மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

ஶ்ரீசுதர்சனம்!

காவிஷ்ணுவின் கரங்களில் ஒன்றில் காணப்படும் சக்கர ஆயுதத்தில் உறையும் தேவனே ஶ்ரீசுதர்சனர் எனப்படுகிறார். வைணவர்கள் ஸ்ரீசுதர்சனரை சக்கரத்தாழ்வாராகப் போற்றுவர்.

`சில்ப ரத்தினம்' எனும் நூல், ஸ்ரீசுதர்சனரை `சக்கர ரூபி விஷ்ணு' என்றே குறிப்பிடுகிறது. காஞ்சியும் திருக்குடந்தையும் திருமாலின் சக்கர அம்சத்துக்கு சிறப்பாக உரிய தலங்கள்.

அருட்களஞ்சியம்

வடக்கே குப்தர்கள் காலத்தில் சுதர்சனர் வழிபாடு சிறப்புற்று  விளங்கியது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. `பயானா' என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட குப்தர்கள் கால நாணயங்களில்  சுதர்சன உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

1968 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இருந்து...

ஶ்ரீமுஷ்ணம்!

ஶ்ரீமுஷ்ணம், சிதம்பரம் தாலுகாவிலுள்ள ஒரு முக்கிய க்ஷேத்திரமாகும். இங்கு புகழ்பெற்ற ஶ்ரீபூவராஹ ஸ்வாமியையும், ஶ்ரீ அம்புஜவல்லித் தாயாரையும் தரிசிக்க, இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

நமது பாரதப் புண்ணிய பூமியில் ஸ்வயம்வ்யக்த வைஷ்ணவ தலங்கள் எட்டு. அவை: ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, வானமாமலை (நாங்கு னேரி), சாளக்ராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பதரிகாச்ரமம். இதில் முதல் நான்கும் தென் பாரதத்தில் அமைந்துள்ளன.

அருட்களஞ்சியம்

அசுரன் ஹிரண்யாக்ஷனை சம்ஹாரம் செய்யும் நிமித்தமாக இங்கு ஸ்ரீபூவராஹர் அவதரித்ததாகப் புராணம் கூறுகிறது. ஹிரண்யாக்ஷனுடைய செல்வம், ஆயுள், புகழ் முதலியவற்றை ஸ்ரீவராஹர் போக்கியதால் ஸ்ரீமுஷ்ணம் எனப் பெயர் ஏற்பட்டது. மற்ற விஷ்ணு கோயில்களில் திருமஞ்சனம் நீராட்டு முதலியன எப்போதாவது


ஒரு விசேஷ நாளில்தான் செய்யப்படும். ஆனால் ஸ்ரீமுஷ்ணத்தில் தினமும் மூலவருக்கு அபிஷேகம் உண்டு. பிரம்ம, ருத்ர, விஷ்ணு மூன்று அம்சங்களும் இம் மூர்த்தியில் விசேஷித்திருப்பதால், இவ்வாறு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

1967 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இருந்து...
ஓவியம்: ஸிம்ஹா

சித்திர ராமாயணம்

பாலைவனத்திலே

'இங்கே வெயில்காலம் என்ற ஒரே காலம்தான்; மழை, பனி, வசந்தம் முதலான வேறு பருவ காலங்களே இல்லை!' என்று சொல்லும்படியிருந்த ஒரு பிரதேசத்திற்கு வந்து சேர்ந்தார்கள், விசுவாமித்திரனோடு ராம லட்சுமணர்கள் நடுப் பகலிலே, 'என்றும் வசந்தமோ?' என்றிருந்த கோசல நாட்டிலிருந்து.

'நெருப்புக் கடவுளே இங்கு ஏகாதிபத்யம் நடத்துகிறான்: அந்தச் சக்ரவர்த்தியின் மகா ராஜ்யம்தான் இது!'

ஏகவெங் கனல்அர(சு) இருந்த காட்டினில்  என்ற ஒரு செய்யுளடியே போதும், அந்தப் பாலை வனத்தின் கொடுமையை நாம் மறக்க முடியாதபடி காட்டுவதற்கு! கவிஞன் வேறு விதமாகவும் இந்தக் கொடிய தாபத்தை அளந்து காட்டப் பார்க்கிறான்.

