூரம் பூமிக்கு அடியில் ரகசியமாகவே பயணம் செய்து, நாக தீர்த்தம் என்னும் இடத்தில் வெளிப்பட்டாள். அங்கே நாகதேவர்கள் அவளை வழிமறித்தனர். அவர்களிடம் அவள் தனது அவதார நோக்கத்தை விவரிக்க, நாக தேவர்கள், அவளுக்கு வணங்கி வழிவிட்டார்கள். லோபா முத்ரா லோக க்ஷேமத்துக்காக முன்னேறினாள்.

அகத்தியரின் கமண்டலத்திலிருந்து அன்னை பராசக்தியின் அம்சமான லோபாமுத்ரா வெளிப் பாய்ந்த இடம்தான் இன்றைக்கு தலக்காவிரியில் பிரம்மகுண்டம் என்ற புண்ணிய ஊற்றாக வழிபடப் பெறுகிறது. பிரம்மகுண்டம் சந்நிதி தவிர, இங்கே விநாயகருக்கும் சிவபெருமானுக்கும் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.

புண்ணிய பூமி!

அகத்தியர் பிரம்மகிரியில் தங்கியிருந்தபோது, மணலையே அள்ளி லிங்கமாகப் பிடித்து, சிவனாக வழிபட்டார். வெள்ளிக் கவசம் அணிந்திருக்கும் அந்த மணல் லிங்கம், இன்று அகத்தீஸ்வரர் என்று வழிபடப்படுகிறது. தலைக்காவிரியில் சாமுண்டீஸ்வரிக்கும் ஒரு சந்நிதி உண்டு. நித்திய பூஜைகளில் சாமுண்டீஸ்வரிக்குத்தான் கடைசி பூஜை நடத்தப்படுகிறது.

இங்கிருக்கும் அரச மரம் புனிதமானது. அகத்தியரால் விதைக்கப்பட்டது. மும்மூர்த்திகளும் இந்த அரசமரம் மூலமாகத்தான் அகத்தியருக்குக் காட்சியளித்தனர் என்கிறது புராணம். அரச மர மேடையில், நாகதேவனுக்கும் ஒரு சந்நிதி கிடைத்திருக்கிறது.

தலக்காவிரியில் இருந்து சுமார் 400 படிகள் மேலே ஏறிப் போனால், பிரம்மகிரி குன்றத்தின் இன்னொரு முக்கிய தலத்தையும் தரிசிக்கலாம். ஆதவன் அஸ்தமனமான பின்பு சப்தரிஷிகளும் இங்கேதான் கூடுகின்றனர் என்று நம்பப்படுகிறது. அந்த ரிஷி சிரேஷ்டர்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்பதால், தலக்காவிரிக்கு வரும் பக்தர்கள் மாலை 6 மணிக்கு மேல் அங்கே இருக்க அனுமதிக்கப்படுவதில்லை.

ஐப்பசி மாதம், சூரியன் துலா ராசியில் பிரவே சிக்கும் நேரம் (அக்டோபர் 17 அல்லது 18) காவிரி தீர்த்தோத்பவமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த முகூர்த்த நேரம் ‘காவிரி சங்கராந்தி’ என்று அழைக்கப்படுகிறது.

முகூர்த்த நேரத்தில் பிரம்மகுண்டத்தில் காவிரி அன்னை பால் பொங்குவதுபோல் பொங்கி எழுந்து, கூடியிருக்கும் லட்சக் கணக்கான பக்தர் களைப் பரவசப்படுத்துவாள். குடகு தேசத்தைச் சேர்ந்தவர்களுக்குக் காவிரியே குலதெய்வம். அன்னை பராசக்தி காவிரியாக அவதரித்த தினமாகவே அவர்கள் இந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

குடகு மாவட்டத்தில் மெர்க்காரா என்றும், மடிக்கரே என்றும் அழைக்கப்படும் மலைவாச ஸ்தலம் ஊட்டியைப் போலவே ரம்மியமானது. அங்கிருந்து பனித்திரை படர்ந்த மலைப்பாதையில் பாகமண்டலம் வழியாக தலக்காவிரி வரை செல்ல நிறைய தனியார் பேருந்துகளும் அரசுப் பேருந்துகளும் இயங்குகின்றன.

