அமைதி... ஆனந்தம்... ஆனைக்கட்டி!
அன்பும் அமைதியும் ஒருசேரப் பெற்ற வாழ்க்கையைவிடவும் ஆனந்தம் தருவது வேறு எதுவும் இல்லை. ஆனால், அந்த அன்பும் அமைதியும் எவருக்கும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. காரணம், நம்முடைய மனம் சதா அலைபாய்ந்துகொண்டே இருப்பதுதான். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. அலைபாய்வதுதான் மனித மனத்தின் இயல்பு. நம்முடைய மனதை உள்முகமாகத் திருப்பித் தியானிக்கும்போது, அலைபாயும் மனம் அமைதி கொள்ளும்; அமைதி கொண்ட மனம் இறைவனின் கோயிலாகும்; அங்கே அன்பும் ஆனந்தமும் பெருக்கெடுக்கும்!
நம்முடைய மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்ய வேண்டுமானால், புறச்சூழலும் ஒத்துழைக்க வேண்டும். அப்படி ஒரு பொருத்தமான இடத்தில் அமைந்திருக்கிறது சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆனைக்கட்டி ஆசிரமம்.
இயற்கைப் பெண்ணரசி எழில்கோலம் கொண்டிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், கோவையில் இருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் உள்ள ஆனைக்கட்டி என்ற இடத்தில், வேத கால ரிஷிகள் அருளிச் சென்ற ஒப்பற்ற வேதாந்த ஞானத்தை நமக்கெல்லாம் போதிக்க வேண்டும் என்னும் உயர்ந்த லட்சியத்துடன், ஆர்ஷ வித்யா குருகுலம் என்ற பெயரில், 1980களின் இறுதியில் சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகளால் ஏற்படுத்தப்பட்ட ஆசிரமம் இது. இங்கே குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறவிருப்பதை அறிந்து, விழாவில் கலந்துகொள்ளவும், ஆசிரமத்தின் அமைதியில் லயித்துப் போகவும் விரும்பி, கடந்த 5ம் தேதி காலை ஆசிரமத்துக்குச் சென்றோம்.

இளம்காலைப் பொழுதில் வெகு ரம்யமாகக் காட்சி அளித்தது ஆசிரமம். ஆசிரம அலுவலகத்துக்குச் சென்று, சுவாமிஜியின் அணுக்கத் தொண்டரான ராமன்ஜி என்பவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, சுவாமிஜியை தரிசிக்கவேண்டும் என்னும் நம் விருப்பத்தைத் தெரிவித்தோம். 'அவசியம் நீங்கள் வந்திருப்பதை சுவாமிஜியிடம் சொல்லி ஒப்புதல் பெற்றுத் தருகிறேன். அவர் தரிசனம் தரத் தயாராவதற்குள், ஆசிரமத்தில் உள்ள தெய்வ சந்நிதிகளைச் சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்' என்று சொன்ன ராமன்ஜி, நமக்கு வழிகாட்ட ஒருவரையும் கூடவே அனுப்பி வைத்தார்.
ஆசிரமத்தின் ஒரு பகுதியில் அமைந்து இருந்த மண்டபத்தில் ஞான கணபதி என்ற திருப்பெயருடன் விநாயகப் பெருமானும், மேதா தட்சிணாமூர்த்தியும் காட்சி தருகின்றனர். மற்றொரு பகுதியில் நர்மதேஸ்வரர் சந்நிதியும், ஞானேஸ்வரி அம்பிகை சந்நிதியும் அமைந்திருக்கிறது. தெய்வ மூர்த்தங்களை நாம் தரிசித்துக் கொண்டிருந்த நேரத்தில் ராமன்ஜி பரபரப்பாக நம்மிடம் வந்து, ''வாருங்கள், சுவாமிஜி வெளியில் கிளம்புவதற்கு முன்பாக, அவரை நீங்கள் தரிசித்து விடலாம்'' என்று சொல்லி, ஓர் குடிலுக்குள் அழைத்துச் சென்றார்.
