Published:Updated:

அழகு முருகன்... நர்மதை லிங்கம் !

சண்டிகர் தரிசனம்த.ஜெயகுமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் நகரம் சண்டிகர். பஞ்சாப், ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராகத் திகழும் இந்த ஊரில், கார்த்திகேயக் கடவுளுக்கும் ஒரு கோயில் உண்டு என்பதை அறிந்து வியந்தோம். 

சண்டிகர் தமிழ்ச் சங்கத்தால் நிறுவப் பட்ட கோயில், 'மூலவருக்கு கார்த்திகேயன் என்று திருநாமம் சூட்டுங்கள்’ என்று மஹா பெரியவா அறிவுரை தந்த தகவல், நர்மதை தீரத்தில் கல்லெடுத்து ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம், ஆயிரமாயிரம் இறைநாமங்கள் எழுதப்பட்ட கோபுர தரிசனம்... என இந்தக் கோயிலின் சிறப்புகள் குறித்து, சண்டிகர் தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜசேகரன் சொல்லச் சொல்ல, நமக்குள் சண்டிகர் அழகனைத் தரிசிக்கும் ஆவல் அதீதமாகிப் போனது.

அடுத்த சில நாட்களில், அலுவல் நிமித்தமாக நாம் பஞ்சாப் சென்றிருந்த போது, நம்மைக் கோயிலுக்கு அழைத்துச் சென்றார் ராஜசேகரன். பயண வழியில், கோயிலைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

'தமிழகத்தில் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, இங்கே சண்டிகர் உருவானது. அப்போது திருச்சியில் வர இருந்த ஏர் ஃபோர்ஸ் பயிற்சி தளம், ஏதோ சில காரணங்களால் சண்டிகருக்கு  மாற்றப்பட்டது. இந்த நிலையில், சண்டிகர் நகர உருவாக்கப் பணிகளில், படிக்காத தமிழர்களுக்கு வேலை கொடுத்து உதவும்படி காமராஜர் கேட்டுக்கொண்டார். அதன்படி, தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து சுமார் மூவாயிரம் குடும்பங்கள் வேலைக்காக இங்கே வந்தார்கள். அத்துடன் விமானப் படை, வங்கிப் பணிகளுக்காகவும் இங்கே வந்த தமிழர்களின் எண்ணிக்கை கணிசமானது.

அழகு முருகன்... நர்மதை லிங்கம் !

இப்படி, தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக ஆக, பேராசிரியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் சேர்ந்து சண்டிகர் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கினார்கள். சண்டிகர் அரசிடம் முறையாக விண்ணப்பித்து இடம் பெற்று, சங்கத்துக்குக் கட்டடம் உருவானது. அதைத் திறந்து வைத்தவர் மகாகவி பாரதியாரின் பேத்தி. அது 'பாரதி பவன்’ என்னும் பெயரில் இப்போது செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது' என்றவர், கோயில் உருவான கதையை விளக்கினார்.

'1983ல் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் கலவரம், தீவிரவாத தாக்குதல்னு அமைதியற்ற சூழல் நிலவியது. அப்போது, நம் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்கள் மனதில் இருந்த கலக்கத்தையும் அச்சத்தையும் போக்கும் வகையிலும் ஒரு கோயில் அமைக்க முடிவு செய்தோம். முதற்கட்டமாக, முருகனின் வேலாயுதத்துக்கு பூஜைகளைத் துவக்கினோம். திருப்புகழ் ராகவன், நம் மக்களுக்கு திருப்புகழ் துதிப்பாடல்களை போதித்தார். மக்களும் மெள்ள மெள்ள பயம் நீங்கி, இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள். 1992ல், முருகனுக்கு ஷெட் போன்று சிறிய அளவில் கோயில் அமைக்கப்பட்டது. 2002ல் பெரிய அளவில் கோயில் எழும்பியது'' என்று அவர் கூறி முடிக்கவும், நாங்கள் கோயிலை அடையவும் சரியாக இருந்தது.

நகர்ப்புறம் என்றாலும், அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது திருக்கோயில். தமிழக பாணியிலான கோபுரத்தைத் தரிசித்து, உள்ளே நுழைந்தோம்.

அழகு முருகன்... நர்மதை லிங்கம் !

''2012ல் ராஜகோபுரம் கட்டினோம். காஞ்சி சங்கராசார்யர், பூரி சங்கராசார்யர் முதலான மகான்கள் இங்கு வந்து அனுக்கிரகம் செய்திருக்கிறார்கள். பஞ்சாப் வாழ் தமிழர்களை ஒருங்கிணைக்கும் இடமாக உள்ளது இந்தக் கோயில். வழிபாடுகளும் தமிழிலேயே நடைபெறுகின்றன' என்றார் ராஜசேகரன்.

