வள்ளுவர் வழியில்...
ஒரு வாரத்துக்கும் மேலாக நண்பர் ரொம்ப பிஸியாக இருந்தார். என்னுடன் வாக்வித்டாக் அரட்டைக்கு பார்க் பக்கம் வரவில்லை. வருடத்துக்கு இரண்டு முறை இப்படி 'ஒரு வார லீவு’ போட்டுச் சென்றுவிடுவார், அப்ளிகேஷன் எதுவும் கொடுக்காமல்! நண்பரின் அப்பா, அம்மாவுக்குத் திதி என நானும் புரிந்துகொள்வேன்.
இந்த ஒரு வாரத்தில், திதி முடிவதற்குள் இருபது தடவை புரோகிதருக்கு போன் செய்துவிடுவார். ''பத்து மணிக்கெல்லாம் வந்துடுங்க' என்பதைப் பத்து முறை அழுத்திச் சொல்வார். ''ஏனோதானோன்னு இல்லாம சிரத்தையா பண்ணி வைக்கணும், சொல்லிட்டேன்! மந்திரங்களை எக்ஸ்பிரஸ் வேகத்துல சொல்லிட்டுப் போகக்கூடாது. நிறுத்தி நிதானமா, புரியற மாதிரி சொல்லணும். சொல்ல மறந்துட்டேனே... காரியம் நடந்து முடியறவரைக்கும் உங்க செல்போனை சைலன்ட் மோட்ல போட்டுடணும்' என உத்தரவுகள் பிறப்பிப்பார்.

சமையல் மாமிக்கும் நண்பரேதான் போன் செய்வார். ''அஞ்சரை மணிக்கெல்லாம் வந்துடுங்க. பஸ் கிடைக்கலே, ஆட்டோ கிடைக்கலே, டிராஃபிக் ஜாம்னு சால்ஜாப்பெல்லாம் சொல்லக்கூடாது. டாண்ணு ரெண்டு மணிக்கெல்லாம் இலை போட்டாயிடணும். அப்புறம், போன தடவை சமையல்ல உப்பு அதிகம். பார்த்துக்கோங்க. சாப்பிடறவா முகம் சுளிச்சா எனக்குத்தான் பாவம்!' என்றெல்லாம் கட்டளைகள் பறக்கும்.
முன்கூட்டியே வெண்ணெய் வாங்கி வந்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவார். கோசாலைக்குச் சென்று விறகு, வறட்டி வாங்கி வைப்பார். காய்கறி, பழங்கள் வாங்கி வரும் பொறுப்பையும் அவரேதான் எடுத்துக்கொள்வார். ஓர் அழுகல், முற்றல் இருக்காது. பக்கத்து வீட்டுச் செடியிலிருந்து வெற்றிலையும், துளசியும் பறித்து வைப்பார். இப்படி ஒவ்வொன்றையும் மிக அக்கறையுடன் பார்த்துப் பார்த்துச் செய்து, திதியை செவ்வனே நிறைவேற்றி வைப்பார் நண்பர்.
நண்பரிடம் எனக்குப் பிடித்த விஷயம் ஒன்று உண்டு. ஒரு சிலர் மாதிரி, பெற்றோர் இருக்கும் வரை அவர்களை உதாசீனப்படுத்தியும், முதியோர் இல்லத்தில் தள்ளியும் கஷ்டப்பட வைத்துவிட்டு, அவர்கள் போன பிறகு விழுந்து விழுந்து திதி கொடுக்கும் ரகம் இல்லை அவர். இறுதிக்காலம் வரை பெற்றோரைத் தன்னுடனே வைத்துப் போற்றிப் பாதுகாத்தவர் அவர்.
'தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை’
என்பது வள்ளுவர் வாக்கு.
வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்ற தன்னை நிலைப்படுத்திக்கொள்ளுதல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்கு உரியன என்கிறார் அவர். இதற்கு கண்ணெதிரே நடமாடும் உதாரணமாகத் திகழ்பவர் என் நண்பர்.
வீயெஸ்வி
ஓவியம்: வேலன்