'கங்கா’ என்ற பெயரில் அமைந்திருந்த அந்த எளிய குடிலில் ஒரு சாய்வு நாற்காலியில் ஸ்வாமிஜி அமர்ந்திருந்தார். ராமன்ஜி நம்மை அவரிடம் அறிமுகப்படுத்தி வைக்க, சுவாமிஜியின் இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பியது. முகம் மலர, கனிவுடன் கை உயர்த்தி ஆசிர் வதித்தார். தொடர்ந்து, குருப்பெயர்ச்சி விழா பற்றி சன்னமான குரலில் பேசத் தொடங்கினார்.

''தமிழக மக்களுக்குத் தெய்வ நம்பிக்கை அதிகம். அதேபோல் ஜோதிஷத்திலும் நம்பிக்கை அதிகம். அதனால்தான் சனிப் பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி போன்ற நிகழ்ச்சிகளில் பக்திபூர்வமாகவும் நம்பிக்கையுடனும் கலந்துகொள்கிறார்கள். ஒருவருக்கு நல்ல வழிகாட்ட ஒரு குரு அவசியம். குருவுக்கெல்லாம் மேலான குருவாக இருப்பவர் மேதா தட்சிணாமூர்த்தி. அதனால்தான் குருப்பெயர்ச்சி அன்று தட்சிணாமூர்த்தியைப் பிரதானமாக வழிபடுகிறோம். ஒருவருக்கு குருவருள் இருந்தால்தான் திருவருள் கிடைக்கும்'' என்றவர், குருப்பெயர்ச்சி தொடர்பான நுட்பமான விளக்கங்களைப் பகிர்ந்துகொண்டார்.
சக்தி விகடன் பத்திரிகைக்கும், அதன் வாசகர்களுக்கும் அவருடைய ஆசியுரையைக் கேட்டோம்.
''பாரம்பர்யம் மிக்க ஆனந்தவிகடன் குடும்பத் திலிருந்து ஆன்மிகத்துக்கென்றே பிரத்யேகமாக வெளியாகும் சக்தி விகடன் பத்திரிகை, மக்களிடையே தெய்வ நம்பிக்கையை அதிகரிக்கச் செய்து வருகிறது. பல கோயில்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. க்ஷீணித்துக் கிடக்கும் பல கோயில்களில் திருப்பணிகள் நடந்தேறி, வழிபாடுகள் நடக்கவும் கட்டுரைகள் வெளியிட்டு, வாசகர்கள் மூலமாக உதவி செய்துவருகிறது. இது பாராட்டப்பட வேண்டிய விஷயம். சக்தி விகடன் வாசகர்கள் அனைவரும் குருவருளும் திருவருளும் பெற்றுச் சிறப்புடன் வாழ ஆசிர்வதிக்கிறேன்'' என்று கண்களை மூடி தியானித்தபடி ஆசி வழங்கினார்.
சுவாமிகளை நமஸ்கரித்து விடைபெற்றதும், ராமன்ஜி நம்மை உணவுக்கூடத்துக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டி தந்து உபசரித்தார். எளிமையும் ஆரோக்கியமும் கொண்ட சிற்றுண்டியை முடித்துக்கொண்டு, மீண்டும் தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு வந்தோம்.

அங்கே அபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தன. குருப்பெயர்ச்சி விழாவில் கலந்துகொள்ள வந்தவண்ணம் இருந்த பக்தர்கள், தங்களால் இயன்ற அளவு பூஜா திரவியங்களையும் எடுத்து வந்து சமர்ப்பித்தனர். ஏற்பாடுகளை முன்னின்று கவனித்துக் கொண்டிருந்த ஸ்வாமிணி சாரதானந்தா மாதாஜியிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஆசிரமம் பற்றிய விவரங்களைக் கேட்டோம்.
''ரிஷிகளால் அருளப்பட்ட வேத சாஸ்திரங் களை மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஸ்வாமிகளால் 1980களின் இறுதியில் தொடங்கப்பட்டதுதான் இந்த ஆர்ஷ வித்யா குருகுலம். ரிஷி என்னும் வார்த்தையிலிருந்து பிறந்தது ஆர்ஷ என்னும் வார்த்தை. ஆர்ஷ வித்யா என்றால், ரிஷிகளிடம் இருந்து கிடைக்கப் பெற்ற ஞானம் என்று பொருள். அந்த ஞானம் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமத் துக்கு வரும் பக்தர்கள் வழிபட ஓர் ஆலயம் அமைக்க விரும்பினார் ஸ்வாமிஜி.
