தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீசாயி பிரசாதம்

ஸ்ரீசாயி பிரசாதம்

நானாசாஹேபும் ராம்கீர்புவாவும், குதிரை வண்டியில் வந்தது யார் என்று தெரியாமல் திகைத்து நின்ற போது, ரயிலடியில் நடந்த ஒரு விஷயம் ராம்கீர்புவாவின் நினைவுக்கு வந்தது.

ரயிலடியில் இருந்து நானாசாஹேபின் வீட்டுக்கு எப்படிப் போவது என்று தவித்துக்கொண்டு இருந்தபோது, தன்னை அழைத்துப் போக வந்த நபர், ''இங்கே ஷீர்டியில் இருந்து வந்திருக்கும் பாபுகீர்புவா யார்?'' என்று கேட்டார் அல்லவா? ராம்கீர்புவாவின் பெயரை பாபுகீர்புவா என்று மாற்றி அழைப்பது பாபா மட்டும்தான். இதை நானாசாஹேபிடம் தெரிவித்த ராம்கீர்புவா, பாபாவே குதிரை வண்டியுடன் ரயிலடிக்கு வந்து, தன்னை ஜம்னாரில் இறக்கிவிட்டுச் சென்றதாகத்தான் தான் உணர்வதாகக் கூறினார். பாபாவின் அளப்பரிய கருணைத் திறம் கண்டு இருவருமே மெய்சிலிர்த்துப் போனார்கள்.

மனிதர்களிடையில்  நிலவக்கூடிய அனைத்து பேதங்களையும் அறவே அகற்றுவதற்காக அவதரித்தவர்தான் ஸ்ரீசாயிநாதர். மக்கள் அனைவரும் சாயி பக்தர்கள் என்ற ஒரு குடையின் கீழ் வரவேண்டும் என்பதற்காகத்தான் அவர் எண்ணற்ற பல அருளாடல்களை நிகழ்த்தியுள்ளார். மற்றபடி, அவரிடம் வரும் அனைத்து பக்தர்களின் பிரச்னைகளையும் அவர் தீர்த்து விடுவதில்லை.

ஸ்ரீசாயி பிரசாதம்

இதுபற்றி பாபாவிடம் கேட்டபோது, ''ஒரு மரத்தில் பூக்கும் அத்தனை பூக்களுமே காய்ப்பது இல்லை; காய்க்கும் காய்கள் அத்தனையுமே கனிவதும் இல்லை. அதுபோல, என்னிடம் வரும் பக்தர்கள் அத்தனைபேரின் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. அவரவர் வினைப்பயனை அவரவர்கள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்'' என்றார்.

பாபா இப்படிச் சொல்லிவிட்டாலும், அவரை தரிசித்த மாத்திரத்திலேயே பக்தர்கள் அளவற்ற மனச் சாந்தியையும் சந்தோஷத்தையும் பெற்றார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இங்கே அப்படி ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

ஷீர்டிக்கு அருகில் இருந்த அகமது நகரில், சுந்தரிபாய் என்ற இளம்பெண் தன் கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாள். இல்லற தர்மத்தின்படி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்து வந்த அந்தத் தம்பதியரின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கிவிட்டது. அவளுடைய கணவனுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, உடல்நலம் குன்றியது. எத்தனை வைத்தியம் பார்த்தும் பலன் இல்லை. அப்போது சுந்தரிபாய், ஷீர்டியில் இருக்கும் சாயிநாதர் தம்முடைய பார்வையாலேயே நோய்களைக் குணப்படுத்துகிறார் என்று கேள்விப்பட்டு, கணவனையும் அழைத்துக் கொண்டு ஷீர்டிக்குச் சென்றாள்.

