Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்!

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்

பெண் ஜாதகம். 7-ம் வீட்டில் குரூர கிரகம் ஒன்று இருக்கிறது.  அதாவது சூரியன், சனி, செவ்வாய், ராகு-கேது ஆகிய ஐந்தில் ஒன்று. இவை அனைத்தும் வெப்ப கிரகங்கள். அத்துடன் பாப கிரகங்கள், அசுப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லாமல் குரூர கிரகம் என்று குறிப்பிடுகிறது ஜோதிடம். இந்த கிரகங்களின் இயல்பு எதிரிடையான செயலில் ஈடுபடத் தயாராக இருக்கும்!

குரூர கிரகம் 8-ல் இருந்தால் பதியை (தலைவனை) இழப்பாய் என்று சொல்லும் (க்ரூரேஷ்டமே விதவதா). குரூர கிரகமான கேது முழு நிலவை மறைக்கத் தயாராகிறார் என்று சொல்லும் (க்ரூர க்ரஹ: ஸகேது சந்திரமஸம் பூர்ணமண்டலம்...). செவ்வாயை குரூர கிரகம் என்று குறிப்பிடும் ஜோதிடம் (க்ரூரத்குத்), பார்வை வாயிலாகவே செவ்வாய் தனது செயல்பாட்டை இறுதிசெய்வான் என்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

7-ல் இருக்கும் குரூர கிரகம் பலமிழந்து, அதை ஒரு சுப கிரகம் 7-ம் பார்வையாகப் பார்த்தால், கணவன் மனைவியை ஒதுக்கி விடுவான் என்று விவரிக்கும் (த்யூநெஹீனபலெ...). நீசம், சத்ருக்ஷேத்ரம், மெளட்யம், அஸ்தம், ககம் ஆகியன பலத்தை இழக்கவைக்கும் தகுதிகள். 7-ல் இருக்கும் கிரகம் பலவீனமாக இருக்கும்போது, சுப கிரகத்தின் பார்வையானது, அவளுக்குக் கணவனின் அன்பு கிடைக்காமல் அவனிடம் இருந்து விலக்கி வைக்கிறது. அந்த கிரகம் கணவனை அழிக்கவில்லை. ஆனால் கணவனிடமிருந்து கிடைக்கவேண்டிய அன்பு மறுக்கப்பட்டுவிடுகிறது. 7-ல் பாப கிரகம் இருந்தால், அவள் விதவையாவாள் என்ற கோட்பாடு இங்கு செயல்படவில்லை. சுப கிரகத்தின் பார்வையால் பாப கிரகத்தின் தகுதி இழக்கப்படவும் இல்லை. இங்கு வேறுவிதமான பலனைச் சுட்டிக்காட்டுகிறது ஜோதிடம். பலமிழந்த பாப கிரகமானது, கணவனின் அன்பை மனைவி சுவைக்க முடியாமல் செய்தது. அதற்கு சுயபலம் இல்லாததால், சுப கிரகத்தின் பார்வை உதவியாக இருந்தும், அதை நடைமுறைப் படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டது.

முன்னோர்கள் சொன்னார்கள்!

பலனை இறுதி செய்யும் தகுதி...

பலமிழந்த கிரகங்கள் எதுவும், மற்ற கிரகங்களின் ஒத்துழைப்பில் பலம் பெற்று நல்ல பலனை நடைமுறைப்படுத்தும் என்று சொல்லாது. உதாரணமாக நீசம் பெற்ற குருவை சுப கிரகம் பார்த்தால், குருவுக்கு பலம் அதிகரிக்காது. தகுதி இருந்து ஒத்துழைப்பைப் பெற்ற கிரகமானது, அதன் செயல்பாட்டை செவ்வனே செய்யும் என்கிறது ஜோதிடம்.