அப்படி அமைந்த ஆலயத்தில் ஞான கணபதி, மேதா தட்சிணாமூர்த்தி, நர்மதேஸ்வரர், ஞானேஸ்வரி ஆகிய தெய்வ மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்ததுடன், ஆசிரமத்தின் சற்று உயரமான பகுதியில் ஓர் ஆலயம் அமைத்து, அங்கே வள்ளி தெய்வானையுடன் கல்யாண முருகனையும் பிரதிஷ்டை செய்தார்'' என்றார் சாரதானந்தா மாதாஜி.
இறைவனுக்கு நர்மதேஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டதற்கான காரணம் பற்றிக் கேட்டோம்.
''சுவாமிஜி ஆலயப் பணிகளைத் தொடங்கிய போது, அவரின் சீடர் ஒருவர் தரிசிக்க வந்தார். நர்மதை நதியில் ஸ்நானம் செய்யச் சென்றபோது, அதில் கிடைத்ததாகச் சொல்லி அவர் ஒரு பாணலிங்கத்தை சுவாமிஜியிடம் கொடுத்தார். நர்மதை நதியில் இருந்து கிடைத்ததால், அந்த பாணலிங்கத்தை நர்மதேஸ்வரர் என்ற பெயருடன் பிரதிஷ்டை செய்துவிட்டார் சுவாமிஜி'' என்றவர், பூஜைக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டும் என்றும், அதற்குள் நம்மை கல்யாண முருகன் கோயிலுக்குச் சென்று தரிசித்துவிட்டு வருமாறும் சொல்லிவிட்டுச் சென்றார்.

முருகன் கோயிலுக்குச் செல்லும் வழி என்ற அறிவிப்புப் பலகை காட்டிய பாதையில் பயணித்து, கோயிலை அடைந்தோம். ஆசிரமத்துக் குள் இயற்கையாகவே அமைந்திருந்த ஒரு சிறிய குன்றில், அந்த அழகனின் ஆலயம் அமைந்திருக்கிறது.
அங்கிருந்து பார்த்தபோது தெரிந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் முழுமையான அழகு இன்னும்கூட நம் நெஞ்சை விட்டு அகலவில்லை.
இயற்கைப் பெண்ணரசி அரசாட்சி புரியும் ரம்யமான அந்த இடத்தில் நிலவிய பேரமைதி நம் மனதில் அச்சத்தை ஏற்படுத்தவில்லை; மாறாக, அளவற்ற ஆனந்தத்தையே தந்தது! அங்கேயே சற்று நேரம் அமர்ந்து அந்த ஆனந்த அனுபவத்தை மனதுக்குள் நிரப்பிக்கொண்ட பின்னர், மீண்டும் தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு வந்தோம்.
நாம் சந்நிதியை அடையவும் அபிஷேகங்கள் தொடங்கவும் சரியாக இருந்தது. ஸ்வாமிணி சாரதானந்தா அவர்களுடன் மற்ற சீடர்களும் வெளிநாட்டு பக்தர்களும் தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம், அஷ்டகம், காயத்ரீ, தியான ஸ்லோகம் போன்றவற்றை ஆத்மார்த்தமாகப் பாராயணம் செய்து கொண்டிருக்க, தட்சிணா மூர்த்திக்கு கிரமப்படி அபிஷேகங்கள் நடைபெற்றன. வெளிநாட்டு பக்தர்கள்கூட தங்கள் கைகளில் ஸ்தோத்திரப் புத்தகங்களை வைத்துக்கொண்டு மனமொன்றி பாராயணம் செய்த காட்சியைக் கண்டபோது, நம்முடைய வழிபாட்டு முறைகளிலும் வேதாந்த தத்துவங் களிலும் அவர்கள் கொண்டிருந்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் புரிந்துகொள்ள முடிந்தது.
அபிஷேகங்கள் முறைப்படி நிறைவு பெற்றதும்,அலங்காரம் செய்வதற்காகத் திரை போடப்பட்டது. அலங்காரங்கள் முடிய எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்று தெரியவரவே, நாம் மறுபடியும் ஆசிரமத்துக்குள் ஒரு சுற்று வந்தோம்.

