Published:Updated:

பிரம்மன் தரிசனம்!

பிரம்மன் தரிசனம்!

பிரம்மன் தரிசனம்!

பிரம்மன் தரிசனம்!

Published:Updated:
பிரம்மன் தரிசனம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லக உயிர்கள் அனைத்தையும் படைப்பவன் ஸ்ரீபிரம்மன். நம் தலையெழுத்தை எழுதும் பிரம்மனுக்கு சிவனார் சாபமிட்டதும், படைப்புத் தொழிலை பிரம்மனிடம் இருந்து பிடுங்கிக் கொண்டதும் தெரியும்தானே?!

தட்சன் நிகழ்த்திய யாகமும், அதற்கு சிவபெருமானுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதும் அறிவோம். 'என்னை மதிக்காத இடத்தில் உனக்கென்ன வேலை?’ என்று வெகுண்டெழுந்த சிவபெருமான், பிரம்மனுக்கு அளித்த சாபம் இது!

பதவியையும் படைப்புத் தொழிலையும் இழந்து, சாபத்தையும் பெற்றுத் தவித்த பிரம்மன், விமோசனம் தேடி பூலோகத்துக்கு வந்தார். ஆற்றங்கரைகளிலும் அழகிய வனங்களிலும் சிவபூஜை செய்தபடியே வந்தவர், தன்னுடைய பேரனான ரோமச மகரிஷி, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, நெடுங்காலம் தவமிருந்து வழிபட்ட லிங்கத் திருமேனியைக் கண்டார்.

அது பிரம்ம முகூர்த்த வேளை... அருகில் உள்ள நதியில் நீராடினார்; 'என் சிவனே... என்னை மன்னித்தருளும்; சாபத்திலிருந்து விமோசனத்தைத் தந்தருளும்’ என மனம் குவித்துப் பிரார்த்தித்தார். வழிபாட்டுக்கு உகந்த பிரம்ம முகூர்த்த வேளையில் வழிபட்டதால் மனம் இளகினார் சிவனார். பிரம்மனுக்கு அங்கே திருக்காட்சி தந்தார்; சாபம் நீங்கப் பெற்ற பிரம்மன், நெகிழ்ந்து மகிழ்ந்தார்; சிவனாரை நமஸ்கரித்தார்; அவருக்கு, இழந்த பதவியைத் தந்தருளினார் ஈசன்!  

பிரம்மன் தரிசனம்!
பிரம்மன் தரிசனம்!

ரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்து வழிபட்ட அந்தத் தலம், பிரம்மனின் சாபம் நீங்கப்பெற்று, இழந்த பதவியை மீட்டெடுத்த திருத்தலம்... திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. அந்தத் தலத்தின் திருநாமம், பிரம்மாவின் திருநாமத்தைக் கொண்டே வழங்கப்படுகிறது. அது... பிரம்மதேசம்!

நெல்லை மாவட்டம்- அம்பாசமுத்திரத்துக்கு அருகில், சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது பிரம்மதேசம். இங்கே குடிகொண்டிருக்கும் சிவனாரின் திருநாமம் - ஸ்ரீகயிலாசநாதர்.

பிரம்மதேவன் மட்டுமின்றி, முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர் பெருமக்களும் இன்றைக்கும் இறைவனை வணங்குவதாகச் சொல்லப்படும் புராண - புராதனப் பெருமைகள் கொண்ட ஒப்பற்ற திருத்தலம் இது!

கடனா நதிக்கரைக்கு அருகில், வயல்வெளிக்கு நடுவில், பிரமாண்டமாக அமைந்துள்ளது ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயில். அம்பிகையின் திருநாமம் - ஸ்ரீபிரஹன்நாயகி. ஏழடுக்கு ராஜ கோபுரமும், மிதக்கின்ற தாமரைகள் நீந்தும் தடாகமும் கொள்ளை அழகு!

பிரம்மன் தரிசனம்!

வேதங்கள் ஓதும் அந்தணர்களுக்கு இந்த கிராமத்தை வழங்கி, ஆலயத்தையும் கட்டிக் கொடுத்து, ஊருக்கு சதுர்வேதிமங்கலம் என்று பெயரும் சூட்டி மகிழ்ந்தானாம், ராஜராஜசோழன்! இதையடுத்து, சேர- பாண்டிய- நாயக்க மன்னர்களும் திருப்பணி செய்துள்ள அருமையான ஆலயம்!

இங்கு, ஸ்ரீவிசாலாட்சி - ஸ்ரீகாசி விஸ்வநாதர்; ஸ்ரீஉண்ணாமுலை அம்மை - ஸ்ரீஅண்ணாமலையார்; ஸ்ரீமீனாட்சி - ஸ்ரீசுந்தரேஸ்வரர் மற்றும் இலந்தைநாதர் ஆகியோருடன் ஸ்ரீகயிலாசநாதர் காட்சி தருவதால், இதனைப் பஞ்சலிங்க க்ஷேத்திரம் என்பர்! இன்னொரு விஷயம்... சுமார் ஏழடி உயரத்தில், பிட்சாடனராக அருள்பாலிக்கிறார் சிவபெருமான்! ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் திருவிக்கிரகமும் கொள்ளை அழகு!

பிரம்மன் தரிசனம்!

நம்மைப் படைத்த பிரம்மனின் சாபம் போக்கிய தலம் இது; இங்கு வந்து, கடனா நதியில் நீராடி, ஸ்ரீகயிலாசநாதரை வணங்கினால், நம் பாவமெல்லாம் பறந்தோடும்; மனதின் பாரமெல்லாம் குறைந்துவிடும்!

- வி.ஜெய்கிருஷ்ண கோகிலன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism