Published:Updated:

சனிப்பெயர்ச்சி... ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

சனிப்பெயர்ச்சி...  ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017
சனிப்பெயர்ச்சி... ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

ந்த வருடம் டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனீஸ்வர பகவான். அவர் 26.12.20 வரை தனுசு ராசியில் இருந்து பலன்களைத் தரவுள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து, 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். ஒவ்வொரு ராசியினருக்கும் அவர் கூறிய பலன்களில் இன்று ரிஷப ராசி அன்பர்களுக்கான பலன்கள் குறித்து இங்கே பார்ப்போம்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக சனிபகவான் 7-ம் வீட்டில் இருந்து, உங்கள் ராசியைப் பார்த்ததால், உங்களுக்கு உடல் உபாதைகள், நோய்த் தொந்தரவுகள், மன உளைச்சல்களையெல்லாம் கொடுத்துக்கொண்டு இருந்தார். இவ்வளவு நாள் கண்டகச் சனியாக இருந்தவர், இனி அஷ்டமச்சனியா இருந்து உங்களுக்குப் பலன் தரவுள்ளார்.


சனிபகவான், ஒரு விதத்தில் பாதகாதிபதியாகவும், ஒரு விதத்தில் ஜீவனாதிபதியாகவும் இருக்கிறார். பாக்கியஸ்தானமான மகரத்துக்கு 12-ம் வீடான தனுசில் மறைவதால், திடீர் ராஜயோகம் உண்டு. இவ்வளவு நாள்களாக நீங்கள் பட்ட அவஸ்தைகள், கஷ்டங்களில் இருந்து ஒரு நல்ல ரிலீஃப் கிடைக்கும். உங்களுடைய அழகு, ஆரோக்கியம் கூடும். எந்த வேலையையும் உடனடியாகவும் புத்திசாதுர்யத்தோடும்  உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். 

அஷ்டமச் சனி என்பதால் யாருக்கும் ஜாமீன் கொடுப்பதோ, சாட்சிக் கையெழுத்துப் போடவோ கூடாது.  கணவன் மனைவிக்கு இடையில் சின்னச்சின்ன சந்தேகங்கள் வந்து வாக்குவாதமாக மாறும் வாய்ப்பு இருப்பதால், வெளிப்படையாக எதையும் பேசிக்கொள்வது நல்லது. நண்பர்கள் வட்டத்திலும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். உங்களுடைய நடைஉடை பாவனைகள் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

உத்தியோகத்தைப் பொறுத்தவரை இவ்வளவு நாளாக எவ்வளவு உழைத்தாலும், மேல் அதிகாரிகளிடம் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்காத நிலைமையே இருந்தது. இனி, அந்த நிலைமை மாறும். வியாபாரத்தில் இருப்பவர்கள் வேலையாட்கள், பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. அஷ்டமச்சனி நடப்பதால் நரசிம்மரை வழிபடுவது நல்லது. 
 

(ரிஷபராசிக்காரர்கள் இந்த வீடியோ லிங்க்கில்... விரிவான பலன்களை அறியலாம்.)


ரிஷப ராசி அன்பர்கள் சனிப்பெயர்ச்சியையொட்டி,  விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலூகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம்.  லட்சுமி நரசிம்மர் ஆலயங்களில், தனித்துவம் பெற்று இந்தக் கோயில் விளங்குகின்றது. இந்தக் கோயில் கருவறையில் இருக்கும் ஆஞ்சநேயரை வியாசரே பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம்.
இது தவிர இன்னொரு ஆஞ்சநேயரும் இந்த ஆலயத்தில் சந்நிதி கொண்டிருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழைமையான கோயில் இது.

சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்டு ரோட்டிலிருந்து இந்தக்கோயிலுக்குச் செல்ல பஸ் வசதி உள்ளது. குறைவான பஸ் வசதியே உள்ளதால், ஆட்டோ அல்லது டாக்ஸியில் சென்று வரலாம். காலை 6 மணிமுதல் 1 மணி வரையிலும் மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

ஆண்டு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றாலும், சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதத்தில் வரும் நரசிம்ம ஜயந்தி விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பிரதி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. 

எல்லா கோயில்களிலும் நரசிம்மரே லட்சுமிதேவியை ஆலிங்கனம் செய்தபடி இருப்பார். இத்திருத்தலத்தில்  நரசிம்மரை  தாயார் ஆலிங்கனம் செய்தபடி  இருப்பார். இது எங்கும் காணக்கிடைக்காத காட்சி. திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், மனநலம் குன்றியவர்கள் இங்கு வந்து நரசிம்மரை வழிபட்டால் நலம் பெறலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இங்குள்ள லட்சுமி நரசிம்மரை வழிபடுகிறவர்கள், சுவாமிக்கு எண்ணெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை, மஞ்சள் ஆகிய பொருட்களை வாங்கிக்கொடுத்து அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யலாம். சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படாமல் இருக்க ரிஷப ராசி அன்பர்கள் தவறாமல் இந்தத் திருத்தலத்துக்குச் சென்று இறைவனை தரிசித்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.