
பக்தி பாதி, பயம் பாதி!

‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்…’ என்று, மகதி யாழின் பின்னணி இசையுடன் ராகம் போட்டுப் பாடியவாறே நம் எதிரில் பிரசன்னமானார் நாரதர்.
“பாரதியார் பாடல்தானே?” என்றோம்.
‘‘இந்தப் பாடல் வரியில் தொனிக்கும் கம்பீரமே அதைச் சொல்லிவிடுமே! அதிருக்கட்டும்… ஆணும் பெண்ணும் சமம்தான் என இந்த உலகத்துக்கு முதலில் உணர்த்தியவர் யார் தெரியுமா?’’ என்று கேட்டபடியே நம் எதிரில் அமர்ந்தார் நாரதர்.
அவர் அர்த்தநாரீஸ்வரராகிய சிவபெருமானைத்தான் குறிப்பிட்டுச் சொல்கிறார் என்பது நமக்குத் தெரியாதா என்ன? எனவே, ‘‘நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்து விட்டு வருகிறீரா?’’ என்று கேட்டோம்.
“அடடே! கற்பூர புத்திதான் உமக்கு. மிகச் சரியாக யூகித்துவிட்டீரே!” என்றார்.
“யூகமெல்லாம் எதுவும் இல்லை. திருச்செங்கோட்டுக்கும் திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரத்துக்கும் விசிட் அடிக்கப் போவதாக நீர்தானே போன தடவை வந்திருந்தபோது சொல்லிவிட்டுப் போனீர்? மறந்துவிட்டீரா?”
‘‘ஆமாம். அந்த இரண்டு இடங்களுக்கும்தான் போய் வந்தேன். அங்கே கோயிலில் பக்தர்களுக்கு நேரிடும் பிரச்னைகளைப் பற்றிச் சொல்வதற்கு முன்பு, திருச்செங்கோடு கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே பக்தர்களுக்கு ஏற்படக்கூடிய சங்கடங்களைச் சொல்லிவிடுகிறேன்’’ என்றவர், தொடர்ந்து…
‘‘திருச்செங்கோடு கோயிலுக்குச் செல்வதற்கு மலைப்பாதை, படிக்கட்டு பாதை என்று இரண்டு வழிகள் உள்ளன. மலை அடிவாரத்தில் இருந்து 650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் கோயிலுக்கு ஏறிச் செல்ல 1200 படிகள் இருக்கின்றன. இந்த வழியில் பக்தர்கள் மிகவும் எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். அந்த அளவுக்குப் பாதை அசுத்தமாக இருக்கிறது. உடைந்து கிடக்கும் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள்… இன்னும் சொல்லக் கூசும் அளவுக்குக் குப்பைகளாகக் காட்சி தருகிறது. சமூக விரோதிகளின் இருப்பிடம் போன்று திகழ்கிறது என்று சொன்னாலும் பிழையில்லை. அது மட்டுமல்ல, பக்தர்களை கேலி செய்வதும், பெண்களை அவமதிப்பதுமான காரியங்களில் துஷ்டர்கள் பலர் ஈடுபடுகிறார்கள். ஆண்களின் துணை இல்லாமல் இந்தப் பாதையில் வருவதற்கு பெண்கள் மிகவும் பயப்படுகின்றனர்.’’