பாவாதிபதி, பாவத்தில் இருந்தால் பாவ பலன் இழக்கப்படமாட்டாது. 7-ல் செவ்வாய் 7-க்கு உடையவனாக இருந்தால், அந்த பாவத்தை அவன் அழிக்கமாட்டான். பெண்ணானவள், கணவனின் இன்பத்தைச் சுவைத்து மகிழ்வாள்; கணவனை இழந்து விதவையாக மாட்டாள். அவளை கணவன் ஒதுக்கமாட்டான். லக்னாதிபதி எந்த பாவத்தில் இருந்தாலும் அந்த பாவம் சிறப்புப் பெறும். லக்னாதிபதி செவ்வாயாக இருந்து, அவர் 7-ல் இருந்தாலும் விபரீத பலன் இருக்காது. 7-ல் சூரியன் இருக்கிறார் அல்லது பாப கிரகங்களில் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. அப்போது, 7-க்கு உடையவன் பலம் பொருந்தியிருந்தால், கணவனை இழக்கமாட்டாள்; கணவனின் அன்பும் இழக்கப்பட மாட்டாது என்று சொல்லும். 7-ல் வீற்றிருக்கும் கிரகத்தைவிட, அதன் அதிபதி பலனை இறுதி செய்யும் தகுதி பெற்றவனாக மாறிவிடுவான்.

7-ல் செவ்வாயும் சனியும்

ஆண் ஜாதகம். மகர லக்னம் 7-ல் கடகத்தில் செவ்வாயும் சனியும் சேர்ந்து இருக்கிறார்கள். இரண்டும் வெப்ப கிரகங்கள். ஆண் ஜாதகத்தில் 7-ல் பாப  கிரகம் இருந்தால் மனைவி தங்கமாட்டாள் என்று சொல்லும். இங்கு, ஒன்றுக்கு இரண்டாக பாப கிரகங்கள் இருக்கின்றன. செவ்வாயும் சனியும் இணைந்தாலே விபரீத பலனைச் சொல்லும் (அக்னி மாருத யோகம்) ஜோதிடம். சனி, செவ்வாய் பார்வை லக்னத்துக்கு இருக்கும். லக்னத்தை பலவீனப்படுத்தி, மனைவியின் அன்பை இழக்கவைக்கும். 7-ல் கடகத்தில், அந்த இருவரும் அந்த பாவத்தின் பலனை மாற்றி அமைக்கிறார்கள். அதாவது, அவர்களது 7-ம் பார்வையில் அவன் (லக்னம்) தகுதி இழக்கப்பட்டு, அன்பை ஏற்க முடியாமல் செய்யவேண்டும். மனைவியை இழந்து (களத்ர தோஷம்) அந்த பலனை அனுபவிக்கவேண்டும். ஆனால், அதற்கு நேர்மாறாக மனைவி இழக்கப்பட மாட்டாள். மனைவியின் தரம் குன்றாது. அவள் தனது பங்கை முழுமையாக தலைவனுக்கு அளித்து மகிழ்விப்பாள் என்று பலன் சொல்லும் ஜோதிடம் (ஸௌராரயோ: மதகயோ ரமிருதாம் சுராசி ஸம்ப்ராப்தயோ ரிஹபவேத்கில சோபனாஸ்த்ரீ).

மகர லக்னத்தில் பிறந்த ஜாதகனின் 7-ல், அதாவது கடகத்தில் சனி, செவ்வாய் சேர்ந்து இருக்கும்போது, அவனது மனைவி நல்ல நடத்தை, உயர்ந்த குணங்கள் கொண்டவளாகவும், பண்பிலும் பணிவிடையிலும்  சிறந்தவளாகவும், ஒழுக்கம் உள்ளவளாகவும் இருப்பாள் என்கிறது. இது, ஜோதிடத்தின் பொது கோட்பாட்டுக்கு எதிரிடையானது. இங்கு 7-ல் கடகத்தில் செவ்வாயும், சனியும் சேர்ந்து இருக்கிறார்கள். செவ்வாய் நீசன்; பலமிழந்தவன். சனி லக்னத்துக்கு (மகரம்) உடையவன் (லக்னாதிபதி எந்த பாவத்தில் இருந்தாலும் அந்த பாவம் தகுதி இழக்காது). நல்ல பலனை செய்பவன். நீசமான செவ்வாயின் உச்ச ராசியான மகரத்துக்கு உடைய சனியின் சேர்க்கையால் நீசபங்க ராஜ யோகம் உருவாகிவிடுகிறது. எனவே,  சனியின் பலத்துக்கு ஒத்துழைப்பவனாக செவ்வாய் மாறிவிடுகிறான்; அதாவது, லக்னாதிபதியின் சேர்க்கையில் நல்லவனாக மாறிவிடுகிறான். ஆகவே, அவர்கள் இருவரது பார்வை லக்னத்துக்கு பலம் ஊட்டுவதாக மாறிவிடும். தற்போது லக்னமும் (அவனும்) 7-ல் (அவளும்) பலம் அடைந்த நிலையை எட்டுவதால், தாம்பத்தியத்தைச் சுவைத்து மகிழ்பவர்களாக மாறிவிடுகிறார்கள் என்று ஜோதிடம் விளக்கும்.