ஸ்ரீசாயி பிரசாதம்

துவாரகாமாயிக்குச் சென்று, பாபாவின் பாதங்களில் பணிந்து வணங்கி, தன் கணவனின் உயிரைக் காப்பாற்றி அருளுமாறு பிரார்த்தித்துக் கொண்டாள். அவளைத் தம்முடைய கருணை ததும்பும் பார்வையால் கனிவுடன் பார்த்த பாபா, ''தாயே, கவலைப்படாதே! நீ எப்போதும் திடமாகவும் தைரியமாகவும் இருக்கவேண்டும். விரைவில் நீ தாயாகப்போகும் பேற்றினை அடையப்போகிறாய்'' என்று ஆறுதல் கூறினார். பாபாவின் வார்த்தைகளால் மிகவும் சந்தோஷம் அடைந்த சுந்தரிபாய், கணவனுடன் வீட்டுக்குத் திரும்பினாள்.

ஆனாலும், அவளின் கணவன் நோய் குணமாகாமல் விரைவிலேயே இறந்துவிட்டான். சுந்தரிபாய்க்கோ வேதனையைத் தாங்கமுடியவில்லை. கணவன் இறந்துவிட்ட துன்பத்தை விடவும், பாபாவின் வார்த்தைகள் பொய்யாகிப் போனதுதான் அவளுக்குப் பெரும் துன்பத்தைத் தந்தது. ஆற்றாமையும் கோபமுமாக அவள் நேராக ஷீர்டிக்குச் சென்றாள்.

''பாபா, நானும் என் கணவரும் தங்களைத்தானே ஒரே புகலிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்தோம். காலமெல்லாம் அவர் உங்களைத்தான் தெய்வமாக வழிபட்டு வந்தார். அவரை என்னிடம் இருந்து பறித்துவிட்டீர்களே! என்னை திடமாகவும் தைரியமாகவும் இருக்கும்படி சொன்னீர்களே! அதுமட்டுமா, நான் தாயாகப் போவதாகவும் சொன்னீர்களே? என் கணவரே போய்விட்ட பிறகு, நான் எப்படித் தாயாக முடியும்?'' என்று ஆற்றாமையும் ஆத்திரமுமாக முறையிட்டாள். அவளுடைய கதறல் அங்கிருந்த அத்தனை பேரின் உள்ளங்களையும் துன்பத்தில் ஆழ்த்தியது.

அவளை ஆழ்ந்த அன்புடன் பார்த்த பாபா, ''அம்மா, என்னுடைய வார்த்தைகள் ஒருபோதும் பொய்ப்பது இல்லை. இந்தத் துவாரகாமாயியில் இருந்துகொண்டு நான் எப்போதும் சத்தியத்தை மட்டுமேதான் பேசுவேன் என்பது உனக்குத் தெரியாதா? நான் உன்னிடம் என்ன சொன்னேன்? உன்னுடைய கணவனைக் காப்பாற்றுவதாகச் சொல்லவில்லையே! நீ எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் திடமாகவும் தைரியமாகவும் இருக்கவேண்டும் என்றுதானே சொன்னேன்? விதிப்படிதான் உன் கணவன் இறக்க நேரிட்டது. இதில் என் பொறுப்பு எதுவும் இல்லை'' என்றார்.

''அப்படியானால், நான் தாயாகப் போவதாகச் சொன்னீர்களே, கணவர் இல்லாத நிலையில், அது எப்படிச் சாத்தியமாகும்?'' என்று கேட்டாள் சுந்தரிபாய்.

ஸ்ரீசாயி பிரசாதம்

''அம்மா, வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கும் குழந்தைகளுக்குத்தான் தாயாக முடியுமா என்ன? நீ இனிமேல் இங்குள்ள அனைவருக்கும் தாய்தான். இங்கு வரப்போகும் அத்தனை பேருக்கும் நீ தாய்தான்! நானே உன்னை அம்மா என்றும் தாயே என்றும்தானே அழைக்கிறேன்! ஆக, எனக்கும் நீ தாய்தான்!'' என்ற சாயிநாதர், அங்கிருந்தவர்களைப் பார்த்து, ''இந்தச் சுந்தரிபாய் இன்று முதல் நம் எல்லோருக்கும் அம்மாவாக இருந்து, அன்பு செலுத்தப் போகிறாள். இவளை நாம் 'ராதாகிருஷ்ண மாயி’ என்று அழைப்போம்'' என்றார்.