புண்ணிய பூமி!

காவிரி நதி, கனிக நதி- இவற்றுடன் கண்ணுக்குப் புலப்படாமல் அந்தர்வாகினியாக கஜ்யோதி நதியும் பாகமண்டலத்தில் சங்கமிக்கிறது. இந்தச் சங்கமத்தில் நீராடினால், செய்த பாவங்கள் எல்லாம் கரைகின்றன. பக்தர்கள் நீராட வசதியாக படித்துறைகள் அமைந்துள்ளன. நீராடிய பின்னர், அருகிலேயே அமைந்திருக்கும் பாகமண்ட லேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று ஈஸ்வரனை தரிசித்துவிட்டுத் தலக்காவிரிக்குச் செல்லலாம்.

கேரள பாணிக் கூரையுடன் பாகமண்டலேஸ் வரர் ஆலயம், மலைப் பின்னணியில் அற்புதமாகக் காட்சியளிக்கிறது. ஆலயத்தின் நுழை வாயிலி லேயே தனிச்சந்நிதியில் சந்தனக்காப்புடன் எழுந்தருளியிருக்கிறார் விநாயகர். கருவறையில் லிங்க வடிவில் பாகமண்டலேஸ்வரர். தரிசனம் முடிந்து வெளிவரும்போது, மனதில் மட்டற்ற மகிழ்வும், நிறைவும் ததும்புவது நிச்சயம்!

பாவங்களைக் கரைத்த கையோடு, தலக் காவிரியில் புனித நீராடினால் புண்ணியம் சேரும். பாகமண்டலத்திலிருந்து தலக்காவிரி 8 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கே பிரம்ம குண்டத்தை ஒட்டி அமைந்திருக்கும் குளத்தில் பக்தர்கள் நீராடலாம். உடை மாற்றிக்கொள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக அறைகள் உள்ளன. காவிரி அன்னையின் மடியாகவே கருதப்படும் இந்தக் குளத்தில் மூழ்கி நீராடும்போது, அன்னை நம்மைக் குழந்தை யாக பாவித்து அணைத்து, அன்புடன் உச்சி முகர்வதுபோன்ற உணர்வு! துன்பங்களும் கவலை களும் சடுதியில் கரைந்து போகின்றன.

மடிக்கரேவிலிருந்து விடியற்காலையில் புறப்பட் டால் ஆற அமர நிதானமாக அத்தனையையும் அனுபவிக்கலாம். குழந்தைகளுடன் குடும்பத்தினர் அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய தலம் தலக்காவிரி.

- தரிசிப்போம்...

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்: தலக்காவிரி

தலம் அமைந்துள்ள மாநிலம்: கர்நாடகா

அன்னையின் திருநாமம்: காவிரி

எங்கே உள்ளது?: மடிக்கரே என்னும் மெர்க்காரா வில் இருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில்

எப்படிப் போவது?: மைசூருக்கு ரயிலிலோ,  பேருந்திலோ, காரிலோ சென்று, அங்கிருந்து  மடிக்கரேவுக்குப் பேருந்திலோ, காரிலோ செல்லலாம். மடிக்கரேயில் இருந்து பாகமண்டலா வரை பேருந்து மற்றும் காரில் செல்லலாம். பாகமண்டலாவில் இருந்து தலக்காவிரிக்குப் பேருந்து, கார் மற்றும் வாடகை ஜீப்களில் செல்லலாம்.  
 
எங்கே தங்குவது?: மடிக்கரேயில் வசதியான தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன. 
 
தரிசன நேரம்: காலை 6.00 முதல் மாலை 6.00 வரை

(‘அதுசரி... பிள்ளையார் கமண்டலம் கவிழ்க்க, காவிரி பாய்ந்தோடிய கதையொன்று உண்டே... அது என்னவாயிற்று?!’ என்றொரு கேள்வி எழலாம். அந்தக் கதையையும், இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களையும் www.vikatan.com/astrology-ல் காணலாம்.)

அடுத்த கட்டுரைக்கு