ஆலயம் மிகச் சுத்தமாகப் பராமரிக்கப் படுவது நேரில் பார்க்கும்போதே புலனாகிறது. முருகனுக்கு மட்டுமின்றி, பெருமாள், ஆஞ்சநேயர், சிவனார் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. குறிப்பாக, கோயிலின் 33 தூண்களில் 11 லட்சம் ராம நாமங்கள் பிரதிஷ்டை யாகியுள்ளதும், ஆஞ்சநேயர் சந்நிதியில் 1 கோடியே 31 லட்சம் ராமநாமங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதும் கோயிலின் தனிச்சிறப்பு. மேலும், கோயிலின் கோபுர மேல் நிலையில், கோடிக்கும் அதிகமான அளவில் பஞ்சாட்சரம் மற்றும் ராமநாம அட்சரங்கள் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவ சந்நிதியில், அருள்மிகு பாப விமோசன நர்மதேஸ்வரர் எனும் திருப்பெயருடன் அருள்கிறார் ஈஸ்வரன். உஜ்ஜயினி நர்மதை ஆற்றில் எடுக்கப்பட்ட கல்லில் தயார் செய்யப்பட்ட லிங்கத் திருமேனி என்பதால் இந்தப் பெயர். லிங்கத்தைச் சுற்றிலும் 10 லட்சம் ருத்ராட்சங்களைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

அழகு முருகன்... நர்மதை லிங்கம் !

அடுத்து, முருகப்பெருமானைத் தரிசிக்கச் செல்கிறோம். வள்ளி தெய் வானை தேவியருடன் அழகுக்கோலம் காட்டுகிறார் அருள்மிகு கார்த்திகேயன். நாள் முழுதும் தரிசித்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு!

அழகு முருகன்... நர்மதை லிங்கம் !

'வழிபாடுகள், பிரார்த்தனைகள் என்றில்லாமல், ஆர்வத்துடன் வரும் பிள்ளைகளுக்கு வேத பாடங்களையும், பஜன் பாடல்களையும் இங்கே சொல்லிக் கொடுக்கிறார்கள்.குழந்தைகள் கோயிலை வலம் வந்து வழிபடுவதுடன், அவர்களே தெய்வங் களுக்கு அபிஷேகம் செய்வதும், அருகில் இருந்து மற்ற சடங்குகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவதும் சிறப்பான விஷயம். இதனால் இங்குள்ள சிறுவர்கள் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். கோயிலுக்கு எப்போது கூப்பிட்டாலும் மறுக்காமல் வருகிறார்கள்.

மேலும், சீதாராமர் கல்யாணம், ராதாகிருஷ்ணன் கல்யாணம் ஆகிய வைபவங் களை வேத விற்பன்னர்கள் திருநெல்வேலியில் இருந்து வந்து நடத்திக் கொடுத்துவிட்டுப் போகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை, பெளர்ணமிகளில் சத்யநாராயண பூஜை, பிரதோஷங்களில் விசேஷ வழிபாடு ஆகியவை வெகு சிறப்பாக நடைபெறும். ஆண்களும் பெண்களுமாக வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்வோம். இதெல்லாம் இங்குள்ள தமிழர்களிடையே கூட்டு மனப் பான்மையை உருவாக்கியுள்ளது' என்றார், சண்டிகரில் வசிக்கும் பிரபா முத்தையா.

அழகு முருகன்... நர்மதை லிங்கம் !

உண்மைதான்! இங்கு வாழும் தமிழர்களை ஒரே குடும்பமாக்கி அவர்களின் மனதிலும் கோயில்கொண்டு, தானே குடும்பத் தலைவனா கவும் திகழ்கிறார், சண்டிகர் கார்த்திகேயன்.

அலுவல் நிமித்தமாகவும் சுற்றுலாவாகவும் தலைநகர் டெல்லிக்கும் அதன் சுற்றுப்புற ஊர்களுக்கும் செல்லும் அன்பர்கள் அப்படியே சண்டிகர் முருகனையும் தரிசித்துவிட்டு வரலாம். டெல்லியில் இருந்து சுமார் 240 கி.மீ. தொலைவில் உள்ளது சண்டிகர்; அதிக அளவில் ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன. சண்டிகரில்

அழகு முருகன்... நர்மதை லிங்கம் !

31ஞி' செக்டாரில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்குப் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு