Published:Updated:

சித்தமெல்லாம் சித்தமல்லி!

நிவேதிதா

சித்தமல்லி... சித்தர்கள் உலவிய பூமி. அவர்களின் அருள்திறம் காலமெல்லாம் பொலிவுடன் திகழப் போகும் புனித பூமி. இந்தப் புண்ணிய பூமியில்தான் எத்தனை எத்தனை மகான்களும் சித்தர்களும் தங்களுடைய அருளாடல்களை நிகழ்த்தி இருக்கிறார்கள்?!

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, நூற்றுக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் வாழ்ந்திருந்த இந்த க்ஷேத்திரம், நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது. இந்தப் புண்ணிய பூமி, விரைவிலேயே உலகப் பிரசித்தி பெறப்போகிறது என்பது ஒரு மகானின் அருள்வாக்கு!

காவிரி நதியின் கிளை நதியான கொள்ளிடம் ஆற்றின் கிழக்குத் திசையில், அமைதியான இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இந்தத் தலத்தில், கொள்ளிடம் ஆறு உத்தரவாகினியாகப் பாய்வதால், காசிக்கு நிகரான புனிதம் பெறுகிறது. இந்தத் திருத்தலத்துக்கு காஞ்சி மஹாஸ்வாமிகள் விஜயம் செய்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருமூலர் இத்தலத்தில் தங்கியிருந்து கயிலாச நாதரை வழிபட்டதாக ஐதீகம். அவரைப் போன்ற சித்தர்கள் பலரும் இங்கே தங்கி இருந்து தவம் செய்தபடியால், இந்த க்ஷேத்திரத்துக்கு சித்தமல்லி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

சித்தமெல்லாம் சித்தமல்லி!

இந்தப் புண்ணிய பூமி விரைவிலேயே உலகப் பிரசித்தி பெறப்போவதாக அருள்மொழி கூறிய அந்த மகானுக்கும் இந்த க்ஷேத்திரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த மகான் யார் என்பதையும், அவரின் அருள்மொழி கேட்ட பக்தை யார் என்பதையும் பிறகு பார்ப்போம். அதற்கு முன், சுமார் ஐந்நூறு வருஷங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி இங்கே காண்போமா?

அனைத்து வேத சாஸ்திரங்களிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தவரும், மந்திரங்களை முறைப்படி பாராயணம் செய்பவரும் ஆன ஓர் இளைஞர், தன் மனைவியையும் ஒரே மகனையும் காப்பாற்றுவதற்காக வேண்டி, அவர்களை ஊரிலேயே தங்கியிருக்கும்படி சொல்லிவிட்டு, தாம் வேத சாஸ்திரங்கள்  கற்ற ஊரான கும்பகோணத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அப்படிச் செல்லும் வழியில், ஒரு கிராமத்தை அடைந்தார். கசங்கிய உடையும், பசியால் வாடிய தேகமுமாகக் காணப்பட்ட அவர், அங்கே ஒரு வீட்டில் வேத சாஸ்திரிகளுக்கு சமாராதனை நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து, அந்த வீட்டுக்குச் சென்றார். அந்தக் காலத்தில், கிராமங்களில் ஏதேனும் ஒரு வீட்டில் சமாராதனை நடைபெற்றால், அதில் வேதம் படித்தவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்; யாரும் தடை செய்யமாட்டார்கள். எனவே, அந்த இளைஞரும் அந்த வீட்டுக்குள் உரிமையோடு சென்றார். ஆனால், அந்த வீட்டுக்குச் சொந்தக்காரரான கிராம அதிகாரி, கசங்கிய உடையும் தளர்ந்த தேகமுமாகக் காணப்பட்ட அந்த இளைஞரை உள்ளே அனுமதிக்காமல், வெளியிலேயே நிற்கவைத்தார். வேத பாராயணங்கள் முடிந்து அனைவரும் சாப்பிட அமர்ந்தபோது, அந்த இளைஞரும் சாப்பிடச் சென்றார். அப்போதும் அவரைத் தடுத்த கிராம அதிகாரி, வேத விற்பன்னர்கள் சாப்பிட்ட பிறகு அவர்கள் உடம்பில் பூசிக்கொள்வதற்கான சந்தனத்தை அரைத்து வைக்கும்படி உத்தரவிட்டு, அவரை வீட்டின் பின்பக்கம் அனுப்பி விட்டார். அந்த இளைஞரும் அவர் சொன்னபடியே சென்று, அங்கிருந்த கல்லில் சந்தனம் அரைக்கத் தொடங்கினார். அப்படி அரைக்கும்போது மந்திரங்களை ஜபித்துக்கொண்டே அரைத்தார்.