அருட்களஞ்சியம்

ஒரு கொடிய போர்க்களம்: பழைய காலத்துப் போர்க் களம்தான். அம்பு, வேல் முதலிய ஆயுதங்கள் சோனா

மாரியாகப் பொழிகின்றன.

எனினும், வீரன் அந்தக் கொடுமையை லட்சியம் செய்யவில்லை. வெற்றி போல் மரணத்தையும் வரவேற்கத்

தயார். ஆனால்  கொடுமையினும் கொடுமை  நேருக்கு நேர் நின்று அந்தக் களத்திலே

போர் செய்யும் திறமை இல்லாத வஞ்சகர்களின் தீவினையினால் தோல்வி வந்துவிடுகிறதாம் அவனுக்கு.

'போரிலே சாவுக்கும் வழியில்லை: ஆஹா, இனி என்ன வாழ்வு? மானம் இழந்த வாழ்வு!' என்று கொதிக்கிறது வீர உள்ளம்.

வஞ்சர்தீ வினையினால்

மானமா மணிஇழந்(து)

அஞ்சினார் நெஞ்சுபோல்

என்றும்ஆ றாதரோ!

வஞ்சிக்கப்பட்ட அந்த வீர நெஞ்சின் கொடிய தாபம்போல் கொதித்துக் கொண் டிருந்த இந்தப் பாலைவனத்தின் பசையற்ற தன்மைக்கும் இப்படியே பொருத்தமான உபமானம் ஒன்று காட்ட விரும்புகிறான் கவிஞன்.

ஞானியும் வேசியும் போலே!

ஞான வீரர்களின் ஹிருதயம் எப்படிப் பசை அற்றதோ, அப்படிப் பசை அற்றது இந்தப் பாலைவனமும்  என்கிறான்.

தாவரும் இருவினை செற்றுத், தள்ளரு

மூவகைப் பகைஅரண் கடந்து, முத்தியில்

போவது புரிபவர் மனமும், பொன்விலைப்

பாவையர் மனமும்போல், பசையும் அற்றதே.

ஞான வீரர்களும் வாழ்க்கையாகிய போர்க் களத்திலே முன்னேறிச் சென்றுதான் மோட்ச மார்க்கத்தை அடைகிறார்களாம். முதல் முதல், அழிப்பதற்கு அருமையான இருவகைச் சேனைகளையும் அழித்துவிடுகிறார்களாம். அந்தச் சேனைகள் அழிந்ததும் அவனுடைய அரண்களாகிய  தள்ள முடியாத  மூன்று கோட்டை மதில்களையும் கடந்து போகிறார்களாம். அப்பால் போராட்டம் நின்று போகிறது; காரியசித்தி சுலபமாகி விடுகிறதாம்.

இத்தகைய ஞான வீரர்கள் எதிர்த்து வெல்லும் படைகள் எவை? இவர்கள் கடந்து செல்ல வேண்டிய மூன்று கோட்டை மதில்கள்தான் எவை?

நல்வினைகள், தீவினைகள் என்ற இருவகை வினைகளும், கோட்டைக்கு வெளியே வந்து இந்த ஞான வீரரோடு சண்டை செய்யும் படைகள் என்கிறான் கவிஞன்.  தீவினைகளைப் போல் நல் வினைகளும் மோட்சத்தை அடைய விரும்பும் முமுட்சுக்களால் சத்துருக்களாகவே மதிக்கப்படு கின்றன என்பது வேதாந்தப் பிரசித்தமான கொள்கை. தீவினைகளை அழிப்பதே அருமை; நல்வினைகளையும் ஒழிப்பதென்றால், அருமையினும் அருமை யல்லவா?