முன்னோர்கள் சொன்னார்கள்!

ஜோதிடத்துக்கு உடன்பாடு உண்டா?

7-ல் பாப கிரகம் இருந்தால் மனைவி இழப்பு அல்லது கணவனின் இழப்பு என்று பலன் சொல்வதில் ஜோதிடத்துக்கு உடன்பாடில்லை. 7-ல் செவ்வாயைப் பார்த்து, கணவன் அல்லது மனைவியின் இழப்பை இறுதி செய்யும் ஜோதிட விளக்கம் தவறானது. அத்துடன் இருவரிலும் 7-ல் செவ்வாய் இருந்தால், இருவருக்கும் இழப்பில்லை என்ற முடிவும் தவறானது. 'தோஷ ஸாம்யம்' என்ற கோட்பாட்டுக்கு ஆதாரம் இல்லை. பிற்பாடு வந்த ஜோதிட மேதைகளின் சான்றில்லாத விளக்கம் அது. தசா ஸந்திக்கும் சான்று கிடையாது.

‘தோஷ ஸாம்யம்’ எனும் தனிச்சொல் (டெக்னிக்கல் வேர்ட்) ஆயுர்வேதம் கையாண்ட பாரி பாஷிகச் சொல்லாகும். உடலில் வாதம், பித்தம், கபம்  ஆகியன சமமாக இருந்தால், ஆரோக்கியம் இருக்கும் என்று சொல்லும். அவை சமமாக இல்லையெனில் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும் என்று சொல்லும் (விகாரோ தோஷ வைஷம்யம் தோஷஸாத்ம்யம் அரோகதா). தோஷ ஸாத்ம்யம் என்ற சொல்லை, தோஷஸாம்யம் என்று உருமாற்றி இங்கு இடைச்செருகலாகப் புகுத்தியிருக்கலாம் என்று சொல்பவர்களும் உண்டு. ஆகவே, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோட நினைக்கக்கூடாது.

தோஷ ஸாம்யத்தை வரையறுப்பதில், ஜோதிட மேதைகளிடம் மாறுபட்ட அளவுகோல் இருப்பதால், பொருத்தம் உண்டு அல்லது இல்லை என்று சொல்வதில் அவர்களுக்குச் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. இன்றைய நாளில், சேர்ந்திருக்கிறது என்று ஒருவர் சொன்னால், மற்றொருவர் சேராது என்பார். ஒருவர் தோஷ ஸாம்யம் உள்ளது என்றால், மற்றவர் இல்லை என்பார். தோஷத்துக்கு எண்ணிக்கையை தன்னிச்சையாகச் சுட்டிக்காட்டி, சேரும் - சேராது என்பதை நிர்ணயிப்பார்கள். இந்தத் தகவலை கணினியில் ஏற்றி, அதற்கு அங்கீகாரத் தையும் அளித்திருக்கிறார்கள். ஆனால், இவற்றில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை.

இன்றைய நிலை!