‘‘சிவ சிவா, அம்மைக்குச் சரிபாதி தந்து பெருமைப்படுத்திய அந்தப் புனிதத் தலத்திலா இப்படியான கொடுமைகள்?’’ என்று காதைப் பொத்திக்கொண்டோம். நாரதர் தொடர்ந்தார்...
‘‘மலைப் பாதை இன்னும் மோசம். இளம் வயது ஆண்களும் பெண்களுமாக அங்கு வந்து அடிக்கும் கும்மாளம் கண் கொண்டு பார்க்க முடியாது. அந்த அளவுக்கு ஆபாசமாக நடந்துகொள்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள்கூட இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனையான விஷயம்.’’
‘‘காவல் துறையினர் இதையெல்லாம் கண்டு கொள்வது இல்லையா?’’
‘‘கண்டுகொள்கிற மாதிரி தெரியவில்லை. இனிமேலாவது கோயில் நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து, தொடர்ந்து கண்காணித்தால், கோயிலின் புனிதம் காப்பாற்றப்படுவதோடு, கோயிலுக்கு வரும் பக்தர்களும் நிம்மதியாக சாமி தரிசனம் செய்யமுடியும்.’’
‘‘நல்லவேளை, வயிற்றில் பாலை வார்த்தீர்! கோயிலிலாவது பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்யமுடிகிறதே, அந்த மட்டில் சந்தோஷம்!”
‘‘அவசரப்படுகிறீரே! தரிசனம் செய்வது ஒருபக்கம் இருக்கட்டும். அங்கே சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்கள் நீங்குவதற்காகப் பரிகார பூஜைகள் செய்கிறார்கள். சிறிய கல்லில் செய்யப்பட்ட சர்ப்பத்தை வைத்து அந்தப் பரிகார பூஜை செய்யப்படுகிறது…”
“அதனாலென்ன… ஒவ்வொரு பரிகார பூஜைக் கும் ஒரு நியமம் இருக்குமல்லவா?”
“தாராளமாக இருக்கட்டும். நானா வேண்டாம் என்கிறேன். ஆனால், அந்தக் கல் சர்ப்ப விக்கிரஹத்தை குறிப்பிட்ட இடத்தில்தான் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்களே! கூட்டம் அதிகமாக இருக்கும் நாள்களில் அந்த இடத்தில் விற்பனை செய்பவர் காட்டில் மழைதான்! அவர் வைத்ததுதான் விலை! வெளியில் இருந்து வாங்கி வந்தால், பரிகார பூஜைக்கு ஏற்றுக்கொள்வதில்லை. அதேபோல், பூஜைக்குத் தேவையான பொருட்களையும் அந்த இடத்தில்தான் வாங்கவேண்டும்.’’

‘‘அநியாயமாக இருக்கிறதே! சரி, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குக் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் எல்லாம் எப்படி உள்ளன?’’
‘‘படிக்கட்டு வழியில் ஒரு இடத்தில்கூட பக்தர்களுக்குக் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. மேலே சென்றதும்தான் கோயில் நுழைவாயிலில் இருக்கும் கடைகளில் தண்ணீரோ, குளிர் பானங்களோ வாங்கிக் குடிக்கவேண்டும். அதற்கு வசதி இல்லாத ஏழை பக்தர்கள் கை, கால், முகம் அலம்ப வைத்திருக்கும் குழாயிலேயே தண்ணீரைப் பிடித்துக் குடிக்க வேண்டியதுதான்!’’

‘‘என்ன சொல்கிறீர்… சுத்தமான குடிநீருக்கு அங்கே வசதி செய்து தரப்படவில்லையா?’’
‘‘இல்லை, இல்லை! படிக்கட்டுகள் ஏறிச் சென்றதும் ஓர் இடத்தில், ’சுத்தமான குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும்’ என்று பிரமாதமாக ஓர் அறிவிப்புப் பலகையும், கூடவே சங்கிலியில் பிணைக்கப்பட்ட இரண்டு டம்ளர்களும் இருக் கின்றன. ஆனால், குடிநீர்க் குழாய் அங்கே இல்லை என்பதுதான் பிரச்னையே! குடிநீர் வசதிதான் இந்த லட்சணத்தில் இருக்கிறது என்றால், கழிவறை வசதியும் இல்லை. இத்தனைக்கும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், கடந்த 2013-14 நிதியாண்டில் 17.60 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், அதைப் பயன்படுத்த முடியாதபடி பூட்டி வைத்திருக்கிறார்கள்!”
‘‘கழிப்பறையையும் யாராவது பிரமுகர் வந்து திறந்து வைக்கவேண்டும் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்களோ?’’
‘‘அது அந்த உமையொருபாகனுக்குத்தான் வெளிச்சம்!’’ என்ற நாரதரிடம், ‘‘இது பற்றி கோயில் நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு பேசினீர்களா?’’ என்று கேட்டோம்.