அருட்களஞ்சியம்

வெளியே வந்து சண்டை போடும் படைகளை அழித்த பிறகு, கோட்டைகளை முற்றுகையிட்டுப் பிடிப்பது வழக்கமல்லவா? அப்படியே ஞான வீரர்களும் இரு வினை களையும் வென்று, பகையரண்களயும் கடந்து போகிறார் களாம். காமம், வெகுளி (கோபம்), மயக்கம் என்ற மூன்று வகைக் குற்றங்களையும் மூன்று வகைப் பகை  மதில்களாகக் குறிப்பிடுகின்றன ஞான நூல்கள். இந்த மூன்று கோட்டை மதில்களும் தள்ள முடியாத பகைஅரண் என்கிறான்

கவிஞன். இந்தத் தள்ளமுடியாத மதில்களை யும் தாண்டிவிட்டால் முத்தி நெறியில் போவது எளிதான காரியந்தான். அப்பால் அந்த விருப்பமே முத்தியை நோக்கி ஆகர்ஷித்துக்கொண்டு போய்ச் சேர்த்து விடுமாம்.

ஆனால், இப்படியெல்லாம் மோட்ச விருப்பம் ஏற்படுவதற்கு அந்த முமுட்சுக்களின்

மனம், சாதாரண விருப்பம் முதலான ஒருவகைப் பசையும் இல்லாமல் போய் விடுகிறதாம். தீவினையோடு நல்வினை

யும் விட்டொழித்துக் காமம் முதலான உணர்ச்சிகளையும் வென்று விடுவதென்றால், அந்த ஞான வீரர்களின் ஹிருதயம் பசையற்றுத்தானே போக வேண்டும்?

அப்படிப் பசையற்றிருக்கிறது பாலைவனம்  என்று சொல்லும் நெஞ்சுத் துணிவை பாருங்கள். அந்த ஞான வீரர்களின் பசையற்ற மனதோடு, அன்பில்லாத வேசையர்களின் பசையற்ற மனதையும் சேர்த்துப் பேசும் துணிவைத்தான் என்னென்பது?

அருட்களஞ்சியம்

'முத்தியில்  போவது புரிபவர் மனமும், பொன் விலைப்  பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே!' என்ற பாலைவன வர்ணனையில் உயர்ந்ததும் தாழ்ந்ததும் எப்படிக் கைகோத்து வந்து குதிக்கின்றன, உபமானமாக!

இத்தகைய பசையற்ற பாலைவனத்தைப் பார்த்ததும், ராமன் விசுவாமித்திரனை நோக்கி, 'என்ன அதிசயம்! எவ்வளவோ வளம் நிறைந்த கோசல நாட்டிற்கு அருகே இப்படி அழிந்து கொண்டிருக்கும் ஒரு பிரதேசமும் இருக்கிறதே! காரணம் யாதோ?' என்று கேட்டான். அதற்கு முனிவன்,

'இந்தப் பிரதேசமும் ஒரு காலத்தில் செழிப் பாகத்தான் இருந்தது. ஒரு பெண்ணின் கொடுமையினாலேயே இது இப்படி அழிந்துவிட்டது!' என்று அந்த அரக்கி இருந்த திசையைச் சுட்டிக் காட்டிப் பதில் சொல்லத் தொடங்குகிறான்.

சூடக அர(வு)உறழ் சூலக் கையினள்,

காடுறை வாழ்க்கையள், கண்ணில் காண்பரேல்

ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!

தாடகை என்ப(து)அச் சழக்கி நாமமே

என்கிறான் முனிவன்.

விஷப் பாம்பைக் கங்கணமாகக் கட்டி யிருப்பதே அரக்கியின் விஷம் போன்ற நெஞ்சிற்கும், சங்கல்பத்திற்கும் ஒரு சரியான அறிகுறி அல்லவா? 'பாம்பு போன்ற சூலக் கையினள்' என்று கூறுவதைத்தான் பாருங்கள்.

'அவள் கையும் பாம்புபோல் இருக்கிறது; அந்தக் கையிலுள்ள பயங்கரமான சூலாயு தமும் பாம்புபோல் நீண்ட உடலும் விரித்த படமும் உடையது!' என்பது குறிப்பு. தான் சுடுகாடாக்கிய இந்தப் பிரதேசத்திலேதான் அந்தக் குற்றவாளி வசிக்கிறாள் என்றும் தெரிவிக்கிறான். 'குற்றத்திற்கு வேறு சாட்சியும் வேணுமோ? கையும் களவுமாய்ப் பார்த்துக் கொள்ளலாமே!' என்பது குறிப்பு.

11.6.44, 18.6.44

ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...