படித்தும் பரிமளிக்காமல் இருப்பவர்கள், வேலையின்றி தவிப்பவர்கள், வேலையில் மற்றவர்களோடு ஒத்துப்போகாமல் வெளியேறியவர்கள், வியாபாரத்தில் நுழைந்து நலிந்துபோனவர்கள், வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் ஆகியோரில் பலரும் ஜோதிடர்களாக  அவதாரம் எடுத்து வளைய வருகிறார்கள். இவர்களில் பொது அறிவும், சொல்வளம் மிகுந்தவர்களும் பிரபலங்களாக மாறிவிடுகிறார்கள். மகான்கள் சிலரும் அவர்களுக்கு அருள் செய்து ஊக்குவிக்கிறார்கள்!

குருகுல சம்பிரதாயத்திலோ அல்லது கல்லூரியிலோ பயின்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பலமொழிகளில் இருக்கும் கையேடுகளை வைத்துக்கொண்டு, மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்படுபவர்களும் உண்டு. திருமணத் தேர்வில் முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் பலர், இவர்களிடம் மாட்டிக் கொண்டு, பின்னாளில் திருமண முறிவைச் சந்தித்து துயரத்தைத் தழுவுகிறார்கள். பொறுப்புள்ள மகான்களும் இதையெல்லாம் கண்டுகொள்வது இல்லை. ஆனால், மக்களுக்கு அறத்தைப் போதித்து நல்வழி காட்டுபவர்கள் என்ற உரிமை இருப்பவர்களாகக் காட்டிக்கொள்வார்கள்.

முன்னோர்கள் சொன்னார்கள்!

ஜாதகப் பொருத்தம் தேவையா?

மக்கள் ஜாதகப் பொருத்தம் பார்க்கும் படலத்தில் இருந்து வெளியேற வேண்டும். பல பிரச்னைகளைச் சந்தித்து முன்னேறுவதில் சுணக்கமுற்ற வாழ்வில், ஜாதகம் பார்க்கும் படலத்தின் இணைப்பானது, மக்களை மேலும் திக்குமுக்காடச் செய்கிறது. சீர்திருத்தவாதிகள் இதைக் கண்டுகொள்வதில்லை. கணினியும் ஜோதிடத்தில் புகுந்து அட்டகாசம் செய்கிறது. பிரபலங்களிலும் பலர் ஜோதிடத்தை ஓரம் கட்டிவிட்டு, பரிஹாரங்களையும், வழிபாட்டை யும், ஆன்மிகத்தையும், மகான்கள் பணிவிடை களையும் ஏற்கவைத்து மக்களுக்கு வழிகாட்டு கிறார்கள். ஜோதிடத்தில் முடிவை எட்ட இயலாதவர்கள், பரிஹாரத்தில் இறங்கி தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். தெய்வ வழிபாடு அத்தனையையும் ஈட்டித் தரும் எனில், அதை பிரபலங்களின் மூலம் ஏற்க வேண்டிய கட்டாயம் எதற்கு?! ஜோதிடம் வேறு, தெய்வ வழிபாடு வேறு. தனிமனிதர் எவரிடமும் அடைக்கலம் ஆகாமலேயே தெய்வ வழிபாட்டிலும், பரிகாரத்திலும் நாம் தன்னிச்சையாகவே இணைந்துவிடலாம்.

தங்களின் இயலாமையை மறைக்க தெய்வ வழிபாட்டை சுட்டிக்காட்டுபவர்கள், ஜோதிடக் கோட்பாடுகளில் இருந்து வெளியேறியவர்கள் ஆவார்கள்.  எல்லா வேலை வாய்ப்புகளுக்கும் அடிப்படைத் தகுதி இருக்கும். ஆனால், ஜோதிடத்தில் மட்டும் அடிப்படைத் தகுதி இல்லாதவர்களும் பிரபலங்களாக விளங்கு கிறார்கள். சின்னத்திரையில் ஜோதிடம் விரிவாக்கத்தை அடைந்திருக்கிறது. அதில், ஜோதிடருக்கு உதவியாக வேறொருவரும் அமர்ந்திருந்து ஜோதிடரின் விளக்கத்துக்கு மெருகேற்றி மக்களை ஈர்ப்பார். இதுபோன்ற ஜோதிடர்கள் வேஷத்திலும், மகான்களின் இணைப்பிலும் தனது பெருமையை இரட்டிப்பாக்கி மக்களை ஈர்ப்பார்கள். ஆட்டோ ரிக்‌ஷாவுக்கு சவாரி தேடும் தரகர்கள் போன்று பிரபலங்கள் சிலருக்கும் தரகர்கள் உண்டு! பல நல்ல விஷயங் களை எல்லாம் மூடநம்பிக்கை என்று உதறித்தள்ளும் மனிதர்களுக்கு, இது போன்ற நாடகங்களை அடையாளம் காண இயலாதது அதிசயமே!

