Published:Updated:

பொலிவு பெறட்டும்... பொன்னாக்குடி ஆலயம்!

பொலிவு பெறட்டும்... பொன்னாக்குடி ஆலயம்!

திருப்பதி திருமலையில் அருள்புரியும் வேங்கடவனைப் போலவே,

பெருமாள் அருளாட்சி செய்த ஒரு திருத்தலம்தான் திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடியில் அமைந்திருக்கும் அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில். திருநெல்வேலி நாகர்கோயில் சாலையில், திருநெல் வேலியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயில், மிகவும் தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. ஆனால், கோயிலின் இன்றைய நிலையோ மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது.

சிதிலம் அடைந்த எத்தனையோ நூறு கோயில்களை நாம் ஆலயம் தேடுவோம் பகுதிக்காகத் தரிசித்து எழுதி இருக்கிறோம். ஆனால், இந்தக் கோயிலில் நாம் கண்ட காட்சி, நம் மனதைப் பெரிதும் வேதனைப்படுத்தியது. இதற்கு முன் நாம் தரிசித்த ஆலயங்களில் மூலவரின் திருவுருவத்தையாவது நம்மால் தரிசிக்க முடிந்தது. ஆனால், இந்தக் கோயிலிலோ மூலவரின் திருவுருவமே மூன்று துண்டுகளாகச் சிதைக்கப்பட்டு இருந்தது. காரணம் என்ன என்பது அந்தப் பெருமாளுக்கே வெளிச்சம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பொலிவு பெறட்டும்... பொன்னாக்குடி ஆலயம்!

ராமாயண காலத்தில் இருந்தே இந்தக் கோயில் பிரசித்தி பெற்று

இருந்தது. இலங்கைக்குச் செல்லும் வழியில் அனுமன் இந்தத் தலத்தில்தான் தங்கி இருந்து பெருமாளை வழிபட்டதாகச் சொல்லப் படுகிறது. அதற்குச் சாட்சியாக கோயிலுக்கு அருகில் சாலை ஓரமாக இருக்கும் மண்டபத்தை அனுமன் சத்திரம் என்றே ஊர்மக்கள் அழைக்கிறார்கள்.

பொலிவு பெறட்டும்... பொன்னாக்குடி ஆலயம்!

கருவறையில் மூலவருக்கு இடப்புறத்தில் சக்கரத்தாழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. மூலவருக்கு முன்பாக அழகாகக் காட்சி தருகிறார் சந்தான கோபாலகிருஷ்ணன். இங்குள்ள வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் சத்ரு பயம் நீங்கி, வாழ்க்கையில் சந்தோஷம் நிறைந்திருக்கும் என்பதும், சந்தான கோபால கிருஷ்ணனை வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

பாண்டியர்களும், சோழர்களும், நாயக்க மன்னர்களும் இந்தத் திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்திருப்பதாகச் சொல்லப் படுகிறது. கோயில் மண்டபத்தில் அமைந்துள்ள கல்தூண்களில் நரசிம்ம அவதாரக் காட்சிகள் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் உள்ளன. அத்தனையும் எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் இருப்பது வேதனைக்குரிய விஷயம். கோயிலுக்குச் செல்லவே மக்கள் அச்சப்படும் அளவுக்குச் சுற்றிலும் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.  இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்று 300 வருஷங்களுக்கு மேல் ஆகிறது. அதன்பின்பு, எந்தத் திருப்பணியும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும்விட வருத்தத்திற்குரிய விஷயம், இந்தக் கோயிலின் வரலாறு பற்றியோ, அதன் தொன்மைச் சிறப்பு பற்றியோ பெரிய அளவில் இந்த ஊர் மக்களுக்குத் தெரியவில்லை என்பதுதான்.

பொலிவு பெறட்டும்... பொன்னாக்குடி ஆலயம்!

முன்னொரு காலத்தில் இவ்விடத்தில் தவம் செய்து பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்த சித்தரின் சமாதி ஒன்றும் உள்ளது. அந்தச் சித்தர் யார்? அவர் எந்தக் காலத்தைச் சேர்ந்தவர்? தெரியவில்லை.

