மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 8

சத்தியப்பிரியன்

12. எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே?

ழ்வார்களில் பட்டர்பிரான் என்றால், அது பெரியாழ்வார் எனப்படும் விஷ்ணுசித்தரையே குறிக்கும். இவர், திருவில்லிப்புத்தூரில் அவதரித்தவர். பெரியாழ்வாரின் காலம் இன்னதென்று அறுதியிட்டுக் கூறமுடிவதில்லை.

ஏழாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தைக் கூறுகிறார்கள். இந்தச் சிக்கலே வேண்டாம் என்றால், ஸ்ரீவைஷ்ணவர்கள் கூறுவது போல கலியுகம், 47-வது குரோதன வருடம், ஆனி மாதம், சுக்ல பட்சம், ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரத்தில் தென்தமிழகத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்தார் என்று கூறுவது இன்னும் எளிமையானது.

இவருடைய தந்தை முகுந்தபட்டர்; தாயார் பத்மவல்லி. இவர் முன்குடுமி வைத்துக்கொள்ளும் சோழிய வம்சத்தவர். வேறு எந்த ஆழ்வாருக்கும் கிட்டாத பெருமை இவருக்கு உண்டு. பெரிய பிராட்டியை மகளாகவும், அந்த ஸ்ரீரங்கநாதனையே மாப்பிள்ளையாகவும் பெறும் பேறுபெற்றவர். கருடனின் அம்சம் என்று அறியப்படுபவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஸ்ரீராமன் ஆண்டார்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 8

எப்போதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வடபத்ரி பெருமாளைச் சிந்தையில் கொண் டிருந்ததால், விஷ்ணு சித்தர் என்ற பெயரும் வழங்கப்படலாயிற்று. இவர், பெருமாளை கண்ணனாகவே பாவித்து வந்தார்.

தாய்மாமனான கம்சனின் அழைப்பை ஏற்று, ஸ்ரீகிருஷ்ணர் கோகுலத்தில் இருந்து மதுராவுக்குச் செல்லும்போது, வழியில் பூமாலை வியாபாரி ஒருவர் கண்ணனுக்கும் பலராமனுக்கும் மாலைகள் அளித்தார். அதை அன்புடன் ஏற்றுக்கொண்ட கண்ணன், அந்தப் பூ வியாபாரிக்கு அருள் செய்ததால், அவர் வீடுபேறு அடைந்தார் என்ற கதையைக் கேட்ட விஷ்ணுசித்தர், தானும் எம்பெருமானுக்கு புஷ்ப கைங்கரியம் செய்ய விரும்பினார். அதனால், தன் குடில் அருகே வண்ணப் பூந்தோட்டம் ஒன்றை ஏற்படுத்தி, அதில் கிடைக்கும் மலர்களை மாலைகளாகத் தொடுத்து, தினமும் இறைவனுக்குச் சமர்ப்பித்து வந்தார்.

இவருடைய சமகாலத்துப் பாண்டிய மன்னன் வல்லபதேவ பாண்டியன். பொது வாக, பாண்டிய மன்னர்கள் சிவநெறியைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம். ஆனால், இந்த மன்னன் தீவிர வைணவ பக்தனாக இருந்தான்.

ஒரு நாள், வல்லபதேவ பாண்டியன் இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தான். அப்போது வைதீக அந்தணன் ஒருவன், ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். வேற்று ஊர்க்காரன் என்பதால், அவனை எழுப்பி விசாரித்தான் மன்னன். அதற்கு அந்த அந்தணன்,

‘‘நான் காசி க்ஷேத்திரம் வரை சென்று கங்கையில் நீராடிவிட்டு, மீண்டும் சேதுவுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் இங்கு தங்கியுள்ளேன்’’ என்று பதில் கூறினான். அவன் பதிலால் மகிழ்ந்த மன்னன், ‘‘பல ஊர்கள் சுற்றிவிட்டு வந்த அந்தணனே! எனக்கு நல்ல மொழி ஒன்று கூறும்” என்று விநயத்துடன் கேட்டான்.

அதற்கு அந்த அந்தணன், ‘‘மழைக்காலத் துக்கு வேண்டியவற்றை மீதமுள்ள எட்டு மாதங்களிலும், இரவுக்கு வேண்டியதைப் பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமை யிலும் சேர்த்து வைப்பவனே பாக்கியசாலி!” என்று பொருள்படும்படியான வடமொழி சுலோகம் ஒன்றைக் கூறினான். அதை மனதில் இருத்திக்கொண்ட அரசன், அவனை வணங்கி விடைபெற்றான்.