அவசியமான இரண்டு பொருத்தங்கள்!

பண்டைய நாளில் திருமணத்துக்கு ஜாதகம் பார்ப்பது கட்டாயமாக இருக்கவில்லை. மேட்டுக்குடி மக்களிலும் முறைப்பெண், முறை மாப்பிள்ளை என்ற கோட்பாடு அனுசரிக்கப்பட்டது. ஏழைகளில் ஜோதிடம் பார்ப்பது அறவே இருக்காது. வேதம் ஓதும் பரம்பரையும் அதைக் கட்டிக்கொண்டு அழவில்லை. அவர்கள், இடையூறு இருப்பதாகத் தோன்றினால் வேதம் சொல்லும் பரிகாரத்தைச் செய்து ஏற்பார்கள். சுதந்திரத்துக்கு முன்பு ஒரு சாராரில் மட்டுமே ஒதுங்கியிருந்த ஜாதகப் பொருத்தம் பார்த்தல் எனும் சம்பிரதாயத்தை, தற்போது எல்லோருக்கும் கட்டாய நடைமுறை யாக மாற்றியவர்கள், அதை தங்களது சொல் வளத்தால் சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.

சாமர்த்தியம் (அலசி ஆராய்ந்து முடிவெடுப் பது), விவேகம் (மெச்சூரிட்டி - இணைந்து போகும் மன இயல்பு) ஆகிய இரண்டும்தான் இன்றைய திருமண இணைப்புக்குத் தேவை. சாமர்த்தியம் இருந்தால் ஆராய்ந்து முடிவெடுப் பார்கள். விவேகம் இருந்தால் இணைந்து வாழ விரும்புவார்கள். இதை ஆராய்ந்து  திருமணத் தில் இறங்கினால் வெற்றியுண்டு. பொருத்தம் பார்ப்பது போதுமான நம்பிக்கை அளிக்காது. ஏனெனில், ஜோதிடத்தில் ஆழ்ந்து ஆராய்ந்து சொல்லும் பொறுமை இன்று யாருக்கும் இல்லை.

சமுதாயத்தைத் திருத்த நம்மால் இயலாது. நாம் தற்காப்பை ஏற்கவேண்டும். ஜோதிடம் என்பது வாழ்க்கையைச் செம்மைப்படுத்த ஏற்பட்டது. அந்தக் கோட்பாடுகளை கற்றுத் தெரிந்துகொள்ள இயலும். ஜோதிடக் கோட்பாடுகளை எளிமையாக்கிய நூல்கள் பல உண்டு. ரிஷிகள் உரைத்த தகவல்களை நாம் ஏற்கலாம். அவர்கள் சொன்ன கருத்துகளுக்கு மீறிய சிந்தனைகள் இன்றைய புதிய சிந்தனையாளர்களிடம் உதிக்காது. நமது அறியாமையை அல்லது பலவீனத்தைப் பயன்படுத்த அவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. வராஹமிஹிரர், மந்திரேச்வரர்  போன்றோரின் பரிந்துரையை ஏற்றால் திருமண வாழ்க்கை முறியாமல் இருக்கும்; வாழ்க்கை கசக்காது இனிக்கும்.

எனவே, கலப்படத்தில் இணையாமல், ரிஷிகளின் பரிந்துரையை ஏற்கவேண்டும். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ரிஷிகளின் பரிந்துரைகளை கலப்படம் இல்லாமல் விளக்கும் தகவல்களை, வரும் இதழ்களில் தொடர்ந்து விரிவாகக் காண்போம்

- தொடரும்...