பாபாவின் அமுதம் நிகர்த்த வார்த்தைகள் ரசவாதம்போல் சுந்தரிபாயின் மனதில் அளவற்ற ஆனந்தத்தை ஏற்படுத்தின. அந்தக் கணமே அவளுடைய உள்ளத்தில் தாய்மை அன்பு பெருக்கெடுக்கத் தொடங்கியது. யாருக்குக் கிடைக்கும் இந்தப் பேறு? கிடைப்பதற்கரிய பேற்றினைப் பெற்ற அந்தப் பெண்ணரசி, பாபாவிடமும் அவர்தம் பக்தர்களிடமும் அளவற்ற அன்பு கொண்டவளாகச் சேவை செய்து வந்தாள்.

சுந்தரிபாய் என்ற ராதாகிருஷ்ண மாயி பாபாவுக்குத் தாயானது போலவே, பாபாவுக்கு ஒரு பிள்ளையும் கிடைக்கவே செய்தான்.

அந்தப் பிள்ளை யார்? பாபா அவரைத் தம் பிள்ளையாக ஏற்றுக்கொண்டது எப்படி?

மேகச்யாம் பகவந்த்ராவ் ரேகே என்பவர்தான் பாபாவுக்கே பிள்ளையாகும் பெரும்பேறு பெற்றவர்.

ஸ்ரீசாயி பிரசாதம்

அவரையும்கூட பாபா பலமுறை சோதித்துப் பார்த்திருக்கிறார். பாபாவிடம் பலரும் பலவிதமான லௌகிக பிரச்னைகளுக்காக வந்தாலும், ஆன்மிக நாட்டம் கொண்டு, தான் யார் என்பதையும் தான் எங்கிருந்து, எதில் இருந்து வந்தோம் என்பதையும் அறிந்து, அதிலேயே கலந்துவிட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் வருபவர்கள் மிகச் சிலரே! அந்தச் சிலருள் ஒருவராக பாபாவின் அருளுக்குப் பாத்திரமாகி, அவருக்குப் பிள்ளையுமானவர் ரேகே.

ஆசாரமான அந்தணக் குடும்பத்தில் பிறந்த ரேகே, பூர்வஜென்ம புண்ணியத்தின் பலனாக, பிள்ளைப்பருவத்தில் இருந்தே இறைவனிடம் ஆழ்ந்த அன்பும் பக்தியும் செலுத்தி வந்தார். படிக்கும் நேரம் போக பெரும்பாலான நேரங்களில், தியானத்திலேயே திளைத்திருந்தார். மன் நாராயணனை துருவன் பூஜிப்பது போன்ற ஒரு படத்தை வைத்துக்கொண்டு வழிபடத் தொடங்கிய ரேகே, தனக்கும் இறைவனுக்கும் இடையில் துருவன் தடையாக இருப்பதாக நினைத்து, ஒருநாள் அந்தப் படத்தில் இருந்த துருவன் படத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தான் இருப்பது போன்ற பாவனையுடன் தியானித்து வந்தார்.

எல்லாம் ஸ்ரீமன் நாராயணனே என்று ஒருமித்த எண்ணத்துடன் வாழ்ந்திருந்த ரேகே, பாபாவின் பக்தரானது எப்படி?

ஒருநாள் இரவு, அவர் கண்ட ஒரு கனவின் மூலம்தான் அவர் பாபாவைப் பற்றி அறிந்து கொள்ள நேர்ந்தது. அந்தக் கனவில் அவருக்குக் காட்சி தந்தது யார்? அவரை பாபாவிடம் கொண்டு சேர்த்தது யார்?

பிரசாதம் பெருகும்.
எஸ்.கண்ணன்கோபாலன்
ஓவியம்: ஜெ.பி.