அரண்மனை திரும்பியதும், அந்தணன் கூறியது குறித்து யோசித் தான் மன்னன். இவ்வுலகில் தனக்கு வேண்டும் அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்திருப்பது புரிந்தது. ஆனால், மறுமை உலகுக்கு ஒன்றும் சேர்க்காத வறியவனாக தான் இருப்பது, வருத்தம் அளித்தது. உடனே, தனது நண்பரும் சிறந்த வேதவித்தாக விளங்கியவருமான செல்வநம்பியை அழைத்து, ‘‘மறுமைக்கு உண்டான சம்பத்தைச் சேர்த்துத் தருபவர் யார்?’’ என்று கேட்டான்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 8

மன்னனின் இந்தக் கேள்வியையே ஒரு போட்டியாக மாற்றி அறிவித்தார் செல்வநம்பி. அரசரின் வினாவுக்கு எந்தச் சமயத்தைச் சேர்ந்தவரும் விடை கூறலாம்; சரியான விடை அளிப்பவருக்குக் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள பொற்கிழி பரிசாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அனைத்துச் சமயத்தினரும் வந்தார்கள்; மறுமைக்கான செல்வம் குறித்து அவரவர் மதம் கூறும் விளக்கங்களை விவரித்தார்கள். ஆனால், யாருடைய பதிலிலும் மன்னனுக்கோ செல்வநம்பிக்கோ திருப்தி ஏற்படவில்லை.

இந்த நிலையில், இரவு விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றிய எம்பெருமான், ‘‘இம்மைக்கும் மறுமைக்கும் உள்ள சம்பத்து நான் என்பதை உமது வாதத்தால் நிரூபித்து, அந்த அரச சம்பத்தைப் பெற்று வாரும்” என்றார். இந்தக் கனவு குறித்து மறுநாள் பெரியாழ்வார் ஏனைய வைதீகர்களிடம் கூறினார். அவர்கள் மனம் மகிழ்ந்து, பல்லக்கு ஒன்றை ஏற்பாடு பண்ணி, அவரை மதுரைக்கு அழைத்துச் சென்றனர். விஷ்ணு சித்தரின் வருகையை அறிந்ததும், வல்லபதேவ பாண்டிய மன்னனே எதிர்கொண்டு அவரை வரவேற்று அழைத்துச் சென்றான்.

எம்பெருமானின் விருப்பப்படியே மற்ற சமயத்தவரின் வாதங்களை வெற்றிகொண்ட விஷ்ணுசித்தர், ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்ற சம்பத்து ஸ்ரீமந் நாராயணன்’ என்று மன்னனுக்கு விளக்கிக் கூறி, அவனைப் பாதம் பணியவைத்தார். பிறகு, அந்தப் பொற்கிழி தாங்கிய கம்பத்தின் அருகில் சென்றார். அந்தக் கிழியை அவர் எடுத்துக்கொள்ளத் தோதாக அந்தக் கம்பம் தானே வளைந்து கொடுத்தது.

அந்த அதிசயத்தைக் கொண் டாடிய மன்னன், அவருக்கு உரிய மரியாதையைச் செய்வித்து, பட்டத்து யானை மீது அமரச் செய்து, மதுரை வீதிகளில் ஊர்வல மாக அழைத்துச் சென்றான்.

‘கணீர், கணீர்’ என்று யானையின் மணிகள் ஒலிக்க பெரியாழ்வார் வீதிவலம் வருகிறார். அவர் பெற்ற பேற்றினைக் கண்டு மனம் உவந்த பெருமாள், கருட வாகனத்தில் தேவியருடன் சேவை சாதிக்கிறார். பெருமாளைக் கண்டதும் மேனி விதிர்த்துப் போய் பெரியாழ்வார் அவரைப் பணிகிறார். தன்னைப் பற்றிய பிரஸ்தாபங்கள் எதுவுமின்றி, எம்பெருமானின் அந்த அழகிய திருமேனி மக்கள் பார்வையில் பட்டு கண்ணேறு வந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த எம்பெருமானுக்கே திருப்பல்லாண்டு பாடுகிறார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்னா! உன்

செவ்வடி செவ்விதிருக் காப்பு

‘அப்படிப்பட்ட பட்டர்பிரானாகிய விஷ்ணு சித்தர் சொன்னதைப் போல, ‘எம்பெருமான் நாராயணனே பரம்பொருள்’ என்றேனா...இல்லையே? பிறகு, திருக்கோளூரில் வாழ எனக்கு என்ன அருகதை இருக்கிறது? அதனால்தான் வெளியேறுகிறேன்’ என்கிறாள் அந்தப் பெண்பிள்ளை.

- ரகசியம் வெளிப்படும்