இத்தனைச் சிறப்புக்கள் கொண்ட இந்தக் கோயிலின் திருப்பணிகளை மேற்கொண்டிருக்கும் தமிழன்னை தாமிரபரணி  நல அறக்கட்டளை நிறுவனரான பாலசுப்பிரமணிய ஆதித்தனிடம் பேசினோம்.

''சுமார் 8 வருஷத்துக்கு முன், பொன்னாக்குடி கிராமத்தைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்து, தங்கள் ஊர் பெருமாள் கோயிலுக்கு ஒரு மூல விக்கிரஹம் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கொடுத்த படத்தில் நான் பார்த்த பெருமாள், திருப்பதி பெருமாளைப் போலவே இருந்தார். நானும் சம்மதித்து, அதேபோல் ஒரு விக்கிரஹம் செய்து, பிரதிஷ்டை செய்வதற்காக அந்த ஊருக்குச் சென்றேன். அங்கே போனதும்தான் கோயில் முழுவதும் சிதிலம் அடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பது எனக்குத் தெரியவந்தது.

பொலிவு பெறட்டும்... பொன்னாக்குடி ஆலயம்!
பொலிவு பெறட்டும்... பொன்னாக்குடி ஆலயம்!

எனவே நான் ஊர்மக்களிடம், கோயிலைப் புதுப்பித்த பிறகு விக்கிரஹ பிரதிஷ்டை செய்வதுதான் நல்லது என்று சொன்னேன். அவர்களும் அதற்கு ஒப்புக்கொள்ளவே, பிரச்னம் பார்த்து ஒரு நல்ல நாளில் பாலாலயம் செய்து, திருப்பணிகளைத் தொடங்க முடிவு செய்தோம். இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், முறைப்படி அனுமதி பெற்று, கடந்த மே மாதம் 29ம் தேதி பாலாலயம் செய்து, திருப்பணிகளைத் தொடங்கியுள்ளோம். இருந்தும், போதிய நிதி வசதி இல்லாததால், திருப்பணிகள் அவ்வப்போது தடைப்படுகின்றன. விரைவில் போதிய நிதி உதவிகள் கிடைத்து, திருக்கோயில் திருப்பணிகள் பூர்த்தி அடைந்து சம்ப்ரோக்ஷணம் நடைபெற, வேங்கடாசலபதி பெருமாள்தான் அனுக்கிரஹம் செய்யவேண்டும்'' என்றார்.

கோயில்கள் காலப்போக்கில் சிதிலம் அடைவதும், பின்னர் ஆன்மிக அன்பர்களின் முயற்சியால் புதுப்பிக்கப்படுவதும் வழக்கமாக நடைபெற்று வருவதுதான். ஆனால், மூலவரின் திருமேனியே பின்னப்பட்டு இருக்கலாமா? அது மிகுந்த வேதனைக்குரிய விஷயமல்லவா? ஒருகாலத்தில் திருமலை வேங்கடவனைப் போலவே வேங்கடாசலபதி அருளாட்சி புரிந்துகொண்டு இருந்த பொன்னாக்குடி ஆலயம் மீண்டும் புதுப்பொலிவுடன் திகழவேண்டாமா? மூலவரின் திருவுருவம் பின்னப்பட்டதற்குக் காரணமாகவும் மௌன சாட்சியாகவும் இருந்த நம் முன்னோர்களின் அலட்சியத்துக்கும் அசிரத்தைக்கும் பரிகாரம் காண்பது நமது கடமையல்லவா? எனவே, நம்மால் இயன்ற நிதி உதவியை பக்திபூர்வமாகவும் மனப்பூர்வமாகவும் வழங்கி, விரைவிலேயே பொன்னாக்குடி வேங்கடாசலபதி ஆலயம் புதுப் பொலிவு பெற்று சம்ப்ரோக்ஷணம் நடைபெறச் செய்வோம். அதன் மூலம், பெருமாளின் பேரருள் நமக்கு மட்டுமின்றி, நம் சந்ததியினருக்கும் கிடைக்கச் செய்வோம்.

ரெ.சு.வெங்கடேஷ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

பொலிவு பெறட்டும்... பொன்னாக்குடி ஆலயம்!

எப்படிச் செல்வது?

திருநெல்வேலி - நாகர்கோவில் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோயில். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு. இங்கிருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்துகளில் ஏறி,  பொன்னாக்குடி நிறுத்தத்தில் இறங்கினால் ஆலயத்தை எளிதில் அடையலாம்.