ஓர் இடத்தில் ஸ்வாமிஜியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஒரு கலைக்கூடம் அமைக்கப்பட்டு இருந்தது. ஆர்வத்துடன் உள்ளே சென்றோம். சுவாமிஜியின் பிள்ளைப் பிராயத்துப் படங்கள் முதல், அவர் வேத சாஸ்திரங்கள் பயின்றது, அவரின் குருமார்கள், சுவாமி சின்மயானந்தரிடம் சந்நியாச தீட்சை பெற்றது, வெளிநாடுகளில் வேதாந்த வகுப்புகள் எடுத்தது போன்றவற்றை விவரிக்கும் படங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், சுவாமிஜியைச் சந்திக்க வந்த முக்கிய பிரமுகர்கள் சுவாமிஜியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இருந்தன.
கும்பகோணம்திருவாரூர் சாலையில் உள்ள மஞ்சக்குடி கிராமத்தில் ஸ்வாமிஜி பிறந்த வீடு, அந்தக் கிராமத்தில் ஸ்வாமிஜி மேற்கொண்ட மக்கள் நலப் பணிகள் போன்றவற்றை விவரிக்கும் படங்களும் இடம்பெற்றிருந்தன. சுவாமிஜியின் வாழ்க்கை முழுமையையும் ஆதியோடந்தமாக விளக்கும் வண்ணம் அந்தக் காட்சியகம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காட்சியகத்தைப் பார்த்துவிட்டு, தட்சிணாமூர்த்தி சந்நிதிக்குத் திரும்பியபோது, இன்னும் சற்று நேரத்தில் அலங்காரம் முடிந்து, திரை விலக்கப்படும் என்று அங்கிருந் தவர்கள் பேசிக் கொண்டார்கள். சில நிமிடங்களில் சுவாமிஜி அங்கே எழுந்தருளப்போவதாகவும், அவர் வந்ததும் மேதா தட்சிணா மூர்த்திக்கு ஆராதனைகள் நடைபெற இருப்ப தாகவும் அறிவித்துவிட்டுச் சென்றார் ஒருவர்.

அவர் சொன்னபடியே சற்றைக்கெல்லாம் ஸ்வாமிஜி அங்கே எழுந்தருளி, மேதா தட்சிணாமூர்த்தியைப் பிரார்த்தித்தபடி, பஞ்சாட்சர மந்திரத்தை மெல்லிய குரலில் ஜபித்தபடி இருந்தார். அதே நேரம், சந்நிதியின் திரை விலக, தீப ஆரத்தியில் ஞானஜோதி ஸ்வரூபனாகத் திருக்காட்சி தந்தார் மேதா தட்சிணாமூர்த்தி. அற்புதமான மலர் அலங்காரம்.
அந்த ஞானமூர்த்தியின் அருட்கோலத்தில் திளைத்தவராகச் சில நிமிடங்கள் அங்கே இருந்த ஸ்வாமிஜி, பின்னர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். தட்சிணாமூர்த்திக்கு ஆராதனைகள் நிறைவு பெற்றதும், பக்தர்களுக்குப் பிரசாதமும் உணவும் வழங்கப்பட்டன.
வந்திருந்த பக்தர்கள் அனைவரும் குருபகவான் மேதா தட்சிணாமூர்த்தியின் தரிசனமும், தங்கள் குருவாகிய ஸ்வாமிஜியின் தரிசனமும் கிடைக்கப் பெற்ற மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் அங்கிருந்து புறப்பட்டனர்.
தயானந்தர் என்கிற தமது பெயருக்கேற்ப, சுவாமிஜி தம்மை நாடி வருபவர்களுக்குத் தயையுடன் கூடிய பூரணமான அன்பையும், அமைதி நிரம்பிய ஆசிரமச் சூழல் மூலமாக அளவற்ற ஆனந்தத்தையும் அள்ளித் தருகிறார் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களாக, அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் கிளம்பினோம்.
எஸ்.கண்ணன்கோபாலன்
படங்கள்: த. ஶ்ரீநிவாசன்
(தயானந்த சரஸ்வதி சுவாமிகளைப் பற்றிய விரிவான கட்டுரை அடுத்த இதழில்!) குருவின் மகிமை... குருவருள் ஏன் தேவை? தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் அருளுரையை வீடியோ வடிவில் பார்க்க www.bit.ly/dayanandha