Published:Updated:

பக்தருக்காகத் தோன்றிய புதுமாரியம்மன்

பக்தருக்காகத் தோன்றிய புதுமாரியம்மன்

முன்னொரு காலத்தில் அத்திப்பட்டி என்ற ஊரில் சுயம்புவாகத் தோன்றி அருளாட்சி செலுத்தி வந்தாள் மாரியம்மன். அம்மனுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் சுற்றுப்பட்டு ஊர்களில் உள்ள மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து திருவிழா நடத்தி வந்தனர். ஒருமுறை அப்படி திருவிழா நடந்து முடிந்ததும், வழக்கப்படி வரவு செலவு கணக்கு பார்த்தனர். அப்போது கணக்கில் சந்தேகம் கொண்ட ஒருவர் விளக்கம் கேட்டபோது, அங்கிருந்தவர்களில் சிலர், திருவிழாவுக்கு அதிக தலைக்கட்டு வரி செலுத்துவது தாங்கள்தான் என்றும், மற்றவர்கள் தலையிடக்கூடாது என்றும் சொன்னதுடன்,

53 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு அம்மனை வழிபடும் உரிமையை மறுத்துள்ளனர்.

அதனால் மனம் வருந்திய ஊர்மக்கள், உண்மையை அறிய கணக்கு கேட்ட பாவத்துக்கு அம்மனை தரிசிக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோமே என்று கண்ணீர் வடித்தபடி சென்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அன்றிரவு அந்தக் கோயிலின் அர்ச்சகரின் கனவில் அம்மன் தோன்றி, 'இந்தக் கோயிலில் இருந்து பிடி மண் எடுத்துச் சென்று கோயிலுக்குத் தெற்கில் இருக்கும் கீரைத் தோட்டத்தில் பீடம் எழுப்பி என்னுடைய திருவுருவத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால், என்னை தரிசிக்க முடியவில்லையே என்று கண்ணீர் வடித்த குடும்பங்களின் கஷ்டங்களைப் போக்கி செழிப்பாக்குவேன்’ என்று சொல்லி மறைந்தாள்.

பக்தருக்காகத் தோன்றிய புதுமாரியம்மன்

இதை அந்த அர்ச்சகர் அனைவரிடமும் சொல்ல, அம்மனின் உத்தரவுப்படியே அந்த கிராம மக்கள் குறிப்பிட்ட இடத்தில் கோயில் எழுப்பி, புது மாரியம்மன் என்ற திருப்பெயருடன் அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். இதுதான் புது மாரியம்மன் கோயிலின் தல வரலாறு.

நேர்த்திக் கடன்கள்:

பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் இங்கு வந்து 3 நந்தியாவட்டைப் பூக்களை அம்மன் திருவடிகளில் வைத்து பூஜித்து, அந்தப் பூக்களின் சாற்றைக் கண்களில் பிழிந்துகொண்டால் பார்வைக் குறைபாடுகள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கின்றனர். அரசுப் பணியில் சேர விரும்புபவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், வேலை கிடைத்ததும், முதல் மாதச் சம்பளத்தை தனக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும் என்றோ அல்லது அதற்குச் சமமான திருப்பணி செய்யவேண்டும் என்றோ அம்மனின் உத்தரவு கிடைக்குமாம். அப்படி வேண்டிக் கொண்டு வேலை கிடைத்து அம்மனின் உத்தரவின்படி பக்தர்கள் செய்திருக்கும் திருப்பணிகள் பலவற்றை இங்கே பார்க்க முடிகிறது.

திருமணம் ஆகியும் பல வருட காலம் குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், பிறக்கப்போகும் குழந்தைக்கு அம்மனின் பெயரைச் சூட்டுவதுடன், கோயிலுக்கு வந்து  தொட்டில் கட்டி தீச்சட்டி எடுத்து வழிபட வேண்டும் என்று அம்மனின் உத்தரவு கிடைக்குமாம். அப்படி எண்ணற்ற பக்தர்கள் பயன் அடைந்திருக்கின்றனர் என்று ஊர்மக்கள் சொல்கின்றனர்.

பக்தருக்காகத் தோன்றிய புதுமாரியம்மன்

திருமணம் தடைப்பட்டுக்கொண்டே வருபவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து, வேப்பிலையும் மஞ்சளும் கலந்த தண்ணீரில் நீராடி, ஈர ஆடையுடன் அம்மனை வழிபட்ட பிறகு, கோஷ்டத்தில் இருக்கும் நாகக்கன்னி திருவுருவத்தின் கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டிவிட்டு வணங்கிச் சென்றால், விரைவிலேயே தடைகள் விலகி, திருமணம் நடைபெறுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

விசேஷ தினங்கள்:

மாதம்தோறும் பௌர்ணமி அன்று உச்சிக்கால பூஜையின்போது 11 திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் 5 நாட்கள் திருவிழா நடைபெறும் இந்தக் கோயிலில், ஆடி மாதம் முழுவதுமே சிறப்பு ஆராதனைகளும் லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.

பக்தருக்காகத் தோன்றிய புதுமாரியம்மன்

ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் இங்கே வழங்கப்படும் கூழ் பிரசாதத்தை பக்தியுடன் பெற்று அருந்துவதற்கு பக்தர்களிடையே பலத்த போட்டியே இருக்குமாம். காரணம் பிரசாதமாக அந்தக் கூழை அருந்தினால் உடல் ஆரோக்கியம் பெறுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.

அத்திப்பட்டியில் அருள்புரியும் புது மாரியம்மனை ஆடி மாதத்தில் நாமும் தரிசித்து புது வாழ்வு பெற்றுச் சிறப்புற வாழலாமே!

எங்கே இருக்கிறது எப்படிச் செல்வது?

மதுரை மாவட்டம் உசிலம் பட்டியில் இருந்து பேரையூர் செல்லும் சாலையில் சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ள மங்கள்ரேவ் விலக்கு என்னும் இடத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது புது மாரியம்மன் கோயில். மங்கள்ரேவ் விலக்கு என்னும் இடத்துக்கு பேருந்தில் சென்று, அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் கோயிலுக்குச் செல்லலாம்.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணியில் இருந்து பகல் 12.30 மணி வரை; மாலை 4.00 மணியில் இருந்து இரவு 8.00 மணி வரை!

ம.மாரிமுத்து
படங்கள்: சே.சின்னத்துரை