சித்தமெல்லாம் சித்தமல்லி!

அவர் சந்தனம் அரைத்து முடிக்கவும் வேத விற்பன்னர்கள் சாப்பிட்டு முடிக்கவும் சரியாக இருக்கவே, கிராம அதிகாரி அந்த இளைஞர் அரைத்த சந்தனத்தை அவர்களுக்குக் கொண்டு வந்து கொடுக்குமாறு உத்தரவிட்டார். அவரும் அப்படியே செய்தார். அவர் தந்த சந்தனத்தை வாங்கி அவர்கள் தங்கள் உடலில் ஆனந்தமாகப் பூசிக்கொண்டனர். ஆனால், அடுத்த சிறிது நேரத்திலேயே, அவர்கள் உடல் முழுவதும் அனலாகச் சுட்டெரித்தது; கொப்புளங்களும் தோன்றின. வலி பொறுக்கமாட்டாமல் அவர்கள் அலறினர். கிராம அதிகாரி பதறிப் போனார். சந்தனம் அரைத்த இளைஞரை அழைத்து, மிரட்டி, விசாரித்தார்.

சந்தனம் அனலாக அவர்களைச் சுடுவதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்த அந்த இளைஞர், தாம் சந்தனம் அரைக்கும் போது ஜபித்த அக்னிசூக்தத்தின் விளைவுதான் இப்படி என்ற முடிவுக்கு வந்தார். உடனே அவர், தாம் அரைத்த சந்தனத்தில் மீதி இருக்கிறதா என்று கேட்டு வாங்கி, அதை மீண்டும் வருணசூக்தம் ஜபித்தபடி அரைத்து, அதை அந்த வேத விற்பன்னர்களிடம் கொடுத்துப் பூசிக் கொள்ளச் சொன்னார். அவர்கள் அப்படியே செய்யவும், அனலாகத் தகித்த உடம்பு குளிர்ந்ததுடன், கொப்புளங்களும் மறைந்தன.

ஜபத்தின் மூலமாகவே சந்தனத்தை தகிக்கவும் குளிரவும் செய்த அந்த இளைஞரின் ஆற்றலைக் கண்ட வேதவிற்பன்னர்கள் வியப்பும் மரியாதையும் கொண்டவர்களாக அவரை நமஸ்கரித்தார்கள். கிராம அதிகாரியோ, பெரிய மகானை தான் மதிக்கத் தவறிவிட்டோமோ என்று பயந்துபோனவராக, அந்த இளைஞரின் கால்களில் விழுந்து வணங்கியதுடன், அவரை உள்ளே அழைத்து உபசரித்து, உணவு அளித்து, புது வஸ்திரங்களும் பொற்காசுகளும் கொடுத்து அனுப்பினார்.

இப்படிப்பட்ட ஆற்றல் கொண்ட அந்த இளைஞர்தான் பின்னாளில் மகானாக மேன்மையுற்று, கற்பக விருக்ஷமாக  பலருக்கும் வேண்டியதை வேண்டியபடி அருளிக்கொண்டு இருக்கிறார். அந்த மகான்தான், தம்முடைய பக்தை ஒருவரிடம், சித்தமல்லி க்ஷேத்திரம் விரைவிலேயே உலக பிரசித்தி பெறப்போகிறது என்று அருள்வாக்கு அருளியவர்.

அதே சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த ஓர் அன்பருக்கு, சில மாதங்களுக்கு முன்னால், ஒரு சந்தியாகாலத்தில் தரிசனம் தந்தார் அந்த மகான். சித்தமல்லி வெகு விரைவில் பிரசித்தி பெறப் போகிறது என்று தாம் சொன்னதற்குக் காரணமாக அமைந்திருந்த ஓர் இடத்தையும் அடையாளம் காட்டி அருளினார்.

அந்த அன்பருக்கு ஏற்பட்ட அந்த அமானுஷ்ய அனுபவத்துக்குப் பிறகு, அவருடைய மனநிலை அடியோடு மாறிப்போனது.

அந்த மகான் யார்?

அந்த மகான் அடையாளம் காட்டிய இடத்தில் அப்படி என்னதான் அதிசய சக்தி இருக்கிறது?

வாருங்களேன், சித்தமல்லிக்கு..!

- சித்தம் சிலிர்க்கும்...