‘‘நாம் சென்றிருந்தபோது அங்கே யாரும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய பிறகு, அது பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்’’ என்றவர், ‘‘சமீபத்தில் காதல் பிரச்னையில் ஒரு கொலை நடந்தது அல்லவா? கொலையான இளைஞரை கடத்தியது இந்த இடத்தில் இருந்து தான் என்கிறார்கள்! அதன் பிறகும் அங்கே காவல் துறையினரின் கண்காணிப்பு பலப்படுத்தவில்லை'' என்று ஆதங்கத்தோடு சொன்னார்.
‘‘சரி, திருப்பாம்புரம் சென்றிருந்தீரே? அதைப் பற்றிச் சொல்லும்!”
‘‘திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம் புரம், பாடல் பெற்ற ஸ்தலம். அங்கே ராகு-கேது தோஷ நிவர்த்திக்காகப் பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்த பூஜைகளில் நடக்கும் கொள்ளைகளைப் போக்குவதற்கு ஏதாவது பரிகார பூஜை இருக்குமா என்று யோசிக்கிறேன்..!” என்று வேதனையை நகைச்சுவையாகக் குறிப்பிட் டார் நாரதர்.
‘‘அப்படி என்ன கொள்ளை அங்கே நடக்கிறது?”
‘‘சர்ப்ப தோஷ நிவர்த்திக்காக வருபவர்களில் பெரும்பாலானோர் ஜோதிடர்கள் சொல்லித்தான் வருகிறார்கள். அப்படி ஒரு ஜோதிடரை அங்கே சந்தித்தேன். தன்னுடைய பெயரையோ படத்தையோ தயவு செய்து வெளியிடவேண்டாம் என்று கேட்டுக் கொண்டவர், சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.'' என்ற நாரதர், தொடர்ந்து அது பற்றி விவரித்தார்.

‘‘பரிகார பூஜைக்காகக் கோயில் நிர்வாகத்தினர் 140 ரூபாய் கட்டணம் வாங்கிக்கொள்கிறார்கள்; அதற்கு ரசீதும் தருகிறார்கள். ஆனால், அந்த ரசீதில் உள்ளபடி பூஜை சாமான்களைக் கொடுப்பது இல்லையாம். அதுபோக, வலுக்கட்டாயமாக மூன்று சாமி படங்களைக் கொடுத்து, அதற்குத் தனியாக 40 ரூபாயும், அன்னதானத்துக்குக் கட்டாய நன்கொடையாக 50 ரூபாயும் பறித்துக் கொள்கிறார்களாம். அபிஷேகத்துக்காக பக்தர்கள் பால் வாங்கிக் கொடுத்தால், அதற்கு வேறு 10 ரூபாய் கட்டணம் என்ற பெயரில் பிடுங்கிக் கொள்கிறார்களாம். ஆக, பக்தர்களுக்கு 140 ரூபாயில் முடியவேண்டிய பரிகார பூஜை, கோயிலில் மட்டுமே 240 ரூபாய் ஆகிவிடுகிறது!”
‘‘கோயிலில் மட்டுமே என்றால்..? கோயிலுக்கு வெளியிலும் கொள்ளை நடக்கிறதா என்ன?’’
‘‘நன்றாகக் கேட்டீர், நடக்கிறதா என்று! கோயி லுக்கு வெளியில் அர்ச்சனைத் தட்டு விற்கும் இடத்தில் நடக்கும் கொள்ளை இருக்கிறதே, அது அப்பட்டமான பகல் கொள்ளையாக்கும்! சின்ன தாக இரண்டு தேங்காய், நான்கு வாழைப்பழம், சிறியதாக இரண்டு கலர் துண்டு என 100 ரூபாய்கூட பெறுமானம் இல்லாத அர்ச்சனைத் தட்டுக்கு 230 ரூபாய் பிடுங்கிக் கொள்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்ன தோஷத்துக்கு ஆளாகப் போகிறார்களோ, அதற்கு எங்கே போய் பரிகாரம் தேடிக்கொள்ளப் போகிறார்களோ, எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!’’
‘‘கோயில் நிர்வாகத்தினர் இதையெல்லாம் கவனிப்பதில்லையா?’’
‘‘அங்கேதானே பிரச்னையே! இரண்டு வருஷங் களுக்கு முன்பு இந்தக் கோயில் பொறுப்புக்கு வந்த யாரோ ஒரு புண்ணியவான்தான் இதற்கெல்லாம் காரணம் என்று ஊர்மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.'' என்று சொல்லியபடியே காற்றில் கரைந்து மறைந்தார் நாரதர்.
படங்கள்: க.சதீஷ்குமார்
அ.நவீன்ராஜ்