Published:Updated:

வினைதீர்க்கும் வெக்காளி... அம்மனுக்கு பிரார்த்தனை சீட்டு!

இ.ராஜவிபீஷிகா

ன்னர்களின் வெற்றித் தெய்வமாகத் திகழ்பவள் வெக்காளி அம்மன். அரசர்களுக்குப் போர்களில் வெற்றியை அருளும் இந்த வெக்காளி அம்மன், பக்தியுடன் வேண்டுவோரது குறைகளைத் தீர்ப்பவள்; தீயவர்களிடம் வெம்மை காட்டி அவர்களை அழிப்பவள்; பக்தர்களிடம் தாய்க்குத் தாயாக, சேய்க்கு சேயாக இருப்பவள்; சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட வெக்காளி அம்மனுக்கு மதுராந்தகம் அருகே அழகிய கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மதுராந்தகம். இங்கிருந்து கல்பாக்கம் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் பயணித்தால் வருவது... விழுதமங்கலம் கூட் ரோடு. இங்கிருந்து அரை பர்லாங் தூரத்தில் உள்ளது பெரிய வெளிக்காடு! இங்குதான் கோயில் கொண்டிருக்கிறாள் வெக்காளி அம்மன்! வாழை, தென்னை மற்றும் மாந்தோப்பு என பசுமையான சூழலில் கோயில் கொண்டு நம் மனம் குளிர தரிசனம் தருகிறாள் வெக்காளி!

மேற்கு நோக்கிய கோயிலில் கிழக்கு பார்த்தபடி, அமர்ந்த திருக்கோலத்தில், சாந்த ஸ்வரூபமாகக் காட்சி தருகிறாள் அன்னை. திருச்சி உறையூர் வெக்காளி அம்மனைப் போலவே, இங்கு குடிகொண்டிருக்கும் அம்மனுக்கும் மேற்கூரை கிடையாது! பிராகாரத்தில்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விநாயகர், அண்ணாமலையார், காயத்ரிதேவி, தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய் வானை சமேத சுப்ரமண்யர் மற்றும் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் சனீஸ்வரரையும் தரிசிக்கலாம்!

வினைதீர்க்கும் வெக்காளி... அம்மனுக்கு பிரார்த்தனை சீட்டு!

அம்மனுக்கு தினமும் உச்சிக் காலத்தில் மட்டுமே மஹா அபிஷேகம் நடைபெறுகிறது.
இந்தக் கோயிலின் விசேஷம்... பிரார்த்தனைச் சீட்டு! திருமணத் தடை, பிள்ளை பாக்கியம், அம்மை முதலான நோய், எதிரிகள் தொல்லை என எதுவாக இருப்பினும் தங்களது குறைகளை பிரார்த்தனையாக, சீட்டு ஒன்றில் எழுதி, பலிபீடத்துக்கு அருகில் உள்ள சூலத்தில் கட்டிவிட்டு, அம்மனை வேண்டினால், விரைவில் பலன் கிடைக்கிறது என்கின்றனர் பக்தர்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமியில், பிரார்த்தனைச் சீட்டுகளை படிப்பதற்கு வெக்காளி அம்மன் வருவதாக நம்பிக்கை!

இந்தக் கோயிலில் அமாவாசை நாட்களில் பக்தர்களின் வேண்டுதலின் பேரில் சிறப்பு ஹோமமும் விசேஷ அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொள்வதால் எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடவும், வழக்குகளில் வெற்றி பெறவும் முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் லலிதா திரிசதி அர்ச்சனை, குடும்ப ஒற்றுமை, குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை அருள்வதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

ஆங்கிலப் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி அன்று பால்குட ஊர்வலம், நவராத்திரி போன்ற விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன. சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது இலவச மருத்துவ முகாம்களும், கண் பரிசோதனை முகாம்களும் நடைபெற்று வருகின்றன. உறையூர் வெக்காளி அம்மனின் பக்தரான சுந்தரவரதன், அம்மன் தன் கனவில் தோன்றி உத்தரவு கொடுத்தன் பேரில் பெரியவெளிக் காட்டில் இந்தக் கோயிலைக் கட்டி வெக்காளி அம்மனை பிரதிஷ்டை செய்து இருக்கிறார். அன்றுமுதல் அருகில் உள்ள திருவாதூர், பவுஞ்சூர், அரியனூர், சின்ன வெண்மணி முதலான ஊர்களில் உள்ளவர்களுக்கு இஷ்ட தெய்வமாகி அருள்புரிந்து வருகின்றாள் வெக்காளி அம்மன்!

வினைதீர்க்கும் வெக்காளி... அம்மனுக்கு பிரார்த்தனை சீட்டு!

இந்தக் கோயிலில் ஆடி மாதம் மூன்று தினங்கள் நடைபெறும் ஆடித் திருவிழா மிகவும் பிரசித்தமான ஒரு விழா. பல வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழா நடைபெறும் மூன்று நாட்களும் வந்து அம்மனை வணங்கிச் செல்கின்றனர்.

இந்த மாதம் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற இருக்கும் திருவிழாவில் ஏகதின லட்சார்ச்சனையும் நவசண்டி மஹா யாகமும் நடைபெற இருக்கின்றது.

எங்கே இருக்கிறது எப்படிச் செல்வது..?

மதுராந்தகத்தில் இருந்து கல்பாக்கம் செல்லும் சாலையில் சுமார் 16 கி.மீ.தொலைவில் உள்ளது விழுதமங்கலம் கூட் ரோடு. அங்கே இறங்கி 1 பர்லாங் நடந்து சென்றால் கோயிலை அடையலாம்.

நடை திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் நாள் முழுவதும் கோயில் திறந்திருக்கும்.